elavarasan divya- 600 copyதருமபுரி மாவட்டம் நாய்க்கன்கொட்டாய் நத்தம் காலனியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஓராண்டு முன்பு வன்னியச் சாதி வெறியர்களால் நிகழ்த்தப்பட்ட தீ வைப்புக்குப் பழி தீர்க்க மாவோயிஸ்ட் கட்சியுடனும், துடி அமைப்புடனும் இணைந்து ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டதாகவும், இளவரசன் நினைவு நாளை ஒட்டி அந்தப் பகுதி பாமக பிரமுகர்களைக் கொல்ல சதி செய்த-தாகவும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சூன் மாத இறுதியில் தமிழகக் காவல்துறை செய்தி வெளியிட்டது.

தமிழகத்தின் சனநாயக ஆற்றல்கள் இந்த நிகழ்வுக்குக் கண்டனம் தெரிவித்தன. மனித உரிமை ஆற்றல்களும், முற்போக்கு அமைப்புகளும் அமைத்த  உண்மையறியும் குழு கடந்த சூலை 5, 8 தேதிகளில் தருமபுரி நத்தம் காலனி மக்களையும், அதிகாரிகளையும் சந்தித்தது. இக்குழுவில் இளந்தமிழகம் சார்பில் நானும் இடம்பெற்றேன்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷின் வாக்குமூலத்தை முன் வைத்துத் தயாரிக்கப்-பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், 2014 சூன் 28 காலை 5 மணி அளவில் நாய்க்கன் கொட்டாய் ஆரம்பப் பள்ளிக்கு அருகில் காவல்துறையினர் வாகனத் தணிக்கை செய்து கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த சந்தோஷ் (22), அதியமான் (22), சங்கர் (35) ஆகியோர் சந்தேகமான முறையில் தப்ப முயன்றதாக எழுதப்பட்டுள்ளது. 2012 நத்தம் காலனித் தாக்குதலுக்குக் காரணமான அந்தப் பகுதி பாமக தலைவர் மதியழகனைக் கொல்வதற்காக சங்கர் சக்தி, துரை, அசோக் சேர்ந்து சதித் திட்டம் தீட்டியதாக சந்தோஷ் வாக்குமூலம் அளித்தாராம். இவ்வாறு குற்றச்சாட்டுக்கு ஆளான அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

2012 தாக்குதலுக்குப் பின் நத்தம் காலனிக்கு ‘ஆறுதல்’ சொல்ல பலரும் வந்த போது, அவர்களோடு மாவோயிஸ்ட்டு கட்சித் தீவிரவாதிகள் காளிதாஸ், சந்திரா ஆகியோர் அங்கு வந்து, தங்கள் இயக்கத்தின் பின்னணியோடு ஆயுதப் பயிற்சி எடுப்பது மட்டுமே அவர்களுக்குப் பாதுகாப்பு எனக் கூறினராம். அந்த அடிப்படையில் ‘துடி’ அமைப்பின் மூலம் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம் பட்டி கிராமங்களைச் சேர்ந்த 50 பேருக்கு 2013 தொடங்கி அரக்-கோணம், சென்னை மெரினா கடற்கரை, கந்தன்-குட்டை ஆகிய பகுதி-களில் பல்வேறு வகை ஆயுதப் பயிற்சிகள் அளிக்கப்பட்டனவாம்.

இறுதியில் காளிதாஸ், சந்திரா இரு-வரும் ஒரு நாள் இரவு நத்தம் காலனி வந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், இரண்டு வீச்சரிவாள்கள், மூன்று பைப் வெடி-குண்டுகள் ஆகிவற்றைத் தந்து சென்றனராம். பாமக முக்கியத் தலைவர்களைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டிய பின், இதற்கான செலவுகளுக்காக வீடு கொளுத்தப்பட்டதற்கு அரசு அளித்த இழப்பீட்டுத் தொகையிலிருந்து இம்மூன்று தலித் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் நிதி வசூலிக்கப்பட்டதாம்.

‘கைப்பற்றப்பட்ட’ மேற்படி ஆயுதங்களையும், ‘துடி’ அமைப்பு தாங்கள் ஆயுதப் பயிற்சி எடுத்ததை ‘ஒத்துக் கொண்டு’ வெளியிட்ட அறிக்கையையும் சான்றுகளாகக் காட்டுகிறது காவல்துறை.

நத்தம் காலனி மக்களிடம் விசாரித்தபோது, இஃதனைத்தும் காவல்துறையின் கட்டுக் கதையே என்பது தெளிவாகத் தெரிந்தது. சங்கர், அதிய--மான், சந்தோஷ் ஆகியோரை 2014 சூன் 27ஆம் நாள் எதற்கென்று சொல்லாமலே காவல் நிலையத்துக்கு அழைத்து அடைத்து வைத்து விட்டனர். ஊர் மக்கள் சென்று கேட்ட போதும் அவர்களை எங்கு அடைத்து வைத்துள்ளனர் என்பதைக் கூட சொல்லவில்லை. பிறகு அவர்--களை அடித்துச் சிறைக்குக் கொண்டு சென்-றுள்ளனர்.

ஜூன் 28 அதிகாலை 4 மணிக்கெல்லாம் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் துரை என்பவரை மட்டும் விலங்கு போட்டு இழுத்து வந்திருக்கிறார்கள். வீட்டில் கொட்டிக் கிடந்த மணலில் “ஆயுதங்களை எடுடா, எடுடா” என்று அடித்துள்ளார்கள். பிறகு அவரை இளவரசன் நினைவிடம் பக்கம் இழுத்துக் கொண்டு போய், புதைத்து வைத்த ஆயுதங்களை எடுக்கச் சொல்லி அடித்துள்ளார்கள். மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் முன்னிலை-யிலேயே இப்படிச் செய்துள்ளனர். பின்னர் குழியில் அவர்களே கொண்டு வந்த துப்பாக்கியை அங்கே இருந்து எடுத்தது போல் காட்டி-யுள்ளார்கள்.

கைதானவர்களில் துரை மட்டும் சில ஆண்டு முன்பு பொடா சட்டத்தின்படி சிறையில் இருந்-தவர். இப்போது இப்பகுதி மக்கள் எந்த அரசியல் இயக்கத்திலும் ஈடுபடவில்லை. மாவோயிஸ்டுகள் யாரும் இங்கு வரவில்லை. மேனாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி கடந்த 2002இல் நிறுவிய ‘துடி’அமைப்பைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளை, மாணவர்களைப் பள்ளிக் கூடத்திலும், கல்லூரி-களிலும் சேர்க்கவே வலியுறுத்திச் செயல்-பட்டுள்ளனர். வேறு எந்த அரசியலும் பேசிய-தில்லை.

‘துடி’ அமைப்பின் பொதுச் செயலாளர் பாரதி பிரபு கூறியது: “நாங்கள் இந்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றுடன் இணைந்து தலித் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வந்-தோம். எங்கள் செயல்பாடுகள் வெளிப்படையானவை. ‘இளைஞர்களின் வளர்ச்சிக்கான ராஜிவ் காந்தி நிறுவனத்தின்’ நிதி உதவியுடன் நாங்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளோம்.

தமிழக அரசின் ‘ஆதி திராவிட நலத் துறை’யுடன் இணைந்து அரசாணை 92 குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களைச் செய்துள்ளோம். மேல் மருவத்தூருக்கு அருகில் உள்ள நீர்ப்பெயல் கிராமத்தில் அருட்பணியாளர்கள் ஜெயசீலன், சுரேஷ் ஆகியோரின் உதவியோடு நாங்கள் நடத்திய கல்விப் பயிற்சியில் 70 மாணவிகளும், 50 மாணவர்களும் பங்கு பெற்றனர். இவர்களில் 12 பேருக்குப் பொறியியல் படிப்பில் இடம் கிடைத்தது. இருவரை லயோலா கல்லூரியில் சேர்த்தோம்.

உளவியல் ஆலோசனை மற்றும் ஓய்வுக்காக ஒரு முறை மெரினா கடற்-கரைக்கு இவர்களை அழைத்துச் சென்றது உண்மை. அதை ஆயுதப் பயிற்சியாக சித்திரிப்-பதில் காவல்துறைக்கு உள்நோக்கம் உள்ளது”

‘துடி’ போன்ற ஓர் அமைப்பை ஆயுதப் போராட்டத்துடன் தொடர்புப்படுத்துவதைப் போல அபத்தம் எதுவும் கிடையாது.

நேரடி சாட்சிகள் பலரையும் நாங்கள் விசாரித்த போது காவல்துறை சொல்லும் கதையின் முரண்பாடுகளும் பொய்களும் வெளிப்-பட்டன. ஒவ்வொருவரையும் கைது செய்த நேரம், இடம், கறந்த வாக்குமூலம் என்று எல்லாமே பொய்யும் புரட்டுந்தான்.

இப்படிப் பலரும் பொய் வழக்கில் கைது செய்யப்படுவதைக் கண்டித்து நத்தம் காலனி மக்கள் சூலை 4 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடி தங்கள் குடும்ப அட்டைகள், வாக்காளர் அட்டைகள் ஆகியவற்றை ஒப்படைப்பதாக அறிவித்தனர்.

சூன் 27 அன்று இரவு ஊர் மக்களுக்கும் எச். பி. அஸ்ரா கார்க், சி.பி.சி.ஐ.டி சிங்காரம் ஆகிய இருவருக்கும் இடையே அலைப்பேசி உரையாடல்-கள் நடந்துள்ளன. இப்படி காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் சூன் 28 காலை 5 மணிக்குக் கையில் ஆயுதங்களுடன் பா.ம.க மதியழகனைக் கொல்லச் சென்ற போது நாய்க்-கன்கொட்டாய்க்கு அருகில் பைக்கிலும் கந்தன் குட்டைக்கு அருகிலும் கைது செய்யப்பட்டனர் என்பது முற்றிலும் பொய்.

இதற்கிடையில் சூலை 10 அன்று சக்தி, சந்தோஷ் உள்ளிட்ட ஆறு பேர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் தடுப்புக் காவல் ஆணை பிறப்பித்துள்ளார்.

இளவரசன் நினைவு நாளை முன்னிட்டு ஊரில் எந்நிகழ்வும் நடத்த விடாமல் தடுப்பதற்-காகவே காவல்துறையும் ஆட்சியாளர்களும் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. நினைவு நாள் நிகழ்வுக்குக் காவல்துறை அனுமதி மறுப்பை மீறி நீதிமன்றத்தில் ஆணை பெறுவதற்கு முயன்றது பிடிக்காமல்தான் எஸ். பி அஸ்ரா கார்க் தங்களை இப்படிப் படாத பாடு படுத்தியிருப்பதாக நாங்கள் சந்தித்த மக்கள் அனைவரும் கூறினர். அஸ்ரா கார்க்கின் இப்போக்குக்குத் தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.

asara-mark 600கடுமையான சாதிப் பூசல் நிலவக் கூடிய ஒரு பகுதியில், இந்த அடிப்படையிலேயே பாமக ஒரு தேர்தல் வெற்றியைச் சாதித்து, வெற்றிப் பெருமிதத்துடன் திரியும் சூழலில், இப்படி தலித் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுத்துப் பாமக பிரமுகர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகவும், பயங்கர ஆயுதங்களுடன் வந்ததாகவும், அப்பட்டமான ஒரு பொய்யை தருமபுரி மாவட்டக் காவல்துறை பரப்பி வருவது கவலையளிக்கும் செய்தி.

ஒரு பொய்யை நிறுவ ஒரு நூறு பொய்களைக் கற்பிக்கத் தயங்காத காவல்துறையின் சதிச் செயலால் 6 அப்பாவிகள் தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்பட்டுள்ளார்கள். எத்தனையோ சாதித் தலைவர்களுக்கு விழா எடுக்கும் அரசு இளவரசன் என்ற தலித் இளைஞனின் நினைவு நாள் நிகழ்வைத் தடுப்பதற்கு இவ்வளவு கீழ்த்தரமாக நடந்திருப்பதை சனநாயக ஆற்றல்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விழிப்புடனிருந்து சாதி வெறிக்கும், அதற்குத் துணைபோகும் தமிழக அரசின் காவல்துறைக்கும் எதிராகப் போராடுவது தவிர நமக்கு வேறு வழியில்லை. 

Pin It