துரை மாவட்டத்திலிருந்து 1996ஆம் ஆண்டு பிரித்து உருவாக்கப்பட்ட தேனி மாவட்டத்திற்கு, முல்லைப் பெரியாறு, சோத்துப்பாறை, வைகை அணை, வராகநதி, குரங்கனி, பச்சகுமாச்சி, மேகமலை, வெள்ளி மலை, மகாராஜா மெட்டு, போடி மெட்டு, கும்பக்கரை, சுருளி, கம்பம் பள்ளத்தாக்கு, கண்ணகி கோயில், இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து என்று ஆயிரம் அடையாளங்கள் இருந்தாலும், அப்பகுதி மக்களின் ஆயிர மாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அரசியல் அடையாளங்களாக இருப்பது, சாதிய வன்மமும் அதைத் தொட்டு உருவாகும் வன்முறைகளும் தான். வைகை மாவட்டம், கண்ணகி மாவட்டம் போன்ற வெளிப்பூச்சு அடைமொழிகளை விட 'சாதிய வன்கொடுமை மாவட்டம்' என்பதே தேனி மாவட்டத்திற்கு ஆகச் சிறந்த பெயராக இருக்க முடியும்.

இம்மாவட்டத்தைப் பொறுத்த வரை அரசு மற்றும் ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப்படும் மனிதநேயமற்ற விலங்குச் செயல்கள் செய்தியாவது கூட மிகப் பெரிய போராட்டங்களுக்குப் பிறகே நடக்க முடிகிறது. அப்படியரு ஈவிரக்கமில்லாத சாதியக் கொழுப்பேறிய பயங்கரவாதம்தான் தேனி மாவட்டம் - கடமலைக்குண்டு ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களையும் நசுக்கி வருகிறது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியத்தி லுள்ள மேலப்பட்டி, கரட்டுப்பட்டி, தென் பழனி காலனி, நேருஜி நகர், கடமலைக்குண்டு என்ற ஐந்து கிராமங்களை உள்ளடக்கியதுதான் 'கடமலைக்குண்டு ஊராட்சி'.

மகாத்மா ஜோதிராவ் ஃபூலே, அண்ணல் அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களின் வழியில், நாடு முழுவதுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் தீரமிகு எழுச்சியின் காரணமாக, 'தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினர்' தனிப் பஞ்சாயத்தாக அறிவிக்கப்பட்டது மட்டும்தான், வரலாற்றில் 'கடமலைக்குண்டு' சந்தித்துள்ள ‘மாபெரும்’ சீர்திருத்தம்.

சாதியில்லாத ஐரோப்பியர்கள் ஆண்ட போதே, ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பை உறிஞ்சியும், அளவில்லாமல் வரி வசூல் செய்தும், வெள்ளையர்களுக்குக் கொள்ளையளவில் கப்பம் கட்டிய விசுவாசத்திற்காக, ஜமீன்தாரின் தேரில் 7 குதிரைகள் பூட்டிக்கொள்ள சிறப்புச் சலுகையைப் பெற்றிருந்த கடமலைக்குண்டு அதிகாரத் திமிர், தற்பொழுது ஆதிக்க சாதி அரசின் துணையோடு, ஒடுக்கப்பட்ட மக்களின் மீது கட்டவிழ்த்துள்ள அடக்குமுறைகளைச் சொல்லி மாளாது.

மன்னர்கள் காலத்தில் பாளையமாகவும், வெள்ளையர்கள் காலத்தில் ஜமீனாகவும், பிறகு கிராமப் பஞ்சாயத்தாகவும், அதிலும் தாழ்த்தப் பட்டோர்/பழங்குடியினர் பஞ்சாயத்தாகவும், மாறி மாறி எவ்வித ஆட்சிக் கட்டமைப்பில் இருந்தாலும், அரசியல் சட்டங்கள் மாறினாலும் கடமலைக்குண்டைப் பொறுத்த வரை, சாதி இந்துக்களின் சம்பிரதாயங்களே எழுதப் படாத சட்டங்களாக இன்றளவும் இருந்து வருகிறது.

திரைப்படங்களில் காதல் இணைகள் ஊர் மக்களை எதிர்த்து நண்பர்கள் துணையுடன் ஊரைவிட்டு ஓடும்போதும், நண்பர்கள் புடைசூழ திருமணம் செய்துகொள்ளும் போதும் சீத்தியடித்து வரவேற்கும் இளசுகள் கடமலைக்குண்டிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் தனது ஊரில், தன் சாதிப் பெண், ஒடுக்கப்பட்ட சாதி இளைஞனுடன் கொண்ட காதலை ஏற்றுக்கொள்ள முடியாதவர் களாகவும், அந்தக் காதலை முறிக்கக் கொலை வெறியுடன் ஆயுதம் ஏந்தத் தயங்காதவர் களாகவும்தான் இருக்கிறார்கள்.

இளைஞர்கள் புகை பிடிக்கும் போதும், மது அருந்தும் போதும், ஊதாரித்தனமாய் ஊர் சுற்றும் போதும் அக்கறையுடன் கண்டிக்கும் ஊர்ப் பெரியவர்கள், சாதித் தூய்மையைப் பாது காக்கக் கிளம்பியிருக்கும் தங்கள் இளைஞர் களின் 'கொலைவெறி'யைக்கூட ஆரத்தழுவி வரவேற்கவே செய்கின்றனர்.

இப்படி ஊரினுடையவும் உறவினுடையவும் சாதிய வெறியிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள, கடமலைக்குண்டைச் சேர்ந்த தளக்கம்மாள் என்ற மறவர் சாதிப் பெண்ணும் பழனிச்சாமி என்ற அருந்ததியர் ஆணும், கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி தாங்கள் பிறந்து வளர்ந்த ஊரை விட்டுச் சென்றுவிட்டதை அடுத்து, கடமலைக் குண்டு அருந்ததிய மக்கள், மறவர் சாதிவெறியர்களால் சந்தித்த கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல.

பழனிச்சாமி-தளக்கம்மாள் காதல் இணை ஊரைவிட்டுச் சென்ற மறுநாளே (ஏப்ரல் 9ஆம் தேதி) கடமலைக்குண்டு ஊராட்சித் தலைவர் திரு அறிவழகன் அவர்களை, மறவர் சாதி வெறியர்கள் செருப்பால் அடித்து அசிங்கப் படுத்தி, காதல் இணையைக் கண்டுபிடித்து வரும்படி ஊரைவிட்டு விரட்டியும் விட்டனர். ஆதிக்க சாதியினரால் ஊராட்சித் தலைவர் தாக்கப்பட்டதற்கும் ஊரைவிட்டு விரட்டி யடிக்கப்பட்டதற்கும், அவர் ஒரு அருந்ததியர் என்பதே போதுமான காரணமாக இருந்தது.

அப்பாவி அறிவழகன் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். சுய ஆட்சி அரசாங்கம், சிறு குடியரசு, பஞ்சாயத்து ராஜ் என்று வானளாவப் புகழப்படும் 'ஊராட்சி மன்ற'த் தலைவர் கொடுத்த புகாரை ஏற்க மறுத்ததுமில்லாமல், காதல் இணையைக் கண்டுபிடித்துவரும் படி ஊராட்சித் தலைவருக்கே உத்தரவிட்டும், சாதி வெறியர் களுக்கு தனது விசுவாசத்தைக் காட்டியுள்ளது தேனி மாவட்டக் காவல்துறை.

தேனி மாவட்டத்தில் ஆதிக்க சாதி வெறியர் களால் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நிகழ்த்தப் பட்ட பல கற்பழிப்புகளைக் கூட, “கற்பழிக்க வெல்லாம் இல்லை.... சும்மா ஜாக்கெட்டை மட்டும்தான் கிழித்துள்ளனர்...” என்று வாய் கூசாமல் கூறி, கற்பழிப்பு வழக்குப் பதிய மறுத்து, ஆதிக்க சாதியினரின் செருப்பாய் இருந்து வழக்கை முடித்துவைத்த தேனி மாவட்டக் காவல்துறை, வயது நிரம்பிய ஒரு ஆணும் பெண்ணும் தம் விருப்பப்படி வாழ்க்கையைத் தேர்வு செய்துகொண்ட இவ்வழக்கில், பெண்ணைக் கடத்தியதாகப் பொய் வழக்குப் பதிவு செய்து, பழனிச்சாமியின் தாய் திருமதி காளியம்மாள் என்ற அமராவதி மற்றும் தந்தை திரு பெத்தன் அவர்களை கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் வைத்து அடித்துத் துன்புறுத்திச் சித்திரவதை செய்து, ஏப்ரல் 9ஆம் தேதி சிறையிலடைத்துத் தனது தொப்பியைச் சரிசெய்து கொண்டது. காதல் இணையைத் தேட வேண்டும் என்பதற்காக ஊராட்சித் தலைவருக்கு மட்டும் முன்பிணை தந்து கருணை காட்டி யுள்ளது தேனி மாவட்டக் காவல்துறை.

காவல்துறையினர் கொடுத்த உற்சாகத்தில் கடமலைக்குண்டு ஆதிக்க சாதி வெறியர்கள் 5 அருந்ததியர் குடும்பங்களை ஊரைவிட்டுத் துரத்திவிட்டும், வீடுகளின் கதவுகளைப் பெயர்த்தெடுத்தும், கூரைகளைப் பிரித்து உள்ளே இறங்கியும் பொருட்களைச் சூறையாடத் தொடங்கிவிட்டனர். பணம், தங்க நகைகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், பாத்திரங்கள், ஆடு மாடுகள் என்று, ஏகபோக மாகக் களவாடிய மகிழ்ச்சிக் களிப்பில், சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், கல்விச் சான்றிதழ்கள், என்று கிடைத்த அனைத்தையும் கிழித்தெறிந்துவிட்டுச் சென்றுள்ளனர் ஆதிக்க சாதிக் களவானிகள். மூன்று தலைமுறைகளாக உழைத்துச் சேர்த்த சொத்துக்களை இழந்த உழைப்பாளி ஒடுக்கப்பட்ட மக்கள், குற்றவாளிகளின் பெயர்களைக் குறிப்பிட்டுப் புகார் கொடுத்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தேனி மாவட்டத் தமிழ்ப்புலிகள் களமிறங்கிய பிறகு, கடமைலைக் குண்டை விட்டு வெளியேற்றப்பட்ட குடும்பங் களை மறுபடியும் கடமலைக் குண்டிற்குள் குடி யமர்த்துவதாகக் காவல்துறை வாக்குறுதி அளித்தது. பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 30 அருந்ததிய மக்களுடன் கடமைலைக் குண்டிற்குச் சென்ற காவல்துறையை ஆதிக்க சாதி மறவர்கள் ஊருக்குள் அனுமதிக்கவில்லை.

மாவீரன் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் கலந்துகொண்ட ஒடுக்கப்பட்ட மக்களை, பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்ததாகப் பொய்க் குற்றம் சாட்டி, துப்பாக்கியால் சுட்டும், துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று அடித்தும் 6 அப்பாவிகளைக் கொலை செய்த காவல் துறைக்கு, மிகப் பெர்ரிய்ய சனநாயக நாட்டின் குடிமக்களைச் சொந்த ஊரில் குடியேறவிடாமல் தடுக்கும் ஆதிக்க சாதி அயோக்கியர்களிடம் தூக்கிக் காட்ட எதுவும் இருக்கவில்லை.

வீடுவாசலை இழந்த ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள், தலைமுறை தலைமுறை யாக வாழ்ந்த ஊரைவிட்டு, கம்பம் புதுப் பட்டி, அணைப்பட்டி, இராயப்பன்பட்டி, அப்பிபட்டி என்று ஊர் ஊராக உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்த போது, காவல்துறை வண்டிகளிலேயே அழைத்துச் சென்று வெட்கமில்லாமல் இறக்கிவிட்டு வந்ததுதான், தேனி மாவட்டக் காவல்துறை பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்த மாபெரும் உதவி(!).

சொந்த ஊரை மறக்க முடியாமல் வந்த ஊரான அப்பிபட்டியில் வாழந்துகொண்டிருந்த அப்பாவி மக்களையும், பொய்க் குற்றம் சாட்டப்பட்டு காவல்துறையின் சித்ரவதைக்கு உள்ளாகி, சிறையிலிருந்து 22 நாட்களுக்குப் பிறகு 2-06-12 அன்று பிணையில் வெளிவந்த பெத்தன் மற்றும் அமராவதியையும், ஆதிக்க சாதி மறவர்கள் அப்பிபட்டிக்கும் சென்று தாக்கியுள்ளனர். இது தொடர்பான புகாரின் மீதும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தளக்கம்மாள்-பழனிச்சாமி காதல் இணை ஊரைவிட்டுச் சென்ற மறுநாளே ஒடுக்கப்பட்ட அருந்ததிய மக்களைப் பொய் வழக்கில் கைது செய்து சிறையிலடைத்த தேனி மாவட்டக் காவல்துறை, ஊராட்சித் தலைவரைத் தாக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளும் சொத்துக்களும் ஆதிக்கச் சாதியினரால் சூறையாடப்பட்டு 60 நாட்களான பிறகும் வழக்குப் பதியவில்லை. தமிழ்ப்புலிகள் பொதுச் செயலாளர் நாகை திருவள்ளுவன் அவர்கள் “தேனி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும்” என்று கண்டித்த பிறகுதான் குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை மட்டும் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் கைது செய்யப்படவில்லை.

தமிழ்ப்புலிகளின் முயற்சியில் பிரச்சனை கசியத் துவங்கியதும் கடமலைக்குண்டை ஊடகங்கள் மொய்க்கத் தொடங்கி விட்டன. பரமக்குடி அரச பயங்கரவாதத்தைக் கூட சாதிக் கலவரம் என்றே சித்திரித்த ஊடகங்கள், ஆதிக்க சாதியினரின் அப்பட்டமான சாதிய வன்முறையை “இருதரப்பினருக்கான பிரச்சனை” என்று மொண்ணையாகக் குறிப்பிட்டு வெளியிட்டன. ஊருக்குள் நுழைந்த இந்த மொண்ணை ஊடகங்கள் கூட தாக்கப்பட்டதுதான் கடமலைக்குண்டு சாதிவெறியின் உச்சம்.

ஊடகங்களின் மழுங்கடிப்பு வேலைகளும், சாதி வெறியர்களின் தாக்குதல்களும், காவல் துறையின் மெத்தனம் மற்றும் ஆதிக்கசாதி ஆதரவு நிலையும், பாதிக்கப்பட்ட மக்களைப் போராட்டத்தை நோக்கி நகர்த்தியது. சூன் 14 அன்று தோழர் மகிழவேந்தன் தலைமையில் அறிவிப்பில்லாமல் அதிரடியாக நடத்தப்பட்ட “பாதிக்கப்பட்ட மக்களை ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற்றும் போராட்டம்” தேனி மாவட்டத்தைப் பதற்றமடையச் செய்தது. ஊரைவிட்டு வெளியேற்றப்பட்ட மக்களை சூன் 20ஆம் தேதிக்குள் மீண்டும் கடமலைக் குண்டில் குடியமர்த்தாவிட்டால் “மக்களைத் தமிழ்ப்புலிகள் குடியமர்த்துவார்கள்” என்ற அறிவிப்பு, காவல்துறையைப் பணியச் செய்தது. ஆண்டிப்பட்டிக் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் விஜயபாஸ்கரன் சூன் 18 அன்று ஆதிக்க சாதியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி(!) அருந்ததிய மக்களை சொந்த ஊருக்குள் குடியேற்றம் செய்தார்.

களவு கொடுத்த சொத்துகளுக்கு இழப்பீடு இல்லாமல், பிள்ளைகளின் படிப்பைத் தொடர வழியில்லாமல், ஊரில் உறவுகொண்டாட, வேலைதர சாதிய மனோபாவமுள்ள மக்கள் முன்வராமல், பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் சொந்த ஊருக்குள் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்திலும், முற்போக்கு அமைப்புகள், இடதுசாரி கட்சிகள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் ஈழ ஆதரவு, இந்தியத் தேசிய எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு, வல்லாதிக்க எதிர்ப்பு என்று எதற்கும் சுயசாதி உணர்வைத் துறக்க வேண்டிய கட்டாயம் தேனி மாவட்ட முற்போக்காளர் களுக்கு இல்லை.

வர்க்கக் கருத்தியலை மட்டும் கட்டியழுதே வளர்த்தெடுக்கப்பட்டு, சாதியைப் புரிந்துகொள்ள முடியாத, சாதியழிப்பிற்காகக் களமாட முடியாத ஊனமுற்ற தோழர்களை வைத்துக்கொண்டு திண்டாடும் பொதுவுடைமை கட்சிகளின், காலங்கடந்த ஞாநோதயமும் - போர்க்குண மிக்கவர்கள், ஆண்ட பரம்பரையினர், சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள், துரோகம் செய்தவர்கள், தெலுங்கர்கள், தமிழர்கள் என்று சகலத்தையும் சாதியை வைத்தே தீர்மானிக்கும், தமிழ்த் தேசியவாதிகளின் தாறுமாறான தேசிய வாதமும், ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் விடுதலைக்கு மண்ணளவும் பயன்படவில்லை என்பது மட்டும் திண்ணம்.

ஈழத்தில் தவித்துவரும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்காக, தனி-ஈழத்திற்காகக் குரல் கொடுக்கும் மனிதநேயமிக்க பொது(?) மக்களும் கடமைலைக்குண்டு சொந்த ஊர் அகதிகளுக் காக உச்சுக்கொட்டக் கூடத் தயாராக இல்லை.

சகல வழியிலும் கையறு நிலையில் இருக்கும் தேனி மாவட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மீது, கடந்த சில நாட்களுக்குள் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் சிலவாக... “திருமலாபுரம் தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி ரா.செல்வி அவர்களை ஆதிக்க சாதியினர் சாதிய வன்மத்தோடு கொலைவெறித் தாக்குதல் நடத்தி அவமானப் படுத்தி பணி செய்யவிடாமல் தடுத்து வருவது... அம்மச்சியாபுரம்- அய்யனார்புரம் கிராமத்தில் மூன்று வருடங்களாக இருந்து வந்த, மாவீரன் இம்மானுவேல் சேகரன் சிலையை காவல்துறை வலுக்கட்டாயமாக உடைத்து அகற்றியது... கூழையனூர் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு அரசுப் பொது இடுகாடு மறுக்கப்படுவது, அது தொடர்பாக நடந்த போராட்டத்தில் சின்னாயி என்ற ஒடுக்கப் பட்ட பெண் பெட்ரோல் குண்டு வீசிப் படுகொலை செய்யப்பட்டது... குள்ளப்புரம் ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில் நுழையத் தடை... அம்பேத்கர் பின்னலாடை அணிந்து கோயில் திருவிழாவில் கலந்துகொண்ட அம்மாபட்டி ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்... வெள்ளைச் சட்டை அணிந்து சென்றதற்காக வயல்பட்டியில் ஒடுக்கப்பட்ட இளைஞர் சரவணன் தாக்கப்பட்டது... கைலாசநாதர் கோயிலில் பல வருடங்களாக ஆன்மிகப் பணியாற்றிய பூசாரி நாகமுத்து ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று தெரிந்ததும், ஆதிக்க சாதியினர் அவரைத் தாக்கி உதைத்து துரத்தியடித்தது.... சுக்குவாடன்பட்டி கோயில் திருவிழாவில் முளைப்பாரி கொண்டுசென்ற ஒடுக்கப்பட்ட பெண்களிடம் ஆதிக்க சாதியினர் முறைகேடாக நடந்துகொண்டது, தட்டிக்கேட்ட மாணிக்கம் என்ற ஒடுக்கப்பட்ட இளைஞரை, சாதி வெறியர்கள் கத்தியால் இரண்டு முறை குத்தியதால், அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பது.... ஆண்டிப்பட்டி ஒன்றியம் கோயில்பட்டியில் ஒடுக்கப் பட்ட பெண்கள் மீது தொடர்ந்து நிகழ்ந்துவரும் கற்பழிப்புகள்....” இப்படி, சாதிய வன்கொடுமை களுக்கும் கொலைகளுக்கும் கற்பழிப்புகளுக்கும் பஞ்சமே இல்லாமல், தன்னை ஒரு சாதிய வன்கொடுமை மாவட்டமாக அறிமுகப்படுத்திக் கொண்டு பல்லிளிக்கிறது தேனி மாவட்டம்.

சாதிய வன்கொடுமை மாவட்டமான, தேனி மாவட்டப் பொது(?)மக்கள், அரசு அதிகாரிகள், ஆட்சியாளர்கள், தமிழ்த் தேசியவாதிகள், இடதுசாரிகள் என்று விதிவிலக்கே இல்லாமல் நீக்கமற நிறைந்திருக்கும் சாதிய மனோபாவமும், ஆதிக்க சாதி ஆதரவு நிலையும் மேற்குறிப்பிட்ட வன்கொடுமைகளிலும் என்ன பாத்திரம் வகித் திருக்கும் என்பதற்கு, கடமலைக்குண்டு “ஒரு சோறு பதம்”.

Pin It