fite 590

சட்ட விரோதமாக மூடப்பட்ட சி-க்யூப்ட் சொல்யூசன்ஸ் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தைக் (ஐடி) கண்டித்து ஏப்ரல் 18-ம் தேதி கோவையில் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்களின் தொழிற்சங்கமான ஃபைட் (FITE – Forum for IT Employees) ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

 கடந்த நான்கு ஆண்டுகளாக கோவை சரவணம்பட்டியிலுள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல். தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் இயங்கி வந்த சி-க்யூப்ட் சொல்யூசன்ஸ் (C-Cubed Solutions (P) Ltd) என்னும் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் கடந்த 2015 சனவரி 19-ம் தேதி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சட்டவிரோதமாக இழுத்து மூடப்பட்டது. இதனால் 230 பணியாளர்களும் ஒரே நாளில் வேலை இழந்து தெருவில் நிறுத்தப்பட்டனர். அமெரிக்க முதலாளி மார்க் ஹெபெர்மேன் என்பவருக்குச் சொந்தமான இந்த நிறுவனம், பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. கோவையிலும், சென்னையிலும் அலுவலங்களை மூடிவிட்டு பெங்களூரிலும் பெரும்பாலான பணியாளர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு இயங்கி வருகிறது.

சம்பள பாக்கி, அனுபவச் சான்று, கல்விச் சான்றிதழ்கள், பணி விடுவிப்பு ஆணை, தொழிலாளர் வைப்பு நிதிக் கணக்கு, நிவாரணத் தொகை ஆகிய ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மூடப்பட்ட கோவை நிறுவனப் பணியாளர்கள் நிறுவனம் மூடப்பட்ட அன்றே உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து சனவரி 22 அன்று கோவை தொழிலாளர் அலுவலர் முன் பணியாளர்களுக்கும், நிறுவன மேலாளார்களுக்கும் இடையில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிறுவனம் பணியாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் சனவரி 27-ம் தேதி அன்று நிறைவேற்றித் தருவதாகவும், சம்பள பாக்கியில் 25%-ஐ அன்றே கொடுத்துவிடுவதாகவும், மீதித் தொகையை பிப்.20-ம் தேதியிட்ட காசோலையில் தருவதாகவும் வாக்குறுதி அளித்தனர். இதை பணியாளர்களிடம் சொல்லி சமாதானப்படுத்தினார் தொழிலாளர் அலுவலர்.

தொழிலாளர் அலுவலர் முன் நிறுவனம் கொடுத்த வாக்குறுதிகளை நம்பி சனவரி 27 அன்று அலுவலகம் சென்ற பணியாளர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது. அலுவலகத்தில் யாருமே இல்லை. பதறியடித்துக் கொண்டு பணியாளர்கள், தொழிலாளர் அலுவலரிடம் முறையிட்ட போது அவர் தனக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்பது போல பேசினார். செய்வதறியாது திகைத்தப் பணியாளர்களை ஃபைட் தொடர்பு கொண்டது. அமைப்பாக அணிதிரண்டு போராடினால் வெற்றி நிச்சயம் என்பதை வலியுறுத்திய பின் பணியாளர்கள் ஃபைட்-இல் இணைந்து போராட முன்வந்தனர்.

பாதிக்கப்பட்ட பணியாளர்கள் 84 பேர் சார்பாக, ஃபைட் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்திய அரசின் முழு ஆதரவோடு, சட்டங்களையும், பணியாளர்களையும் காலில் போட்டு நசுக்கும் டாடாவின் டி.சி.எஸ் மற்றும் பிற தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களைப் போலவே சி-க்யூப்ட் சோல்யூசன்சு நிறுவனமும் ஆணவத்தோடு நடந்து வருகிறது. பணியாளர்கள் தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சம்பள பாக்கி உள்ளிட்ட சான்றுகளைக் கூட பெற முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக, பணி விடுவிப்பு ஆணை இல்லாததால், வேறு நிறுவனங்களில் வேலை கிடைத்த பணியாளர்கள் கூட கிடைத்த வேலையில் சேர முடியாமல் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில், பணியாளர்களின் ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சனவரி 18 அன்று மாலை கோவையில் ஃபைட் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் :

 தமிழக அரசே!

•             சட்டவிரோதமாக மூடிய சி-க்யூப்ட் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடு!

•             பாதிக்கப்பட்ட 230 பணியாளர்களுக்கு சம்பள பாக்கியுடன் இழப்பீட்டுத் தொகையும் உடனே கிடைத்திட நடவடிக்கை எடு!

•             பணியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய அனுபவ சான்றிதழ், பணி விடுப்பு சான்றிதழ் உடனே கிடைத்திட ஆவன செய்!

•             பணியாளர்களுக்குச் சேர வேண்டிய வருங்கால வைப்பு நிதியை (பி.எப்) உறுதிப்படுத்து!

•             வேலையிழந்த 230 பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பை உறுதி செய்!

ஆர்ப்பாட்டத்திற்கு ஃபைட் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தமிழ் நாசர் தலைமை தாங்கினார். போராட்டத்திற்கு ஆதரவாக சி.ஐ.டி.யு மாவட்டத் தலைவர் தோழர் ஆறுமுகம், தோழர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.ஐ.சி.சி.டி.யு. மாவட்டப் பொறுப்பாளர் தோழர் தாமோதரன், லட்சுமி மில்ஸ் தொழிலாளர் சங்கத் தலைவர் த.சந்திரன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தொழிலாளர் சங்கங்கத்தின் துணைத் தலைவர் தோழர் ஷாஜகான், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் கோவை. இராமகிருஷ்ணன், ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளர் தோழர் முருகேசன், அகில இந்திய வழங்கறிஞர்கள் சங்க பொதுக் குழு உறுப்பினர் தோழர் ஜோதி குமார், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தோழர் குமார், பொதுநல மாணவர் சங்கத்தின் தோழர் பார்த்திபன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் தோழர் தமிழினி, தமிழ்த் தேசிய மக்கள் இயக்கத்தின் தோழர் மருதுபாண்டியன், இளந்தமிழகம் இயக்கத்தின் தோழர் சத்யா உள்ளிட்ட தோழர்கள் பலர் கலந்து கொண்டு பொராடும் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த நியாயமான போராட்டத்திற்கு தொழிலாளர் ஒற்றுமைக் குரல் தன் முழு ஆதரவையும் தெரிவிக்கிறது.

Pin It