1.     அவன் ஒரு கடிகார முள். ஒரு மையம் பல விளிம்புகள், வரையறுக்க முடியாத அந்த மையத்திலிருந்து ஒயாமல் விளிம்புகளை நோக்கி எத்தனிப்பது அவன் வேலையாகியிருந்தது. மையம் அவனை தாங்கி நிற்பதை தவிர அவன் மீதான உபரி அதிகாரம் எதையும் செலுத்தியதில்லை. செக்கு மாடுகள் சுற்றுவதுபோல் அவனும் மற்ற இரு முட்களும் சுற்றி சுற்றி காலத்தை அரைத்து வெளித்தள்ளிக்கொண்டிருந்தார்கள். அவ்வப்போது ஓய்வுக்கான நேரங்கள் அநேகமாக சாவிகள் கொடுக்கப்பட்டு நகர்த்தப்பட்டுவிடும். ஒரு நாளைக்கு 24 முறை விளிம்புகளை நோக்கியான எத்தனிப்புகளை அவனால் தவிர்க்க முடிந்ததில்லை. அவன் அரைத்து துப்பிய காலம் ஒரு பேரண்ட வெளிக்குள் கரைந்து மறைவதை அவன் குழந்தையின் கண்களோடு குறித்துக்கொள்வான். முட்டை வடிவ, சதுர வடிவ, வட்ட வடிவ எல்லைகள் எதுவாயினும் ஒரே தாள கதியில் நகர்ந்து கொண்டிருப்பது அவனுக்கு ஒரு நாளில் சலிப்பேற்றியது. அவன் அந்த மையத்தின் மீது சந்தேகம் கொண்டான். அவன் விடுபடாதபடிக்கு அவனுக்கு விருப்பமான வேகத்திற்கு தாளகதியை கலைத்து விடாதபடிக்கு ஒரு நுட்பமான அதிகாரத்தை மையம் கைக்கொண்டிருந்ததை அந்த நாளில் அவன் உணர்ந்துவிட்டிருந்தான். விடுபடுதலுக்கான வழிமுறைகளில் ஒன்றாக அவன் ஒரு நொடி முள்ளா, நிமிட முள்ளா, மணி முள்ளா என்பதை ஒரு ரசகியம் போல் காத்துக்கொண்டான்.

2.     அவன் ஒரு கிளி. கடந்த வாரத்தில் இருபதாவது முறையாக அவனுடைய சிறகுகள் வெட்டப்பட்டாயிற்று. இம்முறை வெட்டிய நபருக்கு அளவுகள் பற்றிய அலட்சியம் இருந்தது. கூண்டுகளற்ற கூண்டு என்பது அவன் இருப்பிடத்தை பற்றிய அவன் வரையறை. அவனால் எங்கு வேண்டுமானாலும் அதி சுதந்திரமாக போக வர முடியும். அவனுக்கான விலங்குகள் அவன் உடலிலே பூட்டப்பட்டிருந்துதான் விசேஷம் உடலே விலங்காக மாறிவிடும் அனுபவம் மிகக் குடூரமானது. அவன் குரல் யாரோ ஒருவரின் குரலை மறு பிரதிபலிப்பு செய்ய கட்டாயப் படுத்தப்பட்டிருந்தது. ஒரு எதிரொலியைப் போல் அவன் ஒலியெழுப்ப பழக்கப்பட்டிருந்தான். ஆகையால் அவனுடைய பாடல்களை அவன் வயிற்றில் பத்திரமாக பதுக்கி வைத்து கொண்டான். எப்போதேனும் அவை பீறிடும் போது மெல்லிய கேவல்களாக வெளிப்படுவதை அறிந்து கலக்கமடைந்தான். இந்த முறை சிறகுகள் மூன்று நாட்களிலேயே கொஞ்சம் வேகமாக வளர்ந்துவிட்டிருந்தது. பறப்பதற்கான முயற்சிகளை அவன் ரகசிய பயிற்சிகளாக யாருமற்ற வேளையில் முயன்று பார்த்தான். நீண்ட நாட்களுக்கு பிறகு என்பதால் அது வலி மிகுந்ததாயிருந்தது. வலி சற்று அடங்கியிருந்த அந்த நாளில் பிரயாசையோடு சரியான தருணத்தில் ஊனமாக்கப்பட்ட சிறகுகளோடு அருகிலிருந்த பெருமரத்தின் அடர்த்தியான கிளையில் பதுங்கியிருந்தான். வானங்களையும், அவன் வனங்களையும் சென்றடைய இன்றும் இரண்டங்குல சிறகுகள் வேண்டும் அவன் பசியோடு சிறகுகள் வளர காத்திருந்தான். இன்னும் சில நாட்கள் அதுவரை அவன் பாடாமலிருப்பது இங்கு முக்கியமானது.

oviyam_3703.     அவன் ஒரு மீன். இந்த குளிர்ந்த பரப்புக்குள் அங்குமிங்கும் அலைவது மிகுந்த சுகத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கிறது. பிரச்சினை என்னவென்றால் சுவாசிப்பதுதான். அவன் மீன் என்றாலும், திமிங்கலம் போன்ற பாலுநீட்டி மேற்பரப்பிற்கு வந்து சுவாசம் பருக வேண்டும். ஆனாலும் இந்த பரப்பின் அழுத்தம் அவனை ஆழ இழுத்துக் கொண்டே இருக்கிறது. ஒரு மீன் நீருக்குள் மூச்சுமுட்டி மரிப்பது என்பது பெரிய முரண்பாடாக இருக்கலாம் ஆனால் அதுதான் பிரச்சினை. உணவை பற்றிய குறைகள் எதுவுமின்றி அவன் இத்தனை வருடங்களை கழித்திருந்தான். விருப்போ, வெறுப்போ இன்றி இருப்பதால்தான் உனர அவனுக்கு எளிதாயிருந்தது. இத்தனை வருட வாழ்வில் ஒருமுறை கூட தூண்டில்கள் பக்கம் சென்றுவிடாதபடிக்கு அதுவே அவனை தடுத்திருந்தது. சகபாடிகளுடனான நட்பும் போட்டியின்றி தொடர்ந்து கொண்டிருந்த சுவாசச் சிக்கல் காரணமாக, நாளாக அவன் உடல் ஒரு விநோத வடிவத்தை எடுத்திருந்தது. நுரையீரலை சுற்றியுள்ள இடங்கள் சற்றே உள்வாங்கி மற்ற இடங்கள் பெருத்து, ஆனாலும் தான் தனித்தன்மையானவன் என்பதில் அவனுக்கு சந்தேகமில்லை. அந்தப் பரப்பிலிருந்து வெளியேறினால் உலர்ந்து விடுவோம் என்பதும் தன்னை ஒட்டிக்கொண்டிருக்கும் ஈரப்பதம் காணாமல் போய்விடும் என்பதிலும் அவனுக்கு குழப்பமே மிஞ்சியது அவன் வாழ்வின் முக்கிய முடிவுகள் திட்டமிடப்படாதவை என்பதும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஒரு தற்செயலான கணத்தில் அவன் பலமனைத்தையும் திரட்டி வெளிப்பரப்பில் குதிக்கிறான். சுவாசம் குறித்த சிக்கல்கள் இனி ஒருபோதும் மன அடுக்கில் படியாது என நிம்மதியோடு கண்களை மூடுகிறான்.

4.     அவன் ஒரு மிதியடி. சிவப்பு நிறம் என்பது வரவேற்பை குறிப்பது என்பதால் அவன் உடல், எப்போதும் கால்களால் நிரம்பி வழிந்தது. மண், தூசி, சகதி சிலநேரம் மலம் என அவன் இடுக்குகளும், தோலும் பூசப்பட்டுக்கொண்டே இருந்தது. ஒரு நாளில் எத்தனை @ஜாடி கால்கள் தன்னை மிதிக்கின்றன என்பதை சுவாரசியத்திற்காக ஒரு முறை எண்ணினான். எத்தனை முறை தொடர்ந்தாலும் கணக்கு சரியாக வரவில்லை. பிறகு செருப்புகளை கவனித்தான். இதனா லொன்றும் விடுதலையில்லை என்றாலும் அவனுக்கு சில நோவுகளை ஒத்தி போடுவதற்கான வாய்ப்பை அவை வழங்கியது. ஒத்திப்போடுதல் மட்டும் தப்பித்தலின் வழிமுறையாக அவனுக்கு தோன்றியதால் புதிதுபுதிதாக ஏதேனும் கவனிப்புகளை முயன்றான். முகங்கள், காலணி வகைகள், காலணிகளின் தரம், காலனி, கால்களின் குறைபாடுகள், அவற்றின் வர்க்கம், அவற்றின் அந்தஸ்து, பாலினம் குழந்தைகளின் கால்களின் மென்மையும், சில பெண் கால்களின் மென்மையும் அவனை மெல்லிய குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவனுக்கு வலித்துவிடக் கூடாதே என்பதாக அந்தக் கால்களின் அழுத்தங்களை மொழிபெயர்த்துக்கொண்டான். கடந்த சில நாட்களாக காலையிலும், மாலையிலும் அவனை அழுத்திச் செல்லும் காவல்துறை காலணி போன்ற ஒரு முரட்டுக் காலணி. தன் சுவாரசியங்களை அழித்து விடும் என்று தெரிந்தது. அந்த மாலையில் அவன் உடலின் மையப்பகுதியில் அந்த காலனியின் ஒரு கூர்மையான பகுதி சிக்கி அவன் உடல் கிழிந்தது. அவன் அவன் இருப்பிடத்திலிருந்து அகற்றப்பட்டான். பழைய பொருட்கள் இடப்படும் அறையில் அவனுக்கு சுவாரசியங்கள் எதுவும் அளிக்கப்படாமலிருந்தது.

5.     அவன் ஒரு கார் பொம்மை. அந்தக் குழந்தையின் கைகளின் அவன் சிக்கிக்கொண்டது ஒரே நேரத்தில் சுகமும், துக்கமும் தரக்கூடியதாய் இருந்தது. அந்த குழந்தைக்கான பொம்மைகளில் இவனும் ஒன்று. கொட்டடிக்கும் பூனை, கிலுகிலுப்பை, சாவிக்கொத்து, தட்டு, கோப்பை, சமையல் (பொம்மைகள்) சாமான் இன்னும் பிறவற்றுடன் பார்க்கும்போது இவன் மட்டும் அசைவுகள் கொண்டவன் அதனாலேயே இவன் குழந்தையின் மூர்க்கத்திற்கு ஆளாகுபவனாக இருந்தான். குழந்தை விரும்பும் ஏதோ ஒரு கணத்தில் இவனை நகர்த்தி கைகளை கொட்டி குதூகலிக்கும், அந்த நேரம் சுகமாயிருக்கும் குழந்தையின் அமுக்கங்கள் பல நேரங்களில் வன்முறையாக வெளிப்படும் நேரத்தில் இவன் பாடு திண்டாட்டம். மற்ற பொம்மைகள் வன்முறையை எதிர்கொள்ளாதது அவற்றின் அசைவற்ற தன்மையே என்பதை அறிந்து இவன் மூச்சடக்கி உயிரற்று இருக்கும்போது, குழந்தை குதூகலமாய் இவனை நகர்த்தி சிரிக்கும். சிறிய பற்களால் கடிபடுவது வலி தரக்கூடியது இல்லையென்றாலும் அவன் சக்கரங்களில் ஒன்று மெல்ல இணைப்பிலிருந்து விடுபடத் தொடங்கியது. அவனால் இனி முன்போல் நகர முடியாது என்பது அவனுக்கு பழிவாங்கலாய் ஒரு சந்தோஷத்தை கொடுத்தது.

6.     அவன் ஒரு பயணப்பை. பயணங்கள் அழகானவை என்ற அபிப்ராயம் எல்லோருக்கும் பொதுவானது. அவன் மேற்கொண்ட எல்லா பயணங்களும் அப்படியானவை அல்ல. பயணத்தின் முதல் நாளில் அவன் எங்கேனும் தூசிபடிந்த இடத்திலிருந்து மீட்கப்படுவான். சிறு வன்முறைக்கு பிறகு அவன் மெருகூட்டப்பட்டு உள்ளீடற்று கொஞ்ச நேரம் தனித்திருப்பான். சற்று நேரத்தில் தேவையானவை, தேவையற்றவை, அத்தியாவசியமானவை, அவசியமற்றவை எல்லாம் அவன் உள்ளுடலில் திணிக்கப்படும் மூச்சுத்திணறல் ஆரம்பிக்கும் நேரம் அது. திரும்பி வர மேற்கொள்ளும் பயணம் அருவருப்பானது. உள்ளுடலில் திணிக்கப்படுபவைகளோடு புதிதான பொருட்கள் புதிதாக சேர்ந்திருக்கும் அது மூச்சுத்திணறலை மிகைப்படுத்தும், அதைவிட திரும்பும் பயணத்தில் எல்லாமே அழுக்காக முடை நாற்றம் வீசிக்கொண்டிருக்கும். ஒரு இலக்கிலிருந்து மறு இலக்கு என்ற திட்டமிட்ட பயணத்தில் ஒரு ஆசுவாசம் இருக்கும். பயணம் நீட்டிப்பு அடையும்போது தலைசுற்றலும், வாந்தியும் மிஞ்சும். இத்தனை பயணங்களில் அவனால் புரிந்து கொள்ள முடியாத ஒரே விஷயம். அவனை சுமந்து வருபவர்கள் அவனுடைய மூச்சுத்திணறலையும், அவன் தலைசுற்றலையும், அவனுடைய சோர்வையும் அவர்களுடையதாக பாவித்து சலித்துக் கொள்வதைத்தான்.

oviyam_370.jpg_17.     அவன் ஒரு ஈஸிசேர். அழுத்தமான நிறத்தில் கெட்டியான துணி கொண்டு தைக்கப்பட்ட மர ஈஸிசேர் அவன். பாரம்பரியமான இந்த இடத்தின் பல பிருஷ்டங்களை அவன் தாங்கி யிருக்கிறான். எடை கூடிய, எடை மெலிந்த பிருஷ்டங்கள், வாயுத் தொல்லை கொண்ட பிருஷ்டங்கள் அவனுக்கு அறிமுகமானவை. குழந்தைகளோ, பெண்களோ, வாலிப ஆண்களோ அவனை ஒருபோதும் அழுத்தியதில்லை. வயதான பிருஷ்டங்கள் ஓய்வு என்ற பெயரிலோ இல்லை வெட்டியாகவோ அவனை அழுத்துவதை அறவே வெறுத்துக் கொண்டிருந்தான். இன்னும் வயதாகாத அல்லது அவனை அழுத்த காத்திருக்கும் முதிர்ந்த சில பிருஷ்டங்கள் அவ்வப்போது அவனை ஒரு ஒத்திகை போல் அழுத்திச் செல்லும். அந்த நேரங்களில் அவன் அவமானமடைந்து சிலிர்த்துக்கொள்வான் வயதானவர்களுக்கு. அவன் ஒரு சுமை தாங்கி என்ற எண்ணம் ஒருபோதும் அவனை சாந்தப்படுத்தியது ஏனென்றால் மனபூர்வமாக அவன் அதை மறுத்துக் கொண்டு இருந்தான். பாரம்பரியமானதென்றாலும் பராமரிப்பு அற்றதால் அவனுடைய ஒரு கால் உளுத்துப் போனதை அவன் நாளொரு மேனியாக ரசித்து வந்தான். இப்படியாக எதிர்பார்த்ததுபோல் ஒரு ஒத்திகையின் போது அவன் உளுத்துப் போன கால் முறிந்தே போனது. அவனை பரணில் ஏற்றி ஒரு உடைந்த சேரின் மேல் உட்கார வைத்தார்கள். அந்தச் சேர் இவனைப் பார்த்து மவுனமாய் சிரித்தது.

8.     அவன் ஒரு வாயிற் கதவு. அந்த வீட்டின் பிரதான வாயிற்கதவாக அவனிருந்தான். பிரதானம் என்பதன் முக்கியத்துவம் என்னவென்றால் அது சோர்வூட்டும் பணியும் கூட, அவன் வழியேதான், யாரும் நுழைந்தாக வேண்டும். அவனுக்கு தெரியாமல் நுழைவது என்பது முடியாது என்பதால் சோர்வு அயற்ச்சியாகி, அயற்ச்சி அலுப்பாக மாறிக் கொண்டிருந்தது. ஒரு பசித்த பசுவோ, நாயோ, பூனையோ அவனைத் தாண்டும்போது அவன் எளிதாக அனுமதித்து விடுகிறான், ஆனால் யார்மீதோ குற்றம் சாட்டியபடி ஏதேனும் ஒரு கை இவன் அனுமதித்த ஜீவன்களைத் துரத்தி இவனையும் முகத்திலறைந்தது போல் பூட்டிச் செல்கிறது. இவன் இரும்பால் செய்யப்பட்டவன், உறுதியானவன் என்பதாலே இவன் பிரதான வாயிலுக்கு தேர்ந்தெடுக்கபட்ட பின் வழியில் உள்ள மரக்கதவை இவன் பொறாமையாக நினைத்துக் கொள்வான். புத்தம் புதிதாக பூசிய வர்ணச்சாயங்களோடு இவன் பார்க்க கம்பீர மாகவே தென்பட்டான் ஆனாலும் கம்பீரமென்பது பிடித்த நபர்களை அனுமதிப்பது பிடிக்காத நபர்களை துரத்தியடிப்பது என்பதாக அவன் அர்த்தப்படுத்திக் கொண்டதால் அவனால் அவன் தோற்றம் குறித்து பீற்றிக் கொள்ள இயலவில்லை. வசந்த காலம் அவனுக்கு பிடித்தமானது. அவன் அனுமதியை எதிர்ப்பார்க்காமல் அவனுக்கு பிடித்தமான பட்டாம்பூச்சிகளும், தட்டான்களும், சிறுச் குருவிகளும், அணில்களும் சதா நேரம் அவனை தாண்டிச் சென்றுகொண்டேயிருந்தது. துரத்தியடிக்கும் கைகள் இப்போது வேறு வேலைகளில் மும்மரமாகியிருந்தது.

9.     அவன் ஒரு மெமரி கார்ட். அவன் ஒரு சிக்கலான அமைப்புக்குள் சிறைப்பட்டிருக்கிறான். நல்ல கறுப்பு நிறத்தில் பித்தளைக் கோடுகளோடு அவன் உடை தகதகத்தது. அவன் இருந்த அமைப்புக்குள்ளிருந்து சில கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டவுடன் அவன் உயிர்பெறுகிறான். ஆவன் தேக்கி வைத்துள்ள பாடல்கள், நிழற்படங்கள், ஓவியங்கள், சலனப்படங்கள் அந்த அமைப்பின் திரைவழியாக வெளியேறுகிறது. அவனுக்கான பயன் மதிப்பு அந்த அமைப்பில் அதிகரிக்கிறது. நுட்பமான முறையில் அந்த அமைப்பினுள் இயங்கும்போது அவனுடைய பரிவர்த்தனை மற்றும் அர்த்த மதிப்பு இருமடங்காக பெருகும் வகையில் டிசைன் செய்யப் பட்டிருந்தான். எப்போதேனும் அமைப்பிலிருந்து வெளியேறினால் உருவாகும் மதிப்பீட்டுக் குழப்பங்களை கருத்தில் கொண்டும், தன்னால் அமைப்பின் மதிப்பீடுகளும் சரிந்து விடும் என்பதைக் கருத்தில் கொண்டும் அவன் தருணங்களை அலட்சியப்படுத்தினான். ஒரு ஜடப்பொருளாக வெளியில் உயிரற்று கிடப்பதில் அவனுக்கு விருப்பமில்லை. அமைப்பில் உயிர் இருக்கிறது என்பதோடு அவன் தனக்கான நினைவடுக்குகளை , பதிவுகளை காக்க ஒரு ரகசிய எண்ணை பாதுகாத்து வருகிறான். என்பதும் மாயத்தன்மை வாய்ந்தது. அந்த ரகசிய எண்கள் அவனுடைய பதிவுகளை அழிக்க முடியாதபடிக்கு பாதுகாப்பான என்ற எண்ணம் அவனை அமைப்போடு பிணைத்துப் போட்டிருக்கும்

10.    அவன் ஒரு முரசு. அந்த அரசன் போர்க்காலங்களில் அவனை பயன்படுத்தி வந்தான். அவனுக்கான ஒரு கட்டில் அளவுக்கதிகமான மரியாதை. அவன் உருவான இடம் ஒரு ஒதுக்குப்புறமான குடியிருப்பின் கடைசி வீட்டின் ஒரே சொத்தான மாட்டிலிருந்துதான். அவன் அந்த மாட்டின் உடலில் இருக்கும்போதே மாடு அடிவாங்கும் நேரங்களில் கர்ஜித்துக்கொண்டேயிருந்தான். ஓவ்வொரு அடிக்கும் தொம் என்ற சத்தம் மாட்டிலிருந்து வருவது அவர்களுக்கு அதிசயமாக இருந்தது. அவன் ஒட்டிக்கொண்டிருந்த மாடு ஒரு சண்டையில் வெற்றி பெற்றபோது அரசன் அந்த மாட்டைக் கொன்று அவனை விடுவித்து முரசாக்கினான் அவன் ஒட்டியிருந்த மாடு சண்டையில் வென்றபோது எதிரியின் குருதியால் அவன் நனைந்திருந்ததை நினைவு கூர கறைகள் எதுவும் இப்போது இல்லை. அரசன் அருகில் வந்தபிறகு அவனுக்கு விழும் அடிகள் குறைந்திருந்தன. போர்க்காலங்கள், விழாக்களில் அவன் முக்கியத்துவம் உடையவனாயிருந்தான். அரசனை சுற்றியிருந்தவர்கள் அவனைப் புனிதப் படுத்தினார்கள். மற்றவரின் வணக்கத்துக்குரியவனாய் தான் இருந்தபோதும் வீரத்தினால் இறந்துபோன தன் தாய்மாட்டை அவ்வப்போது நினைவுப்படுத்திக்கொள்வான். அரசனின் காலம் முடிந்தது. பிறகு வந்தவர்கள் அவன் புனிதத்தன்மையை காரணம் காட்டி அவனை ஒதுக்கினார்கள். அவனைத் தீண்டாமல் மேலும், மேலும் புனிதங்களை கட்டினார்கள். பிறகு ஆண்டைகளின் காலம் வந்தது புனிதங்கள் மெல்ல வலுவிழந்தது. பிறகு முதலாளிகளின் காலம் வந்தது. புனிதங்கள் இருந்த இடங்களில் புதிதாக புனைவுகள் எழுந்தன. மெல்ல மெல்ல அவன் தீண்டப்படாதவன் ஆனான். புனிதங்கங்களுக்கும், தீட்டுக்கும் அவன் உடம்பில் சுற்றியிருக்கும் கயிறுகள் போல ஒரு மீட்சமம் இருப்பதை அவன் அறிந்த நாளில் அவன் ஒலி எழும்பும் வலுவை இழந்திருந்தான்.

Pin It