1. அணுவின் அற்புத ஆற்றல்:

பேராற்றல் படைத்த மேகநாதன் இலக்குவனுடன் உடற்றிய போரில் இறந்துபடுகிறான். இச்செய்தி இலங்கை நகருக்கு எட்டு கிறது. மண்டோதரியும் இதனை அறிகின்றாள். ஒரு மலையின் மீது ஒரு மயில் வீழ்ந்தாலென்ன மைந்தன் உடலின் மீது விழுந்து புலம்புகின்றாள். அவனுடைய அளவற்ற புய வலியையும், வில்லாற்றலையும் எண்ணிப் பலவாறு புலம்பு கிறாள்.

முக்கணான் முதலினோரை

உலகொரு மூன்றி னோடும்

புக்கபோர் எல்லாம் வென்று

நின்றஎன் புதல்வன் போலாம்

மக்களில் ஒருவன் கொல்ல

மாள்பவன்? வான  மேரு

உக்கிட அணுஒன்று ஓடி

உதைத்தது போலும் அம்மா!

என்பது கம்பனின் வாக்கு. “என் மகன் மேகநாதன்  சாதாரணமானவன் அல்லன் மூன்று முகங்களிலும் நடைபெற்ற எல்லாப் போர் களிலும் மூன்று கண்களையுடைய சிவபெரு மானையும் வென்று வாகை சூடியவன் அன்றோ? அத்தகையவன் இன்று கேவலம் ஒரு மனிதனால் கொல்லப்பட்டு விட்டான். இச் செயல் வானுற ஓங்கி நிமிர்ந்து நிற்கும் மேரு மலையை அணு(யவடிஅ) ஒன்று ஓடி உதைத்தது போலல்லவா இருக்கிறது? என்று வியப்பு அடைந்து கணக்கு போட்டுப் புலம்புகிறாள். உருவத்தினைக் கண்டு எள்ளி விட்டாள். உருவத்தினைக் கொண்டே தன் மகன் மேகநாத னின் ஆற்றலைப் பெரிதாக மதிக்கிறாள். இலக்குவன் - அணு; மேகநாதன் - மேருமலை. பாவம்!  அணுவின் ஆற்றலை அறியாத அபலை மண்டோதரி. கம்ப நாடன் காலத்தில் அணுவி னைப் பற்றி மக்கள் ஓரளவு அறிந்துதான் இருந்தனர். என்றாலும், இன்று அதன் அற்புத ஆற்றலை மக்கள் அறிந்திருக்கிற அளவிற்கு. அன்று மக்கள் அறியவில்லை. அதை அறிந்து கொள்ளும் அளவிற்கு அறிவியல் அக்காலத்தில் வளர்ச்சி பெறவில்லை.

அணுவின் ஆற்றல்:

ஹிரோஷிமா, நாகசாகி என்ற இரண்டு ஜப்பான் நகர்களிலும் வீழ்த்தப்பெற்ற அணுகுண்டின் திருவிளையாட லுக்குப் பிறகு மக்கள் அணுவின் அளப்பரிய ஆற்றலை ஒருவாறு அறிந்தனர். இன்று அணுவின் ஆற்றலைக் கண்டு உலகமே நடுநடுங்குகிறது. இரஷ்யாவும், அமெரிக்காவும் மாறி மாறி அணுகுண்டுச் சோதனைகளை நடத்தி வருகின் றன. மனிதனுடைய ஆணவமும், அகங்காரமும் இவ்வுலகை என்னென்ன பாடுபடுத்துமோ என்று அருளுள்ளம் படைத்த அறிஞர்கள் நெஞ்சம் கவல்கின்றனர்.  ஐக்கிய நாட்டு மக்கள் சபை அணுவின் ஆற்றலை மானிட நலனுக்குப் பயன்படுத்த வேண்டுமென்று அடிக்கடி வற்புறுத்தி வருகின்றது. அமெரிக்க நாட்டு அணு வாற்றல் குழுவும் அது போன்ற பிற நாடுகளில் உள்ள கழகங்களும்  அணுவாற்றலை எந்தெந்த வகைகளிலெல்லாம் மக்கள் நலனுக்குப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ந்து வருகின்றன.  ஆண்டு தோறும் கோடிக்கணக்கான டாலர் இதற்காகச் செலவிடப்படுகின்றது. ஆயிரக் கணக்கான அறிவியலறிஞர்கள் இத் துறையில் தங்கள் முழு நேரத்தையும் செலவழித்து ஆராய்ந்து வருகின்றனர்.

அறிவியல் மேதை ஐன்ஸ்டைன் (Einstein) தந்துள்ள மந்திரத்தால் அறிவியலறிஞர்களின் இரகசியத்தை                                                                                                                                                                                                                                  அறிந்தனர். அம்மையப்பர் தன்மையில் உள்ள அணுவின் அற்புத அமைப்பைக் கண்டு இறும்பூது எய்துகின்றனர்.  ‘சடமே சக்தி’ என்று அம்மந்திரம் கூறுகின்றது; பொருண்மையே(mass) ஆற்றலாக மாறுகிறது என்பது ஐன்ஸ்டைன் உணர்த்திய உண்மை. இங்ஙனமே, ஆற்றலும் பொருளாக மாறும் விந்தையையும் காண்கிறோம்.  அணுப்பிளக்கும் கருவிகளில் தம் இலக்குகளைத் தாக்குவதற்காகத் தயாரிக்கப்படும் துணுக்குகளுக்கு மின்னாற்றலை ஊட்டும் பொழுது ஆற்றல் பொருளாக மாறுகின்றது. இதனைப் பின்னர் காண்போம். ஒரு கிராம் எடையுள்ள நிலக்கரியை அணுச்சிதைவு செய்து 2500 டன் நிலக்கரியை எரித்தால் கிடைக்கும் அளவு சூடு உண்டாகும் எனக்கணக்கிட்டுக் கூறுகின்றனர்  அறிவிய லறிஞர்கள். குறளாய் இருந்த வாமனன் நெடு மாலாய் வளர்ந்து காட்டிப் பேராற்றலை வெளிப் படுத்தியது போல அணுவும் சிதைந்து தன் அற்புத ஆற்றலை வெளிப்படுத்துகிறது. சிவபெருமான் நெற்றிக் கண்ணினின்றும் வெளிப்படும் சுடர்களையொத்த முச்சுடர்களை வீசி நிற்கின்றது. அதனால் பத்துக்கோடி சுழியுள்ள சூட்டினையும் வெளிப்படுத்துகிறது. கதிரவனின் மேற்பரப்பிலுள்ள சூடு கூட சுமார் 60000 டிகிரி செல்சியசு தான். ஆனால் அணுவின் அகட்டில் பொருளனைத்தினையும் உருக்கி ஆவியாக்க வல்ல பெருஞ்சூடு அடங்கியிருக்கிறது. ஒளியோ கோடானு கோடி  சூரிய ஒளி போன்றது. ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீழ்ந்த போழ்து அந்நகர் சூரியன் வயிறாக மாறியது. நூறு கோடி சூரியன்கள் திரண்டு ஒருங்கே வந்தாற் போன்ற பேரொளி தோன்றியது. இவற்றைத் தவிர நினைக்கவும் முடியாத நெருக்கடி - காற்றின் அமுக்கம் - இறுக்கம் - உலகமே தலைமீது விழுவது போன்ற காற்றின் மோதல் - ஆகியவை ஒன்று சேர்ந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்தது. எம்மருங்கும் வீசிய மின்வீச்சால் ஆயிரக் கணக்கான மக்கள் மடிந்தனர். அணுகுண்டு விளைவித்த சேதத்தில் உருத்திர தாண்டவத் தைத்தான் பார்க்கிறோம்; ஊழிக்காலத்து இறுதியில் சிவபெருமான் ஆடும் ‘கொடு கொட்டி’க் கூத்தைத்தான் காண்கின்றோம்.

அணுச்சிதைவில் எழும் சூடு:

வேதியியல் மாற்றத்தில்(chemical change) வெப்பம் வெளி யாகிறது. எடுத்துக் காட்டாகக் கரி எரியும் பொழுது, கரியும், காற்றிலுள்ள உயிரியமும் (oxygen) சேர்ந்து கரியமில வாயுவாக (கார்பன் டை ஆக்சைடு) மாறுங்கால் சூடு வெளிப் படுவதைக் காணலாம். கரியில் நம் கண்ணுக் கும் , பிற பொறிகளுக்கும் தெரியாமல் அடங் கிக் கிடந்த சூடு வேதியியல் மாற்றத்தின் பொழுது  வெளிப்படுகின்றது. கரியிலுள்ள அணுத்திரளைகள் அணு, அணுவாக உடையும் பொழுது முன் உறைந்து கிடந்த ஆற்றல் வெளிப்படுகின்றது. வேதியியல் மாற்றத்தில் வெளிப்படும் சூடு இதுதான். அணுவே சிதைத் தழியும் பொழுது இதைப் போல் பல்லாயிரம் மடங்கு சூடு வெளிப்படுகிறது.  ஒரு கிராம் எடையுள்ள கரியில் கிடக்கும் அணுத்திரளைகள் சிதைந்து எரிந்தால் எட்டாயிரம் கனலி(உயடடிசநை)  சூடு எழும். ஆனால், ஒரு கிராம் கரியில் அணுச் சிதைவு ஏற்பட்டால் பதினாறாயிரம் கனலி சூடு வெளிப்படுகிறது. எனவே, அணுத்திரளையின் சிதைவினால் கரி எரியும் பொழுது உண்டாகும் ஆற்றலை விட அணுவே சிதையும் பொழுது எழும் ஆற்றல் இரண்டு கோடி மடங்கு மிகுதியாகும் என்பதாகின்றது. ஒரு பட்டாணி அளவு நிலக்கரியினைச் சிதைத்து ஒரு கப்பலை அட்லாண்டிக் மாபெருங் கடலைத் தாண்டி ஓடச் செய்யலாம் என்று அறிவியலறிஞர்கள் கணக் கிட்டுக் கூறுகின்றனர். அரை விரற்கடை அளவு நிலக்கரியின் அணுக்களைச் சிதைத்து ஐந்து புகைவண்டியில் ஏற்றிவரும் நிலக்கரி எரிவதால் உண்டாகும் சூட்டினை வெளிப்படுத்தலாம் என்று அறுதியிட்டு உரைக்கின்றனர். அம்மம்ம! அணுச் சிதைவினால் எழும் ஆற்றலை என்னென்றுரைப்பது!     

(ஆக்கம் தொடரும்)

Pin It