மத்திய அரசின் 2013-14 வரவு செலவு அறிக்கை

2013-14 வரவு செலவு அறிக்கையை பிப்ரவரி 28 அன்று வெளியிடும் போது, ஐமுகூ அரசாங்கத்தின் நிதியமைச்சர் பி.சிதம்பரம், "மிகுதியான நிதி தட்டுப்பாட்டின் காரணமாக எனக்கு செலவினங்களை கட்டுப்படுத்துவது தவிர வேறு வழியேதும் இல்லை. நாங்கள் கசப்பான மருந்தை எடுத்துக் கொண்டோம்" என்று கூறினார்.

2008-இல் உலக நெருக்கடி முதலில் வெடித்த போது, இதே அரசாங்கம் வேறு பல்லவியைப் பாடியதைத் தொழிலாளர்களும், விவசாயிகளும் எல்லா உழைக்கும் மக்களும் மறந்துவிடக் கூடாது. அப்போது, இந்திய நிறுவனங்கள், அதிக நிதி தட்டுப்பாடு வந்தாலும், "தூண்டிவிடுவதற்காக" ஒரு பெரிய நிதியை அரசாங்கம் செயல்படுத்த வேண்டுமென ஒருமித்துக் கூக்குரலிட்டனர். அந்த நேரத்தில் பெரிய முதலாளித்துவ நிறுவனங்களும், வங்கிகளும் மற்றும் பிற பணத்தைப் பிடுங்கும் நிறுவனங்களும் தங்களுடைய முதலாளித்துவ இலாபங்களைப் பாதுகாப்பதற்காக மத்திய அரசாங்கம் தன்னுடைய செலவினங்களை அதிகரிக்க வேண்டுமென்பதில் குறியாக இருந்தனர். ஆனால் இன்று இலாபநோக்கம் கொண்ட அதே நிறுவனங்கள், அரசாங்கம் தன்னுடைய செலவினங்களையும், கடன்களையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் அதன்மூலம் முதலாளிகளுக்கு வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கடனளிப்பார்கள் என்கின்றனர்.

இந்திய அரசாங்கமும், அது பிரதிநிதிப்படுத்தும் முதலாளி வர்க்கமும் தங்களுடைய நலன்களுக்கு உகந்தவாறு தங்களுடைய பாட்டை மாற்றிக் கொள்கிறார்கள். மாறாமல் இருப்பது எதுவென்றால், சமுதாயத்திலுள்ள ஒரு மிகச் சிறுபான்மையினரின் பொருளாதார நலன்களுக்கான சர்வாதிகாரம் தான். பெரிய அளவில் பொது கடனைப் பெறும் போதும், நிதிப் பொறுப்பு என்ற பெயரில் அத்தியாவசிய செலவினங்கள் வெட்டிக் குறைக்கப்படும் போதும், தொழிலாளி வர்க்கமும், உழைக்கும் பெரும்பான்மை மக்களும் தான் சுமையைத் தாங்குகிறார்கள்.

சிதம்பரத்தின் கசப்பு மருந்தில் சேவை வரிகள் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதும் அடக்கமாகும். மேலும் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியத்தை வெட்டிக் குறைப்பது என்ற பெயரில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் மீண்டும் மீண்டும் உயர்த்தப்படுவதும் அடக்கமாகும்.

மறைமுக வரிகள் மூலமாகவும், மானியங்களை குறைப்பதன் மூலமாகவும் மேலும் கரக்கப்பட்ட தொகையானது ரூ 95,368 கோடிகளாகும். ஊதியம் வாங்குபவர்களிடமிருந்து தனிப்பட்ட வருமான வரிகள், சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ரூ 29,800 கோடி அதிகமாக கொண்டுவரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் சேர்ந்து சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில் 125,000 கோடி ரூபாய் பிழிந்து எடுக்கப்படும்.

தனக்கு வேறு எந்த வழியும் இல்லை என்று கூறிக் கொண்டு, நிதி அமைச்சர், தொழிலாளி வர்க்கத்திற்கும் மக்களுக்கும் மிக அதிகமாக கசப்பு மருந்தை, வருமானத்தை நம்பி வாழ்பவர்கள் மீது வரிகளையும், தொழிலாளர்களும், விவசாயிகளும் சந்தையில் வாங்கும் ஒவ்வொரு பண்டம் அல்லது சேவையின் மீதும் வரிகள் என்ற வடிவத்தில் கொடுத்திருக்கிறார்.

மறைமுக வரிகள் என்றால், நுகர்வோர் மீதான வரிகளாகும். பெரும்பாலானோர் பயன்படுத்தும் பொருட்கள் மீது விதிக்கப்படும் மறைமுக வரிகள், மக்களில் பெரும்பான்மையாக இருக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் மீது போடப்படும் வரிகளாகும். அவர்கள் தங்களுடைய தேவைகளைக் குறைத்தும், அதிக ஊதியத்திற்காகவோ, தங்களுடைய விளை பொருட்களுக்கு கட்டுபடியாகக் கூடிய விலை கேட்டோ அவர்கள் போராடவும் வேண்டியுள்ளது.

2013-14இல் பெரும் நிறுவனங்களுக்கான வரிகள் 17% உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, தனிப்பட்ட வருமான வரி 20% மாகவும், சேவை வரிகள் 36% மாகவும் உயருமென திட்டமிடப்பட்டுள்ளதைக் காட்டிலும் குறைவானதாகும். வரவு செலவு அறிக்கை வெளியிடுவதற்கு முன்னர், பணக்காரர்களுக்கு வரி விதிப்பது பற்றி இரைச்சல் எழுப்பப்பட்டிருந்துங்கூட, ஆண்டிற்கு  1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு நிதியமைச்சர் வெறும் 10% கூடுதல் வரியை மட்டுமே விதித்துள்ளார்.

அது மட்டுமின்றி, மாரூசியசில் ஒரு நிறுவனம் இருப்பதாக ஒரு வரி செலுத்துபவர் என்ற சான்றிதழ் இருந்தாலே இந்திய வரி அதிகாரிகள் அதை ஏற்றுக் கொள்ளப் போதுமானதென நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இது மாரூசியசை வரி ஏய்ப்பிற்காகவும் முதலாளிகள் சட்டத்திற்குப் புறம்பாக சம்பாதித்த செல்வங்களை பங்குச் சந்தைகளுக்கும், சொத்துக்களை வாங்கிக் குவிப்பதற்கும், தேர்தல்களுக்கு நிதியளிப்பதற்கும் பயன்படுத்துவதற்காகவும் வழி வகை செய்வதாகும்.

நிதியமைச்சர் தன்னுடைய வரவு-செலவு அறிக்கையில் பெண்கள், இளைஞர்கள் மற்றும் இந்தியாவின் ஏழை மக்களை ஏமாற்றும் விதமாக நிறைய வாய்ப்பந்தல் போட்டிருக்கிறார். அவர்களுக்கு அதிகாரமளிக்கவும், அவர்களைப் பாதுகாப்புடன் வைத்திருப்பதற்கும் எல்லாவற்றையும் செய்வதாக அறிவித்திருக்கிறார். அவர் பெண்களைப் பாதுகாப்புடன் வைத்திருப்பதற்காக 1000 கோடி ரூபாயில் ஒரு நிதியை அவர் அறிவித்திருக்கிறார். பெண்களுடைய பாதுகாப்பு, நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்பட வில்லை. அது உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியாத முதலாளித்துவ அமைப்பினால் அச்சுறுத்தப்பட்டு வருகிறது. பெண்களால் நடத்தப்படும் வங்கி அவருடைய அடுத்த கொடையாகும். பல வங்கிகளும், சிறு நிதி நிறுவனங்களும் ஏற்கெனவே பெண்களையும், அவர்களுடைய குடும்பங்களையும் கடனில் சிக்க வைத்து, அதிலிருந்து அவர்கள் தப்புவதற்கு எந்த வழியுமின்றி வைத்திருக்கின்றனர்.

மேலும் அவருடைய அரசாங்கம், நம்முடைய இளைஞர்கள் நல்ல வேலை பெறுவதற்கும், போதுமான ஊதியம் கிடைப்பதற்கும் அவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் வளமாக வாழ்வதற்கும் அவர்கள் தேவையான கல்வியும், திறமைகளும் பெறுவதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தருமென்று வாக்குறுதியளித்திருக்கிறார். இது கல்வி, பயிற்சிக் கட்டணங்கள் எட்டாத உயரத்தில் இருப்பதையும், கடுமையான வேலையில்லாத் திண்டாட்டத்தையும் சந்தித்து வரும் நம்முடைய இளைஞர்களை திசை திருப்புவதற்கான முயற்சியாகும்.

உழைக்கும் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக சமுதாயத்திற்கு மருத்துவர்களும், ஆசிரியர்களும், பொறியாளர்களும் பிற திறமை வாய்ந்த மக்களும் தேவைப்படுகிறது. நமது இளைஞர்களுக்கு இந்தத் தேவைகளை நிறைவேற்றக்கூடிய அதிக திறமையும் இருக்கிறது. அரசாங்கம் அனைவருக்கும் நல்ல தரமான கல்வி அளிக்க முதலீடு செய்து, பொருத்தமான பயிற்சி அளித்தால் மட்டுமே, இதை நடக்கும். ஆனால் இந்த முதலாளித்துவ அமைப்பில், கல்வியும் பயிற்சியும், முதலாளி வர்க்கத் தேவைகளை நிறைவேற்ற மட்டுமே நடத்தப்படுகிறது, முழு சமுதாயத்தின் தேவைகளை அல்ல. இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளிகளின் நலன்கள் அதிக முன்னுரிமை கொண்டதாக வைக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப்பட்ட போக்கினால், ஒரு சிறுபான்மையான இளைஞர்களுக்கு மட்டுமே தரமான கல்வியும், பயிற்சியும், அவர்களுடைய திறமைக்கேற்ற வேலை வாய்ப்புகளும் கிடைக்கின்றன. மற்றவர்களுக்கு அதிக திறமைக்கு அவசியமற்ற வேலைகளிலோ அல்லது அவர்களுடைய கல்விக்கும் பயிற்சிக்கும் சம்பந்தமில்லாத வேலைகளிலோ அல்லது வேலையின்றியோ இருக்க வேண்டியுள்ளது. எனவே, நிதியமைச்சர் வாக்குறுதியளிக்கும் திறமையை வளர்ப்பதற்கான பயிற்சி என்பது ஒரு ஏமாற்றாகும். அது பெரும்பான்மையான இளைஞர்களுடைய பிரச்சனைகளை தீர்க்காது. இளைஞர்கள் முதலாளிகளுக்கும், ஏகாதிபத்தியர்களுக்கும் கூலி அடிமைகளாக இருக்கும் வாய்ப்பை எண்ணி மனநிறைவடைந்து கொள்ள வேண்டுமென நிதியமைச்சர் கூறுகின்றார்.

"உங்களுடைய பணம் உங்களுடைய கைகளில்" என்பது நிதியமைச்சர் ஏழை மக்களுக்குக் கொடுத்திருக்கும் முழக்கமாகும். மக்களை வறுமையிலிருந்து மீட்கப்போகும் இன்னொரு "மாயவித்தை" என்று பிரபலப்படுத்தப்படும் நேரடி பயன் திட்டமானது, உதவித்தொகைகள், ஓய்வூதியம், வேலை உத்திரவாத திட்டம் மற்றும் பிற திட்டங்களின் பயன்கள் பயனாளிகளுக்கு எப்படித் தரப்படும் என்பதாகும். பணம் இப்போது நேரடியாக அவர்களுடைய வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படும். இது இந்தத் திட்டங்களுடைய பயனையோ, பயன் பெறுபவர்களுடைய எண்ணிக்கையையோ உயர்த்தாது. வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணத்தை அனுப்புவதன் மூலம் ஊழல் குறையுமென கூறப்படுகிறது. ஆனால் நமது மக்களுடைய அனுபவம், ஊழல் என்பது நமது நாட்டிலுள்ள இந்த முதலாளித்துவ அமைப்பின் ஒரு அங்கமென்பதைக் காட்டியிருக்கிறது. ஊழலும், கையூட்டுமின்றி ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் நீடிக்க முடியாது. இப்போது உழைக்கும் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் வங்கிக் கணக்குகளைத் திறப்பதிலும் அவற்றை இயக்குவதிலும் அதிக ஊழல் நடைபெறும்.

நிதியமைச்சர் தன்னுடைய உரையில், "ஒரு நாட்டினுடைய மிக முக்கிய செல்வமானது, அதனுடைய மக்களாவர்" என்றும், "பெண்கள், பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர், சிறுபான்மையினர், மற்றும் சில பின்தங்கிய வகுப்பினரை தனியே விட்டுவிடும்" ஒரு மாதிரியில் ஐமுகூ அரசாங்கத்திற்கு நம்பிக்கையில்லை என்றார். ஆனால் அவர் முன்வைத்த 2012-13 க்கான திருத்தப்பட்ட கணிப்பீடுகள் வேறொரு கதையைச் சொல்கின்றன. சென்ற ஆண்டின் செயல்பாடு, வருகின்ற ஆண்டிற்கு சிதம்பரம் செய்துள்ள ஒதுக்கீடுகளை நம்பமுடியாதென்பதைக் காட்டுகின்றன. கிராமப்புற வளர்ச்சி என்பது ஐமுகூ அரசாங்கம் மற்றும் சோனியா காந்தியின் ஒரு சிறப்பு கவனத் திட்டமென்று கூறப்படுகிறது. அதற்கு 73,222 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அதில் வெறும் 52,045 கோடி ரூபாய் மட்டுமே 2012-13இல் செலவிடப்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது. இது 2011-12இல் செலவழிக்கப்பட்ட 64,263 கோடி ரூபாயைக் காட்டிலும் குறைவானதாகும். இப்போது சிதம்பரம் 2013-14க்கான வரவு-செலவு ஒதுக்கீட்டை 74,478 கோடி ரூபாயாக மாற்றியிருக்கிறார். சென்ற ஆண்டில் இதுபோன்ற ஒரு இலக்கிலிருந்து உண்மையில் செலவழிக்கப்பட்டது ஏன் குறைந்தது என்பதற்கு எவ்வித விளக்கமும் தரவில்லை.

மத்திய அரசாங்கம் பெறும் மொத்த வரியானது 2012-13 இல் 10.38 இலட்சம் கோடியாக இருந்தது, 2013-14 இல் 12.36 இலட்சம் கோடியாக உயருமென கணிக்கப்பட்டிருக்கிறது. இது 19% உயர்வாகும். பொருளாதார வளர்ச்சியானது 5 அல்லது 6 % மாக குறைந்திருப்பதையும், மொத்த விலை பணவீக்கமானது 9% மாக இருக்குமென கணிக்கப்பட்டுள்ளதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த வரி உயர்வானது மிகவும் அதிகமானதாகும். நிதியமைச்சர் தன்னுடைய வரவு செலவு அறிக்கையை, அதிக நம்பிக்கையோடு மிகுந்த வருவாய் கணிப்பீட்டின் அடிப்படையில் செய்திருக்கிறார். இந்த ஆண்டின் போது, பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியளவு வெட்டிக் குறைக்கப்படலாமென்று இதற்குப் பொருள்.

மாற்று வேறு இல்லை என்பதைத் தொழிலாளர்களும், விவசாயிகளும் ஒப்புக்கொள்ள முடியாது!

உழைக்கும் மக்களுக்கு கசப்பான மருந்தைத் தருவதைத் தவிர தனக்கு வேறு வழியில்லையென நிதியமைச்சர் கூறியிருக்கிறார். மாற்று வேறு எதுவுமில்லையென தாராளமயம் - தனியார்மயத் திட்டத்தைப் பின்பற்றும் அனைவரும் கூறிவரும் தேய்ந்துபோன பழைய பாட்டுதான் இது.

கடன் வழங்கும் நிறுவனங்களுக்கும், ஆயுத வியாபாரிகளுக்கு பணத்தைக் கொடுப்பது முன்னுரிமையாக கருதப்பட்டு பொது மக்களுடைய நிதியிலிருந்து பெரும் பங்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பின்னர், பெயருக்கு சில சலுகைகளைத் தருவதைத் தவிர தனக்கு வேறு வழியில்லையென திரு.சிதம்பரம் கூறுவது மிக எளிதானதாகும்.

பிரச்சனை என்னவென்றால், கடன் கொடுக்கும் நிறுவனங்களும், ஆயுத வியாபாரிகளும் சமுதாயத்திலுள்ள பிற இரத்தம் உறிஞ்சும் ஒட்டுண்ணிகளும் பொது மக்களுடைய பணத்தைக் கொள்ளையடிப்பதைத் தடுப்பதாகும். இதற்கு மாற்று நிச்சயமாக இருக்கிறது! அந்த மாற்றானது, அனைவருக்கும் வளமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் இலக்கையொட்டி பொருளாதாரத்தையும், அரசின் கொள்கைகளையும் திருத்தியமைப்பதாகும். இந்த இலக்கோடு, தொழிலாளி வர்க்கமும், உழைக்கும் பெரும்பான்மையான மக்களும் ஒன்றுபட்டு, பின்வரும் உடனடி கோரிக்கைகளை மத்திய அரசாங்கத்திடம் வலியுறுத்த வேண்டும் -

  • எல்லா வங்கிகளுக்கும், பிற நிதி நிறுவனங்களுக்கும் வட்டி அடைப்பதை உடனடியாக நிறுத்து!
  • ஆயுதங்களுக்கும், ஆயுதத் தளவாடங்களுக்கும் செலவு செய்வதை வெட்டுக் குறை!
  • புதிய ரூபாய் நோட்டுகளை வினியோகிப்பதன் மூலம் கணக்கில் வராத கருப்புப் பணத்தை வெளியே கொண்டுவா!
  • அனைவருடைய தேவைகளையும் நிறைவேற்ற பணத்தைச் செலவிடு!
  • விலைவாசியைக் குறைக்க மக்கள் பயன்படுத்தும் நுகர்பொருட்கள் மீது மறைமுக வரிகளைக் குறை!
  • உள்நாட்டு மொத்த வியாபாரத்தையும், வெளிநாட்டு வாணிகத்தையும் தேசியமயமாக்கு!
  • ஒரு நவீன பொது வினியோக அமைப்பு முறையை நிறுவு!
Pin It