10 ஆண்டுகளுக்கு முன்னர், குஜராத் காவல் துறை மற்றும் உளவு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் கட்டளைப்படி, மும்பையைச் சேர்ந்த இஸ்ரத் ஜெகான் என்ற முதலாண்டு கல்லூரி மாணவியும், அவளுடைய நண்பர்களும் கடத்திச் செல்லப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப்பட்டதை எதிர்மோதல் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக இஸ்ரத் ஜெகான் மற்றும் அவரோடு கொல்லப்பட்ட நண்பர்களின் குடும்பங்கள் நீதிக்காகப் போராடி வந்தனர். இப்போது, இந்த வழக்கின் ஆய்வுகள், அது அரசின் கொடூரமான பயங்கவாத கொலைதான் என்பதை வெட்டவெளிச்சமாகி இருக்கின்றன.

“பயங்கரவாதிகள்” என்று பொய்யாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த பல ஆண்டுகளாக, எதிர்மோதல்கள் என்ற பெயரில், ஆயிரக்கணக்கான முஸ்லீம் இளைஞர்களை சிறையிலடைத்தும், சித்திரவதைகள் செய்தும் அல்லது கொல்லப்பட்டும் வருகின்றனர்.

அண்மையில் பஞ்சாப் காவல்துறையைச் சேர்ந்த துணை ஆய்வாளர் சுர்ஜித் சிங், பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதி மன்றத்தில் அளித்த ஒரு மனுவில், பொய்யான எதிர்மோதல்களில் தான் 80-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொன்றுவிட்டதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். குறைந்தபட்சம் திட்டமிட்டு நடத்தப்பட்ட 16 எதிர்மோதல்கள் பற்றிய பட்டியலை அவர் கொடுத்திருக்கிறார். அவற்றில் 30-க்கும் மேற்பட்ட மக்களை மேலதிகாரிகளின் கட்டளைகளின்படி, இவர் கொன்றிருக்கிறார். உயர் அதிகாரிகளின் கட்டளையின் அடிப்படையில் இவர் மேற்கொண்ட கொலைகளை அவர் வெட்ட வெளிச்சமாக்கிய பின்னர், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் உறுதியாக எண்ணுவதால், பஞ்சாப் காவல்துறை உயர் அதிகாரிகளிடமிருந்து நீதிமன்றம் தனக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். சட்டத்திற்குப் புறம்பாக அப்பாவி சீக்கிய இளைஞர்களைக் கொல்வதற்காக பஞ்சாப் காவல்துறை வேலைக்கு வைத்த ஆயிரக்கணக்கான பூனைகளில் சுர்ஜித் சிங்கும் ஒருவராவார். இவர்களுக்கு பண முடிப்புக்களும், முன்கூட்டியே பதவி உயர்வுகளும் அளிக்கப்பட்டன.

80-களிலும், 90-களிலும், பஞ்சாப் காவல்துறையால் பத்தாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் போலி எதிர்மோதல்களில் கல்நெஞ்சத்தோடு கொல்லப்பட்டனர். பஞ்சாப் ஓடைகளிலிருந்து நூற்றுக் கணக்கான உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இவையனைத்தும், “நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பது” என்ற பெயரிலும், “சீக்கிய பயங்கரவாதத்தை” நசுக்குவது என்ற பெயரிலும் நியாயப்படுத்தப்பட்டன.

ஆயுதப்படைகள் ஆயிரக்கணக்கான மக்களைக் காட்டுமிராண்டித்தனமாக கற்பழிப்புக்களையும், கொலைகளையும் செய்து வர, காசுமீர் அந்த மக்களுக்கு ஒரு சுடுகாடாக மாறியிருக்கிறது. காசுமீர பள்ளத்தாக்கில் எண்ணற்ற போலி எதிர்மோதல் கொலைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அசாமிலும், மணிப்பூரிலும், வடகிழக்கில் உள்ள மற்ற மாநிலங்களிலும், இதே நிலைமைதான் இருக்கிறது.

அரசு திட்டமிட்டு நடத்தும் வகுப்புவாத வன்முறை உட்பட அரசு பயங்கரவாதமானது ஆளும் முதலாளிவர்க்கத்திற்கு மிகவும் பிடித்தமான ஒரு கொள்கையாகும். 1980-வரையில் அரசு பயங்கரவாதத்தின் முக்கிய இலக்காக கம்யூனிச புரட்சியாளர்களும், அவர்களுடைய ஆதரவாளர்களும், வடகிழக்கில் கிளர்ச்சி செய்யும் மக்களும் இருந்தனர். 1982-இலிருந்து ஆரம்பித்து, இந்த ஆயுதத்தை எல்லாப் பிரிவு மக்கள் மீதும் பயன்படுத்துவதை ஆளும் முதலாளி வர்க்கம் திட்டமிட்ட முறையில் தீவிரப்படுத்தியது. நமது மக்களுடைய நிலத்தையும், உழைப்பையும், இயற்கை வளங்களையும் ஆளும் முதலாளி வர்க்கம் சூறையாடுவதை தீவிரப்படுத்தும் தொழிலாளர் விரோத, விவசாயி விரோத, தேச விரோத திட்டத்திற்கு எதிரான மக்களுடைய ஒற்றுமையை முறியடிப்பதற்காக இது செய்யப்பட்டது. நோக்கமானது, முதலாளி வர்க்கம் ஒரு ஏகாதிபத்திய சக்தியாக எழுவதற்கு பயன்படுத்தும் தனியார்மயம் தாராளமயம் மூலம் உலகமயமாக்கும் திட்டத்தை மக்கள் ஒன்றுபட்டு எதிர்ப்பதைத் தடுப்பதற்காக மக்களைத் திசை திருப்பி அவர்களுடைய ஒற்றுமையை உடைப்பதாகும். நம்முடைய மக்களுடைய புரட்சிகர விடுதலைப் போராட்டத்தை ஆயுதங்களைக் கொண்டு நசுக்குவதே இதன் நோக்கமாகும்.

கடந்த பல்லாண்டுகளில், அரசு பயங்கரவாதத்தை ஒரு கலையாகவே ஆளும் வர்க்கம் திறம்பட செய்து வருகிறது. பயங்கரவாத குண்டுகளை திட்டமிட்டு வெடிக்கச் செய்வது, முழு சமூகங்களையே பயங்கரவாதிகளாக சித்தரிப்பது, அப்பாவி மக்களை சிறையிலடைத்து சித்தரவதை செய்து கொல்வது என்பதெல்லாம் ஆட்சியின் வழக்கமான முறைகளாக இப்போது ஆகிவிட்டன. ஏதாவதொரு சமூகமோ அல்லது அமைப்போ பயங்கரவாத கொலைகளுக்கு பின்னால் இருப்பதாக சொல்லப்படும் பொய்யை ஏகபோக ஊடகங்கள் மூலம் ஆயிரம் முறை திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. மக்கள் இதை நம்பி, அரசு பயங்கரவாதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக செய்யப்படுகிறது. அரசு பயங்கரவாதத்தின் மூலம் குறிப்பிட்ட சில பிரிவு மக்களை இலக்காக ஆக்குவதன் வாயிலாக, ஆளும் வர்க்கம், தன்னுடைய திட்டத்தை எவ்வித இடையூறுமின்றி நிறைவேற்றுவதற்காக மக்களை மதம், மொழி, வட்டாரம் போன்ற அடிப்படைகளில் பிளவுபடுத்துகிறது.

“பயங்கரவாதத்தை எதிர்த்து உலகளாவிய போர்” என்ற பெயரில் அரசு பயங்கவாதமானது இப்போது நியாயப்படுத்தப்பட்டு வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய பயங்கவாத அரசாக இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தான் இந்த “பயங்கரவாதத்தை எதிர்த்த உலகளாவிய போருக்கு”த் தலைமை தாங்கி நடத்திவருகிறது.

இந்திய அரசு நடத்திவரும் “பயங்கரவாதத்தை எதிர்த்த போரானது”, தன்னுடைய சொந்த மக்களுக்கு எதிராக அரசு நடத்தும் போராகும். இது, முதலாளித்துவப் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் மனித உரிமைகள் மறுக்கப்படுவது என்ற எல்லா பக்க சமூக விரோத தாக்குதல்களுக்கு மக்களை அடிபணிய வைப்பதற்காக நடத்தப்படுகிறது. மனித உரிமைகளுக்கு அரசியல் சட்ட உத்திரவாதமும், நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளைக் கொண்ட ஒரு தன்னார்வ அடிப்படையில் ஒன்று சேர்ந்த தேசங்கள் மற்றும் மக்களைக் கொண்ட ஒன்றியமாக இந்தியாவை புதிய அடித்தளங்களில் கட்டியமைக்க வேண்டுமென்பதற்காக தொழிலாளி வர்க்கத்தையும், விவசாயிகளையும், புரட்சிகர சிந்தனையாளர்களையும் அணிதிரட்ட முயற்சித்து வரும் புரட்சிகர கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான ஒரு போராகும் இது.

உலகை முழுவதுமாக தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமென்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சிகளுக்கு எதிரான எல்லா எதிர்ப்பையும் நசுக்குவதற்காக தன் சொந்த நாட்டில் பாசிசத்தையும், அயல்நாடுகளில் போரையும் நடத்திவருவதை நியாயப்படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்த “பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரை”க் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. பல்லாண்டுகளாகவே, தன்னுடைய நோக்கங்களை அடைவதற்காக, அமெரிக்க ஏகாதிபத்தியம் பயங்கரவாதக் குழுக்களை உருவாக்கி வந்திருக்கிறதென்பது நன்கு பதிவு செய்யப்பட்ட உண்மையாகும். வேறு ஏதாவதொரு நாடு நடத்தியது போல பயங்கரவாதத் தாக்குதல்களை தானே திட்டமிட்டு நடத்துவதில் அமெரிக்கா கை தேர்ந்ததாகும். இது இந்தியா உட்பட எல்லா நாடுகளுக்கும் தெரியும். ஆனால் பனிப்போர் முடிவுற்றதிலிருந்து, குறிப்பாக அமெரிக்காவோடு ஒரு முக்கிய உடன்பாட்டை உருவாக்கியதிலிருந்து, இந்திய அரசு பாகிஸ்தானைத் தான் குறிவைத்து குற்றஞ்சாட்டி வருகிறது. நமது நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உதவியளித்து ஊக்குவிப்பதில் அமெரிக்காவிற்கு பங்கு இருப்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும்கூட, அது பற்றி ஒரு சந்தேகத்தைக் கூட இந்தியா எழுப்புவதில்லை. அமெரிக்க அரசின் ஆதரவு பெற்ற பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு பதிலாக, இந்திய அரசு அதை நம் நாட்டிலும், இந்தப் பகுதியிலும் தன்னுடைய நோக்கங்களை முன்னேற்றுவதற்கான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.

இந்திய அரசின் பாசிசம் வளர்ந்து வருவதன் ஒரு அங்கமே அரசு பயங்கரவாதம் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகும். தன்னுடைய ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தொழிலாளி வர்க்கத்திற்கும் மக்களுக்கும் எதிராக வாக்குச்சீட்டுகள், புல்லட்டுகள் என்ற இரட்டை ஆயுதங்களையும் முதலாளி வர்க்கம் பயன்படுத்துகிறது என்பதை கம்யூனிஸ்டுகள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஆயுதப்படைகளும், காவல்துறையும், உளவு நிறுவனங்களும் நன்கு ஊட்டி வளர்க்கப்படுகிறார்கள். குண்டு வெடிப்புக்களையும், பிற பயங்கரவாதத் தாக்குதல்களையும் அரசு திட்டமிட்டு நடத்துகிறது. குழப்பத்தையும், வன்முறையையும் தூண்டிவிடுவதற்காக பல்வேறு மத சமூகங்களுக்கும், இன மக்களுக்கும் எதிராக வகுப்புவாத பிரச்சாரத்தை அது நடத்திவருகிறது. இவற்றின் மூலம் போலி எதிர்மோதல்கள் உட்பட அதிகாரபூர்வமான அரசு பயங்கரத்தை மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்ய அது முயற்சி செய்கிறது.

அரசு திட்டமிட்டு நடத்தும் வகுப்புவாத வன்முறை உட்பட அரசு பயங்கவாதமானது, ஆளும் வர்க்கத்திற்கு மிகவும் பிடித்தமான அதிகாரபூர்வமான கொள்கையாகும். அரசாங்கத்தில் எந்த கட்சி இருந்தாலும், இது மாற்றமின்றி இருந்து வருகிறது. அரசு பயங்கரவாதமும், அதை நியாயப்படுத்த எழுப்பப்படும் “தேச ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பது”, “பயங்கரவாதத்திற்கு எதிராக போர்” மற்றும் “தேசிய பாதுகாப்பு” போன்ற முழக்கங்களும் மக்களை அச்சுறுத்துவதன் மூலமும், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தேகப்பட வைப்பதன் மூலமும், முதலாளி வர்க்கத்தின் மக்கள் விரோத திட்டத்திற்கு எதிராக உழைக்கும் வர்க்கம் மற்றும் மக்களுடைய ஒன்றுபட்ட எதிர்ப்பை நசுக்கப் பயன்படுகிறது. ஆளும் வர்க்கத்தின் பாசிச முயற்சிகளை வெட்ட வெளிச்சமாக்கவும், எதிர்க்கவும், அரசு பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்களும், மக்களுடைய உரிமைகளுக்காகப் போராடுபவர்களும் இணைந்து வேலை செய்ய வேண்டுமென நிலைமை கோருகிறது.

Pin It