இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென
 இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்;
இடையின்றிக் கதிர்களெலாம் சுழலுமென
 வானூலார் இயம்பு கின்றார்;
இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப்
 பொருள்களெலாம் இயற்கை யாயின்
இடையின்றிக் கலைமகளே! நினதருளில்
 எனதுள்ளம் இயங்கொ ணாதோ!
                                                           - பாரதியார்

‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்ற பழமொழியை அறியாதவர்கள் இல்லை. இந்தப் பழமொழி அணுவிற்கு முற்றிலும் பொருந்தும். இரண்டாம் உலகப் பெரும் போருக்குப் பிறகு ‘அணு’ என்ற சொல்லை உச்சரிக்காதவர்களே இல்லை. கல்வியறிவு சிறிதும் இல்லாது குக்கிராமங்களில் வாழும் பாமரர்களும், ‘அணுகுண்டின்’ திருவிளையாடல் களைப் பற்றிப் பேசுகின்றனர். சிறுவர் இதழ் களும் அணுகுண்டினைப் பற்றி முழங்குகின் றன.  மேலை நாட்டிலும், கீழை நாட்டிலும் அணுவின் அடிப்படையில சில சமயங்களே எழுந்துள்ளன. சமண மதம் பேசுவதும் அணுக் கொள்கையைத்தான். மணிமேகலை என்ற நூலில்,

எல்லைஇல் பொருள்களில் எங்கும் எப்பொழு
                                                                                      தும்  
புல்லிக் கிடந்து புலப்படு கின்ற    
வரம்புஇல் அறிவன் இறை; நூற் பொருள்கள்
                                                                                ஐந்து
உரம்தரு உயிரோடு, ஒருநாள் வகைஅணு 
அவ்வணு உற்றும், கண்டும் உணர்ந்திட, 
பெய்வகை கூடிப் பிரிவதும் செய்யும்;  
நிலம், நீர், தீ, காற்று என நால் வகையின 
மலை, மரம், உடம்பு எனத் திரள்வதும் செய்யும்;
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும்;  
அவ்வகை அறிவது உயிர் எனப்படுமே   

சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதை

என்று ஆசீவக வாதி தன் சமயத்தை எடுத்துரைப்பதைக் காண்கிறோம். நியாய மதம், வைசேடிக மதம் என்பவையும் அணுக்கொள்கை யையே பேசுகின்றன. நியாய மதத் தலைவராகிய கண்ணடர் ‘அணு விழுங்கியார்’ என்றே வழங்கப் பெறுகின்றார். மேலைநாட்டில், டெமாக்கிரிட் டஸ், எபிருயூரியஸ், லூக்ரிஷியஸ் என்பவர் களும் இக்கொள்கையினரே. இன்று உலக சமாதானமும், ஆக்கவேலைகளும் அணுவின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன என்பதை அனைவரும் அறிவர். ஐ.நா.சபையும் அணு பற்றிய பிரச்னைகளில்தான் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றன.

இரண்டாம் உலகப் பெரும் போரில் அணுகுண்டினால் உலகம் அடைந்த கேட்டினை நாம் நன்கு அறிவோம். ஹிரோஷிமா, நாகசாகி என்ற நகர்களில் வாழும் ஜப்பானிய மக்கள் மிகவும் நன்றாக அறிவார்கள். இனி இத்தகைய கேடு உலகிற்கு ஏற்படக்கூடாது என்று அருளுள்ளம் படைத்த அறிஞர்கள் நெஞ்சம் கவல்கின்றனர். அணுவினை ஆக்கத்திற்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று விழைகின்றனர். அணுவாற்றலை எந்தெந்த வகைகளில் ஆக்கவேலைகட்குப் பயன்படுத்த லாம் என்று உலகிலுள்ள அறிவியலறிஞர்கள் அனைவரும் ஆராய்ந்து வருகின்றனர்.

நவீன அறிவியல் கருத்துக்களைத் தமிழில் எழுதிப் பரப்பவேண்டும் என்ற எண்ணம் யான் கல்லூரியில் படித்த காலத்திலிருந்தே சுமார், இருபது ஆண்டுகட்கு முன்னரே (கட்டுரை ஆசிரியர் இந்நூலை எழுதிய ஆண்டு 1958) உண்டு. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை மொழி பெயர்த்தும், இறவாத புது நூல்கள் இயற்றியும்தான் தமிழை வளர்க்க வேண்டும். அதுவே, தமிழ்மொழியின் ஆக்கத் திற்குச் சிறந்த வழி; இன்றியமையாத போக்கு.

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

என்ற குறை தமிழுக்கு இருக்கக்கூடாது. கல்லூரிகளிலும் தாய்மொழி வாயிலாகக் கல்வி பயிற்றப் பெறும் வாய்ப்பு ஏற்படுகின்ற காலத்தில்தான் உயர்ந்த அறிவியல் நூல்கள் தமிழில் பெருக வழி அமையும். இந்தத் துறையில் ஓரளவு பணியாற்ற வேண்டும் என்பது எனது அவா. ஆங்கில மொழிக்கும், தமிழ் மொழிக்கும் தக்க கலைச்சொற்களைக் கொண்டு பாலம் - சேது - அமைத்துவிட்டால் ஆங்கில மொழியிலிருந்து ஏராளமான ‘கருத்துச் சரக்குகள்’ தமிழுக்கு வந்து சேரும். அறிஞர்கள் செய்துவரும் இப்பணியில் எனது முயற்சி சேது கட்டியபொழுது ஒரு சிறு அணில் மேற்கொண்ட முயற்சியைப் போன்றது. எனது சிறு முயற்சியை அறிஞர் உலகம் பாராட்டி ஆசி கூறுமாயின் அதுவே யான் பெற்ற பேறு; அந்தச் சிறு அணில் இராகவனால் ஆசி பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைப் போல் யானும் மகிழ்ச்சியடை வேன். இத்துறையில் “தெளிவுறவே அறிதலுக் கும், தெளிவுதர  மொழிந்திடுதலுக்கும்” - தமிழ் வாணியின் அருள் வேண்டும். பெரியோர்களின் ஆசியும் வேண்டும்.

இந்த நூல் அணுவினை ஆக்கத்துறை களில் பயன்படுத்தும் முறைகளை விளக்க எழுந்தது.

இந்நூலில் மேற்கொள்ளப்பெற்றுள்ள கலைச் சொற்களில் பெரும்பாலானவை முன்னோர் அரும்பாடுபட்டு அமைத்தவை. அவற்றுள் பலவற்றைத் திருத்தியமைத்த பொறுப்பு சிறிது எனக்கு உண்டு. யானும் பல கலைச்சொற்களை ஆக்கி அமைத்திருக்கின் றேன். கலைச்சொல்லாக்கம் ஓர் அரிய கலை. அதற்குப் பொருளறிவும் வேண்டும். பன்மொழி யறிவும் வேண்டும். உயர்ந்த முறையில் சொற்கள் அமைந்துவிட்டால் அவை என்றும் வாழும்; இல்லையென்றால் வீழும். எல்லா நிலைகளிலும், அறிவியல் தாய்மொழியில் பயிற்றப்பெறும் பொழுதுதான் உயர்ந்த கலைச் சொற்கள் அமையும் வாய்ப்புக்கள் உண்டாகும். பல சொற்கள் இன்னும் திருத்தம் பெற வேண்டியவை என்பதை நான் நன்கு அறிவேன்.

குறைந்த காலத்தில் மாணாக்கர்களின் பொருளுணர்வுக்கும், தாய்மொழி வளர்ச்சிக்கும் முக்கியமாக வேண்டப்பெறுவது ஆங்கிலம் போன்ற மேனாட்டு மொழிகளிலுள்ள அருங் கலைகளைத் தாய்மொழியில் வடித்துத் தர வேண்டும் என்பது. இந்தக் கனவை காந்தி யடிகள் போன்ற பல பெரியார்கள் நீண்ட நாள்களாகக் கண்டு வருகின்றனர். தமிழைப் பொருத்த மட்டிலும் இந்தக் கனவை நனவாக்க முயல்கின்றவர்களுள் தலை சிறந்தவர்கள் மூவர். ஒருவர்  திரு இராஜாஜி. முதன் முதல் மாகாண சுய ஆட்சியில் காங்கிரஸ் மகாசபை பதவியேற்று இராஜாஜி தலைமையேற்று பணியாற்றிய பொழுது உயர்நிலைப் பள்ளி களில் தாய்மொழி வாயிலாகக் கல்வி பயிற்றும் திட்டத்தை நிறைவேற்றி வைத்தார்கள். 

அது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமு மாக வளர்ந்துகொண்டு வருங்கால் நாடு விடுதலை பெற்று திரு தி.க. அவினாசிலிங்கம் செட்டியார் கல்வியமைச்சராகப் பணியாற்றிய பொழுது தமிழ்மொழிக்கு முதலிடம் அளித்தும், இன்னும் பல்லாற்றானும் அதனைச் சிறப்பித் தார்கள். தமிழ்ப்பணியே தன் பிறவிப் பணியாகக் கொண்ட பெரியார் இவர்.  தமிழ் வளர்ச்சிக் கழகம் கண்டு கலைக்களஞ்சியம் உருவாக்கிய மேதை. திரு சி.சுப்பிரமணியம் அவர்கள் கல்வியமைச்சராக இருந்த நாள்தொட்டு கல்லூரிகளிலும் தாய்மொழி மூலம் கல்வி பயிற்றப் பெறல் வேண்டும் என்று முயன்றார்.   இவருடைய காலத்தில்தான் நம் மாநிலத்தில் தமிழன்னை அரியாசனம் ஏறும் வாய்ப்புப் பெற்றுப் பெருமிதமாகத் திருவோலக்கம்  கொண்டுள்ளாள்; சட்டசபையிலும், அரசினர் அலுவலகங்களிலும் உலாப் போகின்றாள். அந்த அவா நிறை வேறினால் என் முயற்சி மேலும் மேலும் வளரும் என்பது என் நம்பிக்கை.

                          (ஆக்கம் தொடர்வோம்)   

Pin It