அந்த பள்ளிக்கூடத்திற்கே அழகு கொடுத்தது, குடை விரித்தது போல் இருந்த கொன்றை மரம். சிவந்த நிறத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கின. பல நேரங்களில் மாணவர்களும், மாணவிகளும் அம்மரத்தடியில்தான் உட்கார்ந்து பாடங்கள் படித்தனர். தேர்வுகள் எழுதினர்.

காலை இடைவேளைக்கான மணி ஒலித்தது. ஆசிரியர்கள் வகுப்புக்களிலிருந்து வெளிப்பட்டு, ஒய்வு அறைக்குச் சென்று கொண்டிருந்தனர். 9ம் வகுப்பு "அ' பிரிவிலிருந்து, கையில் பாடக்குறிப்பு ஏடு, கணிதப் புத்தகத்தோடு வெளியே வந்தார் குமாரசாமி.

மதிய உணவுக்காக, சமையல் கூடத்தில் நீர் கொதித்துக் கொண்டிருந்தது. உதவியாளர் ஆயா, விறகுகளை எடுத்து, அடுப்புக்குள் போட்டுக் கொண்டிருந்தாள். தீ செக்கச்செவேல் என எரிந்தது. செந்தீயைப் பார்த்ததும்தான் குமாரசாமிக்கு நினைவு வந்தது. ""ஐயோ'' என அலறினார்.

காலையில் பள்ளிக்கூடம் புறப்பட்டு வரும் போது கேஸ் அடுப்பை அணைக்க மறந்து விட்டது இப்போதுதான் நினைவுக்கு வந்தது. குளித்து முடித்து, காலை உணவை உண்டபின், அடுப்பில் பால் காய வைத்தார். பால் கொதித்து பொங்குவதற்குள் உடைகளை அணிந்து தயாராக ஆனபின், வீட்டைப் பூட்டும் முன்பு பாலை இறக்கி வைத்துவிடலாம் என்று எண்ணியவர், பாலை மறந்து விட்டார். பள்ளிக்குப் புதிதாக வந்திருக்கிற தலைமை ஆசிரியர் கண்டிப்பானவர். ஒருமுறை ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காக வரலாற்று ஆசிரியரை கடுமையாகப் பேசி விட்டார். அது மாதிரி ஒரு நிலைமை தனக்கும் வரக்கூடாது என்ற எண்ணமே புறப்படும்போது இருந்ததால், பால் அடுப்பில் இருப்பது கவனத்திற்கு வரவில்லை. அடுத்தவர் நம்மைக் கேள்விகள் கேட்கும் நிலைமைக்கு ஒரு ஆசிரியர் நடத்தை இருக்கக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர். பேரனைப் பார்க்க, மனைவி சென்று விட்டார். குமாரசாமிக்கு சமையல் செய்யத் தெரிந்ததால், மனைவிக்கு பல நேரங்களில் உதவியாக இருந்தது. அவர் திருமணத்திற்கு முன்பு பேருந்துகள் இல்லாத கிராமத்தில் உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்தார்.

அப்போது உடன் பணியாற்றிய தமிழாசிரியர், தாவூது நன்கு சமைக்கத் தெரிந்தவர். இடைநிலை ஆசிரியர் கோபால்சாமியும் சேர்ந்து மூவரும் கிராமத்தில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தனர். தாவூது, மற்ற இருவருக்கும் சமையல் செய்யக் கற்றுக் கொடுத்தார். மூவரும் ஏறத்தாழ சம வயது உள்ள இளைஞர்கள். அப்போது, கேசு அடுப்பு வராத காலம். மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பைப் பயன்படுத்தினார்கள். அரிசிச்சோறுக்கு கஞ்சி வடிக்க மாட்டார் தாவூது. சோத்துக்கும், தண்ணீருக்கும் சரியாக இருக்கும்படி, அரிசி சரியாக வேகும் அளவுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றுவார். குமாரசாமியும் கோபால்சாமியும் 1 டம்ளர் அரிசிக்கு, 2 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பதை அப்போதுதான் தெரிந்து கொண்டனர். காய்கறிகள் நறுக்கும் வேலை கோபால்சாமிக்கு. வெங்காயம் உரிப்பது குமாரசாமி. பருப்பை முதலில் வேக வைத்துக் கொள்வார்கள். வெங்காயம், காய்கறிகளை வாணலியில் வதக்கி, தாளித்து விட்டு, வெந்த பருப்பை கடைந்து, தண்ணீருடன் கலந்து பின்பு தக்காளி அரிந்து போட்டு, எல்லாவற்றையும் சேர்த்துக்கூட்டி, குழம்பு செய்யும் கலையை கற்றுக் கொண்டார்கள். அன்று முதல் குமாரசாமி சொந்த முயற்சியில் சமையல் செய்ய நன்கு கற்றுக் கொண்டார். தன் கையே தனக்கு உதவி என்று எண்ணுபவர்.

ஆசிரியர்கள் அறைக்குச் சென்று, கையில் உள்ள புத்தகம் , நோட்டைப் போட்டு விட்டு, தலைமை ஆசிரியரைப் பார்க்க விரைந்தார். தலைதிருகிய கோழி துடிப்பதைப் போன்று மனது "பக்' ;;;'பக்' என்று அடித்துக் கொண்டது. உடனே வீட்டிற்குச் செல்ல வேண்டும். என்ன நிலைமையோ, நினைக்கவே பயமாக இருக்கிறது. சென்ற வருடம் அம்மாபேட்டை நண்பர் கோவிந்தன் வீட்டில் நடந்த நிகழ்ச்சி நினைவில் ஓடி வந்தது. கோவிந்தன் வீடும், அடுத்து அவரது தம்பி வீடும் இருந்தன. தம்பி வீட்டிற்குச் செல்ல பொது வாசல். மாலை நேரங்களில் வாசலுக்கு முன்புறம் இருந்த திண்ணை, உட்கார்ந்து பேச வசதியாக இருந்தது. தம்பியும் அவரது மனைவியும் மட்டும்தான் வீட்டில். குழந்தைகள் அவர்களுக்கு ஏதும் இல்லை. திருமணம் இரண்டு வருடங்களுக்கு முன்புதான் நடந்தது. கோவிந்தனுடைய மகனும், மகளும் கல்லூரியில் படிக்கின்றனர்.

தம்பியின் வீட்டில் முன்புறம் ஹடலும், அதை ஒட்டி சமையல் அறையும் இருந்தன. குடலையில் சமையல் செய்து முடித்த பின், மதியத்துக்கு எடுத்துக்கொண்டு, தம்பியும் மனைவியும் வெளியே சென்றால் மீண்டும் மாலையில்தான் வருவார்கள். பிற்பகலில் லேசாக கேஸ் வாடை வெளியே தெரிந்தது. பள்ளிக்கூடம் விட்டு 5 மணிக்கு வந்த கோவிந்தன், தம்பியின் வீட்டிலிருந்து கேஸின் வாடையை நுகர்ந்து புரிந்து கொண்டார். ஜன்னல், கதவுகளைத் திறந்து வைத்து, அரை மணி கழித்துத்தான் அடுப்பைப் பற்ற வைக்கச் சொல்ல வேண்டும் என்று நினைத்தார். முகம், கை, கால், சுத்தம் செய்து விட்டு, மனைவி கொடுத்த காபியைக் குடித்தார். பின்பு திண்ணையில் உட்கார்ந்தார். எதிர்வீட்டு நண்பரும் வந்து சேர்ந்து கொண்டார். இருவரும் நாட்டு நடப்பு, அரசியல் பற்றி வழக்கமாகப் பேச ஆரம்பித்தனர். அவர்களுக்கு நேரம் போவதே தெரியாது. இலவசங்கள் கொடுத்து மக்களைச் சோம்பேறி ஆக்குகின்றனர் என்று அங்கலாய்ப்பார். நண்பரோ அதை மறுத்துப் பேசுவார்.

நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமும், படிப்பு என்ற பெயரால் ஏராளமான பணத்தைக் கல்வி நிறுவனங்கள் கொள்ளையடிக்கும் நிலைமையும், எவ்வாறு இந்தியாவை வல்லரசாக்கும் என்று கொந்தளித்துப் பேசுவார். மின்சாரம் நின்று விட்டதால் அன்று கோவிந்தனின் மனைவியும் மற்றும் எல்லோரும் வீட்டிற்கு வெளியே வந்து உட்கார்ந்திருந்தனர். இருட்டி விட்டது. 5 மணிக்குப் போன கரண்ட் இன்னும் வரவில்லை. தம்பியின் மனைவி வேலை முடித்து வந்தார். வாசலில் உட்கார்ந்திருந்தவர்களைத் தாண்டிச் சென்றார். "பாத்துப்போம்மா, கரண்ட் இல்ல. இருட்டு'' என்று கோவிந்தனின் மனைவி எச்சரித்தார். தம்பி மனைவி பூட்டைத் திறந்து கொண்டிருந்தார். உடனே கரண்ட் வந்து விட்டது.

student_620

கோவிந்தனுக்கு திடீரென்று தம்பி வீட்டில் இருந்து கேஸ் வாடை வீசியது நினைவுக்க வந்தது. தம்பியின் மனைவி வீட்டைத் திறப்பது கண்டு, "அம்மா, லைட் ஸ்விட்சைப் போடாதே'' என்று சொல்லிக்கொண்டு ஓடினார்.

அவர் செல்வதைக் கேட்பதற்குள், தம்பி மனைவி லைட் ஸ்விட்சைப் போட்டு விட்டார். வீடு முழுவதும் பரவியிருந்த கேஸ் திடீரென்று தீப்பிடித்துக்கொண்டது. கதவும் படாரென்று சாத்திக்கொண்டது. கோவிந்தன் ஓடிச்சென்று கதவை எட்டி உதைத்து உள்ளே நுழைந்தார். அதற்குள் சேலையில் தீப்பிடித்து அலறினாள். மயங்கிய தம்பி மனைவியைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தார். கை கால் முகம் எல்லாம் எரிந்து விட்டது. இரு கால் முட்டிகளிலும் காயம். மற்றவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார்கள். சுற்றிலும் இருந்த பலர் சேர்ந்து தீயை அணைத்ததால் பக்கத்து வீடுகள் தப்பித்துக் கொண்டன. இன்னும் அவர்கள் இருவருக்கும் முகம், கை, கால்களில் வெள்ளைத் தழும்புகள்.

இவையெல்லாம் குமாரசாமிக்கு நினைவுக்கு வந்தன. பதற்றத்துடன் ஓடிவந்த குமாரசாமியைப் பார்த்து தலைமை ஆசிரியர், ""என்னங்க, முகமெல்லாம் ஓரு மாதிரியா இருக்குது'' எனக் கேட்டார்.

"நா, அவசரமா வீட்டுக்குப் போகணும். உடம்பு சரியில்லைங்க'' என்றார்.

அவர் இருந்த நிலைமையைப் பார்த்து, தலைமை ஆசிரியரும் இப்போது என்ன ஏது நடந்தது என்று கேட்டு நேரத்தை வீணடிக்கக்கூடாது என்று எண்ணி, சரி, போயிட்டு வாங்க. துணைக்கு யாரையாவது அனுப்பட்டுமா? என்று கேட்டார்.

"வேண்டாங்க'' என்று சொல்லிவிட்டுத் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு 3 கி.மீ தூரமுள்ள வீட்டை நோக்கி விரைந்தார்.

கேஸ் அடுப்பு எரிந்து கொண்டேயிருந்தால் என்ன நடக்கும்? அலுமினியப் பாத்திரத்தில் உள்ள பால் கொதித்துக் கெட்டியாகிவிடும். அதன்பின்பு பாத்திரம் உருக ஆரம்பிக்கும். அருகில் உள்ள ஜன்னல், மரச்சாமான்களில் தீ பரவலாம். அல்லது பாத்திரம் உருகி கேஸ் வெளிவராமல் அடைத்துக் கொண்டால், சிலிண்டருக்குள் தீ பரவிவிடும். சிலிண்டர் வெடித்தாலும் வெடிக்கலாம். சிலிண்டர் வெடித்தால் வீடே தீப்பற்றி எரியலாம். பக்கத்து வீடுகளுக்குத் தீ பரவலாம். வரிசையில் உள்ள பல வீடுகள் என்றெல்லாம் எண்ணங்கள் ஓட, குமாரசாமி கை, கால் நடுக்கத்துடன் வண்டியை ஓட்டினார்.

அப்போது தீயணைக்கும் வண்டி ஒன்று, வேகமாக எச்சரிக்கை மணியை ஒலித்தவாறு விரைந்து சென்றது. குமாரசாமிக்குப் பகீர் என்றது. ஒரு வேளை நம் வீடு எரிந்து, தெருவெல்லாம் தீ பற்றிக்கொண்டதோ, எத்தனை உயிர்கள் பலியாகி விட்டதோ தெரியவில்லையே என்ற பதற்றத்துடன் வாகனத்தை ஓட்டினார். யாரையாவது கேட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்து, வண்டியை நிறுத்தினார்.

அருகில் ஒரு தேநீர்க்கடையிருந்தது. தேநீர்போட்டுக் கொண்டிருப்பவரிடம் சென்று,

"ஏங்க, தீயணைக்கும் வண்டி எங்க போவுது''? என்று விசாரித்தார்.

அவர், இவரை மேலும் கீழும் பார்த்து விட்டு,

"நல்லாத் தெரியலப்பா. செவ்வாய்ப்பேட்டை பக்கம் ஏதோ ஒரு வீடு தீப்பிடிச்சுக்கிச்சாம். அங்க தான் போவுதுன்கு நெனக்கிறேன்'' என்றார்.

குமாரசாமிக்கு கூட்டிலிருந்து பறக்கும் சிட்டுக் குருவிபோல பாதி உயிர் பறந்து விட்டது. உடனடியாக வண்டியை எடுத்து வேகமாக ஓட்டினார். அவருடைய வீடு இருக்கும் இடமும் செவ்வாய்பேட்டைதான். ""அடக்கடவுளே, முருகா தீப்பற்றி எரியும் வீடு என் வீடாக இருக்கக்கூடாது. நீதாம்ப்பா காப்பாத்தணும்'' என்று முருகனை வேண்டிக்கொண்டார். திருப்பதி மலைக்கு வந்து மொட்டை போடுவதாக வெங்கடாசலபதியிடம் மனம் உருகினார். பைபாஸ் தாண்டி பெட்ரோல் பங்க் நிலையம், பாரத் வங்கி, அம்மன் கோவில் சந்து பின்பு யோகி ஆனந்தன் ஆசிரமம், அடுத்து குமாரசாமி குடியிருக்கும் காளிச்செட்டித்தெரு.

உழவர் சந்தை அருகே வரும் போது வண்டி வேகம்தானாகக் குறைந்தது. குறுக்கும் நெடுக்கும் மக்கள்,  யாரையும் கண்டுகொள்ளாமல், எதிரே வரும் வாகனங்களைக் கவனிக்காமல் கையில் பைகளுடன் அலைந்தனர். பிறர் மீது மோதாமல் செல்ல வேண்டும் என்று கவனமாக ஓட்டினார். "ஏய், சாவு கிராக்கி பாத்து ஒட்டு'' என்று யாரோ சத்தம் போடுவது கேட்டது.

வண்டி காவல்நிலையம் அருகே வரும் போது, எதிரே வானத்தில், புகை மேலெழும்பி வருவதைப் பார்க்க நேரிட்டது. எதுவோ தீப்பற்றி எரிவதால் உண்டாகும் புகை அல்லது தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகையாக இருக்கலாம். குமாரசாமிக்கு அடிவயிறு பகீரென்றது. வேகமாக வண்டியை ஒட்டினார். பாரத வங்கியை அடுத்து, அம்மன் கோவிலைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டார். ஏதிரே வருபவர்கள் யார் எனத் தெரியவில்லை. கண்ணும் கருத்தும் வீட்டைச்சுற்றியே நினைத்தன.

தெருவிற்குள் நுழையும் போது, தன்னைப் பார்த்து சிலராவது திட்டுவார்கள், வண்டியை தடுத்து நிறுத்தி "ஒனக்குக் கொஞ்சமாவது இருக்குதா? எனக் கேட்பார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது, எனப் பயந்தவாறு சென்றார்.

தெரு அமைதியாக இருந்தது. எந்தப் பரபரப்பும் இல்லை. வீடு எப்போதும் போலிருந்தது. ஆவசரம் அவசரமாக வண்டியை நிறுத்திவிட்டு, வீட்டைத் திறந்தார். சமையலறைக்கு ஓடினார். பால் காய்ந்து, தீஞ்சு, கருகரு என இருந்தது. பால் பாத்திரமும் கறுப்பாக மாறியிருந்தது. அப்போது கைப்பேசி மணியடித்தது. எடுத்துக் காதில் வைத்தார்.

"ஏங்க, நாந்தா பேசறே'' என்றாள் மனைவி.

"ம். சொல்லு''

"சாப்பிட்டீங்களா?''

"சாப்பிட்டுட்டே சொல்லு''

"சிலிண்டரிலே கேஸ் குறைவாத்தா இருக்கும். கேஸ் தீர்ந்து போனா, மறக்காம கம்பெனிக்குப் போன் போட்டு புக் பண்ணுங்க. வர,பத்து நாளக்கி மேலாகும்'' என்றாள்.

குமாரசாமி ஓடிச்சென்று சிலிண்டரைப் பார்த்தார். கேஸ் வால்வு திறந்திருந்தது. அனால் கேஸ் வரவில்லை.

"அப்பாடா'' என்று சோபாவில் உட்கார்ந்தார் குமாரசாமி.

Pin It