“பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று, லட்சக்கணக்கானவர்களை அவர்களுடைய பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து நிர்கதியாக்கி, இடம் பெயர்த்து – ராணுவத் தடுப்பு முகாம்களிலும், சிறைச்சாலைகளிலும், சித்திரவதைக் கூடங்களிலும் அடைத்து வைத்துள்ள நிலையில் – ஆயுதப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பினும், அதற்கான தேவையை மறுத்துவிட முடியாது. இருப்பினும், களத்தில் இன்னல்களை சந்திக்கும் ஈழத் தமிழர்கள்தான் இதைத் தீர்மானிக்க வேண்டும். இக்கட்டான இத்தருணத்தில் மிக முக்கியமாக ஒரு மீளாய்வு தேவைப்படுகிறது. இங்கிருக்கும் தொப்புள் கொடி உறவுகளும், புலம் பெயர்ந்த தமிழர்களும் அரசியல் அந்தரத்தில் பந்தல் கட்டிவிடலாம் என்ற கற்பனைக்கு இனியும் ஆட்படுவது, மீண்டும் கசப்பான முடிவுக்கே இட்டுச் செல்லும்.''

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போர் முடிவுற்றதாகச் சொல்லப்பட்ட நிலையில், 'தலித் முரசு' (மே 2009) எழுதிய தலையங்கத்தில், மேற்கூறியபடி குறிப்பிட்டிருந்தோம். ஓர் ஆயுதப் போராட்டத்திற்கான தேவை இன்றும் அப்படியே இருக்கிறது என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. ஏனெனில், விமானத் தாக்குதல் தவிர, பிற அனைத்து வகையான கொடூரத் தாக்குதல்களும் ஈழத் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டு வருகிறது. எத்தகைய அரசியல் ரீதியான போராட்டங்களாலும் – இதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. 2006 முதல் 2009 வரை உலகமே கண்டிராத வகையில், தன் சொந்த மக்கள் மீதே முப்படைகளையும் ஏவி கொன்றழித்த அட்டூழியத்தை, இன்று அய்க்கிய நாடுகள் அவை நடத்திய விசாரணைக்குப் பிறகுதான் உலகம் உற்று நோக்கத் தொடங்கியிருக்கிறது என்பது நம்பும்படியாக இல்லை. போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது, அதைத் தடுத்து நிறுத்த இதே அய்.நா.அவை ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை.

ஈழத்தில் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட போர், இன்றளவும் முடிவுக்கு வரவில்லை என்பதற்கான சில சான்றுகள் கிடைத்துள்ளன : 1. இலங்கை அரசு இரண்டு லட்சம் சிங்கள அரசுப் பணியாளர்களை வன்னியில் குடியமர்த்த திட்டமிட்டுள்ளது. முள்வேலி முகாம்களில் இருக்கும் தமிழர்கள் அங்கு குடியமர்த்தப்படுவதற்கு முன்னால், இவ்விரண்டு லட்சம் சிங்களர்களை நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுத்து குடியேற்ற முடிவு செய்துள்ளது. தமிழர்களுக்கு கூலி வேலை மட்டுமே கிடைக்கும் வகையில், அரசு கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறது.

2. வன்னியில் 12 படைப் பிரிவுகளைக் கொண்ட இலங்கை ராணுவத்தை நிரந்தரமாக தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் இலங்கை சென்றிருந்தபோது, 'அமைதிப்படை' என்ற பெயரில் ஒட்டுமொத்த வடகிழக்குப் பகுதிகளிலும் போரிட 3 படைப் பிரிவுகளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 12 படைப் பிரிவினரில் மொத்தம் 85 ஆயிரம் சிங்களப் படையினர் இடம் பெற்றிருப்பர். இங்கு சிங்கள காவல் துறையினர் 20 ஆயிரத்திற்கும் குறையாமல் இருப்பர். குடும்ப ரீதியாக சிங்கள மக்களை கணக்கெடுத்தால், 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் என கணக்கு வருகிறது. ஆக, வன்னிப் பகுதியில் மட்டும் 2 லட்சத்து 50 ஆயிரம் சிங்களவர்கள் குடியமர்த்தப்படுகின்றனர். ஆனால், இங்குள்ள தமிழர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரம் மட்டுமே. போரில் அழிக்கப்பட்ட தமிழர்களின் வீடுகளை கட்டி எழுப்ப இந்திய அரசு வழங்கியுள்ள 500 கோடி ரூபாய், சிங்கள அரசுப் பணியாளர்களுக்கு கட்டப்படும் வீடுகளுக்கு செலவிடப்படுகிறது.

3. மன்னார் மாவட்டத்தில் இருந்த தமிழர்களில் 98 சதவிகிதம் பேரை காணவில்லை. போருக்கு முன்பு இங்கு 32 ஆயிரம் தமிழர்கள் இருந்தனர். ஆனால், தற்பொழுது 471 பேர் மட்டுமே இருப்பதாக இலங்கை அரசு (15.6.2009) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வருகிறது.

4. இலங்கையில் புகழ்பெற்ற பொருளியல் அறிஞர் டாக்டர் முத்துக் கிருஷ்ணன் சரவந்தன் கூற்றுப்படி, “வன்னியில் ஏப்ரல் 2008இல் விடுதலைப் புலிகள் ஆட்சியில் இருந்தபோது அங்கு 4 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் இருந்தனர். ஆனால், இலங்கை அரசின் 15.6.2009 நாளிட்ட அறிக்கைப்படி, அங்கு 2 லட்சத்து 62 ஆயிரத்து 632 தமிழர்களே எஞ்சியுள்ளனர்.'' அதாவது, 14 மாதங்களில் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் அழிக்கப்பட்டுள்ளனர்/காணாமல் போயுள்ளனர்.

அண்மையில் தமிழக சட்டமன்றத்தில் 'ராஜபக்சே போர்க் குற்றவாளி' என தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு இலங்கை சென்றுள்ள இந்திய அரசின் செயலர்களிடம் – “தமிழர்களுக்கு நிலவுரிமையும், காவல் துறையில் பிரதிநிதித்துவமும் அளிக்க முடியாது'' என ராஜபக்சே தெரிவித்ததற்கு, ஒரு சிறு கண்டனத்தைக்கூட இந்திய அரசு தெரிவிக்கவில்லை. 'இந்திய அரசே ஈழப் போரை நடத்தியது' என ஈழ ஆதரவாளர்கள் உறுதிபடக் கூறினர். ஆனால், இதே இந்திய அரசு தற்பொழுது யார் மீது, எப்படி நடவடிக்கை எடுக்கும் என விளங்கவில்லை.

“அய்.நா. அவை தற்பொழுது வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில், 'இனப்படுகொலை' என்ற சொல்லே இடம்பெறவில்லை. தமிழ் ஈழம் என்ற ஒற்றைத் தீர்வை நோக்கி விரைந்து செயல்படுவதைத் தவிர வேறு வழியே இல்லை'' என்று உலக சட்ட வல்லுநர் பிரான்சிஸ் பாய்ல் கூறியிருப்பதை, எட்டு கோடி தமிழர்களிடம் உரத்துச் சொல்வோம்!

Pin It