சாதியப் போராட்டம் என்பது, அடிப்படையில் பொருளாதாரப் போராட்டமே (வளங்களை உரிமை கொண்டாடுவதில் உள்ள படிநிலைப்படுத்தப் பட்ட தன்மைக்கு எதிரானது). இத்தகைய போராட்டம் அடிப்படையில், வர்க்கப் போராட்டக் கனவை நிறைவு செய்கிறது. வர்க்கம் என்பது மாறும் சாத்தியமுள்ள ஒரு பொருளாதாரக் கட்டமைப்பு. மாறுவதற்கான சாத்தியம் வழங்கப்படுமெனில், சாதிய பொருளாதாரக் கட்டமைப்பும் வர்க்கமாக மாறும். மதமாற்றத்தினால் மட்டுமே இதை அடைய முடியும். டாக்டர் அம்பேத்கர் இக்கருத்தியலை முன்மொழிந்ததோடு மட்டுமின்றி, மத மாற்றம் எனும் நோக்கத்தை தனது வாழ்வில் நடைமுறைப்படுத்தியும் காட்டினார்!

Karl_Marx_313சாதியை அழித்தொழிக்கவும், சமூகத்தின் அடித்தட்டில் உள்ள, சுரண்டலுக்குள்ளாகும் பெரும்பான்மை மக்கள் ஆளும் வர்க்கமாக மாறுவதற்கான சமூக மாற்றத்தை ஏற்படுத்தவும் – சமரசமற்ற ஒரு போராட்டத்தை டாக்டர் அம்பேத்கர் நடத்தினார். காந்தியாரின் ஆய்வின்படி, “வர்ணம் அல்லது சாதியின் நோக்கமானது, போட்டி மற்றும் வர்க்கப் போராட்டம் மற்றும் வர்க்கப் போர் ஆகியவற்றைத் தடுப்பதேயாகும்'' என்பதால், இந்தியாவில் சமூக மாற்றம் என்பது சாதியப் போரைத் தொடுக்காமல், அந்த அமைப்பை அழித்தொழிக்காமல் தனது நோக்கத்தை அடைய முடியாது.

காந்தியடிகள் இந்த ஆய்வை மேற்கொள்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலம் பேசக் கூடிய நவீன கால பெருந்துறவியான விவேகானந்தர் பின்வருமாறு கூறினார் : “ஒரு சாதியை ஏற்படுத்துங்கள். அர்ச்சகர் தன்மை பரம்பரையானது; இறுக்கமானது மற்றும் அதிக அதிகாரமுடையது. அதற்கு ஒரு சிறப்பான பக்கம் உள்ளது. போட்டியை மறுப்பதே அந்தப் பக்கம். அதுதான் இந்த நாட்டை உயிருடன் வைத்துள்ளது.'' உண்மைதான். ஆள்பவர்களின் நாடு சாதியத்தால் உயிருடன் வைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இந்தியாவின் மிகப் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய உழைக்கும் மக்களான சூத்திரர்களை (தீண்டத்தகாத மற்றும் தீண்டத்தகுந்த) ஒடுக்கி வைப்பதற்கான ஒரு நிச்சயமான வழியை சாதியம் ஏற்பாடு செய்துள்ளது.

சாதியத்திற்கு நிறைய ஆதரவாளர்கள் உண்டு. அரசியல்வாதிகளுக்கிடையே மட்டுமல்ல; ஆன்மிகவாதிகள் இடையிலும் அதற்கு வாக்களிப்பவர்கள் உண்டு. காந்தி அறிவிக்கிறார்: “சாதியை சமன்படுத்த நான் எதையும் முன்மொழியவில்லை. சாதி மிக நல்லது. நாம் பின்பற்ற விரும்பக் கூடிய ஒன்று சாதி. அய்ரோப்பாவிலும் அமெரிக்காவிலும் நிலவக் கூடிய சாதியை விட இந்தியாவின் சாதி மேன்மையானது. சாதி அழியக் கூடாது. சாதியை ஒழிக்க வேண்டும் என்று விரும்புவது சுத்த முட்டாள்தனம்.''

இத்தகைய அசாதõரணமான சூழலில், மார்க்ஸ் மற்றும் அம்பேத்கர் தத்துவமானது, உழைக்கும் மக்கள் இறுதியில் ஒரு நிச்சய வெற்றியைப் பெறுவதற்கான வர்க்கப் போராட்டம் மற்றும் வர்க்கப் போருக்கான வழிமுறையை உருவாக்கும். எனவே, வர்க்கப் போராட்டத்தை தொடங்குவதற்கான ஒரு முக்கியப் புள்ளியாக சாதி ஒழிப்பு இருக்கிறது. தற்போதைய நிலையில் சாதியை வைத்துக் கொண்டு, வர்க்கப் போராட்டத்தை நடத்துவது என்பது ஒரு போலி தத்துவம் ஆகும்.

சில சமூக சிந்தனையாளர்கள், சமபந்தி மற்றும் கலப்பு திருமணங்களின் மூலம் சாதியை ஒழித்து விடலாம் என தவறான கண்ணோட்டத்தை வைத்துள்ளனர். சாதி என்பது திருமணம் அல்லது சாப்பாட்டு முறையின் விளைவாக ஏற்பட்டது அல்ல. சீக்கிய மத பண்பாட்டினால் பரப்புரை செய்யப்பட்டு, பஞ்சாப்பில் நிலவக்கூடிய பண்பாட்டு நிறுவனங்களான "சஞ்சா சுல்லா', "சங்கத்' மற்றும் "பங்கத்', "லங்கர்', "பியா' போன்றவை இந்து சாதிய அமைப்பின் கடுமையை குறைப்பதில் மிகப்பெரும் பங்கையாற்றுகின்றன என்பது உண்மையே. அதன் விளைவுகள் சீக்கியம் என்னும் மதத்தில் இருந்து எழுந்திருக்கின்றன. அவை சாதியை அங்கீகரிக்கவில்லை. ஆனால், சமபந்தியோ, கலப்பு திருமணமோ சாதியின் வேர் அல்ல. சாதி நிரந்தரமாக நிலைத்திருப்பதற்கு துணையாக இருப்பவையே இந்த நிறுவனங்கள். கலப்பு திருமணத்தின் மூலம் சாதியின் எண்ணிக்கை குறைவதில்லை. மாறாக, இவ்வழிமுறையின் மூலம் சாதிகள் மற்றும் உட்சாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

"வர்ணசங்கரா' என்பதை மநுஸ்மிருதி தெளிவாகக் குறிப்பிட்டு விளக்குகிறது. வர்ணசங்கரா – அதாவது கலப்புத் திருமணம் எனும் வழிமுறையின் மூலம் எழும் சாதிகள். திருமணம் என்பது ஒரே சாதிக்குள் அல்லது ஒரே குழுவிற்குள் இருக்க வேண்டும். சாதிகளுக்கு இடையிலான திருமணம் முதலில் ஊக்குவிக்கப்படுவதில்லை. இரண்டாவது, அது அனுமதிக்கப்படுகிறது. அது எப்போது அனுமதிக்கப்படுகிறது எனில், பாலியல் சுரண்டலுக்காக பலதார முறையில் "அனுலோமா' – ஓர் "உயர்சாதி' ஆண் ஒரு "கீழ்சாதி'ப் பெண்ணை திருமணம் செய்வது அனுமதிக்கப்படுகிறது. இதற்கு நேர் எதிரான "பிரதிலோமா' திருமணம் ஊக்குவிக்கப்படுவதில்லை. இருந்தபோதும் எல்லா திருமணங்களும் வர்ண சங்கரா மூலம் – புதிய சாதிகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் – புனிதப்படுத்தப்படுகின்றன.

வர்ணசங்கரா என்பது சாதிய இழுக்கு என கீழாகக் கருதப்படுகிறது. அது வெளிப்படையாகவும், "ராட்சஷ மற்றும் பிசாச' திருமண முறைகளான விலைக்கு வாங்குதல், கடத்திச் செல்லுதல் மற்றும் வலுக்கட்டாயமாக திருமணம் செய்தல் ஆகிய முறைகள் உள்ளிட்ட நிலவக்கூடிய எட்டு முறைகளிலும் இருக்கிறது. எனவே, சாதிகளுக்கிடையிலான திருமணம் என்பது, சாதிய அமைப்பின் எண்ணிக்கை மற்றும் சிக்கலை அதிகப்படுத்துகிறது. அதை குறைக்கவே முடியாதபோது, அதை ஒழிப்பது பற்றி என்ன பேசுவது.

            மார்க்சியத்தின் இருப்பும், அதன் வீச்சும் மற்றும் அதன் அரசியல் கட்சிகளின் நடவடிக்கையும் – ஆந்திரா, மகாராட்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற இடங்களில் நடைபெறக்கூடிய மதமாற்றங்களுக்கு ஏற்ப மாறுகிறது. பார்ப்பனிய அமைப்பும் இந்தியாவின் மநுவாதி மேல்தட்டு வர்க்கமும் இந்த சூழல்களில் தலித் – பெரும்பான்மை மக்களை, அம்பேத்கரிய மத மாற்ற இயக்கத்தில் இருந்து ஒரு பொய்யான மாய நிலைக்கு கவனத்தை திருப்ப, இந்துமயப்பட்ட மார்க்சியத்தின் ஆற்றலைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. உண்மையில், மார்க்சியம், 16 ஆம் நூற்றாண்டில் சிறீ சைதன்யரும், 19 ஆம் நூற்றாண்டில் ராஜாராம் மோகன்ராயும் இந்து மதத்தை அதாவது சாதியத்தைப் பாதுகாக்க என்ன பங்காற்றினார்களோ, அதே பங்கை ஆற்ற பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திய மார்க்சியவாதிகள் தவறான தகவல்கள் திணிக்கப்பட்ட, கல்வியறிவற்ற, கைவிடப்பட்ட பெரும்பான்மை மக்களை உண்மையான விடுதலையின் பாதையில் இருந்து திறம்பட வெளியே இழுத்து வந்துள்ளனர். இதனை அவர்கள், வர்க்கப் போராட்டமானது, பாகுபாடுகளைக் களைந்து, இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்களுக்கு இடையிலான சமத்துவமின்மையைப் போக்கிவிடும் என மிக எளிமையாக செய்த பிரச்சாரத்தின் வழியாகவே சாதித்துள்ளனர்.

வர்க்கமே இல்லாத ஒரு சமூகத்தில் வர்க்கப் போராட்டத்தை தொடங்குவது என்ற கேள்வியானது பொருளற்றது என்பதை, மக்கள் உணர அவர்கள் விடவில்லை. அவர்கள் சாதியை நம்பவில்லை. வர்க்கத்தை நம்பினர். வறுமை, வேதனைகள், வன்கொடுமைகள் மற்றும் சுரண்டலுக்கு எதிரான போரில் சாதி ஒரு முக்கிய கூறே அல்ல என பார்ப்பன கம்யூனிஸ்டுகளால் கீழ்சாதி மக்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. சாதி அலட்சியப்படுத்தப்பட வேண்டியது. மதமாற்றம் ஒரு தீர்வல்ல. அவர்களைப் பொருத்தவரையில், சாதியை ஒழிப்பதற்கான இயக்கமோ அல்லது இந்து மதத்திற்கு எதிரான இயக்கமோ முற்றிலும் பொருளற்றதும் பயனற்றதுமாகும்.

தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல, இந்து சமூகத்தின் கீழ்த்தட்டில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறியவர்களின் எண்ணிக்கை யும், அதன் வளர்ச்சியை கணக்கில் எடுக்கும்பொழுது பட்டியல் சாதியினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சூத்திரர்கள் மற்றும் வேறு பலரையும் உள்ளடக்கிய இந்துக்களின் உண்மையான மொத்த எண்ணிக்கை தெரிய வருகிறது. 1941 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2,50,51,924 மொத்த இந்துக்களின் எண்ணிக்கையில் 73,78,970 பேர் பட்டியல் சாதியை சேர்ந்தவர்கள்.

வங்காளத்தில் உள்ள மதம் மாறிய முஸ்லிம்கள் ஈரானில் இருந்தோ, ஆப்கானிஸ்தானில் இருந்தோ குடிபெயர்ந்தவர்கள் அல்லர். அவர்கள் வங்காளத்தின் பூர்வகுடி குழுக்களை சேர்ந்தவர்கள். வங்காளத்தின் பகுஜன் சமாஜால் மேற்கொள்ளப்பட்ட இஸ்லாம் மற்றும் கிறித்துவத்தை நோக்கிய வேகமான மதமாற்ற முயற்சிகள் ஜனநாயக, அரசியல் சூழலில் சீர்செய்ய இயலாத பாதிப்பை ஏற்படுத்தின. இந்து சமூகத்தின் படிப்படியான மற்றும் வேகமான எண்ணிக்கை குறைவை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இந்துக்கள் இருக்கவில்லை.

மார்க்ஸ் மற்றும் மார்க்சியத்தின் பெயரால் ஏற்பட்ட இயக்கமும், விடுக்கப்பட்ட அழைப்பும் அதனோடு இந்தியா மற்றும் வங்காளப் பிரிவினை நடந்ததும் – இந்துக்களின் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்துவரும் அபாயகரமான சூழலை கட்டுப்படுத்தியது. 1880களில் தொடங்கி தொடர்ந்த குருசந்த் தாகூரின் தனித்துவமான, அறிவார்ந்த தலைமையின் கீழ் வங்காளத்தின் தீண்டத்தகாதவர்கள் இடையே நடைபெற்ற ஜனநாயக அரசியல் அதிகார விளையாட்டிற் கான துணிச்சலான போராட்டத்தின் விளைவாக, முஸ்லிம்கள் அவர்களிடம் நெருங்கி வந்தனர். மதம் மாறிய முஸ்லிம்கள் மற்றும் தீண்டத்தகாதவர்கள், வர்க்க நோக்கில் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். எனவே, ஆளும் சாதி கம்யூனிஸ்டுகளும் வங்கத்தின் ஒற்றுமையை சிதைத்து உருவாக்கப்பட்ட இந்தியப் பிரிவினையை தீவிரமாக ஆதரித்து நிறைவேற்றினர். இங்கு பார்ப்பன கம்யூனிஸ்டுகளின் சாதியப் பாகுபாடானது, உழைக்கும் வர்க்கத்தினருக்கு எதிரான அவர்கள் உள்ளார்ந்த வெறுப்பில் வெளிப்பட்டது.

வங்காளத்தின் தீண்டத்தகாதவர்களின் வளர்ந்து வரக்கூடிய ஒருங்கிணைந்த ஆற்றலை அழிப்பதில், அவர்கள் மகிழ்ச்சியுடன் இந்து மகாசபை, காங்கிரஸ் மற்றும் பிற தலைவர்களுடன் கை கோத்தனர். தோழர் ஜோதிபாசுவும் தோழர் ரத்தன்லால் என்ற பார்ப்பனரும் வங்கப் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தனர். சுந்தர்பானில் உள்ள மரிச்ஜாப்பியில் மறு குடியமர்த்தப்பட்ட அகதிகளுக்கு எதிராக எழுப்பப்பட்ட பொருளாதாரத் தடையின்போது, அவர்களது கேவலமான முகங்கள் மீண்டும் வெளிப்பட்டன. எப்படியாயினும், அவர்களின் பங்கானது ஒருபோதும் பயன்பெறத் தக்கதாகவோ, உழைக்கும் மக்களுக்கு ஆதரவானதாகவோ, அரசு நிர்வாகத்திற்கு எதிரானதாகவோ இல்லை. அவர்கள் உண்மையில் "நம்பிக்கை'யை பாதுகாப்பவர்களாகவே பங்காற்றினர்.

அது வர்க்கமோ, சாதியோ கடந்த 90 ஆண்டுகளாகக் கிடைக்கப் பெற்ற கொடூர அதிர்ச்சி மிகுந்த அனுபவங்களின் அடிப்படையிலும், கடந்த 30 ஆண்டுகளாக நடத்தப்படும் அரசின் செயல்பாடுகளின் மூலமும் இரக்கமற்ற பார்ப்பன மார்க்சியவாதிகள், சமூகத்தின் கீழ்த்தட்டில் உள்ளவர்கள் மேலே வர அனுமதிக்கவில்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. வாய்ப்புடைய மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவின ருக்கு இடையே, சுரண்டப்பட்ட மற்றும் சுரண்டுபவர்களுக்கிடையே, ஆளும் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினருக்கு இடையே நிலவக்கூடிய அரசியல் – சமூக இடைவெளியையும், பொருளாதார ஏற்றத்தாழ்வையும் இருக்கிறபடியே காக்கும் வேலையை அவர்கள் திறம்படச் செய்தனர். உண்மையில், ஏற்றத்தாழ்வு இடைவெளிகள் இந்த 30 ஆண்டு கால கம்யூனிஸ்ட் ஆட்சியில் பல வகையில் அகலமாகி உள்ளது.

மார்க்சிய தத்துவத்தின் நடைமுறை பயன்பாட்டின் விளைவாக, அம்பேத்கர் பிரச்சாரம் செய்த மதமாற்ற வழிமுறைகள் இந்திய சமூகத்திற்குள் தவிர்க்க இயலாத அவசியமான ஒன்றாக மாறியிருக்கிறது. சமூகத்தை ஆயிரக்கணக்கான இறுக்கமான கூறுகளாகப் பாகுபடுத்தி, குறைந்தபட்ச சமூகக் கலப்பையும் சாத்தியமற்றதாக்கியிருக்கின்ற சாதிய பொருளாதாரக் கட்டமைப்பின் இரும்புக் கோட்டையில் இருந்து வெளிவர இதுவே ஒற்றை வழியாகும். சமூகத்தின் கீழ் மற்றும் அடித்தட்டில் வைக்கப்பட்டுள்ள மனித உயிரினங்களுக்கு இடையே சமூகத்திற்கான வழிமுறைகளைத் தடுப்பதற்கு ஒரு திட்டமிட்ட முயற்சி நடந்து வருகிறது. சமூக சலுகைகள் மற்றும் உடைமைகள் மீதான பொதுவுரிமைக்கான உணர்வுகள் மற்றும் ஆவலையும் மனித மனதின் ஆழத்தில் இருந்து உதிரச் செய்திருக்கிறது.

கார்ல் மார்க்ஸ் மொழியில், “இந்தியா முகமதியம் மற்றும் இந்து ஆகியவற்றுக்கு இடையே பிளவுபட்டு நிற்கின்ற ஒரு நாடு மட்டுமல்ல; மாறாக சாதிக்கும் சாதிக்குமிடையிலும் அது பிளவுபட்டு நிற்கிறது. ஒருவித சமன்பாட்டை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்டுள்ள இந்த சமூகம், அதன் அனைத்து உறுப்பினர்களுக்கு இடையேயும் ஒருவருக்கொருவர் எதிர்ப்பான மனநிலையும் திட்டமிட்ட விலக்குதலையும் கொண்டதாகவே இருக்கிறது. இத்தகைய ஒரு நாடோ அல்லது ஒரு சமூகமோ ஆக்கிரமிப்புக்கான இரையாவதற்கு விதிக்கப்படவில்லையா?''

சாதியம் எந்த வடிவில் தொடர்ந்தாலும் அது தொடரும் வரையிலும் இந்திய சமூகம் ஒற்றுமையற்றதாக, பாகுபாடுத்தப்பட்டதாக உள்கட்டைகள் உள் சண்டைகளால் வலுவிழந்ததாக, வெளிசக்திகளுக்கு எளிதில் இரையாகக் கூடியதாக, உழைக்கும் மக்களின் ஆட்சியை உருவாக்க ஓர் ஒற்றுமையான போராட்டத்தை உருவாக்கக்கூடிய நிலையில் இருந்து வெகு தொலைவிலேயே இருக்கும். இந்த நாட்டின் மக்களிடையே ஆரிய காலனிய பொருளாதாரக் கட்டமைப்பு தொடர்ந்து திகழ்கிறது. ஒரு வெகுமக்கள் ஆட்சி உருவாகும் வரையில் காத்திருக்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். பாகுபடுத்தக்கூடிய சாதிய சீனப் பெருஞ்சுவரை இடித்துத் தள்ளி, ஒரு சாதியற்ற சமூகத்தை உருவாக்கி, அச்சமூகத்தின் உறுப்பினர்களுக்கு இடையே சகோதரத்துவ பாலத்தைக் கட்டுவதன் மூலமே அதை ஏற்படுத்த முடியும்.

நேர்மையற்ற பார்ப்பனத் தன்மையானது, மாசேதுங்கின் முரண்பாடுகள் தத்துவத்தை எதிர்மறையாகப் பயன்படுத்தி, அதன்மூலம் மதமாற்றத்தின் ஊடாக ஏற்படக்கூடிய சமூக மாற்றத்தை சிதைக்கிறது. பெரும்பான்மை மக்களான உழைக்கும் மக்களின் ஆட்சியை உருவாக்கவும், சமூக மாற்றத்தை ஏற்படுத்தவும் ஒரு புரட்சி வரப்போகிறது என்று பொய்யான உறுதிகளையும் நம்பிக்கைகளையும் வழங்குவதற்கே – மார்க்சியத்திற்கு எதிரான பார்ப்பனிய தலைவர்களால் மார்க்சியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படி ஓர் உழைக்கும் மக்களின் ஆட்சி அமைக்கப்பட்ட பிறகு சமூகம் தானாகவே மாற்றம் கொண்டு, ஓர் ஒருங்கிணைந்த சமூகமாக வடிவம் பெற்று, சாதிகள் மற்றும் பழங்குடிகள் போன்ற மேல் கட்டமைப்புகள் எல்லாம் அழிந்து உதிர்ந்துவிடும் என்று அவர்கள் கூறுகின்றனர். 

- எஸ்.கே.பிஸ்வாஸ் 

தமிழில் : பூங்குழலி

Pin It