தமிழகம் முழுவதுமுள்ள தமிழ்த்தேசிய, ஈழ ஆதரவு சக்திகளை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தும் நோக்கில் தமிழக உளவுத்துறையால் தீட்டப்பட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியே ஊத்துக்குளி வட்டார இரயில்கவிழ்ப்புச் சதிகள். சாதி ஆதிக்கத்திற்கு எதிராகவும், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகின்ற தாழ்த்தப்பட்டோர் நல அமைப்புகளைக் காயடிக்கும் நோக்கிலும்; ஒட்டு மொத்த அருந்ததிய மக்களையும் விசாரணைக்கு உட்படுத்தி, சித்திரவதை செய்து ஆளும் வர்க்கத்திற்கும், ஆண்டை வர்க்கத்திற்கும் என்றென்றும் அடிமைகளாகவே வைத்திருக்கும் நோக்கிலும் காவல்துறையினரால் புனையப்பட்டுக் கொண்டிருப்பவைதான் இந்த ரயில்கவிழ்ப்புப் பொய் வழக்குகள்.

காந்தி, பரமேஸ்வரன் இருவரையும் நவம்பர் 26-ம் தேதி இரவு 11 மணியளவில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறை நவம்பர் 28-ம் தேதி மாலை 5.30 மணிக்கு புதர் மறைவில் ரயில் பாதையில் கல் வைக்கச் சதித் திட்டம் தீட்டிய போது கைது செய்ததாகவும்; மாணிக்கம், கதிரவன், மணி மூவரையும் டிசம்பர் 12-ம் தேதி நள்ளிரவில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவல்துறை டிசம்பர் 13ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தண்டவாளத்தில் கல்வைப்பதற்காக கல்லைப் புரட்டிக்கொண்டிருந்த போது கைது செய்ததாகவும் கூறுவதிலிருந்தே நடப்பவையெல்லாம் காவல்துறையின் திட்டமிட்ட சதிகள் தான் என்பதை உணரமுடியும்.

எவ்வித அடிப்படை வசதிகளுமின்றித் தீவுகள் போலக் காணப்படும் அருந்ததியர் குடியிருப்புகளைத் தேடிச்சென்று தொல்லை கொடுப்பதன் மூலமும், அருந்ததியத் தலைவர்களின் மேல் பொய்வழக்குகளைப் போடுவதன் மூலமும் தங்களது சாதியாதிக்க வெறிக்குத் தீனிபோட்டுக் கொண்டிருக்கின்றனர், காவல்துறையினர். பிழைப்புத் தேடி திருப்பூருக்கு வந்த நான்கு பீகாரிய இளைஞர்கள் மீது தேசியப்பாதுகாப்புச் சட்டம் ஏவி விடப்பட்டதற்கும், ஆண்டாண்டு காலமாக சாதிய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி ஆதரவற்ற நடைபிணங்களாக வாழத் தலைப்பட்டிருக்கும் அருந்ததியர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவப் பரிந்துரை செய்திருப்பதற்கும் அடிப்படைக் காரணம் இருதரப்பினரும் ‘ஒடுக்கப்பட்டவர்கள்’ என்ற ஒற்றுமையைத் தவிர வேறொன்றும் இல்லை.

அருந்ததியப் பெண்களைப் பின் தொடர்தல், சாதி சொல்லி ஆபாசமாகத் திட்டுதல், வழிப்பறிகள், மிரட்டல்கள், சட்ட விரோத விசாரணைகள், சட்ட விரோத சிறைவைப்புகள், பொய் வழக்குகள், சித்திரவதைகள் என ஊத்துக்குளி வட்டாரத்திலுள்ள 30க்கும் மேற்பட்ட அருந்ததியர் கிராமங்கள் அனைத்தும் காவல்துறையினரின் வேட்டைக் காடாக்கப்பட்டுள்ளன என்பதே மறுக்க முடியாத உண்மை நிலையாகும்.

இரயில் தண்டவாளங்களுக்கு அருகேயே குடியிருக்கும் ஆதிக்கசாதி மக்களிடமோ, ஆதிக்க சாதி அமைப்புகளிடமோ, பிற அரசியல் கட்சிகளிடமோ எவ்வித சிறு விசாரணையும் மேற்கொள்ளாமல் ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்ட அருந்ததிய மக்களையும் குற்றவாளிகளாக்கி இரயில்கவிழ்ப்புக் குற்றப்பரம்பரையினராகச் சித்தரித்து விசாரணையென்னும் போர்வையில் காவல்துறையால் அரங்கேற்றப்பட்டு வரும் அடாவடித்தனங்களும், அத்துமீறல்களும் எண்ணிலடங்காதவை. வீரப்பன் தேடுதல் வேட்டையென்ற பெயரில் நினைத்துப் பார்க்கவும் முடியாத சித்திரவதைகளைப் பழங்குடி மக்களின் மேல் செலுத்திய காவல்துறையின் அடுத்தகட்ட நரவேட்டை ஊத்துக்குளியில் நடைபெற்றுள்ளது. இந்த உண்மைகளைத் தமிழக மக்களுக்கும், சனநாயக ஆற்றல்களுக்கும் உரக்கச் சொல்லிடும் பொருட்டு புரட்சிகர இளைஞர் முன்னணி, ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆகிய எமது அமைப்புத் தோழர்களின் மூலம் 18-12-10 அன்று காவல்துறையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளையும், முடிவுகளையும் இச்சிறு அறிக்கையாக முன்வைக்கிறோம்.

அணைப்பாளையம் - அருந்ததியர் காலனி

சுமார் 55 குடும்பங்கள் உள்ளன. 200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊத்துக்குளியிலிருந்து 5 கி.மீ தொலைவிலும், இரயில் தண்டவாளப்பகுதியில் இருந்து 6 கி.மீ தொலைவிலும் இருக்கிறது. பட்டப்படிப்பு படித்தவர்கள் யாருமில்லை. இருவர் தற்போது பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். இரண்டு பேர் ஆசிரியர் பயிற்சியும், இரண்டு பேர் மேனிலைக் கல்வியும், இரண்டு பேர் 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். முந்தைய தலைமுறையினர் யாரும் பள்ளிப்படிப்பைக் கூடப் பெறவில்லை.

இப்பகுதியில் 1 தொடக்கப்பள்ளி இருக்கிறது. 15 மாணவர்கள் படிக்கின்றனர். அங்கன்வாடியில் 3 குழந்தைகள் படிக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்க மளிகைக் கடையோ, நியாயவிலைக் கடையோ இல்லை. ஊருக்குள் மட்டும் தார்ச் சாலை இருக்கிறது. முக்கிய சாலைக்கு மண் சாலையில் தான் செல்ல வேண்டும். பேருந்து வசதிக்கு வாய்ப்பே இல்லை. அணைப்பாளையம் பிரிவில் இறங்கி 3 கி.மீ தூரம் நடந்துதான் ஊருக்கு வரவேண்டும்.

வயது முதிர்ந்தவர்கள் விவசாயக் கூலி வேலைக்கும், நடுத்தரப் பெண்கள் குட்டை வேலைக்கும் (100 நாள் வேலை வாய்ப்பு) இளைஞர்கள் திருப்பூர் பனியன் ஆலைக்கும் செல்கின்றனர். இப்பகுதியைச் சார்ந்த 1) காந்தி (வயது 33), த/பெ. மாறன், க.எண் 1/68, அருந்ததியர் காலனி, 2) திரு. பரமேஸ்வரன், த/பெ. ரங்கன், க.எண். 89, அருந்ததியர் காலனி இருவரும் இரயில் கவிழ்ப்புச் சதி வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். 17.06.2010 உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு முன் விஜயமங்கலம் இரயில் நிலையம் அருகில் கற்கள் வைக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தது முதல், 2010 நவம்பர் மாதம் வரை பரமேஸ்வரன் 5 முறையும், காந்தி 1 முறையும் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டுள்ளனர்.

புரட்சிப் புலிகள் அமைப்பின் ஒன்றியப் பொறுப்பாளரான திரு. பரமேஸ்வரன் ஊத்துக்குளி சுகாதார மையத்தில் சுகாதாரப் பணியாளராகவும், புரட்சிப் புலிகள் அமைப்பின் ஆதரவாளரான திரு. காந்தி தையல் தொழில் செய்பவராகவும் இருந்துள்ளனர். கடந்த 26.11.10 அன்று இரவு 11.00 மணிக்கு பரமேஸ்வரனை ஊத்துக்குளி காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன், துணை ஆய்வாளர் சண்முகம் மற்றும் இரண்டு காவலர்கள் அடங்கிய குழுவும், 11.30 மணிக்கு திரு. காந்தியை திருப்பூர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான குழுவும் அழைத்துச் சென்றுள்ளன. இரண்டு நாட்களாகியும் மேற்கண்ட இருவரும் வீட்டிற்குத் திரும்பாததால், இருவரின் உறவினர்களும் ஊத்துக்குளி காவல் நிலையம் சென்று விசாரித்த போது “தங்களுக்கு எதுவும் தெரியாது” என்ற பதிலே காவலர்களிடமிருந்து கிடைத்துள்ளது.

காவல்துறையின் இவ்வணுகுமுறையால் பதறிப்போன ஊர் மக்கள் 85 பேர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 29.11.10 அன்று பட்டினிப் போராட்டம் நடத்த முயற்சி செய்ததால் கைது செய்யப்பட்டு திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள காமாட்சி அம்மன் மண்டபத்தில் வைக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு மேல் விடுவிக்கப்பட்டுள்ளனர். 17.06.10க்கு பின் காவல்துறையினர் சீருடையோடும், சீருடை இல்லாமலும் பகல், இரவு நேரங்களில் விசாரணைக்காக அணைப்பாளையம்-அருந்ததியர் காலனிக்கு வந்துள்ளனர். இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களிலும், Tempo Vanலும் ஊருக்குள் வந்து அனைத்து ஆண்களையும்விசாரணை செய்துள்ளனர்.

இரவு நேரங்களில் வீட்டிலிருந்து வெளியில் வருபவர்கள், இரவு நேரத்தில் வேலைக்கு சென்று வருபவர்களை (நடந்து வந்தால்) ரோந்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டு இரவு முழுவதும் தூங்க விடாமல் அலைக்கழித்து, காலையில் ஏதாவது ஒரு இடத்தில் இறக்கிவிட்டுப் போயுள்ளனர். இரு சக்கர வாகனங்களில் வருபவர்களிடம் வாகனங்களைப் பறித்துக் கொண்டு நடந்து போக வைத்துள்ளனர். வாகனங்களை மறுநாள் காலை ஊத்துக்குளி காவல் நிலையத்தில் வந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். காலையில் வாகனங்களை வாங்கச் செல்பவர்களிடம் “கல் வைத்தது யார்? உனக்குத் தெரியும், நீ வைத்தாயா?” என்று மிரட்டியுள்ளனர். அவர்களிடம் கைரேகை, முகவரி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இரவில் வேலைக்குச் சென்று திரும்புபவர்களிடம் உள்ள பணத்தையும் பறித்துள்ளனர்.

ஆகஸ்ட் மாத இறுதியில் பீகார் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட பின்பு குறைந்த காவல் துறையினரின் நெருக்கடிகள், காந்தி மற்றும் பரமேஸ்வரன் கைதிற்குப் பின் அதிகரித்து உள்ளது. சீருடை இல்லாக் காவலர்கள், ஊர் மக்களிடம் சென்னையில் இருந்து வந்துள்ள பத்திரிக்கைக்காரர்கள் என்று கூறிக் கொண்டு என்ன நடந்தது? என்று விசாரித்துள்ளனர். மக்கள் சந்தேகப்பட்டு பேசி எண்ணையும், முகவரியையும் கேட்ட போது, 9 இலக்க எண்களை மட்டும் கொடுத்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

சீருடைக் காவலர்கள் நள்ளிரவு நேரங்களில் வீட்டுக் கதவுகளைத் தட்டியெழுப்பி விசாரித்துள்ளனர். காவல்துறைக்குப் பயந்து மாலை 6.00 மணிக்கு ஊரே அடங்கி விடுகிறது. இரவு நேரங்களில் ஆண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. இயற்கை உபாதைகளைக் கழிக்கக் கூட வெளியில் வரமுடியாத நிலைக்கு அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இரவில் வாகன இரைச்சல் ஏதாவது கேட்டால் ஆண்கள், இளைஞர்கள் அனைவரும் சோளக்காட்டிற்குள் ஓடி மறைந்து கொள்கின்றனர். விசாரணை என்கிற பெயரில் சித்திரவதை செய்யப்படுவதற்குப் பயந்து ஒளிந்து கொள்வதாக ஆண்கள் கூறுகின்றனர்.

பரமேஸ்வரனின் மகள் சந்தியாவின் (14) புத்தகப் பையைக் கொட்டிக் கவிழ்த்து ஏதாவது எழுதி வைக்கப்பட்டுள்ளதா என தேடியுள்ளனர். குழந்தையிடம் “உன் அப்பா ஏதாவது எழுதி வைத்துள்ளானா?” எனக் கேட்டு விட்டு பரமேஸ்வரனின் கையெழுத்துள்ள சில தாள்களை அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர். இது போன்ற சம்பவங்களால் குழந்தைகள் மிகுந்த மிரட்சியடைந்துள்ளனர். அயலவர்கள் யார் வந்தாலும் குழந்தைகள் பயந்து ஓடுகின்றனர். மாலை நேரங்களில் விளையாடக் கூட வெளியில் வருவதில்லை. பெண்கள் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது எவ்வளவு அளவு வாங்குகின்றனர் என கடைகளில் காவல் துறை விசாரித்துள்ளது. பெண்களைப் பின் தொடர்ந்துள்ளனர். சில நேரங்களில் கிண்டல் செய்துள்ளனர்.

“எங்கள் ஊரிலிருப்பவர்களுக்கும், கல் வைத்ததற்கும் எந்த சம்பந்தமுமில்லை; உழைப்பதற்கும், வீடு வருவதற்குமே நேரம் சரியாக இருக்கிறது; எங்கள் ஊரிலிருந்து 6 கி.மீ தொலைவில் இருக்கிற தண்டவாளத்தில், இவ்வளவு காவல் கெடுபிடிகள் இருக்கும் போது எப்படி கல் வைத்து விட்டுத் திரும்ப முடியும்?” என்கின்றனர், பொதுமக்கள்.

“காந்தி, பரமேஸ்வரன் இருவரும் எங்கள் அருந்ததிய மக்களுக்காகவும், ஊர் மக்களுக்காகவும் பொதுக் காரியங்களில் ஈடுபடுவார்கள்; இருவருமே பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியவர்கள்; வெளியூரில் இருந்து யாரும் அவர்களைத் தேடி வந்ததில்லை; கலெக்டரிடம் மனு கொடுப்பது, ரேசன் கார்டு வாங்கிக் கொடுப்பது தவிர அவர்கள் பெரிதாக ஒன்றும் செய்ததில்லை” என்கின்றனர். காந்தி, பரமேஸ்வரன் இருவரையும் அவர்தம் மனைவிகள் சிறையில் சென்று பார்த்ததாகவும், இருவரும் மிகுந்த சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர். “காந்தியால் கையைத் தூக்க முடியவில்லை, கைவிரல்களை அசைக்க முடியவில்லை, நரம்புகள் வலிக்கிறது, பின்புறத்தில் காயமிருப்பதால் உட்கார முடியவில்லை” என்று காந்தியின் மனைவி சுசீலா தெரிவித்தார்.

பரமேஸ்வரனின் மனைவி கலாமணி, தனது கணவரால் நடக்கக் கூட முடியவில்லையென்று தெரிவித்தார். இருவரையும் கைது செய்த விபரத்தினை காவல்துறை சம்பந்தப்பட்டோரின் குடும்பத்திற்கு முறையாக தெரிவிக்கவில்லை.

அய்யா முத்தான்காடு () அம்பேத்கர் நகர் :

ஊத்துக்குளியிலிருந்து 4 கி.மீ தொலைவிலும் ரயில் பாதையிலிருந்து 1/2 கி.மீ தொலைவிலும் இருக்கிறது. சுமார் 50 வீடுகள் உள்ளன. பல்வேறு ஊர்களிலுள்ள அருந்ததிய மக்கள் இங்கு குடியேறியுள்ளனர். பெரும்பான்மையான மக்கள் குடிசைகளில் வாழ்கின்றனர். அரசு உதவி பெற்று சில வீடுகள் கட்டப்பட்டுள்ளன, சில கட்டப்பட்டு வருகின்றன. முறையான சாலை வசதியோ, பேருந்து வசதியோ எதுவும் இல்லை.

இரயில் பாதையில் இருக்கக் கூடிய இரண்டு - கண் பாலம் வழியாகத்தான் ஊத்துக்குளிக்குச் செல்ல முடியும். கல் வைத்ததாகச் சொல்லப்பட்ட பின்பு கண் பாலம் வழியாக போக்குவரத்திற்குக் காவல்துறை அனுமதிக்கவில்லை. “இந்த வழியாக யாரும் வரக்கூடாது, மீறி வந்தால் கைது செய்வோம்” என மிரட்டியுள்ளனர். இதனால் சுற்றுப்பாதையில் தான் வேலைக்கும், அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவும் சென்று வருகின்றனர்.

அருகிலுள்ள இரயில்பாதையில் 24 மணி நேரமும் காவலர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர். மூன்று மாதத்திற்கு முன் காலை 6.30 மணிக்கு SI சண்முகம் தலைமையிலான காவல்துறையினர் இக்கிராமத்திற்குச் சென்றுள்ளனர். ஊரிலுள்ள 16 ஆண்களின் பெயரைச் சொல்லி அழைத்து, விசாரணைக்காக ஊத்துக்குளி காவல்நிலையம் கொண்டு சென்றுள்ளனர். மக்கள் தயங்கிய போது “ஸ்டேசனுக்கு போனவுடன் வந்து விடலாம்” என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.

“கல் வைத்தவர்கள் யார்? இந்திக்காரர்களைத் தெரியுமா? கல் வைத்தது உங்க ஆளுங்களா?” என்று விசாரித்துள்ளனர். காலையில் கூட்டிச்சென்று இரவு 10.00 மணிக்கு விடுவித்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு 19 வயது இளைஞர் ஒருவரை காலை 6.30 மணிக்கு காவல்துறையினர் பெயர் சொல்லி மக்களிடம் விசாரித்துள்ளனர். அவரின் வீட்டிற்குச் சென்று, தந்தை, மகன் இருவரிடமும் விசாரணை செய்துள்ளனர். “கல் வைத்த செயலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

ஆனாலும், திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் அவரை, தந்தை ஊத்துக்குளியிலிருந்து பேருந்து ஏற்றி விட்ட பின்னர், இரு சக்கர வாகனங்களில் பேருந்தைப் பின் தொடர்ந்து, திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் வைத்து அவரை விசாரணைக்காக ஊத்துக்குளி காவல்நிலையம் அழைத்து வந்துள்ளனர். பின்னர் நல்லூர் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

வீட்டாருக்குக் காவல் துறையிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. இளைஞர் வேலை செய்யும் நிறுவனத்தின் ஒப்பந்ததாரரிடம் பேசியில் அவரைப் பற்றி விசாரித்துள்ளனர். எங்கேயிருந்து பேசுகிறோம் என்பதைச் சொல்ல மறுத்துவிட்டனர். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்பதை யாரிடமும் சொல்லக் கூடாது என ஒப்பந்ததாரரை மிரட்டியுள்ளனர். இரவு 7.00 மணிக்கு ஒப்பந்ததாரர் இளைஞரின் தந்தை கேட்டதற்கிணங்க தகவல் தெரிவித்துள்ளார். இளைஞரின் பேசிக்குத் தொடர்பு கொண்ட போது, அது அணைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது.

ஊத்துக்குளி காவல்நிலையம் சென்று தந்தை விசாரித்துள்ளார். காவல் நிலையத்தில் எங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர். 3 நாட்களாகியும் அவர் எங்கிருக்கிறார் என்பது குடும்பத்தார், ஊர் மக்கள் யாருக்கும் தெரியவில்லை. மாவட்டக் காவல்துறைக் கண்காளிப்பாளர் அருணிடம் இளைஞரின் தந்தை இது பற்றிப் புகார் கொடுத்துள்ளார். “இன்று இரவுக்குள் வரவில்லை எனில் என்னிடம் தொடர்பு கொள்ளுங்கள்” என மாவட்டக் கண்காணிப்பாளர் அருண் கூறியுள்ளார். 3 நாட்கள் கழித்து நல்லூர் காவல் நிலையத்தில் இளைஞர் இருக்கும் தகவல் கிடைத்துள்ளது. தந்தையோடு ஒப்பந்ததாரரையும் வரச் சொல்லியுள்ளனர். ஒப்பந்ததாரரை நம்பியே இளைஞரை விடுவதாகக் கூறியுள்ளனர். ஒப்பந்ததாரர், தந்தை இருவரிடமும் கையெழுத்து வாங்கி அனுப்பியுள்ளனர்.

ஊத்துக்குளி காவல் நிலையத்தில் இளைஞரின் G-Five அலைபேசியை வாங்கி வைத்துள்ளனர். திரும்பச் சென்று கேட்ட போது “யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை” என அலட்சியமாகக் கூறியுள்ளனர். இன்று வரை அலைபேசியை ஒப்படைக்கவில்லை.

“எனது மகனை விசாரணை என்ற பெயரில் அடித்து மிரட்டியுள்ளனர். 3 நாட்கள் காவல்நிலையத்தில் வைத்து துன்புறுத்தியதால் மிகுந்த மன உளைச்சலோடு இருக்கிறான், என்ன விசாரித்தனர் என்பதைப் பற்றி என்னிடம் கூட சொல்லவில்லை” என தந்தை கூறினார்.

இதே போன்று 70 வயது முதியவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சமையல் வேலை செய்பவரான இவரது வீட்டில் “சமையலுக்கு ஆள் வேண்டும்” என்று கூறி விசாரித்துக் கொண்டிருக்கும் போதே, வெளி வேலைக்குச் சென்றுவிட்டுக் காலையில் முதியவர் வந்துள்ளார். வரும் வழியிலேயே அவரை மடக்கி, சமையல் வேலைக்கு வருமாறு கூறியுள்ளனர். அவரும், மனைவியும் மறுத்த போதும், வலுக்கட்டாயமாக வாகனத்தில் முதியவரை ஏற்றிய போதுதான், வந்திருப்பது காவல்துறையினர் என்பது தெரிய வந்துள்ளது. காவல் நிலையத்தில் அவரது மனைவி சென்று விசாரித்த போது பெருந்துறைக்கும் ஈரோடுக்கும் அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறியுள்ளனர். ஆனால் முதியவரை ஊத்துக்குளி காவல் நிலையத்தில் தான் வைத்து விசாரித்துள்ளனர்.

“கல் வைத்தவர்கள் யார்? உனக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? உன் மேல் வழக்கு போடுவேன்” என்று அவரை மிரட்டியுள்ளனர். கல்வைத்ததாக ஒத்துக்கொண்டால் ரூ.10,000 தருவதாகக் கூறியுள்ளனர். இரவு 10.00 மணிக்கு மனைவி சென்னியம்மாளிடம் “என் கணவரைப் பெற்றுக் கொண்டேன்” என எழுதி, கை ரேகை வாங்கிவிட்டு, “ராஜீவ் காந்தியை கொன்ற மாதிரி எங்கள் மீது வெடி குண்டு வீசி விடாதீர்கள்” எனக் கூறி பயங்கரவாதிகள் போல் சித்தரித்துள்ளனர். எழுதி வாங்கிய காவலர், பெரியவரின் மனைவியிடம் 100 ரூபாய் பணம் தந்துவிட்டுப் போகும்படி பிச்சைகேட்டுள்ளார்.

மேற்கண்ட பெரியவர் விபத்தொன்றில் கால் உடைந்ததால் காலில் உலோகத் தகடு பொருத்தி காலைச் சாய்த்து நடந்து வருகிறார். 20க்கும் மேற்பட்ட ஆண்கள் இதே போன்று முறையற்ற சிறைவைப்புக்கு ஆளாக்கப்பட்டு 1நாள், 3நாள் கழித்து கைரேகை, புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பகுதி மக்கள் பீதியில் இருக்கின்றனர். விசாரணை ஆரம்பித்ததிலிருந்து 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விசாரணைக்குப் பயந்து மக்கள் ஊரை விட்டு வெளியேறியுள்ளன. புதுமனைப் புகுவிழா நடத்திய அன்றே ஒரு வீட்டின் உரிமையாளர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். வெளியேற முடியாத மக்கள் மட்டும் ஊரில் வசித்து வருகின்றனர்.

சாளப்பாளையம்

அருந்ததியர் மக்கள் மட்டும் வாழும் பகுதியில் 50 வீடுகள் உள்ளன. இம் மக்களின் பிரதான தொழில் விவசாயக் கூலி வேலையாகும். திருப்பூர் பின்னலாடை நிறுவனத்திற்கு இளைஞர்கள் வேலைக்குச் செல்கின்றனர். இங்கு கடைகள் எதுவும் கிடையாது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்க ஊத்துக்குளிதான் வர வேண்டும். மேலும் மக்கள் எங்கே செல்வதாக இருந்தாலும் 3 கி.மீ தொலைவு நடந்து வந்து வாய்ப்பாடி பிரிவு, மேட்டுக்கடை ஆகிய பேருந்து நிறுத்தங்களிலிருந்து தான் விஜயமங்கலம், ஊத்துக்குளி பகுதிகளுக்குச் செல்ல முடியும். முதன்மைச் சாலையை அடைவதற்கு, தொடர்வண்டிப்பாதையின் கீழ் உள்ள இரண்டு சிறு கண்லிபாலங்கள் வழியாகத்தான் செல்ல முடியும்.

கடந்த 6 மாத காலமாக இப்பகுதியில் விசாரணை நடத்தியுள்ளனர். இரவு நேரங்களில் திடீர், திடீரென விசாரிக்க வருவதால் மக்கள் நிம்மதியாகத் தூங்க முடியாமல் பெரும் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 12.12.10 ஞாயிறு அன்று இரவு “மும்பை - கன்னியாகுமரி விரைவு வண்டியைக் கவிழ்க்க கல் வைத்தது யார்” என 100க்கும் மேற்பட்ட காவலர்கள் ஊருக்குள் நுழைந்து மிரட்டி விசாரித்துள்ளனர். சாளப்பாளையத்திலிருந்து 11 பேரையும், சேடபாளையம் பகுதியிலிருந்து 16 பேரையும் ஊத்துக்குளி காவல்நிலையம் கொண்டு சென்று மறுநாள் இரவு 8 மணியளவில் விடுவித்துள்ளனர்.

அருந்ததியர் வசிக்கும் பகுதியில் மட்டும் வீடுகளுக்குச் சென்று விசாரிப்பது, சோதனைபோடுவது, காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்வது என தொல்லை தருவதால் மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். கள ஆய்வுக்காக 18.12.10 சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு களஆய்வுக்குழு அங்கு சென்றிருந்த போது ஊர் மக்கள் ஒருவர் கூட வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. ஊரே மிக அமைதியாக இருந்தது. தற்செயலாக வந்த ஒருவரிடம் விபரம் கேட்ட போது “காவல்துறை அச்சுறுத்தல் உள்ளது, மக்கள் யாரும் வரமாட்டார்கள்; ஊராட்சித் தலைவர் வீடு பக்கத்தில் தான் உள்ளது, அவர் வந்து அழைத்தால் தான் ஊர்மக்கள் வெளியில் வருவார்கள்” எனக் கூறினார். ஊராட்சித்தலைவர் அய்யாவுவை (அருந்ததியர்) அணுகிய போது அவரும் “மக்கள் மிகவும் பயந்து உள்ளனர், நீங்கள் கூப்பிட்டால் வரமாட்டார்கள்” எனக்கூறினார். புதிய நபர்களோ, புதிய வாகனங்களோ ஊருக்குள் வந்தால் காவல்துறைதான் விசாரிக்க வந்துள்ளதோ என்ற அச்சத்தில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே அடங்கிவிடுகின்றனர்.

சுப்பனூர்

40 அருந்ததியர் குடும்பங்கள் இப்பகுதியில் உள்ளன. கைதுசெய்யப்பட்ட திரு. மணி இப்பகுதி வார்டுக்கான உறுப்பினராக உள்ளார். மக்களின் பொதுப்பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பவராகவும் மேல்நிலைத் தொடடியிலிருந்து தண்ணீர் எடுத்துவிடும் வேலை செய்பவராகவும் இருப்பவர். மனைவியைப் பிரிந்து தனது தாயுடன் வாழ்ந்து வருபவர். வயதான தாய் தனியாக இருப்பாரே என்ற காரணத்திற்காக வெளியில் சென்றாலும் தவறாமல் நேரத்தோடு வீட்டிற்குச் சென்றுவிடுபவர்.

கடந்த காலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகளில் செயல்பட்டிருந்தாலும் தற்போது எந்த அமைப்பிலும் இல்லை. திரு. மணி மற்றும் பிற தோழர்களின் கைது நடவடிக்கைகுறித்துப் பகுதிமக்கள் தெரிவித்த கருத்துகள் இச்சமூகத்தின் இழிநிலைப் போக்கை உணர்த்தின. “ரயில் கவிழ்ப்பு வழக்கு ஒரு சதித்திட்டம். மக்களுக்காக முன்நின்று வேலை செய்த அருந்ததியத் தலைவர்களை ஒடுக்குவதற்காக இப்படியொரு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 5 நபர்களும் அடிதடிக்கோ, வீண் தகராறுகளுக்கோ செல்லக்கூடியவர்கள் அல்ல. ஊத்துக்குளி வட்டார அருந்ததிய மக்கள் முன்னேறிவிடக் கூடாது, கால காலத்திற்கும் அடிமைகளாகவே இருக்க வேண்டுமென்ற நோக்கத்தை தவிர வேறில்லை. இப்பகுதிகளிலெல்லாம் ஆதிக்க சாதி அடக்குமுறைப் போக்கும், தீண்டாமைக் கொடுமையும் இன்னமுமே தலைவிரித்தாடுகின்றன.

ஆண்கள் தோட்ட வேலைக்குச் சென்றால் அவர்களது மனைவியரும் உடன் செல்ல வேண்டும். ஆதிக்கச் சாதியினரின் வீட்டு வாசலைக் கூட்டவும், சாணி மெழுகவும் பெண்கள் பணிக்கப்படுவர். வாடா, போடா என ஏகத்துக்கும் பேசுவதாகவும், கெட்ட வார்த்தைகளில் திட்டி வேலை வாங்குவதாகவும் ஆதிக்கச் சாதியினரின் அடாவடிப் போக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் சமூகச்சூழலில்தான் அருந்ததிய மக்கள் வாழ்கின்றனர்.

வேலைக்குச் சென்று இரவுகளில் வீடு திரும்பும் போது சந்தேக நபர்களாகக் கைது செய்யப்படுவதும், காவல்துறையினரின் அத்து மீறல்களுக்கு உள்ளாக்கப்படுவதும் அருந்ததிய மக்களின்றி வேறு யாருமில்லை. அருந்ததிய மக்கள் ஆதிக்கச் சாதியினரின் காலுக்கடியில் தான் வைத்திருக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இப்படியொரு சாதிய வெறியாட்டத்தை காவல்துறை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. உழைக்கும் எளிய மக்களாகிய தாழ்த்தப்பட்ட அருந்ததியர்கள் இத்தனையும் மீறி என்ன செய்துவிடமுடியும்? போடப்பட்டவை பொய் வழக்குகள்தான் என்பதை எங்குபோய்ச் சொல்ல முடியும்?” என மக்கள் கருத்து தெரிவித்தனர்.

குன்னாங்கல் பாளையம் - அருந்ததியர் காலனி:

சுமார் 400 அருந்ததியர் வீடுகள் இருக்கின்றன. அருந்ததிய மக்கள் விவசாயக் கூவேலைக்கும், கட்டட வேலைக்கும், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கும் வேலைக்குச் செல்கின்றனர். வீடுகளைத் தவிர வேறெந்த அசையாச் சொத்தும் அருந்ததிய மக்களுக்கு இல்லை. 12.12.10 ஞாயிறு நள்ளிரவில் 2.00 மணிக்கு சுப்பனூர் மணி சகிதமாக வந்த துணைக் கண்காணிப்பாளர், உளவுப்பிரிவு அப்புசாமி ஆகியோர் அடங்கிய காவல் துறையினர், மாணிக்கத்தை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மாணிக்கத்தை 6 மாத காலங்களில் 5 தடவை ஊத்துக்குளி காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்துள்ளனர். மாணிக்கம், 6 மாதத்திற்கு முன்னர்தான் ‘அருந்ததியர் விடுதலை இயக்கத்தை’ தொடங்கி அதன் மாநில அமைப்பாளராக இருந்துள்ளார். அருந்ததிய மக்களின் நலனுக்காக சட்டபூர்வமான முறைகளில் வேலை செய்துள்ளார். மாணிக்கம் கைது செய்யப்பட்ட விபரம் அவரது மனைவிக்கும், குடும்பத்தாருக்கும், உடனடியாக தெரியவில்லை. நாளிதழ்களில் வந்த செய்தியை மற்றவர்கள் கூறிய பின்னரே, தெரிந்துகொண்டுள்ளனர்.

வெங்கலப் பாளையம்

வெங்கலப் பாளையம் கிராமத்தில் சுமார் 80 வீடுகளில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இங்கு பெரும்பாலும் ஓட்டு வீடுகளும், சில தொகுப்பு வீடுகளும் உள்ளன. வயதான ஆண்களும் பெண்களும் விவசாயக் கூலி வேலைகளுக்குச் செல்கின்றனர். இளைஞர்கள் திருப்பூர் மற்றும் ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் உள்ள பனியன் தொழிற்சாலைகளுக்கு கம்பெனி வாகனங்கள் மூலம் செல்கின்றனர். இக்கிராமம் ஊத்துக்குளியிலிருந்து 10 கி.மீ தொலைவிலும், தொடர்வண்டிப்பாதையில் இருந்து 9 கி.மீ தொலைவிலும் உள்ளது.

இக்கிராமத்தைச் சுற்றிலும் கவுண்டர் சமூகத்தினரின் தோட்டங்கள் உள்ளன. ஒரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவும் கூட கடைகள் கிடையாது. பொருட்கள் வாங்க 8 கி.மீ தொலைவில் உள்ள மாமரம் பேருந்து நிறுத்தம் (காங்கேயம் சாலைக்கு) வர வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் நடந்துள்ளது. ஊத்துக்குளி கிராமங்களில் நிலவும் வன்கொடுமைக்கு எதிராகவும், பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவும் போராட்டங்களில் ஈடுபட்டதால் ஆதிக்க சாதியினருக்கும், காவல் துறையினருக்கும் இவர்களின் மேல் வன்மம் இருந்து வந்துள்ளது. கடந்த 6 மாத காலத்திற்கு முன்பு தோழர்கள் கதிரவன், மாணிக்கம் இணைந்து அருந்ததியர் விடுதலை இயக்கம் என்னும் பெயரில் அமைப்பு தொடங்கி அதில் செயல்பட்டு வந்தனர். செம்மொழி மாநாட்டிற்கு முன் ஊத்துக்குளி - விஜயமங்கலம் இரயில் பாதையில் கற்கள் வைக்கப்பட்டதாகக் கூறி விசாரணைக்கு 4 முறை அழைத்துச் சென்று இருவரின் முழு விவரங்களையும் சேகரித்துள்ளனர்.

12.12.10 ஞாயிறு இரவு 11 மணியளவில் ஊத்துக்குளி காவல் நிலைய துணைஆய்வாளர் சண்முகம், உளவுப்புரிவு அப்புசாமி தலைமையில் நான்கு காவலர்கள் கரைப்பாளையம் சாமிநாதன் வீட்டிற்குச் சென்று விசாரித்து விட்டு, பின் சுப்பனூர் மணியின் வீட்டைக் காட்டுமாறு மிரட்டி அழைத்துச் சென்றுள்ளனர். சுப்பனூர் மணியை இரவு 11.30 மணிக்கு வாகனத்தில் ஏற்றி கடுமையாக மிரட்டி மாணிக்கம், கதிரவன் ஆகியோரது வீடுகளைக் காட்டச் சொல்லி விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக உறவினர்களிடம் கூறிவிட்டு, மூவரையும் ஊத்துக்குளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொகுத்த விபரங்கள் :

1. காந்தி (வயது 33), /பெ மாறன், .எண் 1/68, அருந்ததியர் காலணி, அணைப்பாளையம், ஊத்துக்குளி.

செம்மொழி மாநாட்டிற்கு முன் 17.06.10 அன்று கல் வைக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்பு, ஊத்துக்குளி வட்டாரத்திலுள்ள அனைத்து சனநாயக, தேசிய ஆற்றல்களும் காவல்துறையால் விசாரிக்கப்பட்டுள்ளனர். காந்தியை 6 மாதத்திற்கு முன்பு ஊத்துக்குளி காவல் நிலையம் அழைத்து கைரேகையைப் பெற்றுக் கொண்டு, கல் வைத்தது யார்? என்று விசாரித்துள்ளனர். 1 நாள் முழுவதும் காவல் நிலையத்தில் வைத்திருந்து பின்னர் விடுவித்துள்ளனர்.

26.11.10 வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு காந்தியை, துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் வந்த காவல்துறையினர் பெருமாநல்லூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று, “எதற்கு அழைத்து வந்துள்ளோம் தெரியுமா?” என்று கேட்டுள்ளனர். காந்தி தெரியாது என்று கூறியுள்ளார். “வெகு சீக்கிரம் தெரிந்துகொள்வாய்” எனக் கூறியுள்ளனர். 27.11.10 சனிக்கிழமை காலை, திருப்பூர், நல்லூர் காவல் நிலையத்திற்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கே சீருடை இல்லாக் காவலர்கள் 10 பேர் காந்தியை கல் வைத்ததாக ஒத்துக்கொள்ளச் சொல்லி மிரட்டியுள்ளனர். காந்தி மறுத்துள்ளார். அவரை கெட்டவார்த்தைகளால் திட்டி அடிக்க ஆரம்பித்துள்ளனர்.

காந்தியின் கைகளைப் பின்புறமாகக் கட்டி, நீளமான கயிற்றால் கூரையின் விட்டத்தில் தொங்கவிட்டு இரும்புக்குழாய், மற்றும் லத்தியால் அடித்துள்ளனர். தோள்பட்டை வலியால் விட்டுவிடும்படி காந்தி கதறியுள்ளார். கல் வைத்ததாக ஒப்புக் கொண்டால் விட்டுவிடுகிறோம் என்று கூறி மீண்டும் மீண்டும் அடித்துள்ளனர். அவர் குற்றச் செயல் புரியவில்லை என்று மறுத்ததும், கிரிக்கெட் ஸ்டெம்புகளின் மேல் குப்புறப் படுக்கவைத்து விலா எலும்பும், தோள்பட்டையும் நசுங்கும் அளவிற்கு முதுகின் மேலேறி மிதித்துள்ளனர். வலியால் அலறிய போதும் விட்டுவிடவில்லை.

கால்கள் இரண்டையும் அகலவிரித்து இரண்டு கால்களிலும் காவலர்கள் ஏறி நின்றுள்ளனர். காந்தியை அடித்த அடியில் அவருடைய உடைகள் கிழிந்து தொங்கியுள்ளன. உடல் முழுவதும் இரத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். நவம்பர் 27, 28 ஆகிய இரண்டு நாட்களும் சித்திரவதை தொடர்ந்துள்ளது.

“கல்வைத்ததாக ஒத்துக் கொள்ளவில்லையென்றால், ரயிலில் அடிபட்டுச் சாகவிட்டுவிட்டு, கல் வைக்க முயற்சித்த போது, ரயிலில் அடிபட்டுச் செத்ததாகக் கூறி விடுவோம்” என்று மிரட்டியுள்ளனர். அவருடைய ஆண்குறியில் குறி வைத்து அடித்து “எய்டஸ் ஊசி போட்டு விடுவோம்” என்று கூறியுள்ளனர். ஆண்மை போகுமளவிற்கு அடித்து விட்டதாகவும், இனி உன் மனைவி ஊரில்தான் போக வேண்டும் என்று கூறி உளவியல் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளனர். குழந்தைகள் அனாதைகளாக அலைந்து பிச்சையெடுத்துச் சாகும் என்று அச்சமூட்டியுள்ளனர்.

28.11.10 ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், கையைப் பின்புறமாகக் கட்டி இராட்டையில் தொங்கவிட்டு கதவுகளை வெளிப்புறமாகத் தாழிட்டுச் சென்றுள்ளனர். சுமார் 2 மணி நேரம் தொங்கவிடப்பட்ட நிலையில் கீழே இறக்கி விடும்படி சத்தம் போட்டுள்ளார். வலி தாங்க முடியாமல் அழுது கெஞ்சியுள்ளார். எந்தப் பதிலும் வராத நிலையில், “நீங்கள் சொல்வது மாதிரி கேட்கிறேன், இறக்கி விடுங்கள்” என்று சத்தம் போட்டவுடனேயே கதவைத் திறந்து இறக்கியுள்ளனர். மீண்டும், பெருமாநல்லூர் காவல்நிலையம் கொண்டு சென்றுள்ளனர். அங்கு வந்த துணைக் கண்காணிப்பாளரிடம் தன்னைச் சித்திரவதை செய்து ஒப்புக் கொள்ள வைத்ததாகவும், தனக்கும் தண்டவாளத்தில் கல் வைத்ததிற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தெரிவித்துள்ளார். அவர் சென்ற பின்பு மீண்டும் அடித்துச் சித்திரவதை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

பின்னர், காந்தியை ரயில்வே தனிப்படையினர் விசாரித்துள்ளனர். சித்திரவதை செய்த காவல்துறையினர் உடனிருந்த நிலையில், காந்தி போலியாக சில இடங்களில் கற்களை வைத்ததாகக் கூறியுள்ளார். உண்மையில் கற்கள் வைக்கப்பட்டதாகக் கூறிய இடம், ஆவணங்கள் அடிப்படையில் காந்தி கூறியதற்கு மாறாக இருந்ததால் இது பொய் வழக்கு என்று இரயில்வே தனிப்படையினர் கோபத்தோடு எழுந்து சென்றுள்ளனர்.

பின்னர் வந்து காந்தியை பார்த்த திருப்பூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அருண். “அடித்ததாகச் சொல்லியிருக்கிறாய் அடித்ததற்கான தடயமே இல்லை” என உடல் முழுவதும் காயத்தோடு நின்றவரைப் பார்த்து நக்கலடித்துள்ளார்.

29.11.10 அன்று காலை காந்தியைப் பெருமாநல்லூர் காவல்நிலையக் குளியலறையில் வைத்து நிர்வாணப்படுத்தி உடல்முழுவதும் எரியும்படி மருந்து பூசியுள்ளனர். குளிக்க வைத்து, குளியலறை வளாகத்தில் வெயில்படும்படி நிர்வாணமாகப் படுக்க வைத்துள்ளனர். மருத்துவப் பரிசோதனை எதுவும் செய்யாமல், திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் 29.11.10 திங்கள் அன்று மாலை கோயமுத்தூர் நடுவர் நீதிமன்றம் எண் 6ல் ஆஜர் செய்துள்ளனர்.

“நீதிபதியிடமும், பத்திரிக்கையாளர்களிடமும் எதுவும் சொல்லக்கூடாது, மீறினால் உன்னைச் சீரழித்துவிடுவோம்” என்று மிரட்டியுள்ளனர். உடலில் காயங்கள் இருந்ததை மறைத்து, மருத்துவச் சான்றிதழைத் தயாரித்து, மத்திய சிறையில் அடைத்துள்ளனர். காந்தியின் மீது 407/09, 358/10, 363/10, 364/10, 438/10, 444/10 ஆகிய 6 வழக்குகள் புனையப்பட்டுள்ளன.

2. திரு. பரமேஸ்வரன் (37), /பெ. ரங்கன், .எண். 89, அருந்ததியர் காலனி, அணைப்பாளையம், ஊத்துக்குளி.

17.06.10க்கு பிறகு ஐந்து தடவை ஊத்துக்குளி காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்துள்ளனர். கைரேகை, புகைப்படம், முகவரி, அமைப்பு பற்றிய விபரங்களை வாங்கியுள்ளனர். தனிப்படையினர், ஊத்துக்குளி காவல்நிலைய அதிகாரிகள் தொடர்ச்சியாக அருந்ததிய மக்களை விசாரணைக்கு அழைத்ததை, ரோந்து என்ற பெயரில் மக்களை வதைத்ததைக் கண்டித்து, 27.10.10 அன்று தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில காவல் துறை தலைவர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளார்.

26.11.10 அன்று இரவு 11.00 மணிக்கு ஊத்துக்குளி காவல்நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன், சண்முகம் (SI) ஆகியோர் தலைமையில் வந்துள்ள காவல் துறையினர் பரமேஸ்வரனை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

ஊத்துக்குளி காவல்நிலையத்தில் 26.11.10 அன்று இரவு வைத்திருந்து விட்டு, மறுநாள் 27.11.10 அன்று நல்லூர் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். சீருடை அணியாத காவலர்கள் 10 பேர் பரமேஸ்வரனை விசாரணை செய்துள்ளனர். ரயில் தண்டவாளத்தில் கல் வைத்தாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்படி கேட்டுள்ளனர். இவர் மறுத்துள்ளார். இதனால், கைகளைப் பின்புறமாகக்கட்டி ராட்டையில் தொங்கவிட்டு அடித்துள்ளனர். கிரிக்கெட் ஸ்டெம்புகள் மீது படுக்க வைத்து மேலே ஏறி மிதித்துள்ளனர். வலியால் கதறியுள்ளார். விட்டுவிடும்படியாகவும் தனக்கு எதுவும் தெரியாதென்றும் கெஞ்சியுள்ளார். “அதெல்லாம் தெரியாது, நீ தான் செய்தாய்” என்று ஒத்துக்கொள் என்று கூறி, கால்களை அகல விரிக்கச்செய்து மேலே ஏறி நின்றுள்ளனர். கால்களும், தொடைகளும் முறிந்து போகுமளவிற்கு மீண்டும், மீண்டும் சித்திரவதை செய்துள்ளனர். 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் சித்திரவதையை இடைவெளி விட்டு, விட்டு நிகழ்த்தியுள்ளனர். பின்னர் 29.11.10 அன்று இரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்து மாலை கோவை JM 6 நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்துள்ளனர்,

நடக்கக்கூட முடியாத நிலையில் இருந்தவரை எவ்வித காயமுமில்லை என மருத்துவர் சான்றிதழோடு நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். “ரயில்பாதையில் கல் வைத்ததாக ஒப்புக் கொள்ளாவிட்டால், அடித்தே கொன்று விட்டு, ஓடி ஒளிந்து கொண்டதாக கூறி விடுவோம்” என்று மிரட்டியுள்ளனர். நீதிபதியிடமோ, பத்திரிக்கையாளர்களிடமோ ஏதாவது சொன்னால் வெளியில் வருவதற்கு முன் குடும்பத்தைச் சீரழித்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

இவர் மீதும் 407/09, 358/10, 363/10, 364/10, 438/10, 444/10 ஆகிய 6 வழக்குகள் புனையப்பட்டுள்ளன.

3. திரு. மணி (34), த/பெ. குப்பன், சுப்பனூர்.

4. திரு. மாணிக்கம் (50), த/பெ ராயன், சென்னிமலைபாளையம்.

5. திரு. ரங்கசாமி (எ) கதிரவன் (வயது 35) த/பெ. சென்னி, வெங்கலப்பாளையம்.

12.12.10 ஞாயிறு அன்று நள்ளிரவில் மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், உளவுத்துறை அப்புசாமி ஆகியோர் அடங்கிய குழு, விசாரணைக்கு வா, என்று அழைத்துச் சென்றுள்ளனர். மணி, அணைப்பாளையம் பஞ்சாயத்தில் உறுப்பினராக இருக்கிறார். இவரை அழைத்துக்கொண்டு கதிரவன், மாணிக்கம் ஆகியோரது வீட்டை அடையாளம் காட்டும்படி கூறி மிரட்டியுள்ளனர். இவரும் பயந்து போய் இருவரின் வீட்டையும் அடையாளம் காட்டியுள்ளார். இவர்களோடு சுமார் 27பேரை ஊத்துக்குளி காவல்நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர். கதிரவன், மாணிக்கம், மணி மூவரையும் 13-ம் தேதி முழுவதும் நல்லூர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்துள்ளனர். கல் வைத்ததாக ஒப்புக் கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளனர். மூவரையும் அடிப்பதற்காகச் சுற்றி வளைத்த போது, மிரண்டு போய் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.

கைரேகை, புகைப்படம், கையெழுத்து வாங்கியுள்ளனர். கைரேகை எடுக்கும் போது மணியின் கையைப் பிடித்து காவலர் ஒருவர் முறுக்கியுள்ளார். பின்னர் 14-ம் தேதி மாலை 3.00 மணிக்கு கோயமுத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்லி6ல் ஆஜர் செய்து மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் மீதான வழக்கு எண் 638/10

கள ஆய்விலிருந்து பெறப்பட்ட முடிவுகள் :

1. அணைப்பாளையம் - அருந்ததியர் காலனி, ஆர்.எஸ்.புதூர், அய்யாமுத்தான் காடு ( அம்பேத்கர் நகர் ), ரெட்டிபாளையம், வெங்கலப்பாளையம், சென்னியம்பாளையம், குன்னாங்கல்பாளையம், கரைப்பாளையம், சாளப்பாளையம், சேடர்பாளையம், தளவாய்பாளையம், காடபாளையம், சேனாதிபதி செட்டிபாளையம், சுப்பனூர், மேட்டுக்கடை, தேனீஸ்வரம்பாளையம், அக்கரையாம்பாளையம், வேலம்பாளையம், செம்பாவள்ளம், செங்கப்பள்ளி, கஸ்தூரிபாளையம் உள்ளிட்ட 30 கிராம மக்களிடம் காவல்துறை விசாரணை நடைபெற்றுள்ளது.

2. கள ஆய்வு செய்யப்பட்ட கிராமங்கள் அனைத்திலும் அடிப்படை வசதிகளற்ற நிலையில் அருந்ததியர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

3. குடியிருக்கும் வீட்டைத் தவிர வேறெந்த சொத்தும் மேற்கூறப்பட்ட கிராமங்களின் அருந்ததிய மக்களுக்கு இல்லை.

4. அனைத்து அருந்ததிய மக்களும் வறுமைக் கோட்டிற்குக் கீழ்தான் வாழ்கின்றனர்.

5. வயதான ஆண்கள், பெண்கள் நிலவுடைமையாளர்களிடம் விவசாயக் கூலிகளாகவும், கட்டடத் தொழிலாளிகளாகவும் இருக்கின்றனர். பெண்கள் குட்டை வேலைக்குச் (100 நாள் வேலை திட்டம்) செல்கின்றனர். நடுத்தர, இளம் வயதினர் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்ளில் வேலை செய்கின்றனர்.

6. இளையதலைமுறையினர் பெரும்பாலானோர் 8-ம் வகுப்பைக் கூடத் தாண்டவில்லை. தொடக்கப்பள்ளிக்கு மேல் கல்வி பயின்றவர்கள் மிக மிகக் குறைவு.

7. இப்பொழுதுதான் முதல்முறையாக தொடக்கப்பள்ளியில் பெரும்பாலான அருந்ததியக்குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

8. 17.06.10லிக்கு பிறகு காவல்துறை விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, இன்று வரை (6 மாதகாலமாக) தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மக்களிடம் விசாரணை

9. கடந்த ஆறு மாதகாலங்களில் 1000க்கும் மேற்பட்ட அருந்ததிய சமூகத்தைச் சார்ந்த ஆண்கள் காவல்துறையால் நேரடியாக விசாரிக்கப்பட்டுள்ளனர்.

10. 500க்கும் மேற்பட்ட அருந்ததிய ஆண்கள் காவல்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்.

11. காவல்நிலையம் சென்ற அனைவரிடமும் கைரேகை வாங்கப்பட்டுள்ளது. புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

12. அனைவரையும் நள்ளிரவு நேரங்களில் விசாரணைக்கு அழைத்துச் சென்று மறுநாள் இரவு வரை (1 நாள்) காவல் நிலையத்தில் வைத்திருந்துள்ளனர்.

13. அழைத்துச் செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு முறையாக எந்தத் தகவலும் கொடுக்கவில்லை.

14. வெளியூர் வேலைக்குச் சென்று விட்டு இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்த சிலரை வழியிலேயே மடக்கி காவல்நிலையம் கூட்டிச் சென்றுள்ளனர். பேருந்தில் வேலைக்குச் செல்பவர்களை பின் தொடர்ந்து சென்று காவல்நிலையம் கூட்டிச்சென்றுள்ளனர்.

15. சில இளைஞர்களை 3 நாட்கள் நல்லூர் (திருப்பூர் ரூரல்) காவல்நிலையத்தில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்துள்ளனர்.

16. செய்தியறிந்து, காவல்நிலையம் சென்று விசாரிக்கும் உறவினர்களிடம் காவல்நிலையத்தில் வைத்துக் கொண்டே இல்லையென்றும், தெரியாதென்றும் பதிலளித்துள்ளனர்.

17. இரவு ரோந்து காவல்படையினர், மக்களிடம் பணம் மற்றும் பொருட்களை வழிப்பறி செய்துள்ளனர்.

18. இரவு நேரங்களில் ஊருக்கு நடந்து வருபவர்களை ரோந்து வாகனங்களில் ஏற்றிக் கொண்டு இரவு முழுவதும் ரோந்து சுற்றி, தூங்கவிடாமல் செய்து காலையில் எங்காவது இறக்கி விட்டுச்சென்றுள்ளனர்.

19. பெண்கள், குழந்தைகளை அச்சுறுத்தும் வண்ணம் காவல்துறை அணுகியுள்ளது.

20.வீடுகளில் அத்துமீறி சோதனையிட்டுள்ளனர்.

21. சோதனையின் போது சில காவலர்கள் குடி போதையில் வந்து அடாவடித்தனம் செய்துள்ளனர்.

22.மளிகைக் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது, எவ்வளவு பொருட்கள் வாங்குகின்றனர் என சுற்று வட்டாரக்கடைகளில் விசாரித்துள்ளனர் (கண்காணித்துள்ளனர் ).

23.ஒவ்வொரு ஊரிலுமுள்ள ஆண்களின் பெயரைப் பட்டியலிட்டு, ஊர்களுக்குச் சென்று பெயர் சொல்லி அழைத்துச் சென்றுள்ளனர்.

24.அனைத்து ஊர்களிலும் இரவு 7.00 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டமே இல்லை.

25.இரவில் இயற்கை உபாதைகளைக் கழிக்க வெளியில் வரும் ஆண்களைக் கூட விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

26.70 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள், ஊனமுற்றவர் கூட விசாரணையிலிருந்து தப்பவில்லை.

27.விசாரணை என்ற பெயரில் பயங்கரவாதிகள் போல் நடத்தியுள்ளனர்; கெட்ட வார்த்தைகளில் திட்டியுள்ளனர்; கல் வைத்ததாக ஒத்துக் கொண்டால் பணம் தருவதாகப் பேரம்பேசியுள்ளனர்.

28.அருந்ததிய மக்களிடம் மட்டுமே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது; பிற சாதியினர் பெயரளவில் கூட விசாரிக்கப்படவில்லை.

29.அருந்ததிய மக்களுக்காக வேலை செய்யும், உள்ளுர் அளவிலான தலைவர்களை நான்கைந்து முறை விசாரணைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர்.

30.வேறெந்த அரசியல் கட்சித் தலைவர்களையும், காவல்துறை விசாரணை செய்யவில்லை.

கைது நடைமுறை:

1. ஆகஸ்ட் மாத இறுதியில் வட மாநிலத்தைச் சார்ந்த 4 பேர் காலைக்கடன் கழிப்பதற்காக இரயில்பாதையருகில் சென்ற போது கல் வைத்தாகக் கூறி கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவியுள்ளனர்.

2. இதனைத் தொடர்ந்து தளவாய்பாளையத்தைச் சேர்ந்த 5 அருந்ததிய இளைஞர்களை ஈரோடு மாவட்டம், சென்னிமலை காவல்நிலையத்தில் அடித்துச் சித்திரவதை செய்து பின்பு வழக்குப் போடாமல் அனுப்பி வைத்துள்ளனர்.

3. விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட அய்யா முத்தான் காடு அருந்ததிய மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலைமறியல் செய்து போராடி விடுவித்துள்ளனர்.

4. திரு. பரமேஸ்வரன் (27லி10லி2010) அன்று தனிப்படைக் காவலர்களின் அட்டூழியங்களைக் கண்டித்து தமிழக முதலமைச்சர் (தனிப்பிரிவு), உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, மாநிலக் காவல்துறைத் தலைவர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளார்.

5. புரட்சிப்புலிகள் அமைப்பைச் சார்ந்த திரு காந்தி, திரு. பரமேஸ்வரன் இருவரையும் 26-11-2010 அன்று வீட்டிலிருந்து காவல்துறை அழைத்துச் சென்றுள்ளது.

6. இருவரையும் கைகளைப் பின்புறமாகக் கட்டி ராட்டையில் தொங்கவிட்டு அடித்துள்ளனர்.

7. கிரிக்கெட் ஸ்டெம்புகளை தரையில் வைத்து, மேலே இருவரையும் தனித்தனியாகப் படுக்க வைத்து முதுகின் மேலே ஏறி மிதித்துள்ளனர்.

8. கால்களை அகலவிரித்துத் தொடை எலும்புகள், பாதங்கள் முறியுமளவிற்கு 10 பேர் மேலே ஏறி நின்றுள்ளனர்.

9. இருவரையும் லத்தி, இரும்பு பைப்புகளால் அடித்துள்ளனர்.

10. “எய்ட்ஸ் ஊசி போடுவோம்” என்று மிரட்டிச் சித்தரவதை செய்து குற்றச் செயல்புரிந்ததாக ஒப்புக் கொள்ள வைத்துள்ளனர்.

11. மனைவி, குழந்தைகள் பற்றி மிக மிக இழிவாகப் பேசி மன உளைச்சல் அடைய வைத்துள்ளனர்.

12. 26-11-10 அன்று விசாரணைக்குக் கூட்டிச் சென்ற காவல்துறை, காவல் நிலையத்தில் வைத்துக் கொண்டே 28-11-10 அன்று ஊத்துக்குளி இரயில் தண்டவாளப் பகுதியில் பயங்கரச் செயலுக்கு முயற்சி செய்யும் போது பிடித்ததாகப் பொய் கூறியுள்ளது.

13. அணைப்பாளையம் கிராம மக்கள், “காந்தியையும், பரமேஸ்வரனையும் காவல்துறை அழைத்துச்சென்று 3 நாட்கள் ஆகி விட்டது, அவர்களை உடனே ஒப்படைக்க வேண்டும்” எனக்கூறி 29-11-10 அன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டினிப் போராட்டம் நடத்த முயற்சி செய்து கைதாகியுள்ளனர்.

14. மக்களின் போராட்டத்தாலேயே இருவர் மீதும் 6 வழக்குகள் போட்டு, கோவை நீதிமன்றத்தில் 29-11-10 அன்று காவல்துறை ஆஜர் செய்துள்ளது.

15. 12-12-10 அன்று நள்ளிரவில் மணி, மாணிக்கம், கதிரவன் (எ) ரங்கசாமியை விசாரணைக்குக் காவல்துறை அழைத்துச் சென்றுள்ளது.

16. மூவரும் 13-12-10 காலை 5.00 மணிக்கு ஊத்துக்குளியிலிருந்து நல்லூர் காவல்நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

17. அதே இரவு சாளப்பாளையம், சேடர்பாளையம், வெங்கலப்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 27 பேரைக் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளது.

18. அவர்கள் அனைவரையும் காவல்நிலையத்தில் வைத்து ஒவ்வொருவருடைய குடும்ப விவரங்களை வாங்கிக் கொண்டு, கை விரல் ரேகைகளையும் எடுத்துள்ளனர்.

19. 13-12-10 காலை 5.30 மணிக்கு மணி, மாணிக்கம், கதிரவன் ஆகியோர் காவல்நிலையத்தில் இருக்கும் போதே, அதே நேரத்தில் சாளப்பாளையம் - தளவாய்பாளையம் வழியாக மேட்டுக்கடைக்கு போகும் தார் சாலைக்கு அருகில் மூவரும் கல்லைப் புரட்டிக் கொண்டிருந்த போது கைது செய்ததாக காவல்துறை அப்பட்டமாக பொய் கூறியுள்ளது.

20.மாணிக்கம், அருந்ததியர் விடுதலை இயக்கத்தின் மாநில அமைப்பளார், கதிவரன் (எ) ரங்கசாமி, அருந்ததியர் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர்

21. மணி, அணைப்பாளையம் ஊராட்சி, சுப்பனூர் 2வது வார்டு உறுப்பினராக இருக்கிறார்.

22.மூவரிடமும் விசாரணை செய்த காவல் துறையினர் நீங்கள் கல் வைக்கவில்லை என்று தெரியும், ஆனாலும் உங்கள் மீது தான் வழக்குப் போடுவோம் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.

23.அடிக்க முயற்சி செய்த காவலர்களிடம் மூவரும் சித்திரவதைக்குப் பயந்து, “என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள்” என கூறியுள்ளனர்.

24.மூவரும் கைது செய்யப்பட்டதற்கு காந்தி, பரமேஸ்வரன் கைதைக் கண்டித்துப் பிரச்சாரம் செய்ததை ஒரு காரணமாக காவல்துறை கூறியுள்ளது.

25.14-12-10 அன்று மூவரும் கோவை குற்றவியல் நீதிமன்றம் எண் 6லில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

புரட்சிப்புலிகள், அருந்ததியர் விடுதலை இயக்கம் பற்றிய செய்திகள் :

1. இரண்டு அமைப்புகளுமே அருந்ததிய மக்களை மட்டும் உறுப்பினராகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

2. அருந்ததிய மக்களின் நலனுக்காகப் போராடுகின்ற அமைப்புகள்.

3. அரசிடம் மனு கொடுப்பதும், அருந்ததிய மக்களின் உரிமைகளுக்காகப் போராவதுமே அமைப்புத் தலைவர்களின் முதன்மைப்பணிகள்.

4. அருந்ததிய மக்களுக்கான போராட்டங்களின் போது இவ்விரு அமைப்பினருக்கும், உள்ளூர் காவல்துறையினருக்கும் இடையே சில முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

5. அமைப்புத் தலைவர்கள் காவல்துறையினர் மீது புகார்கள் தெரிவித்துள்ளனர்.

6. காவல்துறையினருடனான முரண்பாடுகளுக்குப் பழி தீர்ப்பதற்காகவே மேற்கண்ட ஐவர் மீதும் வழக்குப் போடப்பட்டுள்ளது.

7. இரயில் தண்டவாளத்தில் கல் வைக்கும் அளவிற்கு அவர்களுக்கு அரசியல் கோரிக்கை எதுவுமில்லை.

8. உள்ளூர் அருந்ததிய மக்களுக்காகப் போராடுபவர்களுக்கு, தங்கள் அமைப்பை உலகறியச் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.

9. பரமேஸ்வரன், காவல்துறையினரின் அராஜகத்தை அரசுக்குத் தெரிவிக்க முயன்ற காரணத்திற்காகவே கைது செய்யப்பட்டுள்ளார்.

10. அருந்ததிய மக்களைக் கொடுமைப்படுத்தினால் கேட்பதற்கு ஆளில்லை என்ற திமிரிலேயே விசாரணை என்ற பெயரில் காவல்துறையின் கேவலமான சித்திரவதைகள் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது.

11. ஊத்துக்குளி வட்டாரத்தில் அருந்ததிய மக்களுக்காகப் போராடக் கூடிய பலமான அரசியல் கட்சிகள், முற்போக்கு இயக்கங்கள் இல்லாததாலேயே, அருந்ததிய மக்கள் மட்டும் குறி வைத்துக் கொடுமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

அரசியல் இயக்கங்களின் மீது பழி :

1. ஈழ ஆதரவாளர்கள், தமிழ்த் தேசிய ஆற்றல்கள், புரட்சிகர இயக்கங்களின் மீது வீண் பழி போடவே காவல்துறை இந்த இரயில்கவிழ்ப்பு நாடகங்களை அரங்கேற்றியுள்ளது.

2. தமிழகத்தில் அனைத்து முற்போக்கு, புரட்சிகர இயக்கங்களும் அரசியல் போராட்டத்தையே நடத்தி வருகின்ற நிலையில் இரயில் கவிழ்ப்புச் சதி செய்ய வேண்டிய அவசியம் இவ்வமைப்புகளுக்கு இல்லை.

3. மக்களுக்காகப் போராடுபவர்கள், மக்களை நேசிப்பவர்கள் மக்களைக் கொல்வதற்கு துணிவார்கள் எனக் கதை கட்டுவது நகைப்புக்குரியது.

4. புலிகள் என்ற பெயரைத் தாங்கியுள்ளதாலேயே புரட்சிப் புலிகள் அமைப்பினர் மீது திட்டமிட்டு இரயில் கவிழ்ப்புச் சதிகளை காவல்துறை அரங்கேற்றியுள்ளது.

5. காவல்துறையால் அரங்கேற்றப்பட்ட இரயில் கவிழ்ப்புச் சதி நாடகத்தை முடிவுக்குக் கொண்டு வரவே மேற்கண்ட இயக்கத்தவர் மீது வீண் பழி சுமத்தப்பட்டுள்ளது.

காவல் துறையின் கண்டிக்கத்தக்க அணுகுமுறைகள் :

1. அருந்ததிய மக்கள் மற்றும் அருந்ததியத் தலைவர்கள் மீதான அடக்குமுறை காவல்துறையின் ஆதிக்கச் சாதிவெறி மனோபாவத்தையே காட்டுகிறது.

2. அருந்ததிய மக்கள் தவிர்த்து வேறு யாரும் விசாரிக்கப்படாதது மேற்கண்ட உண்மையை வலுப்படுத்துகிறது.

3. குற்றப் பரம்பரையினர் சட்டத்தால் மிகவும் பிற்படுத்தப்பட்ட கள்ளர் சாதி மக்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொடுமைப்படுத்தப்பட்டது போல், ஊத்துக்குளி வட்டார அருந்ததிய மக்கள் இழிவுக்கும், கொடுமைக்கும் ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.

4. விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகளின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் எதையும் காவல்துறை பின்பற்றாமல் சட்டவிரோதமாய்ச் செயல்பட்டுள்ளது.

5. சட்ட விரோதக் காவலில் வைத்து, விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்வது, அடிப்பது, கெட்ட வார்த்தைகளால் திட்டுவது என மிகவும் கீழ்த்தரமாகக் காவல்துறை நடந்துள்ளது.

6. சித்திரவதை செய்யப்பட்டு உடல் முழுவதும் காயங்களோடு நிற்கக்கூட முடியாமலிருந்த காந்தி, பரமேசுவரனைப் பார்த்து “அடித்ததாகச் சொல்லியிருக்கிறாய், உடலில் ஒரு காயமும் இல்லையே!” என நக்கலடித்த திருப்பூர் மாவட்டக் கண்காணிப்பாளர் அருணின் அணுகுமுறை கேவலமானதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும்.

7. காந்தி, பரமேசுவரன் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளையும், பொய் வழக்குகளையும் நேரில் எடுத்துச் சொன்ன வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்களிடம் மேற்கு மண்டலக் காவல்துறைத் தலைவர் சிவனாண்டி, “உங்கள் மக்களுக்கு அறிவுரை கூறுங்கள், புலியெல்லாம் காட்டில்தானே இருக்க வேண்டும், நாட்டுக்குள் எதற்கு வருகிறது?” என நக்கலடித்த அணுகுமுறையும் கண்டிக்கத்தக்கது.

8. நல்லூர் காவல்நிலையத்தைச் சித்திரவதைக் கூடமாக விசாரணைக் குழுவினர் பயன்படுத்தியுள்ளனர். இங்குதான் கைது செய்யப்பட்டவர்களும், தனி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

9. சீருடை அணியாத, குடிபோதையிலிருந்த காவலர்களே சித்திரவதை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

10. கைது செய்யப்பட்டவர்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் பொருட்டு, அவர்தம் மனைவியரை கெட்டவார்த்தைகளால் கேவலமாகவும், இழிவாகவும் பேசியதோடு, “குழந்தைகளைப் பிச்சைக்காரர்களாக்கி விடுவோம்” என மிரட்டியுள்ளனர்.

11. விசாரணை, கைது நடவடிக்கைகளின் பேரில் மாபெரும் மனித உரிமை மீறல்களை அருந்ததிய மக்கள் மீது காவல்துறை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

12. அருந்ததிய மக்கள் மீதான காவல்துறையின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து, சனநாயக முறையில் போராட முயன்ற அத்தனை அமைப்புகளுக்கும் அனுமதி வழங்காமல் போராட்டங்களை ஒடுக்கியுள்ளது.

13. அறிவியல் பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் இரயில் கவிழ்ப்புச் சதி வழக்கில் காந்தி, பரமேசுவரன், மணி, மாணிக்கம், கதிரவன் (எ) ரங்கசாமி ஆகியோரைக் கைது செய்ததாகக் கூறும் காவல்துறையினரின் கூற்று முழுக்க முழுக்கப் பொய்யானது.

கள ஆய்வுக் குழுவின் லியுறுத்தல்கள்

1. ஊத்துக்குளி வட்டாரத்தில் இருந்து திருப்பூர் மாவட்டக் காவல் துறையின் தனிப்படை, தமிழக இரயில்வே காவல்படை, இரயில்வே பாதுகாப்புப் படை மூன்றும் உடனடியாக வெளியேற வேண்டும்.

2. அருந்ததிய மக்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைக்காக காவல்துறை பகிங்கரமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.

3. அருந்ததிய மக்கள் மீதான சித்திரவதைக்குக் காரணமான அனைத்துக் காவல்துறை அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

4. சீருடை இல்லாமல், கைது செய்யப்பட்டவர்களைச் சித்திரவதை செய்த காவல்துறைக் குண்டர்கள் யார் என்பதை வெளிப்படுத்தி, பணி நீக்கம் செய்யவேண்டும்.

5. அருந்ததிய மக்கள் மீது வன்கொடுமைகளை நிகழ்த்திய காவல்துறையினர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்து தண்டிக்க வேண்டும்.

6. பொய்வழக்குப் புனைந்து கைது செய்யப்பட்ட அருந்ததியர் சமூகத் தலைவர்கள் காந்தி, பரமேசுவரன், மணி, மாணிக்கம், கதிரவன் (எ) ரங்கசாமி ஆகியோரை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்.

7. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 வட மாநிலத்தவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

8. மேற்கொண்டு யாரும் ரயில் கவிழ்ப்புச் சதி வழக்குகளில் கைது செய்யப்படக் கூடாது. ஏனெனில் ரயில் தண்டவாளங்களில் கற்கள் வைக்கப்பட்டதாக வரும் செய்திகள் அனைத்தும் காவல்துறையின் திட்டமிட்ட நாடகங்களே ஆகும்.

9. காவல் துறையின் கைது மற்றும் விசாரணையால் பாதிக்கப்பட்டுள்ள அருந்ததிய மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

10. அடிப்படை வசதிகளின்றி வாழும் அருந்ததிய மக்களின் கிராமங்களில் உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட வலியுறுத்தல்கள் நிறைவேற்றப்படாவிட்டால் அனைத்து சனநாயக, மனித உரிமை ஆர்வலர்களையும் இணைத்து, காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதிலும் மிகப் பெரிய போராட்டங்கள் நடத்தப்படும்.

புரட்சிகர இளைஞர் முன்னணி,
ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி

(04-01-2011, செவ்வாய் அன்று கோயமுத்தூரில் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது)

Pin It