தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி. ஆறரை கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட ஒரு மாநிலம். சுதந்திர போராட்டத்தின்போது வீரத்துடன் போரிட்ட பல மாவீரர்களைக் கொண்டது. தமிழ் மக்கள் இல்லை என்று வருவோருக்கு வாரி வழங்குபவர்கள். உலகத்தின் எந்த ஒரு பகுதியிலும் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக குரல் கொடுப்பவர்கள். உழைப்பை மட்டுமே மூலதனமாக வைத்து உயர்பவர்கள். தன் உரிமைக்காக போராடுபவர்கள். இவ்வாறு பல வழிகளிலும் பெருமையாக பேசப்படும் தமிழகமும், தமிழக மக்களும் இன்று புறக்கணிக்கப்படுகின்றனர். லட்சக்கணக்கான தன் இன மக்கள் அழிவதை கண்டும் அவர்களுக்காக குரல் கொடுக்க முடியாமல் முடங்கி போய்விட்டனர். மக்களால் தான் முடியவில்லை என்றால், ஒட்டு மொத்த தமிழ் மக்களின் தலைவராக தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் தமிழக முதல்வர் அவர்களால்கூட அதை தடுத்து நிறுத்த முடியவில்லை.

அண்டை மாநிலத்தின் நண்பர் ஒருவர் மரணம் அடைந்ததற்கு தமிழகத்தில் விடுமுறை. கட்சிக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கும் என அறிவித்த முதல்வர், ஈழத் தமிழர்களின் உயிர்காக்க ஒரு முறை மட்டும் முழு அடைப்பு என்று நடத்திவிட்டு, அதன் பின் பெயரளவுக்கு மட்டும் பேரணி நடத்தினார். ஈழத் தமிழர்களுக்காக தன்னுயிர் நீத்த வீரத் தமிழன் முத்துக்குமாரின் மரண செய்தி அறிந்தும், அந்த தமிழ் வீரனுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி கூட செலுத்தாதது ஏன்? அவன் தமிழன் என்பதாலா. உலக தமிழ் மக்கள் அனைவரும் ஈழத் தமிழனுக்காக குரல் கொடுத்து கொண்டிருக்கும் போது, தமிழக இளைஞர்களும் தங்கள் ஆதங்கத்தை வெளிக்கொண்டுவரும்போது மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவித்தது ஏன்? தன்னை எதிர்த்து தமிழக மக்கள் எதுவும் செய்ய மாட்டார்கள் என்று நினைத்து விட்டாரா?

உலகத்தின் நாடுகள் பல இலங்கை அரசின் வன்கொடுமை செயலுக்கு எதிராக கண்டனம் தெரிவித்த போது இந்திய அரசு மட்டும் எதுவும் சொல்லாமல் அமைதி காத்த போது இந்த தமிழ் மக்களின் தலைவர் உலக நாடுகளை போன்று இந்தியாவும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தாது ஏன்? உயர்ந்த நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையிலே இலங்கையின் கொடுஞ்செயலை கண்டித்து, நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிய போது இந்தியா ஆதரவு அளிக்காது என்று கூறியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய அரசை கண்டிக்காதது ஏன்?

தனது ஆட்சி கலைந்து விடும் என்ற பயத்திலா? தமது தொப்புள் கொடி உறவுகள் இலங்கையில் சிங்கள வெறியர்களால் நிர்வாணமாக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்படுகின்ற வீடியோ காட்சிகள் வெளிவந்து, பல நாட்கள் ஆகியும் இன்று வரை அதை பற்றி எதுவும் பேசாமல் இருப்பது ஏன்? தமிழக மக்கள் தங்கள் தொப்புள்கொடி உறவுகளை மறந்துவிட்டனர். நாமும் அதைப்பற்றி எதும் பேச வேண்டாம் என்று நினைத்து விட்டார்களா? நீங்கள் யாரை நம்பி எங்கள் இன மக்களுக்காக குரல் கொடுக்க தயங்கினீர்களோ அவர்களே இப்போது உங்களை எதிர்க்கத் தொடங்கி விட்டனர்.

- து. தேவேந்திரன், திருப்பெரும்புதூர் 

Pin It