தண்ணீருக்குள் மீன்கள், தவளைகள் மாதிரி  நம்மால் சுவாசிக்க முடியுமா என்றால் அதற்குப் பல்வேறு உத்திகள் இன்று ஆராயப்பட்டு வருகின்றன.  தண்ணீரில் இருந்து ஆக்சிஜனைப் பிரித்து  சுவாசிக்க வழி உண்டாம். அர்னால்ட் லாண்டே(Arnold Lande) என்பவர் புதிய சிந்தனை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் ஹுஸ்டன் நகரில் டெக்சாஸ் மருத்துவக் கல்வியகப் பல்கலைக் கழகத்தில் இருந்து பணி ஒய்வு பெற்றவர். இதயம் மற்றும் நுரையீரல் அறுவை சிகிச்சை மருத்துவர்.

தண்ணீருக்குள் மூழ்கி முத்தெடுப்பவர் ஆகட்டும், ஆழ்கடல் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் ஆகட்டும் இவரது உத்தி மிகவும் உதவும்.

பொதுவாக கடலடியில் மூழ்குபவர் காற்று உருளைகளைச் சுமந்து செல்வார் அல்லவா?  நுரையீரலுக்குள் சுமந்து செல்லும் அந்தக் காற்றினுள் நைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற மந்த வாயுக்கள் அடங்கி இருக்குமே. அந்த வாயுக்கள் இரத்தத்தில் கலந்து கரைந்து விடும்.  பின்னர் அவர்கள் தண்ணீர் மட்டத்திற்கு  வெளியே வரும்போது அந்த வாயுக்கள் அழுத்தக் குறைவினால் இரத்தத்தில் இருந்து குமிழிகளாக வெளிப்படும்.  ஏறத்தாழ சோடா பாட்டில் திறந்த போது நுங்கும் நுரையுமாகப் பொங்குமே அந்த மாதிரி ‘திடும்’ என்று ஜட வாயுக்கள் வெளிப்பட்டால் இரத்த நாளங் களுக்குள்ளும் ஆபத்து. அன்றியும், கால், கை, மூட்டிலும் வலி உண்டாகும். தசைப்பிடிப்பு, பக்க வாதம் என்று கூட வர வாய்ப்பு உண்டு.

அதனாலேயே நீர் மூழ்கி வீரர்கள் காற்று உருளைகளைச் சுமந்து செல்லாமல் ஆக்சிஜன் நிறைந்த உருளைகளையே எடுத்துச் செல்கின்றனர்.  ஆனால் திரவ ஊடகத்தில் சுவாசிக்க உதவும் உத்தி 1960 ஆம் ஆண்டுகளில் உதித்தது. திரவத்தில் கரைந்துள்ள ஆக்சிஜனைப் பிரித்து சுவாசித்திட நுரையீரல்களில் அடங்கிய ‘அல்வியோலி’(alveoli) என்கிற நுண்ணிய இழைவேர்கள் உதவுகின்றன. ஆனால், ஒரு திரவத்தில் கரைந்துள்ள ஆக்சிஜனை உறிஞ்சி, கரியமில வாயுவை வெளியிடும் வேகத்திற்கு இந்த அல்வியோலி ஈடு கொடுக்க இயலாது. அதனால், நீர் மூழ்கி வீரர் உயிருக்கு மூச்சுத் திணறும்.

இந்த வகையில் இத்தாலியில் வெனிஸ் நகரில் நடைபெற்ற பயன்பாட்டு உயிரி  மின்னணு நுட்பம் மற்றும் உயிரி விசை நுட்பம் (Applied Bionics and Biomechanics) தொடர்பான முதலாவது சர்வதேச மாநாட்டில் லாண்டே ஒரு புதுச் சிந்தனையை வெளியிட்டார்.

நீர் மூழ்கி வீரர்கள் பயன்படுத்தும் தலைக் கவசத்தினுள் ஆக்சிஜன் செறிந்த பெர்ஃபுளூரோ கார்பன் திரவத்தை நிரப்பி விடலாம் என்கிறார். போர்க் கவசம் மாதிரி மார்பிலும் ஓர் உறையை மாற்றிக் கொள்வதாக இருக்கட்டும். உள்மூச்சு வாங்கும்போது மார்பு விரிவடை யுமே. அப்போது மார்புக் கவச உறை அழுத்தப் படுவதால், அதில் இருந்து பெர் ஃபுளூரோ கார்பன் திரவம் பிதுக்கப்பட்டு தலைக்கவசத்திற் குள் பாயும். அப்போது அதில் அடங்கிய ஆக்சிஜன் சுவாசத்திற்குப் பயன்படும். வெளிமூச்சில் அடங்கிய கார்பன் டை ஆக்சைடை ஏதேனும் செவுள் போன்ற சவ்வு அமைப்பினூடே வெளியேற்ற வேண்டும்.  அல்லது சுண்ணாம்புக் கரைசல் போன்ற ஏதேனும் வேதிமத்தில் கரைக்க வேண்டும்.

நியூ மோர்ஸ்/ஆல்ஃபிரெட், ஐ.டீ பான்ட்  குழந்தைகள் மருத்துவ மனையில்(Nenours / Alfred I.duPont Hospital for Children) தாமஸ் ஷாஃபர் இந்தப் புதிய சுவாச நுட்பத்தை ஏனைய உயிரினங்களில் பரிசோதித்துப் பார்த்து விட்டனர், விஞ்ஞானிகள். இந்தத் தொழில் நுடபம் மட்டும் நிரூபிக்கப்படும் பட்சத்தில். ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் கடல் ஆராய்ச்சிகள் நடத்தலாம். அது மட்டுமின்றி, மெக்சிகோ வளை குடாவில் 1500 மீட்டர்கள் ஆழ்நீர் அடிவான எண்ணெய்த் துரப்பணி பணியில் இந்த உத்தி பெரிதும் உதவக்கூடும்.

Pin It