கடந்த வெள்ளிக்கிழமை காலை சென்னையில் தூறல். எதிர்பார்ப்பை மீறிய பருவ மழை. சுவிக்க மனம் கொள்ளவில்லை. மழைக்கால மழைத்துளிகள் கொண்டாடப்படுவதில்லை. கிண்டிக்கும் சைதாப்பேட்டைக்கும் இடையே மேம்பாலப்பணி, கத்திப்பாரா பாலங்களின் கீழ்ப் பகுதி சாலைகளின் மழை நீர் தேக்கம் இன்னும் சில காரணிகள் அன்றைய அதிகப்படியான போக்குவரத்து நெரிசல்களுக்கு வித்திட்டன. எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் முன்பான‌ மேம்பாலப் பணியின் காரணமாக நான்கு வழிப் பாதையை ஒரு வழிப் பாதையாகவும் (கிண்டி-சைதை), சைதை-கிண்டி வண்டிகள் பல்கலைக்கழகத்தின் ஒரு பாதைக்குள் சென்று மறுபாதைவழியாகவும் விடப்படுகின்றன. மதியம் 12 மணிக்கு கிண்டி பஸ்ஸ்டாண்டிலிருந்து சைதை பாலத்தை அடைய ஒரு மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொண்டவர்கள் புண்ணியவான்கள். (அப்படியெனில் காலை அலுவலக நேரத்தை யூகித்துக் கொள்ளுங்கள்).

இப்படியான சூழ்நிலையில் ஒரு இளைஞன் கோண்டா-ஸ்டார் ப்ளஸ்-ல் எங்கிருந்தோ வந்து சேர்ந்தான். இணையாக ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு செல்லும் இரு அரசுப் பேருந்துகளையும் முந்திச் செல்ல இரண்டுக்கு இடையிலும் தன்னுடைய பைக்கைச் செலுத்தினான். அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவனுக்கு இடப்புறமான பேருந்து வலப்புறமும், வலப்புற பேருந்து  இடப்புறமும் நொடிக்கப்படுமென்பது. வலப்புறப் பேருந்தின் முன் சக்கரத்திற்கு இரையாகாமல் இடப்புறம் சாய்ந்தான். இடமிருந்தால்தானே சாய்வதற்கு. அவன் இடப்புறம் காலை ஊண்டியேத் தீர வேண்டும். ஊண்டினான். இடப்புறப் பேருந்தின் பின்புறச் சக்கரம் அவன் இடதுகாலை முத்தமிட்டதில் ஒரு பெரும் அலறல். இரு பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. வலப்புறப் பேருந்து ஓட்டுனர் இறங்கி ஆசை தீர ரெண்டு சாத்து சாத்தினார். படிக்கட்டில் பயணித்த இரண்டு பேர் அவரிடமிருந்து அவனை மீட்டு அலேக்காகத் தூக்கிக் கொண்டு போய் ப்ளாட்ஃபார்மிலே கொண்டு போய் போட்டார்கள். அவன் கதறிக் கொண்டிருந்தான்.

அவனை ஏற்றிய சக்கரத்தின் மேற்புறச் சீட்டில் அமர்ந்திருந்த நான் என் பங்குக்கு 108க்குத் தகவலைத் தெரிவித்தேன். பேருந்துகள் புறப்படலாயின. 108 ஆம்புலன்ஸ் வண்டி அந்த இடம் தொடுவது அவ்வளவு சாத்தியமில்லை. நாள் ஓடிவிட்டது. நிச்சயமாய் அவன் கால்களை இழந்தேத் தீரவேண்டியிருக்கும். அவன் எந்தச் சூழ்நிலையில் வேகத்தைத் தேர்ந்தெடுத்தான், பெற்றோர்கள் எந்தச் சூழ்நிலையில் அவனது ஊனத்தை எதிர்கொள்வார்கள், அவனுக்கானக் கடமைகள் ஏதேனும் இருக்கிறதா? அவனுக்கென்று ஒரு காதலி இருந்தால், ஊனமானவனை ஏற்றுக் கொள்வாளா? இப்படியாக நீள்கின்ற கேள்விக்களுக்கு இடையில்தான் நம் பயணங்கள் தொடர்கின்றன.

பயணம் முடித்து கோவை வந்து சேர்கையில், எனக்குப் பழக்கமான ஆடிட்டர் ஒருவர், நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏஜிஎம் இன்னும் ஒருவரென மூன்று பேர் அவிநாசி அருகே கார் விபத்தில் பலியாகிய செய்தி காத்துக் கொண்டிருந்தது. அது நிகழ்ந்த இரு நாள்களில், ஈரோடு அருகே ஆம்னி பேருந்து ஒன்று டீசல் ஏற்றி வந்த லாரியில் உரசி, முழுதாய் சாம்பலானதில்  பத்து பேர் மரணம். இது ஒன்றும் புதிதல்ல நம‌க்கு. கடந்த 7 வருடங்களில் கண் முன்னால் பல விபத்துக்களைக் கடந்திருக்கிறேன். நான்கைந்து முறை மரணத்தின் வாசல் வரைச் சென்று விட்டு மயிரிழையில் பிழைத்து வந்தவர்களில் நானும் இருக்கிறேன் என சொல்லிக் கொள்ளலாம். உயிர்களைப் பறித்த வாகனங்களில் பயணித்திருக்கவும் செய்திருக்கிறேன். காரணியாயும் இருந்திருக்கிறேன். போகின்ற உயிர்களுக்கு அருகாமையில் செல்வது அவ்வள‌வு சுலபமல்ல. இரத்தம் பீய்ச்சியடிக்கும் உடலை நம் மீது சாய்த்துக் கொள்வதற்கு அதிகப்படியான திராணி வேண்டும். நான் அருகில் இருந்து பார்த்த விபத்துக்குள்ளானவர்கள் அனைவரும் பெரும்பாலும் தன் சுயநினைவை இழந்து விடுகிறார்கள். தலையில் அடிபட்டவர்கள் பெரும்பாலும் மரணித்தே தீருகிறார்கள். சுயநினைவு இழந்த உயிர்கள் சுவாசத்திற்காய் போராடுகின்ற கடைசி நேர மூச்சுக்கள் நம் மூச்சினை நிறுத்திவிடும். பெரும்பாலான விபத்துக்களின் இரத்தக் கரையைக் கழுவிக்கொள்ளாமல் எனக்கான தேநீர் போதையைத் தீர்த்துக் கொண்டு ஆசுவாசம் கொள்கிறேன்.

குறைந்தது ஆறு மணி நேரப் பயணம் அல்லது 300கி.மீ பயணம் என்பதை ஒரு பயண நாளாகக் கொண்டால், இந்த ஏழு வருடத்தில் 635 நாட்களை பயணங்களில் தொலைத்திருக்கிறேன்.  சுமார் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒரு பெரிய விபத்தினைக் காண்கிற வாய்ப்பு கிடைக்கிறது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நான் பயணிக்கும் வாகனம் சிறிய அளவிளான விபத்துக்குள்ளாகிறது அல்லது விபத்துக்குள்ளாக்குகிறது. சரியாக ஒன்னரை ஆண்டு இடைவெளிகளில் பெரும் விபத்துக்களிலிருந்து தப்பிக்கிறேன். எமன் என்னோடு தோழமை கொள்ள ஒன்னரை ஆண்டுகள் காத்துக் கிடக்க வேண்டியிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் அவன் வெறும் கையோடு திரும்புவதற்கான சாத்தியக் கூறுகளைத் தொடர்ந்து செய்ய இயலுமா? பிராபபிலிட்டி அல்லது யூலர்ஸ் தியரம் போட்டுப் பார்த்து பயணிக்க முடியாது. பயணங்களின் வழி புதிய மனிதர்கள், அனுபவங்கள், வரலாறு, கலாச்சாரம், கலைகள் இவற்றோடு மரணங்களையும் இணைத்துக் கொள்ளும் பக்குவம் எல்லோரும் பெற்று விடுவதில்லை. தேர்ந்த புத்தகம் புரட்டிப் போடும் வீரியங்களை ஒரு மரணம் கொள்ளுமாயின் மரணங்களைப் பூஜிக்கலாம். குடிகாரன் ஒருவன் நம்மீது காரை ஏற்றி நம் உயிர் போக வேண்டுமானால், என்ன மரியாதை கிட்டி விடும் நம் உயிருக்கு?. ரெண்டாம் நாள் பால், ஐந்தாம் நாள் கீரை அவியல், 16ஆம் நாள் கருமாதி, 30ஆம் நாள் தீட்டு கழிதல். தீரா வழியை நம் பெற்றோருக்கு/உறவினர்களுக்குக் கொடுத்து விட்டு எதைக் கொண்டு செல்லப் போகிறது நம் பயணம்.

ஆனாலும் பயணங்களை நிறுத்துதல் முடியாது. வேண்டுமானால் இப்படிச் செய்யலாம். நாளைய பொழுது எனக்கானதில்லை என நாம் கொண்டால், நாளைக்கான அன்பை இன்றே அள்ளித் தெளிக்கலாம். எதிர்படும் மனிதனை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிட்டாதென்றால் கொஞ்சம் சிரித்துத்தான் வைப்போமே. நேற்றைகள் மீண்டும் வரப்போவதில்லை. நாளைகளில் என்ன கஞ்சத்தனம் வேண்டி கிடக்கிறது? வாருங்கள். பூச்செண்டுகளால் நம் குடும்பத்தினரோடு சண்டையிட்டுக் கொள்வோம். சக உயிர்களை நம் குடும்பத்தினரோடு இணைத்துக் கொள்வோம்.

அன்பையும் சிரிப்பையும் தொலைத்தவர்களுக்கான வரவை எதிர்நோக்கி என் தோட்டம் காத்துக் கிடக்கிறது. வாருங்கள்.. உங்களுக்கான தேநீர் கோப்பையில் விசம் கலந்தாயிற்று. உங்களுக்கான குழிகளைக் காட்டுகிறேன். போய்ப் படுத்துக் கொள்ளுங்கள்.

- சக பயணி சோமா

Pin It