சென்ற 2012 சூலை 5ஆம் நாள் காலை பெரியார் திராவிடர் கழகத்தின் கிருட்டிணகிரி மாவட்ட அமைப்பாளர் திரு மு.பழனி (பழனிச்சாமி) உத்தனப்பள்ளி அருகே அலேசீபம் ஊராட்சி பாலேபுரம் கிராமத்தில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார், இந்தக் கொலையில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த தளி சட்டப் பேரவை உறுப்பினர் திரு.இராமச்சந்திரனுக்கும் அவரைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற செய்தி சமூக ஆர்வலர்கள் என்ற முறையில் எங்களுக்கு அதிர்ச்சியும் கவலையும் அளித்தது.

     பெரியார் திராவிடர் கழகம், இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி இரண்டுமே தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், சனநாயகத்திற்காகவும், சமூக நீதிக்காகவும், தமிழ் மொழி இன நலனுக்காகவும், ஈழத் தமிழ் மக்களுக்காகவும் கொள்கைவழி நின்று போராடக் கூடிய அமைப்புகள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த இரு அமைப்புகளையும் சேர்ந்தவர்களுக்கிடையே வன்முறை, அதிலும் கொலை என்பது எண்ணிப் பார்க்க முடியாத கொடுமை என்று நாங்கள் கருதியதால், உண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளவும், எங்களுக்குத் தெரிந்ததை உலகிற்கு அறிவிக்கவும் விரும்பினோம்.

      இதற்கென்று சமூக வன்முறைக்கு எதிரான உண்மை அறியும் குழுவை ஏற்படுத்தி, குழுவின் அமைப்பாளர் தியாகு, ஓவியா, வளர்மதி, தடா ரஹீம் ஆகிய நால்வரும் சென்னையிலிருந்து புறப்பட்டு சூலை 16ஆம் நாள் காலை ஒசூர் போய்ச் சேர்ந்தோம். ஒசூரைச் சேர்ந்த ஒப்புரவாளன், சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தமயந்தி, திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் உமர் கயான் ஆகியோரும் எங்கள் குழுவில் இணைந்து கொண்டனர்.

     தியாகு தலைமையில் எங்கள் எழுவர் குழு சூலை 16, 17 ஆகிய இரு நாட்களில் பாலேபுரம், அலேசீபம், கெலமங்கலம், நீலகிரி, நெருப்புக்குட்டை, உத்தனப்பள்ளி, ஒசூர் உள்ளிட்ட பல ஊர்களில் சென்று விசாரணை மேற்கொண்டது. பழனியின் மனைவி முருகம்மாள், மகன் வாஞ்சிநாதன், சிகரப்பள்ளி வீ.மருதப்பா, வழக்குரைஞர் நதீம் வெங்கட் (கிருட்டிணகிரி), நெருப்புக்குட்டை லெட்சுமைய்யா, அலேசீபம் முன்னாள் ஊராட்சித் தலைவர் கோபால், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் அருண்குமார், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா - லெ) மாநிலச் செயலாளர் விந்தை வேந்தன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒசூர் நகர முன்னாள் செயலாளர் வசந்தசந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் தொழிலாளர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த செந்தமிழ் ஆகியோரையும் வேறு பலரையும் நாங்கள் விசாரித்து விவரம் அறிந்தோம். எங்களில் வளர்மதியும் ஒப்புரவாளனும் 17ஆம் நாள் ஓசூரில் முன்னாள் சி.பி.ஐ. மாவட்டச் செயலாளரும் இன்னாள் அதிமுக பிரமுகருமாகிய நாகராஜ ரெட்டியை சந்தித்து அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்டனர்.

     உத்தனப்பள்ளி காவல் ஆய்வாளர் ராமராசுலு அவர்களைக் காவல் நிலையத்தில் சந்தித்து வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகளைக் கேட்டறிந்தோம்.

     நாங்கள் பொதுமக்களிடமும் பல்வேறு அரசியல் கட்சியினரிடமும் வினாத் தொடுத்து விடைகளைப் பதிவு செய்து கொண்டதோடு, தாமாக முன்வந்து குழுவிடம் பேசியவர்களின் கூற்றுகளையும் பதிவு செய்து கொண்டோம். அனைவரின் வாக்குமூலங்களைக் காணொளியிலும் பதிவு செய்துள்ளோம். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சித் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், சி.மகேந்திரன், கிருட்டிணகிரி மாவட்டச் செயலாளர் நஞ்சப்பா ஆகியோருடனும், பெரியார் திராவிடர் கழகத் தரப்பில் கொளத்தூர் மணியுடனும் எங்கள் குழுவின் சார்பில் தியாகு தொலைபேசியில் உரையாடினார்.

சிக்கலைத் திறந்த மனத்துடன் அணுகி புறஞ்சார் அடிப்படையில் நாங்கள் மேற்கொண்ட விசாரணை மற்றும் ஆய்விலிருந்து பெறப்பட்ட உண்மைகளைத் தமிழ் மக்கள் முன்பும் அக்கறையுள்ள அனைவர் முன்பும் பணிந்தளிக்கிறோம்.

1. கொலை நிகழ்வு குறித்து

     முதலில் கொலை நடந்த இடத்தைப் பார்வையிட்டோம் . அந்த இடத்திற்கே பழனியின் மகனும் நிகழ்வை நேரில் கண்டவருமான வாஞ்சிநாதனை அழைத்துவரச்செய்து விரிவாக விசாரித்தறிந்தோம். அந்த அடிப்படையில் கொலைக் குற்றம் நடந்த விதம் என்று நாங்கள் புரிந்து கொண்டதைக் கீழே தருகிறோம்.

     நிகழ்வன்று அதிகாலை 5 மணியளவில் பழனியும் வாஞ்சிநாதனும் கத்தரிக்காய்த் தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சச் செல்கின்றனர். மணி 6 இருக்கலாம். பழனி கிணற்றுக்கருகில் நின்று கொண்டிருக்கின்றார், வாஞ்சிநாதன் சற்றுத் தொலைவில் நின்று நீர்ப்பாய்ச்சிக் கொண்டிருக்கிறார். அப்போது "அய்யோ வாஞ்சி" என்ற பழனியின் அலறல் கேட்டு வாஞ்சி கையில் மண்வெட்டியோடு அவரை நோக்கி ஓடுகிறார். இருபதுக்கு மேற்பட்டவர்கள் பழனியை நோக்கி வருகின்றார்கள். சிலர் துப்பாக்கியால் சுடுகின்றனர். பழனி கிணற்றடியிலிருந்து ஓடி அருகில் கால்வாய் அருகே நின்று இருகைகளையும் உயர்த்துகிறார். விரட்டி வந்தவர்கள் கைகளை அரிவாளால் வெட்டுகின்றனர். துப்பாக்கியால் சுடவும் செய்கின்றனர். அவர் கீழே சாய்ந்த பின், தலையைத் துண்டித்து எடுக்கின்றனர். பிறகு தலையுடன் சுமார் 50 மீட்டர் தொலைவில் இருக்கும் மண்சாலைக்குச் செல்கின்றனர். அங்கு, காருக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் நபரிடமும், காருக்கு உள்ளே இருப்போரிடமும், பழனியின் தலையைக் காட்டி விட்டு, கீழே வீசி விடுகின்றனர். அவர்களை ஏற்றி வந்த காரும், பைக்குகளும் வந்த வழியே திரும்பி விடுகின்றன.

     இவை அனைத்தையும் வாஞ்சிநாதன் பார்த்துள்ளார். முதலில், அவரை விரட்டியுள்ளனர். பிறகு, திரும்பி வந்து, மரத்தின் பின்னால் மறைந்திருந்து எல்லாவற்றையும் பார்த்துள்ளார். கொலைக் கும்பலில், பெரியசாமி, கேசவன் ஆகியோர் இருந்த்தைத் தன்னால் அடையாளம் காண முடிந்ததாக வாஞ்சிநாதன் உறுதிபடக் கூறுகிறார். மேலும், காருக்கு வெளியே நின்று பழனியின் தலையைப் பார்த்தவர் வரதராஜனே என்றும் சொல்கிறார். வரதராஜன் வழக்கமாக அணியும் பிஸ்கட் கலர் முழுக்கால் சட்டை, வெள்ளை மேல் சட்டை ஆகியவற்றைக் கொண்டு இது உறுதியாவதாகச் சொல்கிறார்.

     வாஞ்சிநாதனால் குறிப்பிடப்படும் பெரியசாமி என்பவர் தளி சட்டப் பேரவை உறுப்பினர் இராமச்சந்திரனின் பாதுகாவலராக 15 ஆண்டு காலமாக இருந்து வருபவர் எனத் தெரிகிறது. கேசவன் என்பவர் இராமச்சந்திரனின் அக்காள் மகன்.. வரதராஜன் இராமச்சந்திரனின் அண்ணன்.

     நிகழ்விடத்தைப் பார்வையிட்டு வாஞ்சிநாதனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்ட பின், அங்கு கூடியிருந்த பொதுமக்களிடமிருந்தும், பாலேபுரம் கிராமத்தில் பழனியின் துணைவியார் முருகம்மாளிடமிருந்தும் ஊர்ப் பொதுமக்களிடமிருந்தும் திரட்டிய தகவல்கள், கொலைக்கு முன்னும் பின்னும் நிகழ்ந்தவற்றை அறியத் துணை செய்தன.

     கொலை நடப்பதற்கு முந்தைய இரவில், பாலேபுரம் கிராமத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுனா என்பவர் கொலையாளிகளோடு கைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு, பழனியின் நடமாட்டம் குறித்துத் தகவல் கொடுத்துள்ளார். அவ்வாறு அன்று இரவு மல்லிகார்ஜுனாவோடு பேசியவர்களில் கலீல் என்பவர் முக்கியமானவராகக் குறிப்பிடப்படுகிறார். இந்த கலீல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர். கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவரின் கணவர். அதே இரவில், கலீல் வரதராஜனுடனும் இலகுமய்யாவுடனும் பல முறை கைபேசி வழியாகப் பேசியிருப்பதாகவும் தெரிகிறது. இந்த விவரங்களை கொலை நடந்த சில மணிநேரத்திற்குள் காவல் துறை துப்பு துலக்கி விட்டதாகக் கூறப்படுகிறது.

     குற்றத்தை நேரில் கண்ட சாட்சியான வாஞ்சிநாதனின் கூற்றின் அடிப்படையில், மேல் நடவடிக்கை எடுத்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

     கொலை நடந்த விதம் குறித்த வாஞ்சிநாதனின் சாட்சியத்தை ப. பா. மோகன் அறவே மறுத்தார். சி.மகேந்திரன் தமது கட்சிக்கும் இந்தக் கொலைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று மறுத்ததோடு, பழனி கொலையை வன்மையாகக் கண்டிப்பதாகவும் சொன்னார். ஆனால், நிலத் தரகுத் தொழில் போட்டி காரணமாக இக்கொலை நடைபெற்றிருக்கலாம் என்று அவர் சந்தேகம் தெரிவித்தார்.

     நஞ்சப்பாவைப் பொறுத்த வரை, இந்தக் கொலைக்கும் கட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், ஓரிரு கட்சி உறுப்பினர்கள் ஒருவேளை இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும், ஆனால் இராமச்சந்திரன், வரதராஜன், இலகுமய்யா ஆகியோர் இக்குற்றத்தில் தொடர்பு கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

2.. கொலைக்கான நோக்கம் குறித்து

     பழனியைக் கொலை செய்தவர்களின் நோக்கம் குறித்துப் பொதுமக்களிடம் திரட்டிய செய்திகளின் அடிப்படையிலும், காவல் துறையினர் குறிப்பிடும் விவரங்களின் அடிப்படையிலும், கொலைக்கான நோக்கம் என்று நாங்கள் கருதுவது பின்வருமாறு.

     பழனி பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்படத் தொடங்கிய பின், நீலகிரி என்ற ஊரைச் சேர்ந்த சில இளைஞர்கள், அக்கழகத்தில் இணைந்து செயல்படத் தொடங்கினர். அது வரை அந்த ஊரில், இராமச்சந்திரன் சார்ந்துள்ள கம்யூனிஸ்டுக் கட்சி மட்டுமே இயங்கி வந்துள்ளது. பெரியார் தி.க. இளைஞர்கள் கறுப்புச் சட்டை அணிவதற்கு இரமாச்சந்திரனின் ஆட்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கறுப்புச் சட்டையைக் கிழித்து தீயிட்ட நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், இது குறித்து தாமே கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிடம் முறையிட்டதாகவும் கொளத்தூர் மணி கூறுகிறார்.

     கடந்த உள்ளாட்சித் தேர்தலில், நாகமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு, இரமச்சந்திரனின் மாமா திம்மராயனின் மனைவி வனிதா போட்டியிட்டார். அவரை எதிர்த்து, பெரியார் தி.க. தோழர் மாருதியின் தாயார் நாராயணம்மாள் போட்டியிட்டுத் தோற்றார். தம்மை எதிர்த்து ஒருவர் போட்டியிட்டதையே இராமச்சந்திரனைச் சேர்ந்தவர்கள் பகைச் செயலாக எடுத்துக் கொண்டனர் எனப்படுகிறது.

     இதையடுத்து, 2012 ஏப்ரல் 6ஆம் நாள், நீலகிரி வரதராஜசாமி கோயில் திருவிழாவில் மாருதியின் சித்தப்பா அன்னையப்பாவை வம்புக்கு இழுத்து, நாராயணம்மாவின் கணவரையும் மூன்று மகன்களையும் இரமாச்சந்திரனைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர். பெரியார் தி.க. ஆதரவாளர்களும் திருப்பித் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக, இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது.

     தாக்குதலுக்கு உள்ளான பெரியார் தி.க. ஆதரவாளர்கள், சிகிச்சைக்காக ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, இராமச்சந்திரனும் அவரைச் சேர்ந்தவர்களும் அங்கேயே சென்று, அவர்களை மீண்டும் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது.

     இதுதொடர்பாக, இராமச்சந்திரனைத் தவிர்த்து மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

     உத்தனபள்ளி காவல் நிலையம் சென்று நாங்கள் விசாரித்த போது அந்தக் காவல் நிலைய உதவி ஆய்வாளர், "வரதராஜ பெருமாள் கோவில் தகராறுதான் இந்தப் பிரச்ச்சனைகளுக்கேல்லாம் முதல் காரணம். பின்னிட்டு இரு தரப்பினர் மீதும் இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தொடர்ந்து ஊரில் பிரச்சனை ஏற்படுவதால் இரண்டு முறை ஆர்.டி.ஒ மூலம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினோம். பழனி மீது இங்கு எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. பழனி கொலை வழக்கு சம்பந்தம்மாகத் தீவிரமாகத் தலைமறைவுக் குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். சம்பவம் நடந்த பகுதி மக்களிடையே இன்னும் அச்சம் நிலவி வருவதால் பாதுகாப்புக் கொடுத்து வருகிறோம்." என்று குறிப்பிட்டார்.

     பழனி கொலைக்கான உடனடிக் காரணங்கள் இவையே எனக் கருதுகிறோம்.

3. கொலையுண்டவர் குறித்து

     பாலேபுரம் கிராமத்தில் பழனி வாழ்ந்து வந்த வீட்டைப் பார்த்தோம். அவரது எளிமைக்கும் உழைப்புக்கும் சான்றாக அது காட்சியளித்தது. அவரது துணைவியாரையும் அவ்வூர்ப் பொதுமக்களையும் அங்கேயே சந்தித்துப் பேசினோம். பழனியின் பொதுத் தொண்டு குறித்தும் இயல்பான பழகும் தன்மை குறித்தும் அனைவரும் வியந்து பேசினர்.

     பழனி, சி.பி.எம் கட்சியில் பகுதிச் செயலாளராகப் பணியாற்றியவர். பிறகு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலும், அதன் பின்னர், தமிழ் நாடு விடுதலைப் படை அமைப்பிற்கு ஆதரவாளராகவும் இருந்தார் என்று சொல்லப்படுகிறது. ஈராண்டுகளுக்கு முன்புதான் அவர் பெரியார் திராவிடர் கழகத்தில் இணைந்து களப் பணியாளராக இருந்துவந்தார்.

     நாங்கள் சந்தித்த பொதுமக்கள் யாவரும் பழனிக்கு ஏற்பட்ட கொடிய முடிவு குறித்து வேதனைப்பட்டதோடு, அவரது இழப்பை ஈடுசெய்ய முடியாது என்றும் குறிப்பிட்டனர்.

     பழனி இப்பகுதி இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார் என்பது தவிர, அவர் மீதான பகைக்கு வேறு காரணம் இருக்கக் கூடுமா? இந்தக் கேள்வியை நாங்கள் பலரிடமும் கேட்டுப் பார்த்தோம். இல்லை என்பதே அனைவரிடமும் வெளிப்பட்ட பதிலாக இருந்தது.

     பழனியின் மகன் வாஞ்சிநாதன், தனித்தும் இப்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள கலீலுடன் சேர்ந்தும், நிலம் வாங்கி விற்கும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தாரா? அப்படியொரு விருப்பமும் நோக்கமும் இருந்ததை வாஞ்சிநாதனே ஒப்புக் கொண்டார். தங்கள் சொந்த ஊரான சந்தூரில் இருந்த பூர்வீக நிலச் சொத்தை விற்று விட்டு, அந்தத் தொகையில் நிலம் வாங்கிப் போட்டதாகவும், ஆனால், அதைத் திரும்ப விற்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பழனியின் குடும்பத்தோடு கலீல் நெருக்கமாக இருந்ததை பழனியின் மனைவி முருகம்மாளே குறிப்பிட்டார். ஆனால், வாஞ்சியின் நில வணிகத் தொழில் ஆர்வத்துக்கும் பழனி கொலைக்கும் எவ்விதத் தொடர்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. கொலையுண்ட பழனியைப் பற்றி ஒரு கோடீஸ்வரப் பணக்காரர் என்றும், அவரது கொலைக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்றும் கூறுவது மறைந்த மக்கள் தொண்டனின் மாண்பைக் குறைப்பதாக நாங்கள் கருதுகிறோம்.

     இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்தவர்கள், பழனியின் கடந்த கால நடவடிக்கைகள் வேறுசில வழக்குகளோடு தொடர்பு கொண்டிருந்ததைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், அவற்றிற்கும் இந்தக் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக நாங்கள் கருதவில்லை.

     பழனி போன்றவர்கள் நம் தமிழ்ச் சமூகம் பாதுகாக்க வேண்டிய நல்முத்துக்கள் என்பதை மட்டும் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறோம்.

4. குற்றஞ்சாட்டப்படுவோர் குறித்து

இராமச்சந்திரன், மாணவப் பருவம் தொட்டுப் பொதுவுடைமை இயக்கத்தில் முனைப்பாக இயங்கி வந்துள்ளார். கிருட்டிணகிரி அரசுக் கல்லூரி மாணவர் தலைவராகச் செயல்பட்டு, பெங்களூரு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார். ஒரு முறை கெலமங்கலம் ஒன்றியத் தலைவராகவும் இரண்டு முறை தளித் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    2006இல் சிபிஎம் கட்சியை விட்டு விலகி, சுயேச்சையாக சிபிஐ கட்சியை எதிர்த்தும், 2011இல் அதே சிபிஐ கட்சி வேட்பாளராகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 2006இல் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட நாகராஜ ரெட்டி சிபிஐ கட்சியிலிருந்து விலகி, இப்போது அதிமுகவில் இருக்கிறார். இவர் இராமச்சந்திரனின் ஆட்கள் இருமுறை தம்மீது கொலைத்தாக்குதல் நடத்தியதாக எங்களிடம் கூறினார்.

     இராமச்சந்திரனின் மாமனார் இலகுமய்யா பற்றி இருவிதமான கருத்துகள் நிலவுகின்றன. அவர் இந்தப் பகுதியில், கிருட்டிணகிரி மாவட்டத்தில், மக்களுக்கான பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் என்கின்றனர். மறு புறம், இவரை வன்முறையாளர் என்றும், அரசியல் போட்டியாளர்களை வன்முறை வழியில் ஒழித்துக் கட்டக் கூடியவர் என்றும் அச்சத்துடன் குறிப்பிடுவோரும் உள்ளனர். உண்மையில், இவரைப் பற்றிய இந்த இருவிதமான கருத்துகளும் அவரது அரசியல் வாழ்வின் இரு வளர்ச்சிக் கட்டங்களைக் குறிப்பனவாக இருக்கலாம் எனக் கருதுகிறோம்.

     இராமச்சந்திரனின் அண்ணன் வரதராஜனுக்கும் கம்யூனிஸ்டு இயக்கச் செயல்பாடுகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இவர் முழுக்க முழுக்க நிலத் தரகு தொழில் செய்து வந்துள்ளார் எனத் தெரிகிறது. இவரே இவ்வழக்கின் முதல் குற்றவாளியாக காவல் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

     இது மட்டுமல்லாமல், இவரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற வேறு பல வன்முறைச் செயல்கள் பற்றியும் பல தகவல்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, சி.பி.ஐ முன்னாள் மாட்டச் செயலாளர் நாகராஜ ரெட்டி அவர்களும் தம் மீது இரண்டு முறை கொலைவெறித் தாக்குதல் தொடுக்கப்பட்டதையும், இரண்டாம் முறை தாம் படுகாயம் உற்று சிகிச்சை பெற்று வருவதையும் எங்களிடம் தெரிவித்தார்.

     இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மற்றவர்களைப் பொறுத்த வரையில் எவ்வித அரசியல் குறிக்கோளும் அற்றவர்களாகவே தெரிகிறது.

5. கொலைக்கான சமூகப் பகைப்புலம் குறித்து

     உலகமயம் என்ற இன்றைய முதலாளிய வளர்ச்சிக் கட்டம், தனியார்மயத்திற்கும் தாராளமயத்திற்கும் இட்டுச் சென்றிருப்பதாகச் சொல்கின்றனர். அதுவே, பொதுவாழ்வில் ஊழல் மயத்திற்கும் அரசியலில் குற்றமயத்திற்கும் வழி செய்துள்ளது.

     இந்த ஊழல் மயமும் குற்றமயமும் உலகமயத்தை எதிர்க்கும் கொள்கை கொண்ட கட்சிகளையும் கூட விட்டுவைக்கவில்லை என்பதுதான் நாம் ஆய்வில் கொண்டுள்ள நிகழ்வுகளில் வெளிப்படுகிறது,    தமிழகத்தின் எல்லையோரத்தில் இருக்கும் கிருட்டிணகிரி மாவட்டம், குறிப்பாக, தளி, தேன்கனிக்கோட்டை போன்ற பகுதிகள் பொருளியல் வளர்ச்சியும், அரசியல் விழிப்பும் அற்று காலத்தால் பின்தங்கிக் கிடப்பவை. தமிழ் மக்களோடு தமிழறியாத சிறுபான்மை மக்களும் திரளாகச் சேர்ந்து வசிப்பவை. பன்னாட்டு மூலதனத்தின் பாய்ச்சலுக்கும் இலாப வேட்டைக்கும் இலக்காகி, வளமைக்கும் வறுமைக்குமான கொடுமுரண்பாட்டில் இம்மக்கள் சிக்கிக் கிடக்கின்றனர்.

     குவாரித் தொழில் என்ற பெயரில், மரபு வழிப்பட்ட வேளாண்மைக்குரிய விளைநிலங்கள் பறிபோகின்றன. சிறப்புப் பொருளியல் மண்டலங்களின் பேரால், உழவர்களை ஊரை விட்டுத் துரத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்தப் பின்னணியில், பின் தங்கிய மக்களை ஏய்த்துப் பிழைப்பதும் அச்சுறுத்தி அடக்கி வைப்பதுமே திறமான அரசியல் என்ற புதுவாய்ப்பாடு பிறக்கிறது.

     இந்தக் கொடும்போக்கை எதிர்த்து உறுதியாக ஊன்றி நிற்பவர்கள் யாராயினும் தன்னல வெறிகொண்ட ஆதிக்க ஆற்றல்களின் கடுங்கோபத்திற்கும் தீராப் பகைக்கும் ஆளாவதன் ஒரு வெளிப்பாடே பழனி கொலை என்று கருதுகிறோம். 

பரிந்துரைகள்

      தமிழக அரசுக்கு:

     1. பழனி கொலை வழக்கில் புலனாய்வுப் பொறுப்பை ஏற்றுள்ள உள்ளூர்க் காவல்துறையினர் இதுவரை மேற்கொண்டுள்ள முயற்சிகளை நாங்கள் குறை கூற விரும்பவில்லை என்றாலும், பொதுமக்களிடம் உள்ளூர்க் காவல்துறையினர் மீது நம்பிக்கையற்ற போக்கே பரவலாக மேலோங்கிக் காணப்படுகிறது. இராமச்சந்திரன், இலகுமையா ஆகியோரைக் கைது செய்ய முடியவில்லை என்பதும், கடந்த காலத்தில் இது போன்ற நிகழ்வுகளில் காவல்துறை நடந்துள்ள விதமும் இந்த நம்பிக்கையின்மைக்கு அடிப்படையாக உள்ளது. சான்றுரைக்கக் கூடிய .பலரும் இதனால் வெளிப்படையாக உண்மை பேசத் தயங்குகிறார்கள்.

     குற்றவாளிகள் பிடிபட்டுக் கூண்டில் நிறுத்தப்பட்டாலும், எப்படியும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி வெளியே வந்து தங்களைப் பழி தீர்த்து விடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

     இந்நிலையில் பழனி கொலை வழக்கின் புலனாய்வுப் பொறுப்பை நடுவண் புலனாய்வுக் கழகம் (CBI) அல்லது தமிழகக் காவல்துறையின் குற்றப் பிரிவுப் புலனாய்வுத் துறையினரிடம் (CBCID) ஒப்படைக்கும்படி பரிந்துரை செய்கிறோம்.

     2. கிருட்டிணகிரி மாவட்டம் தளி, கெலமங்கலம், இராயக்கோட்டை பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்துள்ள கொலை மற்றும் கொடுந்தாக்குதல் வழக்குகளில் இலகுமையா-வரதராஜன் குழுவினருக்குத் தொடர்புடையவற்றை விரைந்து நடத்தி முடிக்க ஒரு தனி நீதிமன்றம் அமைக்கும்படி பரிந்துரைக்கிறோம்.

    3. புலனாய்வை இழுத்தடிப்பது, பொய்க் குற்றவாளிகளை சரணடையச் செய்வது, சான்றளிப்பவர்களை அச்சுறுத்தியோ விலைக்கு வாங்கியோ பொய்ச் சான்றியம் அளிக்கச் செய்வது போன்ற சட்டப்புறம்பான முயற்சிகளுக்குத் துணைநின்ற காவல்துறை அதிகாரிகளைக் கண்டறிந்து உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும்படி பரிந்துரைக்கிறோம்.

     4. உத்தனப்பள்ளி, நீலகிரி ஆகிய காவல் சரகங்களில் கடந்த பத்தாண்டுகளில் பதிவாகியுள்ள கொலை மற்றும் கொடுந்தாக்குதல் நிகழ்வுகள் குறித்து நடந்துள்ள புலனாய்வு முதலான சட்ட நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்குச் சட்ட ஆணையர் குழு ஒன்றை அமர்த்தும்படி பரிந்துரைக்கிறோம்.

     5. கிருட்டிணகிரி மாவட்ட அளவிலும் தளி, தேன்கனிக்கோட்டை வட்ட அளவிலும் காவல்துறை, வருவாய்த்துறை, நீதித்துறை ஆகியவற்றில் அடியோடு மாற்றங்கள் செய்து, சட்டத்தின் ஆட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கு அவசர உணர்வுடன் ஆவன செய்யும்படி பரிந்துரைக்கிறோம்.

    6. இந்தப் பகுதியில் உழவர்களிடமிருந்து செய்யப்பட நிலப் பறிப்புகளைக் கண்டறிந்து, நிலப் பறிப்பாளர்களைக் கூண்டிலேற்றுவதோடு, பறிக்கப்பட்ட நிலத்தை உரியவர்களுக்கே மீட்டுத் தரும் படி பரிந்துரைகிறோம்.

     7. தமிழ்நாட்டுக்கு வெளியில் இருப்பவர்களோ பெருங்குழுமங்களோ இப்பகுதியில் விளைநிலம் வாங்குவதைத் தடை செய்யும்படி பரிந்துரைக்கிறோம். கர்நாடகம், ஆந்திரம், திரிபுரா போன்ற பல மாநிலங்களில் இதுபோன்ற தடைச்சட்டங்கள் நடப்பில் இருப்பதை முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.

     8. இப்பகுதியில் கற்குவாரித் தொழிலும் சிறப்புப் பொருளியல் மண்டலங்களும் உழவுத் தொழிலையும் சுற்றுச் சூழலையும் மக்களின் இயல்பு வாழ்வையும் ஊறுபடுத்தியிருப்பதோடு, ஊழலுக்கும் குற்றச் செயல்களுக்கும் நாற்றங்கால் ஆகியிருப்பதைக் கருத்தில் கொண்டு, கற்குவாரித் தொழிலை ஒழுங்குமுறைப்படுத்தும்படி பரிந்துரைக்கிறோம்.

     9. நிலச் சொத்திலான கொடுக்கல் வாங்கல்கள் தமிழகமெங்கும் விரிவான முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் குற்றச் செயல்களுக்கும் வழிவகுத்திருப்பதைக் கருத்தில் கொண்டு, இங்கொன்று அங்கொன்றாக ஒரு சில நிலப்பறிப்பு வழக்குகள் தொடுப்பதோடு நில்லாமல் முழுமொத்தமாக நிலவணிகத்திலும் இதுதொடர்பான தரகுத் தொழிலிலும் ஒழுங்கும் நேர்மையும் நிலைநாட்டுவதற்கு தேவையான சட்டங்கள் இயற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி பரிந்துரைக்கிறோம்.

     10. இப்பகுதி மக்களின் விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் ஊர்தோறும் பள்ளிகள் திறக்கும்படியும், தமிழ் மக்கள் தமிழிலும், கன்னடர், தெலுங்கர் போன்ற சிறுபான்மை மக்கள் அவரவர் தாய் மொழியிலும் கல்வி கற்கவும், கட்டாயப் பயில்மொழியாகத் தமிழும் கற்கவும் ஏற்ற வகையில் சமச்சீர்க் கல்வியை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படியும் பரிந்துரைக்கிறோம்.

     இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிக்கு:

     1. பழனி கொலையை இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி சார்பில் தா.பாண்டியன் வன்மையாகக் கண்டித்திருப்பதை வரவேற்கிறோம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் அல்லது சரணடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில் இவர்களில் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களாக இருப்பவர்கள் தம்மைக் குற்றமற்றவர்களாக நிரூபித்துக் கொள்ளும் வரையில் அவர்களைக் கட்சி உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விலக்கி வைக்குமாறு பரிந்துரைக்கிறோம்.

.     2. இப்பகுதியில் நடந்துவரும் நில வணிகம் தொடர்பான குற்றச் செயல்களில் தங்கள் கட்சியினருக்கு எவ்வகைப் பங்கு உண்டு என்பதை ஆய்ந்தறிந்து ஆவண செய்வது இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் கடமையாகும் என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

- சமூக வன்முறைக்கு எதிரான உண்மை அறியும் குழு

Pin It