சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி இந்திய கம்யூனிஸ்ட் கெதர் கட்சியின் அறைகூவல், 8 மார்ச், 2013

இன்றுள்ள நிலைமைகளை எதிர்த்து உலகம் முழுவதும் பெண்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். அநியாயமான ஏகாதிபத்திய போர்களையும் அன்னியப் படைகள் நாடுகளை ஆக்கிரமிப்பதையும் அனைத்துக் கண்டங்களிலும் உள்ள பெண்கள் எதிர்த்து வருகின்றனர். பயங்கரவாதத்தை எதிர்ப்பது என்ற பெயரில் மனித உரிமைகள் மிருகத்தனமாக மீறப்படுவதை அவர்கள் எதிர்த்து வருகின்றார்கள். பெண்கள் தொடர்ந்து நாள்தோறும் சந்தித்து வரும் பாகுபாடு, இழிவுபடுத்துதல் பாலியல் வன்முறைகள் ஆகியவற்றை எதிர்த்து அவர்கள் போராடி வருகின்றனர்.
 
நம் நாட்டில், பாதுகாப்பு படைகள் என்று அழைக்கப்படுபவர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள பயங்கரத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பெண்கள் ஆவர். இந்த பாதுகாப்புப் படைகள் ஆளும் வர்க்கத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமே உண்மையில் பாதுகாப்பு கொடுக்கின்றனர். அரசு, காலனியப் போக்கும் ஏகாதிபத்திய தன்மையும் கொண்டுள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் பெண்களுக்கும் ஆண்களுக்கும் விவசாய குடும்பங்களுக்கும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும் அதன் மக்களுக்கும், முழு பாதுகாப்பு இயந்திரமும் விரோதமாக உள்ளது. காஷ்மீரிலும், வடகிழக்கிலும் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று அழைக்கப்படும் பகுதிகளிலும் மத்திய ஆயுதப் படைகளினால் கற்பழிக்கப்படுவது ஒரு அன்றாட நிகழ்வாக இருக்கிறது. நாடு முழுவதுமுள்ள காவல் நிலையங்களிலும் சிறைச்சாலைகளிலும், மறுவாழ்வு இல்லங்கள் என்று அழைக்கப்படும் இடங்களிலும் கூட, பெண்கள் துன்புறுத்தப்பட்டு கற்பழிக்கப்படுகிறார்கள். பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளாலேயே அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.

எனவே, மென்மேலும் பெண்கள் வீதிகளுக்கு வந்து ஆண்டு வரும் அமைப்போடு மோதி வருவதில் வியப்பொன்றுமில்லை. பெண்களாகவும் மனிதர்களாகவும் அவர்களுக்குத் தற்போது மறுக்கப்படும் உரிமைகளை, அவர்கள் கோருகின்றனர்.

புதிய தலைமுறையை பெற்றெடுத்து, மனித இனப்பெருக்கத்தில் முக்கிய பங்காற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பான தாய்மையையும் பிரசவத்தையும் உறுதிப்படுத்தும் அடிப்படை சேவைகளுக்கு அரசின் உத்திரவாதத்தைக் கோருவதற்கு அவர்களுக்கு எல்லா உரிமை உண்டு. இதற்கான உத்தரவாதம் நம் நாட்டிலுள்ள பல லட்சக்கணக்கான பெண்களுக்கு இல்லை. பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பிற்கு உரிமை உண்டு. ஆனால் அந்த உரிமை அனைவருக்கும் உரிய உரிமையாக அங்கீகரிக்கப்படவில்லை. எங்கெல்லாம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதோ அங்கும் அது நடைமுறைப்படுத்த படவில்லை.

நவீன சமுதாயத்தில் பெண்களின் உரிமைகள் பரவலாக மீறப்படுவதற்கு மூல காரணம் என்ன? இந்த கேள்விக்கான பதிலை 100 ஆண்டுகளுக்கு முன்பு மார்ச் 8-ஐ சர்வதேச மகளிர் தினமாக பிரகடனப்படுத்திய உழைக்கும் பெண்கள் கொடுத்திருக்கின்றனர். அவர்கள் அந்த நேரத்திலிருந்த உழைக்கும் பெண்கள் தங்கள் ஒடுக்குமுறைக்கு மூல காரணம் முதலாளித்துவமும் முதலாளித்துவ சர்வாதிகாரமும் தான் என்று அறிவித்தனர். தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கு அவசியமான கம்யூனிசம் தான் பெண்களின் முழு விடுதலைக்கான அவசியமும் ஆகும் என்று அறிவித்தனர். முதலாளித்துவத்தை தூக்கி எறிவதையும் அதற்கு பதிலாக சோசலிசத்தை நிறுவுவதையும் தங்களுடைய இலக்காக அவர்கள் வகுத்துக் கொண்டனர். சோசலிசம், கம்யூனிசத்தை நோக்கிய புரட்சிகர மாற்றத்தின் முதல் கட்டமாகும்.

அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்ட பின் முதலாளித்துவம் இரு பேரழிவான உலகப் போர்களுக்கு உலகைத் தள்ளியுள்ளது. தொழிலாளி வர்க்க இயக்கம் சோசலிசத்தை நோக்கி நடைபோட்டதற்கு எதிர்நடவடிக்கையாக, பிற்போக்கு முதலாளி வர்க்கம் பாசிசத்தை கட்டவிழ்த்து விட்டது. சோவியத் ஒன்றியத்தில் சீரழிவையும், பின்னர் அதை ஒழிப்பதிலும் உலக முதலாளிகள் கைகோர்த்துச் செயல்பட்டனர். பிறகு அவர்கள் மார்க்சிசம் இனிமேல் பயன்படாது என்று கூறி பெண்கள் இயக்கத்தின் மேல் நவீனத்திற்கு அப்பாற்பட்டதைச் சுமத்த முயற்சி செய்தனர். முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவ சனநாயக அரசிற்கும் மாற்று எதுவும் இல்லை என்று கூறி, அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக பேரழிவைகளை ஏற்படுத்தி வருகிறார்கள். இன்று மிகப்பெரிய அளவிலான பயங்கரத்தையும், அநியாமான ஆக்கிரமிப்பு போர்களையும், சுதந்திர நாடுகளை மறுகாலனி ஆதிக்கம் செய்வதிலும், அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளே முதன்மை அமைப்பாளர்களாக இருந்து வருகின்றன.

இந்த முழு வரலாற்று அனுபவம், பெண் உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டுவர முதலாளித்துவத்தைத் தூக்கி எறிவது அவசியாமான நிபந்தனை என்ற தவிற்க முடியாத முடிவுக்குக் கொண்டு செல்கிறது. நாம் இன்னும் ஏகாதிபத்தியம் மற்றும் பாட்டாளி வர்க்க புரட்சியின் சகாப்தத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். இதுவரை உள்ள வர்க்க போராட்டத்தின் அனுபவத்தில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு தற்போதைய நிலைமைகளுக்கு பொறுத்தமான கோட்பாடுகளையும் உத்திகளையும் வளர்த்தெடுக்க வேண்டும்.

இந்தச் சரியான முடிவுக்கு வருவதிலிருந்து பெண்களைத் தடுக்க முழு பொதுப் பிரச்சார இயந்திரத்தை உலக ஏகபோக முதலாளித்துவ ஊடகங்கள் முடுக்கிவிட்டுள்ளன.

இந்தியாவில் வேலை செய்துவரும் ஐக்கிய நாடுகளின் ஒவ்வொரு நிறுவனமும் பெண்களுக்கு "பாதுகாப்பான இடங்களை" உறுதிப்படுத்துவதற்காக என்று நிதியை ஒதுக்கி வருகின்றன. பெண்களின் அடக்குமுறைக்கான மூலத்தை கருத்தில் கொள்ளாமலேயே பிரச்சனையை தீர்க்க முடியும் என்பது போல, பெண்கள் பாதுகாப்பு என்பது தீர்க்க வேண்டிய முன்னுரிமை பிரச்சினையாகத் தனித்துப் பார்க்கப்படுகிறது.

"தெற்கு ஆசியாவில் பாலினம் சார்ந்த வன்முறையை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?" என்று கேள்வியை வரவிருக்கும் உலக நாடுகள் கூட்டத்தில் விவாதத்திற்காக உலக வங்கி முன்வைத்துள்ளது.

பாலினம் சார்ந்த வன்முறை தெற்காசியாவில் மட்டும் உள்ளது அல்ல. இது ஒரு உலகளாவிய பிரச்சினையாகும். அதனுடைய மூலமானது சுரண்டும் ஒட்டுண்ணி முதலாளித்துவ ஏகாதிபத்திய அமைப்பில் உள்ளது. அது உழைக்கும் பெரும்பான்மை மக்களை அடக்கி வைப்பதற்காக எல்லா வகையான வன்முறைகளையும் தூண்டிவிடுகின்றது. அதனால் உண்மையான கேள்வியானது : முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, சமூக முன்னேற்றப் பாதையைத் திறந்துவிட என்ன செய்ய வேண்டும்? என்பதாகும்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பொது மக்கள் ஆர்ப்பாட்டங்களை நமது நாட்டை ஆளும் வர்க்கத்தின் அரசியல்வாதிகள் போராட்டக்காரர்களை முதலில் "மோசமான நடத்தை கொண்ட பெண்களென " என்று கூறி அவர்களை இழிவுபடுத்தினர். தெருக்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களென ஊடகங்கள் சித்தரித்தனர். உண்மையில், அவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலாளி வர்க்க பெண்களும் மாணவர்களும் இளைஞர்களும் ஆவர். ஆர்ப்பாட்டங்களில் ஆண்களும் பெண்களும் தீவிரமாக பங்கு கொண்டதுதான் உண்மை.

தற்போது மன்மோகன் சிங் அரசாங்கம் பெண்களுக்கு எதிரான வன்முறை பிரச்சினையை களையப் போவதாகப் பாசாங்கு செய்து வருகிறது. நீதிபதி வர்மா ஆணையம் சமர்ப்பித்த பரிந்துரைகளை தொடர்ந்து, கற்பழிப்பிற்கான தண்டனையை வலுப்படுத்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. "நாட்டை பெண்களுக்கு பாதுகாப்பானதாக செய்வதற்காக", "நிர்பயா" என்ற 1000 கோடி ரூபாய் நிதியை நிதியமைச்சர் சிதம்பரம் அறிவித்துள்ளார்.

குறைவான எண்ணிக்கையில் காவல்துறையினர் இருப்பதாலோ மிகக் குறைவான பணத்தையே பாதுகாப்புக்கு செலவு செய்வதாலோ நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இல்லை. பிரச்சனை, அரசின் தரத்திலும் வர்க்க தன்மையிலும் உள்ளது. இன்றுள்ள அரசு, காலனிய மற்றும் ஏகாதிபத்திய தன்மை கொண்டதாக முதலாளி வர்க்கத்திற்கு சேவை செய்கிறது. செல்வந்தர்களை தவிர அனைத்து பெண்களையும் ஆண்களையும் ஒடுக்க வடிவமைக்கப்பட்ட காலனிய கால குற்றவியல் நடைமுறைச் சட்டத்தைச் செயல்படுத்த காவல்துறைக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. இந்த இயந்திரத்தை வலுப்படுத்துவதினால் மக்கள் மீதான ஒடுக்குமுறை மட்டுமே தீவிரமடையும்.

தன்னுடைய வரவு-செலவு அறிக்கையில் நிதியமைச்சர் சிதம்பரம், தனப்பட்ட பெண்களுக்கும், பெண்களின் கூட்டு நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க, அனைத்து பெண்கள் வங்கியை உருவாக்குவதாக கூறினார். மேலும் மேலும் பெண்களை வங்கி கடன்களை பெறுபவர்களாக மாற்றும் நோக்கோடு செய்யப்படும் முதலாளி வர்க்கத்தின் தந்திரமான வித்தையே இது. அதன் நோக்கம், உழைக்கும் பெண்களின் கடின உழைப்பில் சேமிக்கப்பட்ட சேமிப்பை கொள்ளையடித்து வங்கிகளின் செயல்பாட்டு வட்டத்தை விரிவாக்குவதாக உள்ளது. ஆந்திர பிரதேசத்தில் அப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் சுய உதவி குழுக்கள் கடன் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். பெரும் ஏகபோக நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருக்கும் இன்றுள்ள முதலாளித்துவ சந்தையில் வங்கி கடன் மூலம் நிதி ஆதாரத்தை திரட்டி நடத்தப்படும், சிறிய நிறுவனங்கள் நீண்ட நாட்களுக்கு தாக்கு பிடிக்க முடியாது என்பதே உண்மை.

மக்களை ஏமாற்றி முக்கிய இலக்கிலிருந்து நம்மை திசை திருப்ப காலம் காலமாக உபயோகித்து வெற்றி பெற்ற தந்திரங்களான - விசாரணைக் குழுக்களை நியமிப்பது, சட்ட திருத்தங்களை செய்வது, சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துவது போன்றவற்றை ஆளும் வர்க்கம் நாடுகின்றது. தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் – நாம், திசை திரும்பி விடக்கூடாது. நாம் காலனிய தன்மை பொருந்திய முதலாளித்துவ அரசால் பாதுகாக்கப்பட்டு பிரதிநிதித்துவ சனநாயகத்தின் குற்றவியலான செயல்முறை மூலம் நிர்வகிக்கப்படும் முதலாளித்துவ அமைப்பின் மீது குறியாக இருக்க வேண்டும்.

முதலாளித்துவம், அதன் தற்போதைய ஏகாதிபத்திய நிலையில், சுரண்டலையும் கொள்ளையையும், ஆக்கிரமிப்பையும், ஆக்கிரமிப்புப் போர்களையும், உலகை ஏகாதிபத்திய மறு பங்கீடு செய்வதற்கான போர்களையும் நடத்தும் ஒரு உலகளாவிய அமைப்பாக இருக்கிறது. இது ஒரு மிகத் தீவிரமான சுரண்டல் மற்றும் ஒட்டுண்ணியான சமூக அமைப்பு. தீவிர பாதுகாப்பற்ற வாழ்வாதாரத்தையும், தாங்க முடியாத அளவு வறுமையையும் மட்டுமல்லாமல் உழைக்கும் பெரும்பான்மை மக்கள் மீது முடிவில்லாத வன்முறைக்கும் பயங்கரத்தையும் ஏற்படுத்துவதற்கும் அதுவே ஆதாரம்.

கடுமையான உலகளாவிய நெருக்கடி நிலைமையில், இந்தியாவில் முதலாளித்துவம், மற்ற நாடுகளை ஒப்பிடும் போது வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இது நம் சமுதாயத்தில் உள்ள வர்க்க முரண்பாடுகளை கூர்மையானதாக ஆக்குகிறது. குறிப்பாக சிறுபான்மையான சுரண்டல்காரர்களுக்கும், பெரும்பான்மையான தொழிலாளர்கள் விவசாயிகளைக் கொண்ட சுரண்டப்படுபவர்களுக்குமான வர்க்க முரண்பாடுகளை கூர்மையானதாக ஆக்குகிறது.

உலக ஏகாதிபத்திய சக்திகளின் உயர்மட்ட குழுவில் இந்தியா சேருவதற்கு வழிவகை செய்யும் நோக்கத்தோடு முதலாளி வர்க்கம் மேற்கொண்டுவரும் தீவிர முயற்சிகளுக்கும், அதனுடைய தாராளமய தனியார்மயமாக்கல் மூலம் உலகமயமாக்கும் திட்டத்திற்கும் பின்னணியில் செயல்படும் இயந்திரமாக முதலாளித்துவம் உள்ளது.

தொழிலாளர்களைச் சுரண்டியும் விவசாயிகள், பழங்குடி மக்கள் மற்றும் எல்லா தேசங்கள் மற்றும் தேசிய இனங்களின் நிலம் மற்றும் இயற்கை வளங்களைச் சூறையாடியும் நமது நாட்டு முதலாளித்துவப் பொருளாதாரம் உருவாக்கும் பெரும் செல்வம் ஒரு முனையில் மிகச் சிலர் கைகளில் குவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களாலும் விவசாயிகளாலும் உருவாக்கப்பட்ட செல்வங்களை டாடாக்கள், அம்பானிகள், மித்தல்கள் மற்றும் பிற ஏகபோக குடும்பங்களின் தலைமையிலான முதலாளித்துவ வர்க்கம் கைப்பற்றுகிறது. பல்வேறு வெளிநாடுகளை கொள்ளையடிக்க இந்த ஏகபோகங்கள் இப்போது மென்மேலும் தங்கள் மூலதனத்தை ஏற்றுமதி செய்கின்றன. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அதிகபட்ச கொள்ளை அடிக்க வகைசெய்யும் இந்தப் பொருளாதார அமைப்பை அரசு இயந்திரம் பாதுகாக்கிறது.

எல்லாவற்றையுமே செல்வந்தர்களின், சிறுபான்மையினரின் அதிகபட்ச லாபத்திற்கு ஆதாரமாக மாற்றும் ஒரு அமைப்பில் தவிர்க்க முடியாமல் பெண்களும் சுரண்டப்பட்டு ஒடுக்கப்படுவார்கள். தொழிலாளர்களாகவும் விவசாயிகளாகவும் பெண்கள் சுரண்டப்படுகிறார்கள், பெண்களாக ஒடுக்கப்படுகிறார்கள். அவர்கள் பாலியல் இன்பப் பொருளாக கருதப்படுகின்றனர். கற்பழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தூய்மையற்றவர்களாகவும் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகவும் கருதப்படுகிறார்கள். காலனித்துவ காலத்தில் இருந்து நீடிக்கும் முதலாளித்துவ அமைப்பும் அரசும், பெண்களுடைய அடிப்படை உரிமைகளை மறுக்க வகை செய்யும் சாதி அமைப்பையும் பல்வேறு காலாவதியான வழக்கங்களை ஊக்கப்படுத்தி நீடிப்பதன் மூலம் அவர்களை மேலும் தீவிரமாக சுரண்டுவதற்கு வழி செய்கிறது.

தில்லியில் சமீபத்திய மின்சார கட்டண உயர்வு பற்றிய ஒரு விமர்சனத்திற்கு பதில் அளித்தபோது "மக்களால் எவ்வளவு செலவழிக்க முடியுமோ அந்த அளவிற்கு மட்டுமே அவர்கள் மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டும் " என்று முதல்வர் ஷீலா தீட்சித் சொல்லியிருக்கிறார்! ஆளும் முதலாளி வர்க்கம் மற்றும் அதன் முன்னணி அரசியல் பிரதிநிதிகளின் பார்வையை இது பிரதிபலிக்கிறது. ஒரு தொழிலாளியின் குடும்பமோ அல்லது விவசாய குடும்பமோ குளிர்சாதன பெட்டி, ஏர் கண்டிஷ்னர் அல்லது எந்தவொரு நவீன சாதனத்திற்கோ ஆசைப்படக்கூடாதென அவர்கள் நினைக்கிறார்கள். வாழ்க்கைத் தர முன்னேற்றம், சிறப்புரிமை பெற்ற மேற்தட்டு மக்களுக்கு மட்டுமே உரியது என்றும் அது உழைப்பவர்களுக்கு இல்லை என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.

ஒவ்வொரு வயது வந்தவருக்கும் வாக்களிக்க சம உரிமை உண்டு என்பதனால், அரசியல் வழிமுறையை சனநாயகம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், வெறும் வாக்களிக்கும் உரிமை சமூகத்தின் போக்கை வடிவமைப்பதற்கான வழிவகைகளை உழைக்கும் மக்களுக்குத் தரவில்லை. முதலாளி வர்க்கத்தின் பல்வேறு கட்சிகள் முன்னிறுத்தும் வேட்பாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது மட்டும் தான் பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் ஒரே பங்காகும். குறுகிய நோக்கங்களைக் கொண்ட கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் இந்த அரசியல் வழிமுறை, முதலாளி வர்க்கம் தனது விருப்பத்தை சமூகத்தின் மீது திணிக்க உதவுகிறது. முடிவெடுக்கும் செயல்முறையிலிருந்து பெரும்பான்மையான உழைக்கும் மக்களை முழுமையாக ஒதுக்கி வைக்கிறது.

தற்போதுள்ள அரசும் அரசியல் அமைப்பும் முதலாளி வர்க்கத்திற்கு மட்டுமே சனநாயகமாக உள்ளது. இது தொழிலாளி வர்க்கம், பிற ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் மற்றும் சமுதாய படிநிலைகளின் உரிமைகளை அப்பட்டமாக மீறும் கொடூரமான சர்வாதிகாரமாக உள்ளது.

காங்கிரசு மற்றும் பாஜக கட்சிகளின் தலைவர்கள், பெண்களின் பாதுகாப்பு பற்றி மிகுந்த கவலை கொண்டிருப்பதாக நடிக்கிறார்கள். இப்படிப்பட்ட முதலாளித்துவ கட்சிகள் உண்மையில் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட அடியாள் பலத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளனர். அவர்கள் தனிப்பட்ட குண்டர் படைகளை பராமரித்து வருகின்றனர். அதுவே நம் நாட்டில் அரசியலை குற்றவியலாக்குவதற்கு முக்கிய இயந்திரமாகும். அவர்கள் இந்த சனநாயகத்தின் மீது சத்தியம் செய்துவிட்டு முதலாளி வர்க்கத்தையும் சுரண்டல் மற்றும் ஒட்டுண்ணிப் பொருளாதார அமைப்பையும் தீவிரமாகப் பாதுகாத்து வருகிறார்கள்.

சமுதாயத்தின் போக்கையும் நிகழ்ச்சிநிரலையும் நிர்ணயிப்பதற்கு, உழைக்கும் பெண்கள், ஆண்களின் கைகளில் அரசியல் அதிகாரம் வேண்டும். இன்றுள்ள காலாவதியான காலனிய முதலாளித்துவ குடியரசை தொழிலாளர்கள் விவசாயிகளின் நவீன சனநாயக அரசை கொண்டு மாற்ற வேண்டும்.

முதலாளித்துவ சுரண்டல் மற்றும் ஏகாதிபத்திய கொள்ளை உட்பட்ட நிலப்பிரபுத்துவத்தின் அனைத்து மிச்சங்கள், சாதி படிநிலைகள், காலனித்துவத்தின் முழு மரபு போன்ற எல்லா வகையான பழைய ஒடுக்குமுறைகளையும் நமது சமுதாயத்திலிருந்து விரட்டியடிக்கும் கருவியாக நமக்கு ஒரு அரசு தேவை. சாதி, பாலினம், மத நம்பிக்கை அல்லது வேறு எந்த வேறுபாட்டிற்கும் அப்பாற்பட்டு, அது ஒவ்வொரு மனிதனுடைய மற்றும் ஒவ்வொரு வயதுவந்த குடிமகனின் உரிமைகளை அங்கீகரித்து பாதுகாக்க வேண்டும். அது மக்களிடத்தில் இறையாண்மையை ஒப்படைக்க வேண்டும்.

உடனடி அடிப்படையில், நாம் நம் சொந்த பலத்தைக் கொண்டும் கூட்டு போராட்ட திறனை நம்பியும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பெண்களும் ஆண்களும் ஒன்றுபட்டு மிகவும் நம்பகமான பாதுகாப்பான கூட்டு தற்காப்பும் ஒருவருக்கொருவர் உதவியும் ஆதரவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

பாராளுமன்றத்திலுள்ள கட்சிகள், அவர்கள் நடத்தும் அரசாங்கங்கள், அவர்கள் கட்டுப்பாட்டிலுள்ள இராணுவம் மற்றும் காவல்துறை, அவர்கள் படைக்கும் சட்டங்களை பாதுகாக்கும் நீதித்துறை என இவற்றில் எதுவுமே பெண்களின் பாதுகாப்பையோ விடுதலையையோ உறுதி செய்யும் என்று நாம் நம்ப முடியாது. இந்த நிறுவனங்கள் முதலாளி வர்க்கத்திற்கு மட்டுமே கடமைப்பட்டவர்களாக இருக்கின்றன.

பெண்கள் என்ற அடிப்படையிலும், தொழிலாளி வர்க்கத்தின் பகுதியாகவும் உழைக்கும் பெரும்பான்மையின் பகுதியாகவும் தங்களைப் காத்துக்கொள்ளவும் தங்கள் உரிமைகளை காத்துக்கொள்ளவும் பெண்கள் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும். உழைக்கும் பெண்களும் ஆண்களும், மாணவ மாணவியரும், நம் பணியிடங்களிலும் வளாகங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் நம்முடைய சொந்தக் குழுக்களைக் கட்ட வேண்டும். நமது உரிமைகளுக்காகப் போராடும் போக்கில் நாம் சமுதாயத்தின் ஆட்சியாளர்களாக ஆக வேண்டியத் தயாரிப்புகளைச் செய்ய வேண்டும்.
 
2013 சர்வதேச மகளிர் தினத்தில், தொழிலாளர்களுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான, தேசத்திற்கு எதிரான திட்டமான தாராளமயமாக்கலையும் தனியார்மயமாக்கலையும் எதிர்த்து எல்லா பெண்களையும் ஒன்றுபட்டுப் போராட முன்வருமாறு கம்யூனிஸ்ட் கெதர் கட்சி அறைகூவல் விடுகிறது.
 
மக்கள் கைகளில் இறையாண்மையை ஒப்படைக்கும் ஒரு நவீன சனநாயக அரசை அமைப்பதற்கு, அதாவது இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு நாம் ஒன்றுபட்டு போராடுவோம்! சனநாயக காலனித்துவத்தை எதிர்த்த, நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த, ஏகாதிபத்தியத்தை எதிர்த்த, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நிபந்தனையாக முதலாளித்துவத்தை தூக்கியெறிய நாம் ஒன்றிணைவோம்! புரட்சியின் மூலம் சோசலிசம் கட்டுவதற்கு ஒன்றுசேருவோம்!

கம்யூனிசத்திற்காக தொழிலாளி வர்க்கம் மற்றும் புரட்சிகர இயக்கத்தின் தலைமையை வலுப்படுத்த, சமூக முன்னேற்றத்திற்காக போராட உறுதி கொண்ட பெண்களை கம்யூனிஸ்ட் கெதர் கட்சியில் சேர நாங்கள் அழைக்கிறோம்!

இன்குலாப் ஜிந்தாபாத்!

Pin It