Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தமிழர்கள் அடிமைகளாக இருக்கிறார்கள். தமிழ் மொழியும் தமிழ் இனமும் தமிழ்நாடும் அடிமைப்படுத்தப் பட்டுள்ளன. வடமொழிக்கும், இந்திக்கும், ஆங்கிலத்துக்கும் பிற அயல்மொழிகளுக்கும் நாம் அடிமைகள். தில்லிக்காரனுக்கும் மார்வாரி குசராத்தி சேட்டுக்கும் இந்திய மற்றும் பிற பன்னாட்டுப் பெருங்குழும அதிபர்களுக்கும் நாம் அடிமைகள். வர்ணசாதி ஒடுக்குமுறைக்கும், சாதிய வன்கொடுமைகளுக்கும் வர்க்கச் சுரண்டலுக்கும் நாம் அடிமைகள். பார்ப்பனிய இந்துத்துவப் பாரதப் பண்பாட்டுக்கும், மேற்கத்திய நுகர்வு வெறிப் பண்பாட்டுக்கும் நாம் அடிமைகள். இந்திய வல்லாதிக்கத்திற்கு நாம் அடிமைகள்.

அனைத்து வகையிலும் அடிமைகள் நாம். ஆகவே அனைத்து வகையிலும் நமக்கு வேண்டியது விடுதலை. அடிமை தன்னை அடிமை என்று உணரும் போதுதான் விடுதலை உணர்வு பிறக்கிறது. அடிமைத் தமிழனும் தமிழச்சியும் மொத்தத்தில் தம்மை அடிமைகள் என்றே உணராதவர்களாய் இருக்கிறார்கள். பார்க்கப் போனால், அடிமை மோகம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தமிழனைத் தன்னிலை மறக்கச் செய்யும் போதைகள் பற்பல. சாதி, சமய வெறி, திரைப்படம் என்று பலவும் இருப்பினும், அண்மைக் காலத்தில் பரவிப் பெருகி வரும் மதுபோதை ஒரு பேராபத்தாக உருவெடுத்துள்ளது. அரசே கடை திறந்து இந்தப் பெருங்கொடுமையை வளர்த்து வருகிறது. தமிழ்நாடு அரசு விற்பனைக் குழுமம் என்பதன் ஆங்கிலச் சுருக்கமாகிய டாஸ்மாக் (TASMAC) மது வணிகத்தின் மறுபெயர் ஆகிவிட்டது. மது விற்பனை வழி வரி வருவாய் வெகு விரைவாக வளர்ந்து வருகிறது. சென்ற நிதியாண்டிலேயே 18,000 கோடியைத் தொட்டுவிட்ட இந்த வருவாய் இந்த ஆண்டு ஒரே மாதத்தில் 2000 கோடியைத் தொட்டு விட்டதாகச் செய்திகள் சொல்கின்றன. வருமானத்துக்காக எதையும் செய்யலாம் என்பது அறமாகாது. அரசே இப்படிச் செய்வதால் குடிமக்களிடம் ஒழுக்கம் பேசும் அறத்தகுதியை இழந்து விடுகிறது.

மேலை நாடுகளில் குடிப்பழக்கம் குறைந்து வருவதாகச் சொல்கிறார்கள், இந்தியாவில் குசராத் மாநிலத்தில் மட்டும்தான் மதுவிலக்கு செயல்பட்டு வருகிறது. அம்மக்களின் பண்பாட்டில் அது கலந்து போய் இருக்கலாம். காந்தியின் குசராத் என்பது கூட ஒரு காரணமாய் இருக்கலாம். (மோடி காரணமில்லை என்பது மட்டும் உறுதி). காந்தியின் இந்தியா என்று சொல்லக் காங்கிரசுக்காரர்களுக்கே விருப்பமில்லை போலும். இந்தியா எங்கும் மதுவின் ஆட்சி உண்டென்றாலும், தமிழ்நாட்டில்தான் அரசே மது விற்கிறது. இங்குதான் இந்தக் கொடுமை மிக விரிவாகவும் விரைவாகவும் வளர்ந்து வருகிறது. தமிழக மக்களில் ஒரு கோடிப் பேர் என்னுமளவுக்கு குடிப்பழக்க முடையவர்கள் என்பதும் இவர்களில் பலர் மீளமுடியாக் குடி அடிமைகள் ஆகிவிட்டனர் என்பதும் அதிர்ச்சிக்குரிய செய்திகள். பெண்களிடமும் சிறுவர்களிடமும் கூட குடிப் பழக்கம் தொற்றி வருகிறது.

வரி வருவாய்க்காக அரசே மக்களிடம் வளர்த்து வரும் குடிப்பழக்கத்தால் ஏற்படும் நோய்களை யும் அவற்றுக்கான மருத்துவச் செலவையும் கணக்கிட்டால் டாஸ்மாக் பொருளியலின் அபத்தம் விளங்கும். மதுவென்னும் நஞ்சு கல்லீரலையும் பணப்பையையும் அரிப்பதோடு பண்பையும் ஒழுக்கத்தையும் சிதைத்தும் விடுகிறது. அதுவே சொந்த வாழ்விலும் அரசியல் வாழ்விலும் கொடுங்குற்றச் செயல்களின் எரிபொருள்.

தனியருவரின் உடலுக்கும் உள்ளத்துக்கும் தீங்காகி, குடியையும் கெடுப்பது குடி என்பது மட்டுமல்ல. அதனால் ஒட்டுமொத்தச் சமூகத்திற்கும் ஏற்படும் கேடு பெரிது. சமூக நலனில் அக்கறை கொண்ட எவரும் குடியை ஏற்கமாட்டார். மக்களை அடிமைப்படுத்தும் முயற்சியில் போதை ஒரு கருவியாகப் பயன்பட்டதை அடிமை நாடுகளின் வரலாறு காட்டும். இந்தியாவிலும் சீனத்திலும் அபினிப் போர்கள் மூண்டது இதனால்தான். இந்தியத் தேசிய இயக்கம் மதுவிலக்கை ஒரு கொள்கையாகக் கொண்டு போராடியதும் இதனால்தான். தமிழ்த் தேசிய ஆற்றல்கள் இந்த வரலாற்றுப் பின்னணியைக் கருதிப் பார்த்தால் மதுவிலிருந்து விடுதலைக்காகப் போராட வேண்டிய தேவை புலப்படும்.

முழு மதுவிலக்கு என்ற கோரிக்கைக்கான போராட்டம் அரசிடம் அதற்காகச் சட்டமியற்ற கோரும் போராட்டம் மட்டுமன்று. அது நம் மக்களை ஒரு பண்பாட்டுச் சீர்கேட்டிலிருந்து மீட்பதற்கான போராட்டமும் ஆகும். மக்கள் ஆற்றலைத் திரட்டி மது அரக்கனை விரட்டி யடிக்கும் முயற்சியும் ஆகும்.

மதுவிலிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை இரு முனைகளிலிருந்து நடத்த வேண்டும். அரசு தன் மதுக்கொள்கையை மாற்றிக் கொள்ளும் படி செய்வதற்காகப் போராடும் போதே, அந்தந்தப் பகுதியிலிருந்தும் மதுக் கடைகளை விரட்டுவதற்காகவும் போராட வேண்டும். தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் இத்தகைய போராட்டங்கள் வெற்றி பெற்றிருப்பது நமக்கு ஊக்கமளிக்கிறது. நம் பகையிலக்கு குடி பரப்பிக் குடி கெடுக்கும் அரசுதானே தவிர குடிப்பவர்கள் அல்லர். அவர்களை நோயாளி களாகக் கருதி குடிநோயிலிருந்து மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அரசே குடிநோய் மருத்துவமனைகளை நாடெங்கும் நிறுவி இலவச சிகிச்சை தர வேண்டும் என்பது நம் கோரிக்கை. சாராயம் விற்பவர்களைக் காட்டிலும் குடிப்பவர் களையே குற்றவாளிகளாகக் கருதி வேட்டை யாடியது கடந்த கால மதுவிலக்குச் சட்டங் களின் பெருங்குறை.

மதுவிலக்கு வந்தால் கள்ளச் சாராயம் பெருகி விடும். காவல்துறையின் இலஞ்ச ஊழலும் பெருகிவிடும் என்ற அச்சம் நியாயமானதே. இதைத் தவிர்ப்பதற்கு மதுவிலக்கை ஒரு மக்கள் பண்பாடாக வளர்த்தெடுக்க வேண்டும். மக்களிடையே இது தொடர்பான விழிப் புணர்வை வளர்த்திட இயக்கம் நடத்த வேண்டும். மாணவர்களுக்கானக் கல்வித் திட்டத்தில் மது விலக்கின் தேவையும் இடம்பெற வேண்டும்.

எப்படிப் பார்த்தாலும் மதுவிலக்கு ஆட்சி யின் தீய பக்க விளைவுகளைக் காட்டி மதுவின் ஆட்சியை நியாயப்படுத்துவதற்கில்லை.

மதுவிலிருந்து விடுதலை வேண்டும் என்பது பற்றார்ந்த விருப்ப முழக்கமாக மட்டும் இருப்பதால் பயனில்லை. அதனை ஒரு போராட்ட முழக்கமாக மாற்ற வேண்டும். மக்கள் நலனில் நேர்மையான அக்கறை கொண்ட அனைத்து ஆற்றல்களையும் ஒருங்கிணைத்து, இதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அடை யாளப் போராட்டமாகத் தொடங்கினாலும் வலுமிக்க வெகுமக்கள் போராட்டமாக இதனை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

மனித விடுதலைக்கும் இன விடுதலைக்கு மான போராட்டத்தின் ஓர் இன்றியமையாக் கூறு மதுவிலிருந்து விடுதலைக்கான போராட்டம். இந்தப் போராட்டத்திற்கு உறுதியோடு உங்களை ஒப்புக் கொடுக்க அழைக்கிறோம்.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 public public 2012-08-22 15:36
இப்ப கொஞ்ச நாளா அம்மா டாஸ்மாக்கை மூடபோறதாக பேச்சு அடிபடுது உண்மைங்களா?
Report to administrator
0 #2 rasheedkhan 2012-08-22 15:37
மதுவிலிருந்து விடுதலை என்பது நான் ந்ல்லவன் என்று சொல்லிக்கொண்டு தனித்திருக்கவும ், வேறு அரசியல் வழி இல்லாத போது கையில் எடுக்கவுமானதும் ,உபதேசியாகச் சொல்ல்வதும் பயன் படாது.உங்களைப் போண்ற சிலராவது, ம்ற்ற புள்ளிவிவர தகவல் சேகரித்துள்ள நிபுனர்களுடன் அரசியலுக்கு அப்பால் நின்று அனைத்து அரசியல் கட்சிக்காரர்களு க்கும் அறிவிக்கை அனுப்பி தொடர்ந்து இந்தப்பணி ஒன்றே செய்யும் பென்களின் சங்கங்கள் போராடும்
நிலையில் ஒரு குழுவை அமைத்து போராட முயன்றால் ஒழிய தமிழகம் உறுப்படாது. முன்னாலில் உழைக்கும் மக்கள் (விவசாய கூலித்தொழிலாளர் கள்) விவர்ரம் பெற்று
வளர்ந்துவிடாமல் இருக்க மதுவே நல்ல ஆயுதம் என்று எண்ணினார்கள். இப்போது உடலுழிப்பு வேலகள் எத்ற்குமே ஆள் இல்லை என்ற நிலயும் கட்சிக்கொடி பிடித்தால் வாழலாம் இல்லாவிட்டால் யாருக்காவது வக்காளத்து வாங்கி முண்டா தட்டி வாழவேண்டும் என்ற நிலை வந்து, வட மாநில மக்கள் வேலைக்கு வந்தால் குறைந்த கூலி கொடுத்து சுரண்டலாம் என்றும் தலைவர்களை ஏன் என்று கேட்காமல் தலையாட்டி பொம்மைகளாக தொண்டர்களை ஆக்கிவைக்கவும் அரசியல் விழிப்புணர்வு மாநில ந்ல்லுணர்வு ஏதுமின்றி உடுத்திய ஜந்துக்களாக மக்களை வைத்திருக்க உதவுகிறது என்று ஆதிக்கவாதிகலும் , அதிகார வர்க்கமும் எண்ணித்தான் செயக்லாற்றுகின் றன. சரியான முற்போக்கான போராட்டம் தேவை. சாலை இலந்திரையன் சொன்னது போல் சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது.
Report to administrator

Add comment


Security code
Refresh