12-அம்ச கோரிக்கைகளை வைத்தும் தொழிலாளர் விரோத, உழவர் விரோத, சமூக விரோத மற்றும் தேச விரோத அரசாங்க கொள்கைகளை எதிர்த்தும், தொழிற் சங்கங்களும் தொழிலாளர் அமைப்புக்களும் ஒரு அனைத்திந்திய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்த வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்களும் அவர்களுடைய அமைப்புக்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தீவிரமாகப் பங்கேற்றனர்.

விலைவாசி உயர்வை நிறுத்த உடனடி நடவடிக்கைகள், வேலையின்மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும், தொழிற் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு எதிரான மாற்றங்களை திரும்பப் பெற வேண்டும், எல்லோருக்குமான சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், மாதாந்திர குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 15,000, ஓய்வூதியம் அதிகரிக்கப்பட வேண்டும், ஒப்பந்த வேலை முறை ஒழிக்கப்பட வேண்டும், தனியார்மயப்படுத்துதலை நிறுத்த வேண்டும், தொழிற் சங்கத்தை 45 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும், ரயில்வே, பாதுகாப்பு, காப்பீடு போன்ற மற்ற துறைகளில் அந்நிய மூலதனத்தைத் தடை செய்ய வேண்டும், பல திட்டத் தொழிலாளர்களை அரசாங்க ஊழியர்களாக அறிவிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 12-அம்ச கோரிக்கைளை முன்வைத்து மத்திய தொழிற் சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த வேலை நிறுத்தத்தின் வெற்றிக்காக பல தொழிற் சங்கங்கள் கூட்டாக தொழிலாளர்களையும் உழவர்களையும் உழைக்கும் மக்களையும் மாணவர்களையும் இளைஞர்களையும் அணுகி அவர்களுக்கு விளக்குவதையும் அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத சமூக விரோத கொள்கைகள் அவர்களுக்கு எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர்களுடன் விவாதங்கள் நடத்தினர். பல மாநாடுகளையும் கருத்தரங்குகளையும் மாநில அளவிலும் அந்தந்த பகுதிகளிலும் ஏற்பாடு செய்திருந்தனர். தொழிலாளர் வாழும் இடங்களிலும் பல தெருமுனைக் கூட்டங்களை நடத்தி பல தொழிற் சங்கங்கள் அரசாங்கத்தின் கொள்கைகளையும் அதன் உண்மையான நோக்கங்களையும் விளக்கி வேலை நிறுத்தத்தின் முக்கியத்துவத்தை விளக்கினர். நாடு முழுவதும் பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களையும் வாகன பிரச்சாரங்களையும் சுவரொட்டிகள் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்கள் மூலமும் மற்றும் பல வகையான பரப்புரை முறைகள் மூலமாகவும் அனைத்திந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய பரப்புரை செய்யப்பட்டது.

கம்யூனிஸ்டு கெதர் கட்சியும் மற்ற கம்யூனிஸ்டு கட்சிகளும் அமைப்புகளும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக அறிக்கைகளையும் அழைப்புகளையும் விடுத்ததோடு தங்கள் உறுப்பினர்களையும் செயல் வீரர்களையும் பரப்புரைக்கும் ஏற்பாடு செய்வதற்கும் களத்தில் நிறுத்தினார்கள்.

வேலை நிறுத்தம் அன்று லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வீதியில் இறங்கி இந்திய மற்றும் அந்நிய முதலாளிகளின் நலன்களுக்காக அரசாங்கம் செய்து வரும் முதலாளித்துவ சீர்திருத்தங்களுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாடு முழுவதும் தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து முதலாளிகளுக்கான "நல்ல நாட்களுக்காக" தொழிலாளி வகுப்பினர் கடுமையான சிரமங்களையும் அச்சுறுத்தலான நாட்களையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது என்று எடுத்துக் காட்டினர்.

பொருளாதாரத்தின் எல்லா துறைகளிலிருந்தும் தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். 23 பொதுத் துறை வங்கிகளிலிருந்தும் 12 தனியார் துறை வங்கிகளிலிருந்தும் 52 வட்டார கிராமப்புற வங்கிகளிலிருந்தும் மற்றும் 13000 மேலான கூட்டுறவு வங்கிகளிலிருந்தும் பல லட்சக் கணக்கான தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். நாட்டின் நிதித் துறை முடங்கி விட்டது.

தொழில்துறை மற்றும் சேவைத் துறையைச் சார்ந்த சிறு நிறுவனங்களிலிருந்து மிகப் பெரிய நிறுவனங்கள் வரையிலான எல்லா நிறுவனங்களிலிருந்தும் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றனர். போக்குவரத்துத் தொழிலாளிகள், தபால்துறை தொழிலாளிகள், மின்வாரியத் துறை தொழிலாளிகள், பாதுகாப்புத் துறை தொழிலாளிகள், நிலக்கரித் தொழிலாளிகள், காப்பீட்டு துறை தொழிலாளிகள், ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுனர்கள், வீட்டு வேலைத் தொழிலாளிகள் மற்றும் தெருவில் விற்பனை செய்வோர் போன்ற இன்னும் பலர் வேலை நிறுத்தத்திலும் பேரணிகளிலும், ஆர்ப்பாட்டங்களிலும் தீவிரமாகப் பங்கேற்று அரசாங்கத்தின் கொள்கைகள் மீதான எதிர்ப்பையும் தங்கள் கோபத்தையும் வெளிப்படுத்தினர். பல மாநிலங்களிலும் நகரங்களிலும் கடை உரிமையாளர்களும் தங்கள் கடைகளை மூடி வேலை நிறுத்தத்தை ஆதரித்தனர்.

தில்லி, குருகாவூன், பரிதாபாத், நாய்டா அடங்கிய தேசிய தலைநகர் பகுதியில் மிகப் பெரிய பேரணிகள் நடைபெற்றது. தொழில் உற்பத்தியும் சேவைகளும் முழுமையாக நின்று போயின.

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, மற்றும் நூற்றுக்கணக்கான மையங்களில் ரயில் மற்றும் சாலை மறியல்கள் நடைபெற்றன. போக்குவரத்து ஊழியர்களும், பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும், வங்கிப் பணியாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் அரசாங்கத்தால் சிறைபிடிக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டனர்.

வேலை நிறுத்த நாளில் விடியற்காலையிலிருந்து, முதலாளிகளுக்கு சொந்தமான அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வேலை நிறுத்தத்தை பற்றி எதிர்மறையாகவே சித்தரித்து வந்தனர்.

தொலைக்காட்சியில் பொருளாதாரத்திற்கு 25 லட்சம் கோடி நட்டம் ஏற்பட்டு விட்டதாக திரையில் தொடர்ந்து காண்பித்துக் கொண்டே இருந்தனர். ஆனால் அவர்கள், பருப்பு வகைகளின் மற்றும் வெங்காயத்தின் விலைகளை உயர்த்தி இப்படி எத்தனை 25 லட்சம் கோடிகளை மக்களின் பைகளிலிருந்து அரசாங்கம் கொள்ளை அடிக்கிறது என்பதை பற்றி எதுவும் கூறவில்லை.

தொழிலாளர்களை இந்த வேலை நிறுத்தத்தில் பங்கு பெறாமல் இருக்க செய்வதற்காக ஊதிய வெட்டுக்கள் செய்யப்படும் என்றும் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டம் போன்ற கருப்புச் சட்டங்கள் அவர்கள் மீது பாயும் என்றும் பல வகையில் அரசாங்கம் அவர்களை பயமுறுத்தியது. இப்படி அரசாங்கத்தின் எல்லா முயற்சிகளையும் பயமுறுத்தல்களையும் மீறி தொழிலாளர்கள் என்றும் இல்லாத எண்ணிக்கைகளில் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்று தொழிலாளி வகுப்பின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

தொழிலாளி வகுப்பினருக்கும் அதன் தொழிற் சங்கங்களுக்கும், அமைப்புகளுக்கும் செயல் வீரர்களுக்கும் அவர்களின் ஒன்றுபட்ட உறுதிக்கும் ஆர்வத்திற்கும் தொழிலாளர் ஒற்றுமை குரல் தன் கைகளை உயர்த்தி செவ்வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது 

Pin It