நாடெங்கும் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலமாக ஒலித்து வரும் நிலையில், வாக்குகளை மனதில் கொண்டு, "அதிமுக ஆட்சிக்கு வரும்பட்சத்தில், தென்னை மற்றும் பனை தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கள் இறக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்...'' என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசியுள்ளார்.
மது அருந்துவது குடும்பத் தலைவனாக இருந்தாலும், தள்ளாடுவது அவனது குடும்பமாக உள்ளது. மதுவின் மூலம் கோடிகளை வருமானமாக பெற்று நாட்டு மக்களை குடிகாரர்களாக்கி, அவர்களுக்கு சில இலவசங்களை வீசி அரசு ஏமாற்றி வரும் நிலையில், 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா "மலிவு விலை மதுக் கடைகளை' மூடும் உத்தரவில் முதல் கையெழுத்திட்டு தன் ஆட்சியைத் தொடங்கினாôர். அப்போது தமிழக பெண்கள் மத்தியில் ஜெயலலிதாவின் உத்தரவு பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் அதே ஜெயலலிதா, கள் இறக்க அனுமதி அளிப்பதன் மூலம் மீண்டும் வீதிக்கு வீதி மதுக்கடைகள் முளைத்து விடும்.
மேலும் மலிவு விலை மதுக் கடைகளை ஜெயலலிதா மூடினாலும் தனியார் கடைகளை ஏலம் எடுப்பதில் நடைபெறும் முறைகேடுகளைகளையும் வகையிலும், அரசாங்கத்திற்கு வருவாயைப் பெருக்கும் நோக்கிலும் பிராந்திக் கடைகளையும் அரசே (டாஸ்மாக்) எடுத்து நடத்தும் என்று அறிவிக்கப்பட்டதும் ஜெயலலிதாவின் ஆட்சியில்தான். இதனால் தனியாருக்கு சென்ற வருவாய் அரசாங்கத்திற்கு வந்தது என்றாலும் இது மக்களின் அதிருப்தியைத்தான் பெற்றது.
இவரது இந்த முடிவினால் காமராஜர் ஊர்தோறும் பள்ளிகள் தொடங்கிய பெருமை பெற்றதுபோல் ஊர் தோறும் டாஸ்மாக் கடைகள் திறந்த புண்ணியம் ஜெயலலிதாவைச் சேரும் என்ற கெட்ட பெயர்தான் மிஞ்சும். ஏற்கனவே டாஸ்மாக் மூலம் மக்களை கெடுத்த பாவத்திற்கு ஜெயலிதா பூரண மதுவிலக்கை அமுல்படுத்தி பரிகாரம் தேடுவதற்கு பதிலாக, சில ஆயிரம் ஓட்டுக்களை கவனத்தில் கொண்டு "கள்' இறக்க அனுமதிப்பது என்பது மக்கள் விரோதப் போக்காகத்தான் கருத வேண்டி வரும் என்பதை அவர் உணர வேண்டும்.
தாலிக்கு 4 கிராம் தங்கம் தருவேன் என்று ஏழைப் பெண்களின் வயிற்றில் பால் வார்க்கும் ஜெயலலிதா, அவர்களின் வயிற்றெரிச்சலுக்கு காரணமாகி விடக் கூடாது என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும். அண்ணா பெயரில் கட்சி நடத்தும் ஜெயலலிதாவுக்கு மது விலக்கு கொள்கையில் அண்ணா எந்த அளவுக்கு உறுதியாக இருந்தார் என்பதை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம். 1968 ஏப்ரல் 12ம் நாள் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய மதுவிலக்கு மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்த அண்ணா அந்த மாநாட்டில் ஆற்றிய உரையில்,
"...மதுவிலக்கை ரத்து செய்வதனால் கிடைக்கக்கூடிய வருவாய் என் மனக்கண் முன்னால் ஒரு விநாடி தேன்றியது. அதற்குப் பின்னால், அழுகின்ற தாய்மார்களின் உருவமும், குழந்தைகளின் கதறலும், மனிதன் தன் அறிவை இழந்து காட்டுமிராண்டிபோல் தெரியும் காட்சிதான் என் கண் முன்னால் நிற்கிறது. ஆகையால் மதுவிலக்கு ரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு விடை சொல்வேம். அதற்கு மாறாகச் சிரிக்கின்ற தாய்மார்களின் முகங்களும், குதூகலம் உள்ள குடும்பங்களையும் குடிபோதைக்கு அடிமை இல்லாத மக்களையும் வரவேற்போம்'' என்றார்.
வார்த்தைக்கு வார்த்தை "அண்ணா நாமம் வாழ்க!'' என்று கூறும் ஜெயலலிதா, மதுவிலக்கு கொள்கையில் அண்ணாவை பின்பற்ற வேண்டும். அரசின் கஜானாவை பற்றி கவலைப்படாமல் அண்ணா, பூரண மது விலக்கை அமுல்படுத்தியிருக்கும்போது, வாக்குப் பெட்டியை கவனத்தில் கொண்டு போதைக்கு வக்காலத்து வாங்க ஜெயலலிதா முயற்சிக்கக் கூடாது.
மேலும் 1987ல் எம்.ஜி. ஆரின் மறைவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதிதான் "மலிவு விலை மதுவை' தமிழகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த புண்ணியவான்(!?)
எனவே ஜெயலலிதா பூரண மதுவிலக்கை அமுல்படுத்தி அண்ணா வழியை தேர்ந்தெடுக்கப் போகிறாரா அல்லது சில ஆயிரம் ஓட்டுக்காக கருணாநிதி வழியை தேர்ந்தெடுக்கப் போகிறாரா என்று கேட்க வேண்டியுள்ளது.