தொழிலாளர்-விவசாயி ஆட்சியதிகாரத்திற்காக ஒன்றுபட்டுப் போராடுவோம்!

இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறைகூவல், ஏப்ரல் 10 2013

மே 1, தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கைகளை உலகெங்கிலும் உயர்த்திப் பிடிப்பதற்கான நாளாக 120 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலாளித்துவ கூலி அடிமைத்தனத்திற்கு முடிவு கட்டவும், எல்லா வகையான சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கும் மேற்கொள்ளப்படும் போராட்டத்தின் ஒற்றுமைக்கான நாளாகும் இது. 2013 மேதினத்தை நாம் நெருங்கும் இந்த வேளையில், ஒவ்வொரு முதலாளித்துவ நாட்டிலும் தொழிலாளி வர்க்கத்திற்கும் முதலாளி வர்க்கத்திற்கும் இடையே ஒரு கடுமையான மோதல் உலகளவில் வளர்ந்து வருகிறது. ஏகபோக முதலாளித்துவ இலாபத்தைக் கட்டிக் காப்பதற்காக தங்களுடைய உரிமைகளும், வாழ்க்கைத் தரமும் எல்லாப் பக்கங்களிலிருந்தும் தாக்கப்படுவதை எல்லா நாட்டுத் தொழிலாளர்களும் சகித்துக் கொள்ள மறுத்து வருகிறார்கள்.

நிதி முதலாளித்துவ சூதாட்டக்காரர்களும், ஏகபோக நிறுவனங்களும் கொண்டு வந்திருக்கும் நெருக்கடியின் சுமையை, உழைத்து இந்தச் சமுதாயத்தின் செல்வத்தை உருவாக்கும் நாம் ஏன் சுமக்க வேண்டும்? இந்திய முதலாளிகள் உலக தரத்திற்கு முன்னேறி வருகையில், இந்தியத் தொழிலாளர்கள் ஏன் குறைந்த ஊதியத்தையும், அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்? மிகப் பெரிய இந்திய மற்றும் அயல்நாட்டு முதலாளித்துவ முதலீட்டாளர்களுடைய நலன்களை மட்டுமே மத்திய அரசு பாதுகாத்து வருகையில், நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுடைய அதிகரித்துவரும் விலைவாசியையும், அவற்றின் மீதான வரிகளையும் நாம் ஏன் சகித்துக் கொண்டிருக்க வேண்டும்?

டாட்டா, அம்பானி, பிர்லா மற்றும் பிற நிறுவனக் குடும்பங்களுடைய மூலதனத்தை உலகமயமாக்கும் முயற்சி, ஒரு குறுகிய நோக்கம் கொண்ட பயங்கர ஏகாதிபத்தியத் திட்டமாகும். அது ஒரு தொழிலாளர் விரோத, விவசாய விரோத, தேச விரோத, சமூக விரோதத் திட்டமாகும். காங்கிரசு, பாஜக மற்றும் பிற பிராந்திய முதலாளித்துவ கட்சிகளால் இத் திட்டமானது நம் மீது திணிக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை முறியடிக்க நாம் ஒன்றுபட்டு அணி திரள வேண்டும்.

இந்தத் திட்டத்தை முறியடிப்பதற்கு சக்திவாய்ந்த எதிர்ப்பை யாரால் திரட்ட முடியும்? அதற்கான திறமையும், அதைச் செய்ய வேண்டுமென்ற ஆர்வமும் கொண்டுள்ள தொழிலாளர்கள் நம்மால் தான் அதைச் செய்ய முடியும். எல்லாத் துறைகளையும் சேர்ந்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற 2 நாள் பிப்ரவரி பொது வேலை நிறுத்தம் நம்முடைய மிகப் பெரிய சக்தியைக் காட்டியிருக்கிறது. நம்முடைய வலிமையால் முதலாளித்துவ இலாபமீட்டும் இயந்திரத்தைத் தடுத்து நிறுத்த முடியுமென்பதை அது காட்டியிருக்கிறது. நம்முடைய அரசியல் ஒற்றுமையை வலுப்படுத்துவதில் நாம் உறுதியாக நின்றோமானால், முதலாளித்துவ தாக்குதல்களை நம்மால் நிச்சயமாக தடுத்து நிறுத்தவும், நிலைமைகளை மாற்றவும் முடியும்.

பாகிஸ்தானுக்கு எதிராக வெறியைத் தூண்டி விடுவதன் மூலமாகவோ, குறுகிய கட்சிச் சண்டைகள் முலமாகவோ வகுப்புவாத பிளவுகளை உருவாக்கி நம்முடைய ஒற்றுமையை அழிப்பதற்காக ஆளும் முதலாளி வர்க்கமானது கடுமையாக வேலை செய்து வருகிறது. நம்மைத் திசை திருப்பவும், பிளவு படுத்தவும் எடுக்கப்படும் எல்லா முயற்சிகளையும் தோற்கடித்து நம்முடைய போராட்ட வர்க்க ஒற்றுமையை நாம் பாதுகாக்க வேண்டும். முதலாளித்துவத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவது, ஒரு தொழிலாளி-விவசாயி கூட்டணியை அதிகாரத்திற்குக் கொண்டுவருவது ஆகிய நம்முடைய நோக்கத்தின் மீது நாம் குறியாக இருக்க வேண்டும். இதன் மூலம் முதலாளித்துவத்தைக் குழி தோண்டிப் புதைக்கவும், சோசலிசத்தைக் கட்டவும் முன்னேறிச் செல்ல முடியும். மதச் சார்பின்மை அல்லது "இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டைப்" பாதுகாப்பது என்ற அறைகூவல்களால் நாம் திசை திருப்பப்படக் கூடாது.

முதலாளித்துவ கட்சிகளுக்கு வெறும் வாக்களிக்கும் மந்தைகளாக நாம் இருப்பதைப் புறக்கணிப்போம்! தொழிலாளர் - விவசாயி ஆட்சியதிகாரத்தை அமைப்பதற்காகவும், அனைவருடைய தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் பொருளாதாரத்தைத் திருத்தியமைக்கவும் நம்முடைய திட்டத்தையொட்டி நாம் ஒன்றுபடுவோம்!

நாமே இந்தியா! நாமே அதன் மன்னர்கள்! இது தான் 1857 பெரும் புரட்சியை நடத்திய மாவீரர்களின் அறைகூவலாகும். நம்முடைய வீரத்தியாகிகளின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறைகூவலை நிறைவேற்ற தொழிலாளர்களையும், விவசாயிகளையும், பெண்களையும் இளைஞர்களையும் இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி அழைக்கிறது!

வாழ்க மேதினம்!

இன்குலாப் ஜிந்தாபாத்!

Pin It