வரவு நாலணா செலவு பத்தணா! இதுதான் அமெரிக்காவின் நிதி நிலைமை.

அமெரிக்காவில் கடனும், நுகர்வும்தான் வளர்ந்து வருகின்றன. ஒரு காலத்தில் தொழில்துறை வளர்ச்சியில் மேம்பட்ட அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு இப்போது தீனி போடுவது வளர்ந்து வரும் நுகர்வும் கடனும்தான். மிக உயர்ந்த உற்பத்தித் திறனைக் கொண்டிருந்த நாடு, கடனட்டைக் கலாசாரத்துடன் ‘ஷாப்பிங்’ பொருளாதாரமாக மாறியது. அமெரிக்க நுகர்வோர் வருவாயைக் காட்டிலும் கடனிலிருந்தே அதிகம் செலவு செய்கிறார்கள்.

கடனை அடிப்படையாகக் கொண்ட திறனற்ற நுகர்வே அமெரிக்காவை இயக்கி வருகிறது. அமெரிக்காவின் மொத்த ஜிடிபி மதிப்பில் நுகர்வோர் செலவினம் கிட்டத்தட்ட 70% பங்களிக்கிறது. அமெரிக்காவில் நுகர்வுக் கலாச்சாரம் எந்தளவுக்கு ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது என்று பார்த்தோமானால், அங்கு கடன் வாங்குவது பணம் ஈட்டுவதற்கு இணையாகக் கருதப்படுகிறது. திறனற்ற நுகர்வானது உற்பத்திக்கு இணையாகக் கருதப்படுகிறது. அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கடனே என்று கருதும் நிலை காணப்படுகிறது.

அது என்ன திறனற்ற நுகர்வு, திறனுள்ள நுகர்வு? பொருளாதார அடிப்படையில் ஒரு தொழிலாளியின் நுகர்வு திறனுள்ள நுகர்வு, ஏனென்றால் அவர் உண்ட உணவின் மூலம் பெற்ற ஆற்றலைச் சமூகப் பயனுள்ள உழைப்பில் ஈடுபடுத்தி சரக்குப் பொருட்களை உற்பத்தி செய்கிறார். ஆனால் எந்தவிதமான உழைப்பிலும் ஈடுபடாத மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் சாப்பிட்டு விட்டுத் தூங்குவதும், வீணாகப் பொழுதைக் கழிப்பதுமாக இருப்பாரானால் அவருடையது திறனற்ற நுகர்வு.

அமெரிக்கா திறனற்ற நுகர்வுப் பொருளாதாரமாக மாறியுள்ளது. இப்படிச் சொல்வதனால் அமெரிக்கர்கள் அனைவரும் ஊதாரிகள் என்றோ, உழைப்பில் ஈடுபடவில்லை என்றோ தவறாகக் கருதக் கூடாது. அமெரிக்காவில் உள்ள உழைக்கும் மக்கள் மற்ற நாடுகளைக் காட்டிலும் நீண்ட நேரத்திற்கு உழைப்பில் ஈடுபடுகிறார்கள், 2016 புளூம்பெர்க் அறிக்கை சராசரி அமெரிக்கர் ஐரோப்பியரை விட 25% அதிக நேரம் உழைப்பில் ஈடுபடுகிறார் என்று காட்டுகிறது.

ஆனால் அதற்கு இணையாக ஊதிய உயர்வு பெறவில்லை, அமெரிக்காவில் கூலிவீதம் சரிந்து வருகிறது. 1970இல்  மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) 51.6%ஆக இருந்த கூலிவீதம் 2018இல் அதிகரிக்காமல் 43.2%ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாறு அமெரிக்க அரசு அவர்களைக் கடன் வாங்கிச் செலவு செய்யும் நிலைக்குத் தள்ளியுள்ளது.

அமெரிக்கா, ஐக்கிய முடியரசு போன்ற வளர்ந்த நாடுகள் தங்களது நாட்டின் பொருளாதாரத்தில் தொழில்துறை உற்பத்தியை மேம்படுத்துவதை விட்டு விலகி சேவைத் துறைப் பொருளாதாரமாக  மாறி வருகின்றன. தொழில்துறை வளர்ச்சியடைந்த நாடுகளின் இயல்பான அடுத்தகட்ட வளர்ச்சி நிலையே சேவைத்துறை பொருளாதாரம் எனவும் இந்த காலகட்டத்தை பின்-தொழில்துறை பொருளாதாரமாகவும் (post-industrial economy) முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்கள் வர்ணித்துப் போற்றுகிறார்கள்.

வளர்ந்த நாடுகள் பொருளாக்க உற்பத்தி வேலைகளை மூன்றாம் உலக நாடுகளிடம் விட்டு விட்டு  நிதி மூலதனச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. எளிமையாகச் சொல்வோமானால், வளர்ந்த நாடுகள் கந்து வட்டி நிறுவனங்களாகச் செயல்படவே விரும்புகின்றன. உலகின் தொழிற்சாலைகளாக மூன்றாம் உலக நாடுகளையே செயல்படுத்த விரும்புகின்றன. ஏன் இப்படி என்று பார்த்தோமானால் மூலதனம் வளர வளர இலாப வீதம் குறையும் போக்கு (TRPF) என்று கார்ல் மார்க்ஸ் கண்டறிந்த பொருளாதார நெறியே இதற்கு அடிப்படையாக செயல்படுவதைக் காணமுடியும்.

மூலதன வளர்ச்சி/முதிர்வு என்பது அளவின் அடிப்படையிலான வளர்ச்சியை மட்டுமல்லாது பண்பளவிலான வளர்ச்சியையும் குறிக்கிறது. மூலதனம் இரண்டு கூறுகளை கொண்டுள்ளது, ஒன்று உற்பத்திச் சாதனங்களுக்குத் தேவையான  நிலை மூலதனம் (constant capital), இன்னொன்று உழைப்பாளர்களின் உழைப்புச் சக்தியைக் கூலி கொடுத்து வாங்கத் தேவையான மாறு மூலதனம் (variable capital). உற்பத்திச் செயல்பாடுகளில் இலாபத்துக்கு அடிப்படையாக உள்ள உபரி மதிப்பானது மாறு மூலதனத்திலிருந்தே பெறப்படுகிறது.

என்பதால் மூலதன வளர்ச்சியின் போது உற்பத்தி சாதனங்களில் செய்யப்படும் மூலதனத்தின் அளவானது கூலிக்கான மாறுமூலதனத்தைக் காட்டிலும் பெருமளவு அதிகரிப்பதால் உபரி-மதிப்பும், லாபவீதமும் குறைகிறது. நிலை மூலதனத்திற்கும் மாறுமூலதனத்திற்குமான விகிதம் மூலதனத்தின் அங்கக இயைபு(organic composition of capital) என்று அழைக்கப்படுகிறது. மூலதனத்தின் அங்கக இயைபு அதிகரிக்க, அதிகரிக்க, லாபவீதம் குறையும் போக்கு ஏற்படும் என்கிறார் கார்ல்மார்க்ஸ் பொருளாதாரத் தரவுகளும் அதை உண்மை என நிரூபித்துள்ளன.

வளர்ந்த நாடுகளில், மூலதன வளர்ச்சியானது முதிர்வு நிலையில் உள்ளதால் உற்பத்தி செயல்பாடுகளுக்கு லாபவீதம் குறையும் போக்கு காணப்படுகிறது. 1960-70களில் வளர்ந்த நாடுகளில் காணப்பட்ட லாபவீதம் அதற்கு பின் வெகுவாக குறைந்துள்ளது. வளர்ந்த நாடுகளின் மூலதனம் மேலும் வளரவேண்டுமானால் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்.

அதற்கு இன்னும் அதிக முதலீடுகள் அவசியம் என்றாலும் அதை அதிலாபகரமாக செயல்படுத்தமுடியுமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தொழிலாளியின் ஊதியமற்ற உழைப்பே லாபமாகிறது. ஆகையால் தொழில்நுட்பத்தின் மூலம் தொழிலாளியை பதிலீடு செய்யும் போது லாபவீதம் குறைகிறது.

ரொபோக்களின்-இயந்திர மனிதர்களின் உழைப்பை சுரண்ட முடியாது என்பதால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (artificial intelligence) ஒட்டு மொத்த சமூகத்திற்கும் பெரும் பயன்பாடுடையதாக இருக்கலாம், ஆனால் தொழிலாளர்களை முற்றிலுமாக தொழில்நுட்பங்களால்  மாற்றீடு செய்யும் போது லாபத்திற்கான அடிப்படை இல்லாமல் போகிறது. முதலாளித்துவத்தின் சுவாசக் காற்றாகவும், ரத்தமாகவும் லாபமே இருப்பதால் லாபம் பெற்றுத்தராத எந்தத் தொழில் மேம்பாட்டிலும் அவர்களுக்கு ஆர்வம் இல்லை.

வளர்ந்த நாடுகளில் லாபவீதம் குறைந்தால் என்ன, இருக்கவே இருக்கிறது மூன்றாம் உலக நாடுகள், வளர்ந்த நாடுகளில் இருப்பதைக் காட்டிலும் கடுமையான உழைப்புச் சுரண்டலின் மூலமும், அடிமட்ட கூலியின் மூலமும், அங்கு இன்னும் அதிக லாபகரமாக உற்பத்தி செய்யமுடியும் என்பதால் வளர்ந்த நாடுகள் உற்பத்தி துறைகளில் முதலீடு செய்யாமல், எளிதாக வட்டியை பெற்று தரும் நிதிமூலதனத்தின் மூலம் லாபம் பெறவே விரும்புகின்றன.

அமெரிக்காவில் உற்பத்தித்துறை உயர்ந்த ஊதியத்தை அளித்து வந்தது, ஆனால் பொருளாதாரத்தில் இப்பொழுது உற்பத்தித்துறையின் பங்கு குறைக்கப்பட்டதால், பெருமளவு தொழிற்சாலைகள் மூடப்பட்டு குறைந்த ஊதியம் அளிக்கும் சேவைத்துறை வேலை வாய்ப்புகளையே அளிக்கும் நிலை காணப்படுகிறது.

1960 களில் 25%ஆக இருந்த உற்பத்தித் துறையின் பொருளாக்க மதிப்பு 2019ல் 11.39% ஆக சுருங்கியுள்ளது. இதனால் மொத்த வருமானமும், உற்பத்தித் துறை வாயிலாக வளரும் ஏற்றுமதியையும் குறைந்துள்ளது. பெருமளவில் இறக்குமதியை நம்பியுள்ள நிலை ஏற்பட்டு வெளிநாட்டுக்கடன்களும் இதனால் அதிகரித்துள்ளது.

மூன்றாம் உலக நாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகளையே நம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அமெரிக்கா தான் வெளிநாட்டு முதலீடுகளை சார்ந்திருந்தும் அதன் அடிமையாக இல்லாமல் அதன் முதலாளியாக ஆட்டிப் படைக்கிறது. அமெரிக்க டாலருக்கு உலகப் பணம் என்ற தகுநிலை பெற்றதால்,உலகெங்கிலிருந்தும் டாலரில் குவியும் அந்நிய மூலதனமும், தலைமை வங்கி தன் போக்கிற்கு டாலரை அச்சடிப்பதாலும், அமெரிக்கர்களுக்கு மலிவுக்கடன் எளிதில் கிடைக்கிறது. மலிவுக்கடனால் அவர்கள் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமையாகி விட்டனர்.

தனிநபரில் தொடங்கி மத்திய அரசு வரை ஒட்டு மொத்த அமெரிக்காவின் கடன் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடன் என்பதும் ஒரு நுகர்வு தான், கடன் வாங்குவது மட்டுமே பிரச்சனை இல்லை. அந்தக் கடன் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் தான் பிரச்சினை உள்ளது. கடன் திறனுள்ள முறையில் உற்பத்தித் துறையில் ஈடுபடுத்தப்படுமானால் புதிய பொருளாக்கம் செய்யப்பட்டு வளர்ச்சி ஏற்படும்,

ஆனால் கடனானது வெறும் செலவுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு ஆக்கவேலைகளில் ஈடுபடுத்தப்படவில்லை என்றால் தான் பிரச்சனை. அமெரிக்காவுக்கு மலிவுக்கடன் கிடைத்தும் அவை திறனுள்ள முதலீடுகளாக உற்பத்தித்துறையில் செயல்படுத்தப்படுவதில்லை,அதை தொழில் நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தப் பயன்படுத்தப்படுவதில்லை. மலிவுக் கடன் பெருமளவில் தனி நபர் நுகர்வை ஊக்குவிக்கவும், ஊக முதலீடுகளை அதிகரித்து, சொத்துக் குமிழிகளை ஊக்குவிக்கவுமே பயன்படுத்தப்படுகிறது.

பொருளாதாரத்தில் உண்மையான வளர்ச்சி ஏற்படுமானால் மக்களின் சேமிப்பும், பொதுத்துறை முதலீடுகளும், பொருளாக்கமும் அதிகரிக்கும். ஆனால் இன்றைய சந்தைப் பொருளாதாரத்தின் நவீன தாராளமயப் பணக் கொள்கையும், நிதிக் கொள்கையும், கடன் குமிழிகளின் மூலமே பொருளாதார வளர்ச்சியைத்  தூண்டுகிறது. உலகம் முழுவதும் இதே நிலைதான் காணப்படுகிறது.

இது உண்மையான நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்துவதில்லை, வளர்ச்சி ஏற்படுவது போன்ற மாயையையே தற்காலிகமாக ஏற்படுத்துகிறது. ஆனால் உண்மையில் அதன் மூலம் மக்களின் சேமிப்புகளும், வாழ்க்கைத் தரமும் வீழும் நிலையையே ஏற்படுத்தியுள்ளது.

குமிழி என்பது ஒரு பொருளாதார சுழற்சியாகும், எப்படி சோப்புக் குமிழி ஊத ஊதப் பெரிதாகி ஒரு கட்டத்திற்கு மேல் உடைகிறதோ, அதே போல், ஒரு சொத்து அல்லது பங்குகள், பத்திரங்கள், ரியல் எஸ்டேட் அல்லது சரக்குகளின் விலையானது அதன் உள்ளார்ந்த மதிப்பைக் காட்டிலும் பல மடங்கு உயர்கிறது, அதனால் அவற்றில் முதலீடு செய்யும் போக்கு அதிகரிக்கிறது இது மேலும் விலையேற்றத்தை ஏற்படுத்தி அவற்றின் மதிப்பு அசுர வேகத்தில் ஊதிப் பெருக்கப்படுகிறது, ஆனால் இது நீடிப்பதில்லை.

ஒரு கட்டத்திற்கு மேல் முதலீட்டாளர்கள் உயர்ந்த விலையில் வாங்கத் தயாராக இல்லாத போது, விலை வீழ்வதால் அவற்றில் முதலீடு செய்தவர்கள் வெளியேறுகிறார்கள், இது மேலும் விலையிறக்கத்தை ஏற்படுத்துகிறது.​​ அவற்றுக்கான தேவை சரிந்து குமிழி உடைவது போல் அவற்றின் விலை கடுமையாக வீழ்ச்சியடைகிறது.

அவற்றில் முதலீடு செய்தவர்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகின்றனர், நிறுவனங்கள், வங்கிகளும் நெருக்கடிக்கு உள்ளாகின்றன. அமெரிக்க மத்திய வங்கி மலிவுக் கடனின் மூலம் கடன் குமிழிகளை உருவாக்குகிறது. குறைந்த வட்டியில் கடன் பெருமளவு கிடைப்பதால், அந்த கடன் தொகையானது சொத்துக் குமிழிகளையே ஏற்படுத்துகிறது.

அந்நிய முதலீடுகள் அதிகம் வருவதால், அமெரிக்காவின் சொத்து மதிப்புகள் அதிகரிக்கின்றன என்று பார்த்தோம். அந்த முதலீடுகளால் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்தான் அமோகமாக வளர்ந்து வருகின்றன. அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் குமிழி, பொருளாதாரத்தை இயக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மத்திய வங்கியின் குறைந்த வட்டியுடனான கடன்கள் உற்பத்தித் துறைகளில் முதலீடு செய்யப்படுவதில்லை அவை நுகர்வுச் செலவினங்களுக்கான அடமானக் குமிழிகளையே உருவாக்கியுள்ளது.

அந்தக் கடனைக் கொண்டு பலர் புதிதாக வீடுகள் வாங்குகிறார்கள், வீட்டு உரிமையாளர்கள் வீட்டை மலிவான வட்டிக்கு நீண்ட கால அடமானத்தில் வைத்து. அதில் பெற்ற பணத்தைச் செலவு செய்கிறார்கள். வீடுகளின் சந்தை மதிப்பு தொடர்ந்து உயர்வதால் வீட்டை மறு அடமானம் வைத்துக் கடனை அடைத்து விடலாம் எனக் கருதுகிறார்கள். மத்திய வங்கியின் வட்டி குறைவாக இருக்கும் வரை வீட்டின் விலை வாங்க முடியாத அளவிற்கு எகிறிக் கொண்டே செல்கிறது.

மத்திய வங்கி வட்டியை உயர்த்தும் போது, வீட்டின் விலை சரிகிறது, அடமானம் வைத்தவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமல் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இவ்வாறு வீட்டுக் குமிழி ஊக்குவிக்கப்படுகிறது. ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் இழப்புகள் மக்களின் வரிப் பணத்தால் சரிசெய்யப்படுகின்றன.

ஆனால் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து நொடித்துப் போன மக்களைக் காப்பதற்குத்தான் ஒருவரும் இல்லை. அதிகக் கடனில் பாதிக்கப்பட்டதால் அங்குள்ள நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இப்படித்தான் 2009ல் பெரு மந்தம் வீட்டு குமிழிக் கடனால் தூண்டப்பட்டது. ஆனால் அத்துடன் முடிவடைய வில்லை. இது ஒரு தொடர் நிகழ்வாகி வருகிறது. ஐக்கிய முடியரசு, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் இதே போல் வீட்டுக் கடன் குமிழி உருவாக்கப்படுகிறது.

இவ்வாறு நவீனப் பணக் கொள்கையால் உருவாக்கப்படும் சொத்துக் குமிழிகளே அமெரிக்காவிலும், உலகளவிலும் அழிவுகரமான பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றன. 1929இல் பங்குச் சந்தை குமிழி, 2001இல் இணைய நிறுவனங்களினால் ஏற்பட்ட டாட்-காம் குமிழி, 2009இல் ரியல் எஸ்டேட் குமிழி ஆகிய சொத்துக் குமிழிகள் அவற்றின் விலையில் ஏற்பட்ட அசாதாரண ஏற்ற இறக்கங்களால், அதில் முதலீடு செய்பவர்களுக்கும், நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் பொருளாதார வீழ்ச்சிகளை ஏற்படுத்தின. சொத்துக் குமிழிகளில் குறிப்பாகத் தாமதமாக முதலீடு செய்யும் தனிநபர்களுக்கும் வணிக, நிதி நிறுவனங்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தின. இவை முதலீட்டாளர்களின் நிகர மதிப்பைத் துடைத்தழிக்கின்றன.

உலகிலேயே வர்த்தக உபரி அதிகம் கொண்ட நாடாக இருந்த அமெரிக்கா நாளடைவில் வர்த்தகப் பற்றாக்குறை அதிகம் கொண்ட நாடாக மாறியது. வேறு எந்த நாட்டிலாவது இந்த அளவிற்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படுமானால் சர்வதேச நாணய நிதியம் அந்நாட்டின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கும், ஆனால் அமெரிக்கா இதற்கு விலக்கு. ஏனென்றால் சர்வதேச நாணய நிதியமே அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்தானே உள்ளது!

அமெரிக்காவில் நிகர முதலீடுகளில் தொடர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 2020இல் அமெரிக்காவின் சேமிப்பு வீதமானது 1.4% வீழ்ந்துள்ளது. உற்பத்தி குறைந்து வருகிறது உற்பத்தியைக் காட்டிலும் நுகர்வு அதிகரித்து வருகிறது. கடன் ஒன்றே அனைத்துக்குமான தீர்வாகக் கருதப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது கடன் பெற்றுச் செய்யும் நுகர்வுச் செலவினங்களையே குறிப்பதால் அமெரிக்காவின் ஜிடிபியின் வளர்ச்சி என்பது உண்மையில் அது எப்போது நொறுங்க உள்ளது என்பதையே சுட்டிக் காட்டுவதாக அடிசன் விகின் தன்னுடைய ‘டாலரின் மரணம்’ (Demise of the Dollar) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அந்நிய முதலீட்டாளர்களின் செல்வச் சேமிப்பு ஊடகமாக டாலர் இருந்து வருகிறது. அவர்களின் பொருளாதாரச் சீற்றங்களின் போது தங்கள் செல்வத்தை வீழ்ச்சியிலிருந்து பாதுகாப்பதற்கான புகலிடமாக அமெரிக்கப் பங்குச்சந்தை கருதப்பட்டு வருகிறது.

டாலர் உலகப்பணம் என்ற காரணத்தால், அதில் செய்யப்படும் முதலீடுகள் இழப்பின்றி பாதுகாக்கப்படும் என்று நம்பப்பட்டது. காலப் போக்கில் இது குருட்டு நம்பிக்கையாகி விட்டது. இல்லையென்றால் அமெரிக்க வங்கிகளிலிருந்து தொடங்கிய பொருளாதார நெருக்கடியின் போதும் கூட பல நிதி முதலீட்டாளர்கள் அமெரிக்கப் பங்குச் சந்தைக்கே ஓடியிருக்க மாட்டார்கள். ஆனால் இந்த நம்பிக்கை இன்னும் எவ்வளவு நாள் தொடரும் என்பதுதான் கேள்வியாக உள்ளது.

1980ஆம் ஆண்டு முதல், உலகின் மிகப் பெரிய கடனாளி தேசமாக அமெரிக்கா இருந்து வருகிறது. அமெரிக்க நாட்டின் மொத்தக் கடன் எவ்வளவு என அறிந்தீர்கள் என்றால் மலைத்துப் போவீர்கள். ஏ.பி. பெர்ன்ஸ்டைன் என்ற அமெரிக்கச் சொத்து மேலாண்மை  நிறுவனம் 2019இல் அமெரிக்க நாட்டின் மொத்தக் கடன் அதன் ஜிடிபி மதிப்பில் 1832 சதவீதமாக உள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் அளித்துள்ளது.

கொரோனா தாக்குதல் ஏற்படுவதற்கு முன்பு 2019இல் அமெரிக்க மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 4.6%ஆக  அதிகரித்து 984 பில்லியன் டாலராக இருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலத்தில் அதிகமான நிதிப் பற்றாக்குறை தற்போது உச்சத்தில் உள்ளது. குறைந்த வட்டிவீதத்தால் அமெரிக்காவால் அதிக நிதிப் பற்றாக்குறையுடன் நீடிக்க முடிகிறது. 2020ல் நிதிப்பற்றாக்குறை 3.7 டிரில்லியன் டாலராக 17.9% அதிகரிக்க உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

2009 பெருமந்தத்திற்குப் பின் அமெரிக்காவில் நிதிப் பற்றாக்குறை 9.8%. அதிகரித்தது. 2020இல் அதைக் காட்டிலும் இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரிக்க உள்ளது. 2020இன் முதல் 9 மாதங்களில் மட்டும் 3 டிரில்லியன். அமெரிக்க அரசு 1%-0.625% என்னும் குறைந்த வட்டியில் கடன் பெற்ற போதும், அக்டோபர் 2019 முதல் ஜூன் 2020 வரை 9 மாதங்களுக்கான வட்டித் தொகை 260 பில்லியன் டாலர்.

2019 நிதியாண்டு முடிவில்  உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமான மத்திய அரசின் கடன் 16.8 டிரில்லியன் டாலர். மொத்த ஜிடிபியில் இது 80%.  2007-9 பெருமந்தத்திற்கு முன் அமெரிக்க அரசின் கடன் 35% ஆக அதிகரித்தது. கோவிட்-19க்கு முன் 80% ஆக அதிகரித்தது. 2020 நிதியாண்டின் முடிவில் 100% ஆக அதிகரிக்க உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது 106.1% ஆக உயர்ந்தது. இதே நிலை தொடர்ந்தால் அதைக் காட்டிலும் மேலும் அதிகரிக்கும். 2030இல் மத்திய அரசு கடன் 118%க்கு மேல் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

என்னதான் பணவீக்கத்தை அமெரிக்கா உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தாலும், அதாவது மற்ற நாணயங்களை மதிப்பிழக்கச் செய்தாலும், அமெரிக்காவின் மலிவுக் கடன் கொள்கையாலும், அதிகக் கடன் நிலையாலும், பணவீக்கம் ஏற்படத்தான் செய்கிறது, ஆனால் அமெரிக்க அரசு தரப்புத் தரவுகளில் பணவீக்கம் குறைத்து மதிப்பிடப்படுகிறது.

பணவீக்கத்தை அளவிடுவதற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் பொதுவாகச் சரக்குகள் சேவைகளின் விலை மாற்றத்தினை இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் ஒப்பிடுவதன் அடிப்படையிலே கணக்கிடப்படுகிறது, ஆனால் அமெரிக்காவில் பணவீக்கமானது நுகர்வோர் வாழ்நிலையைத் தக்கவைப்பதற்காகச் செய்யும் தேர்வுகளின்  அடிப்படையில் கணக்கிடப்படுகிறது, இதன் மூலம் பணவீக்கத்தைக் குறைத்தும், ஜிடிபி மதிப்பை அதிகரித்தும் காட்டப்படுகிறது.

பெருகிவரும் கடனால் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்து வருகிறது. அமெரிக்கர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்யும் போது டாலரின் வாங்கும் திறன் குறைந்ததையும் டாலரின் வீழ்ச்சியையும் நேரடியாக உணருகிறார்கள். டாலரின் மதிப்பை அளவிட டாலர் குறியீடு என்ற அளவீடு பயன்படுத்தப்படுகிறது.

1973இல் பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தம் கலைக்கப்பட்டவுடன், டாலரின் அடிப்படை மதிப்பை 100ஆகக் கொண்டு இந்தக் குறியீடு உருவாக்கப்பட்டது. இந்த டாலர் குறியீட்டின் மதிப்பு உலகளாவிய சந்தைகளில் யூரோ, சுவிஸ் ஃபிராங்க், ஜப்பானிய யென், கனடிய டாலர், பிரிட்டிஷ் பவுண்டு, ஸ்வீடிஷ் க்ரோனா ஆகிய ஆறு உலக நாணயங்களின் தொகுப்பிற்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பை அளவிட பயன்படுத்தப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்னிருந்தே டாலர் குறியீடு தீவிர சரிவிலுள்ளது. மார்ச் 20 அன்று 102.8ஆக இருந்த டாலர் குறியீடு ஜூலை 24 அன்று 94.7ஆக வீழ்ந்துள்ளது. டாலர் குறியீடு மேலும்  வீழ்ச்சியடைந்து 84ஐ அடையும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

டாலர் தொடர்ந்து சரியுமானால், அதன் மீதான நம்பிக்கை குறைந்து விடும், டாலரின் மீதான நம்பிக்கையின்மை அதிகரிக்கும். முதலீட்டாளர்கள் டாலர் முதலீடுகளிலிருந்து வெளியேறுவார்கள், டாலரின் தேவை மிகவும் குறைந்து விடும். உலகெங்கும் உள்ள டாலர் நோட்டுக்கள் அமெரிக்காவிற்குத் திரும்பும். பணவீக்கம் அதிகரித்து டாலர் மதிப்பிழக்கும். அமெரிக்கச் சொத்துக்களின் விலையில் பெரும் வீழ்ச்சி ஏற்படும். அமெரிக்க மத்திய வங்கி கடனுக்கான வட்டி வீதத்தை அதிகமாக்கும். இதனால் கடனாளிகள் நிதி நெருக்கடியில் பாதிக்கப்படுவார்கள்.

திடீர் டாலர் சரிவு உலகளாவிய பொருளாதாரக் கொந்தளிப்பை உருவாக்கும். முதலீட்டாளர்கள் யூரோ போன்ற பிற நாணயங்களில் அல்லது தங்கம் மற்றும் பிற சொத்துக்களில் முதலீடு செய்வார்கள். அமெரிக்க நிதிப் பத்திரங்களுக்கான தேவை வீழ்ச்சியடைந்து வட்டி விகிதம் உயரும் அமெரிக்க அரசின் நிதிக் கடனுக்கான வட்டித் தொகையும் அதிகரிக்கும்.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயர்ந்து விடும் நிறுவனங்கள் பாதிக்கப்படும், வேலைவாய்ப்பின்மை மேலும் அதிகரிக்கும். அமெரிக்காவின் கடன் நிலை மேலும் அதிகரிக்கும், பெட்ரோ-டாலர் ஏற்பாடு முடிவுக்கு வரும். அமெரிக்காவில் எண்ணெய்ப் பொருட்களின் விலை கணிசமாக உயரும். அமெரிக்க மத்திய வங்கி தன் விருப்பம் போல் டாலரை அச்சிடும் உரிமையை இழக்கும். அமெரிக்கர்களின் வாழ்க்கைத் தரம் வீழும். அமெரிக்கப் பொருளாதாரம் மிகவும் சுருங்கி விடும்.

அமெரிக்காவில் உள்நாட்டு சேமிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியும் அதன் "மோசமான உலகளாவிய தலைமைத்துவமும்" யு.எஸ். டாலரை அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளன என அமெரிக்க பொருளாதார நிபுணர் ஸ்டீபன் ரோச் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறையாலும், வீழ்ந்துள்ள சேமிப்புகளாலும், வர்த்தகப் பாதுகாப்புவாதக் கொள்கையினாலும், கோவிட்-19 தாக்குதலைச் சரியாகக் கையாளத் தவறியதாலும் டாலர் குறியீடு 35% வீழ்ச்சியடைய உள்ளதாகவும் கணித்துள்ளார். யூரோவின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் டாலருக்கான மாற்றாகலாம், சீனாவின் ரெமின்பி 15 ஆண்டுகளில் 50% மதிப்பேற்றம் அடைந்துள்ளதால் அதுவும் டாலருக்கான மாற்றாக உருவாகலாம் என்றும் குறிப்பிட்ட அவர், இந்த கோவிட் நெருக்கடியின் போது டாலருக்கு மாற்று இல்லை என்ற கருத்து உண்மையில் சோதனைக்கு உள்ளாகப் போகிறது என்று தான் நினைப்பதாகவும் கூறியுள்ளார்

இராணுவ பலத்தைக் கொண்டு தன் ஒப்புறுதியளிக்கப்பட்ட ஃபியட் பணத்தின் மதிப்பை இத்தனை வருடங்களாகக் கட்டிக் காத்த அமெரிக்க அரசு தன் மேலாதிக்கத்தையும் செல்வாக்கையும் தக்கவைக்க எப்பேர்ப்பட்ட போர்த்தந்திர முயற்சிகளிலும் ஈடுபடத் தயங்காது என்பதை வரலாறு அறியும்.

(தொடரும்)

- சமந்தா

Pin It