பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்கி இரவு பகலாக பணிபுரியும் குளோபல் மருத்துவமனைத் தொழிலாளர்களுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் இந்த நிறுவனத்தின் நிர்வாகம் உரிமைகளை மறுத்து வருகிறது. நூற்றுக் கணக்கான பணியாளர்களையும், செவிலியர்களையும், பிற தொழிலாளர்களையும் கொத்தடிமைகளைப் போலவும், எவ்வித பணிநிரந்தரமும் இன்றி தற்காலிக பணியாளர்களாகவும், ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் நடத்தி வருகின்றனர். இந்தக் காட்டுமிராண்டித் தனமான பணி நிலைமைகளை எதிர்த்து அங்குள்ள தொழிலாளர்கள் போர்கொடி எழுப்பி வருகின்றனர்.

 குறிப்பாக வார்டு அசிஸ்டென்டு பணியாளர்கள் ஒன்றுபட்டு தொழிற் சங்கம் அமைத்துப் பல்லாண்டுகளாகப் போராடி வருகின்றனர். வார்டு அசிஸ்டென்டுப் பணியாளர்களும், மற்ற பிற மருத்துவமனைப் பணியாளர்களும், எவ்வித ஓய்வுமின்றி 10-12 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். 8 மணி நேரத்திற்கும் மேல் அவர்கள் செய்யும் வேலைக்கு சட்டப்படி தரவேண்டிய ஓவர்டயம் ஊதியமும் மறுக்கப்படுகிறது. பல நேரங்களில் எவ்வித ஓய்வுமின்றி 24 மணிநேரம் கூட தொடர்ந்து வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். அவர்களுக்கு விடுமுறைகளோ, விடுப்போ அளிக்கப்படுவதில்லை. பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சேவைகளை இரவு பகலாக செய்து வரும் இந்தத் தொழிளார்களுடைய அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன. இந்தப் பணியாளர்கள் காட்டுமிராண்டித்தனமாக சுரண்டப்படுகின்றனர். இங்கு பணிபுரியும் பெரும்பாலான பணியாளர்களுக்கு மாதத்திற்கு 5000-க்கு மேல் சம்பளம் வழங்கப்படுவதில்லை. சென்னை போன்ற நகரங்களில் குறைந்த பட்சமாக 10,000 ரூபாய் இல்லாமல் இன்று வாழ்க்கை நடத்தமுடியாது என்ற நிலையில் இங்குள்ள பணியாளர்கள் கடும் பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். பிறரைப் போல மனிதர்களாக வாழவும், குடும்பம் நடத்தவும் நியாயமான ஊதியம் வழங்குமாறு அவர்கள் நிர்வாகத்திடம் கோரி வருகின்றனர்.

கோடிக்கணக்கில் கொள்ளை இலாபமடித்து வரும் மருத்துவமனை நிர்வாகம், தொழிலாளர்களுடைய ஊதியத்தை உயர்த்தி, அவர்களுடைய உரிமைகளை ஏற்று வழங்குவதற்கு பதிலாகத் தொழிலாளர்களைத் தாக்கி வருகிறது. அங்கு பணிபுரியும் ஊழியர்களை நிர்வாகம் கொத்தடிமைகளாக நடத்துகின்றனர். தொழிற்சங்க உரிமைகளையோ, மனித உரிமைகளையோ கொஞ்சம் கூட நிர்வாகம் மதிப்பதில்லை.

நியாயமான ஊதியமும் பிற உரிமைகளையும் கேட்டு கோரிக்கை எழுப்பிய வார்டு அசிஸ்டென்டு பணியாளர்கள் மூவரை, எவ்வித விசாரணையுமின்றி, சட்டங்களுக்குப் புறம்பாக மருத்துவமனை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. தொழிலாளர் ஆணையரும் பிற அரசு அதிகாரிகளும் இந்த உரிமை மீறல்களையும், தாக்குதல்களையும் கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நிர்வாகத்தின் அநீதியான தாக்குதல்களையும், தொழிலாளர் நல அதிகாரிகளின் தாக்குதல்களையும் எதிர்த்து சற்றும் பின்வாங்காமல் இந்த மருத்துவமனைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை உடனடியாக வேலைக்கு மீண்டும் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டுமென்றும், பிற உரிமைகளை அங்கீகரித்து அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் கோரி பணியாளர்கள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். மருத்துவமனைப் பணியாளர்களுடைய இந்தப் போராட்டம் வெற்றி பெற தொழிலாளர் ஒற்றுமை குரல் வாழ்த்தி ஆதரவளிக்கிறது.

Pin It