தமிழைத் தமிழ் என்றும் அதன் மொழிகளையே திராவிடம் என்றும் பிரித்துக் கூறல் வேண்டும் எனப் பாவாணர் (தமிழர் வரலாறு, பக்கம் 28) அவர்கள் விளக்கப்படுத்தியதையும், தமிழையே பிற நாட்டினர் பல வடிவங்களில் மாற்றிப் பலுக்கினர் (உச்சரித்தனர்) என அறிய வேண்டி இருப்பதாகவும் உணர்ந்தோம்..

தமிழே பல வகையில் வந்தேறியத் தாக்கங்களாலும் வடபால் பகுதிகளில் தமிழிய அரசு கோலோச்சாததாலும் திரிபுற்றது என்றும் கண்டோம்.. அவ்வகையில் திரிபுற்ற மொழிகள் 45 க்கும் மேற்பட்டவை. அவை வடபால் திராவிட மொழிகள், நடுத் திராவிட மொழிகள், தென் திராவிட மொழிகள் எனக் குறிக்கப்பட்டுப் பாவாணர் உள்ளிட்ட மொழியியல் அறிஞர்களால் பட்டியலிடப்படிருக்கின்றன..

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலியின் முகப்புரைகளுள் அப் பட்டியல் விரிவாக இருப்பது அனைவரும் அறியத்தக்கது..

இந்நிலையில் தமிழ் மொழியையே பிற மொழியினர் தமிழ் என்று பலுக்க (உச்சரிக்க) இயலாமல் திரித்து வழங்கியதையும், வழங்கி வருவதையும் அறிய வேண்டும்.. வடமொழி நூல்கள் சிலவற்றுள் தமிழைத் 'த்ராவிடி' என்று குறித்துள்ளதும், பாகவத புராணம் எனும் சமசுக்கிருத நூலுள் 'சத்திய வீரன்’ எனும் ஆரிய எதிர்ப்பு அரசனைத் 'திராவிடபதி' என்பதாகத் குறிப்பிட்டதும்,

கி.பி. 470-இல் பழந் தமிழ்நாட்டில் களப்பாளர்கள் ஆட்சியில் இருந்த போது வச்சிரதத்தி' என்பார் அமைத்த சமணரின் தமிழ்க் கழகம், திரமிள சங்கம் என்பதாக அழைக்கப்பட்டதும்,

பெரிய திருமொழிச் சிறப்புப் பாயிரத்தின் உரையில் (500 ஆண்டுகளுக்கு முந்தையது) பிள்ளை லோகார்ய சீயர் என்பார் தமிழிலக்கணத்தை 'திராவிட சாஸ்திரம்' எனக் குறிப்பிட்டதும், நாலாயிரம் தெய்வப் பனுவலில் 'திராவிட வேதம்' என்பதாகக் கூறப்பட்டதும்,

தாயுமானவரின் (18ஆம் நூற்றாண்டு) பாடல்களில் தமிழ் என்பதையே திராவிடம் எனச் சுட்டி எழுதியதும்,

சிவஞான முனிவரின் (18ஆம் நூற்றாண்டு) மெய்கண்டான் நூல் அகலவுரையில் திராவிட மாபாடியம்' எனக் குறிப்பிடப்பட்டதும்,

சபாபதி தமிழிலக்கிய வரலாற்றில், திராவிடப் பிரகாசிகை என்றழைக்கப்பட்டதும், 'திராவிடம்' என்கிற சொல் புழக்கத்திற்கான பதிவுகளாகும்.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர்த் தெலுங்கு, கன்னட பிற தமிழிய மொழிகள் எவையும் இலக்கிய வளர்ச்சியிலும் இல்லை; தோன்றவும் இல்லை. எனவே, அதற்குப் பிந்தைய காலங்களில் தோன்றிய அம் மொழிகளின் இலக்கியங்கள் மிகச் சிலவற்றுள்ளேயே 'திராவிடம்' என்கிற பதிவுகள் உண்டு.

கி.பி.7-ஆம் நூற்றாண்டின் குமரிலபட்டர் என்பார் தெலுங்கு மொழியை 'ஆந்திர திராவிட பாஷை' என்றே அழைக்கலானார். ஆயினும் இம் மேற்கண்ட பதிவுகள் யாவும் சமயச் சார்புடைய செய்திகளுடனான பதிவுகளாகவும், ஆரியச் சார்பு இலக்கியப் பதிவுகளாகவுமே இருப்பதை நன்கு அறிய முடியும்.

தம் தாய்மொழியைத் தனிமைப்படுத்திக் காட்டிக் கொள்ளவும் வேத மொழியைத் 'தேவ பாஷை' எனப் புகழ்ந்து கொண்ட ஆரிய சமசுக்கிருதமே 'தமிழை'த் திரமிள் என்றும், த்ரமிட் என்றும் அழைத்ததை அறிய வேண்டும்.

எனவே, சமசுக்கிருத மொழி வழக்காற்றுப்படியே தமிழ், த்ரமிள் என்று அழைக்கப் பெற்றதாக உணர முடிகிறது.

தமிழைப் பிற வெளிநாட்டினர் எவரும் 'தமிழ்' என்றே அழைத்து விடாததையும் நாம் இவ்விடத்தில் ஒப்புநோக்குவது நல்லது.

கி.மு. முதல் நூற்றாண்டின் பெரிப்பூலசு என்பாரின் கிரேக்க நூலில் தமிழரைத் தமிராய் என்றும், கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்த சமய வங்கா எனும் சமண நூலில் பதிவாகியுள்ள அக்கால மொழிகள் குறித்த பட்டியலில் தமிழ், தமிழி என்றே பதிவாக்கப்பட்டிருப்பதையும்,

பியூத்தியசு-எனும் உரோமர்களின் உலகப் படத்தில் தாலமி இரேவண்ணா எனும் எகிபதியர்கள் (கி.பி.139-161) தமிழரை தமிரிக்கே என்றும்,

கி.பி. 6ஆம் நூற்றாண்டில் வராகமிகிரர் நூல் பழம்படியில் தமிழ், த்ரமிட என்றும்,

ஏழாம் நூற்றாண்டில் தமிழகம் வந்த சீனப் பயணியான யுவான் சுவாங் தமிழைத் திமில என்றும்,

மகாவம்சம் எனும் இலங்கை வரலாற்று நூலுள் தமிழ், த்மிலோ என்றும், (வடநாட்டின்) மங்கலேச அரசனின் பட்டயங்களில் தமிழ், த்ரமில என்றும்,

'இந்தியாவில் புத்த மதத்தைப் பரப்பின வரலாறு' எனும் தாரநாதன் (திபெத் - கி.பி. 1573) நூலுள் தமிழர், த்ரமிலர் என்றும்,

ஐரோப்பியர்கள் தமுல் என்பதாகவும், தானிசு தமுலிக்க மொழி என்பதாகவும்

ஆங்கிலேயர் டமில் என்பதாகவும்

செர்மானியர் (மாக்சுமுல்லர்) - தமுலிக்

- என்பதாகவுமே, தமிழைக் குறிப்பதை ஆழ்ந்து கண்ணுறலாம். ஆக, இத்தகைய பின்னணியிலேயே திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய அறிஞர் கால்டுவெல் 'திராவிடம்' என்கிற சொல் வழக்காற்றையே பயன்படுத்த நேர்ந்தது.

எனவேதான், மொழியறிஞர் பாவாணர் "கால்டுவெல் தமிழை ஆழ்ந்து கற்றுத் தமிழுக்கு அரும்பெருந் தொண்டு செய்த மேலையருள் தலைசிறந்தவராய் இருந்தும், தம் ஒப்பிலக்கணத்தில் சிலவிடங்களில் மிகத் தவறான செய்திகளைக் கூறியுள்ளார்"  - என்பதாகக் குறிப்பிட நேர்ந்தது.

இந்த வகையில், தமிழையே திரமிளமாக, திராவிடமாகப் பிற மொழியினர்கள் அடையாளப்படுத்தியது ஒரு நிலை எனில், தமிழிலிருந்து பிரிந்து திரிந்த மொழிகளை இணைத்துச் சொல்வதற்குத் திராவிடம் எனப் பயன்படுத்தியது இன்னொரு நிலையாக இருக்கிறது.

இந்த இரு நிலைகளின் உருவாக்கங்களையும் விளங்கிக் கொண்ட வகையிலேயே சில தெளிவுக்கு நாம் வர வேண்டியுள்ளது..

தமிழை டமுல், டாமில் என்றெல்லாம் ஐரோப்பிய நாடுகளில் சொல்கின்றனர் என்பதற்காகத் தமிழை டமுல், டாமில் என்றெல்லாம் தமிழர்கள் அடையாளப்படுத்திக் கொள்ள இயலாது... அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளவும் முடியாது..

ஒரு பெரும் அவலம் என்னவென்றால், தங்களைத் தமிழர்கள் என்று பதிந்து கொள்ளுகிற அரசியல் உரிமையை இந்திய அரசு அதிகாரத்தால் இழந்து நிற்கிறோம். அதாவது அரசுப் பதிவுகள் எவற்றிலும் தமிழர்கள் தங்களைத் தமிழர்கள் என்று பதிவு செய்து கொள்ள இயலாத நிலைக்கு ஆட்பட்டிருக்கிறோம்.

இந்த நிலை ஏன் உருவானது என்றும் எப்படி இந்த நிலையை மாற்றுவது என்றும் அறிய வேண்டியுள்ளது.

அவை குறித்து அறியும் நிலையிலேயே திராவிடம், திராவிடர் என யாரை அடையாளப்படுத்துகிறோம் என்றும், எங்கு அடையாளப்படுத்துகிறோம் என்றும்.. அவ்வாறு அடையாளப்படுத்துவது எந்தளவிற்குப் பயனானது அல்லது தவறானது என்பது குறித்தும் மேலும் விரிவாக சிலவற்றைப் பார்க்கலாம்..

(தொடரும்)

- பொழிலன்

Pin It