தூங்கும் முன் மனசாட்சியின் விசாரணை
(டேன் பாக்னிசுக்கு)

building_370அந்தச் சிறு பறவையை மோதிய விசயத்தை
ஓட்டுநர் அறிந்திருக்கக் கூட இல்லை.
சட்டென்று அதற்கு என்று
ஒரு பெயர் ஒரு முகவரி,
அதன் சிறகுகளுக்கு ஒரு வண்ணம்.
அது தெருவுக்கு நடுவே கிடந்தது
மல்லாந்து
கால்கள் இரண்டும் ஏ வடிவில்
ஒன்றையொன்று பார்த்தபடி.
விநோதம்
இப்போது டிரக் ஓட்டுநர்களும் கவனித்தார்கள்
ஒரு சீட்டியடிக்கும் மலை ஊடுவழியை போன்று
அதனை மூடிக் கொண்டபடி. இறுதியாக
ஒரு வழிபோக்கன் வந்தான்
அதற்கொரு இறுதி உதை விட்டான்.

இத்தனையும் பட்டப்பகலில்
பக்கத்து தச்சனின் கடையிலிருந்து வரும்
எந்திர ரம்ப ஓசைக்கு மத்தியில்தான் நடந்தது.
இதற்கிடையே இரவு வந்து விட்டது.
அந்தப் பறவை
சாக்கடை ஓடையின் விளிம்பை பற்றியபடி
இன்னும் அங்கேதான் இருக்குமென்று நினைக்கிறேன்.
மறக்க வேண்டிய விசயங்களுள் ஒன்றாய்
அதைக் குறித்துக் கொள்கிறேன்.

டி.கார்மி கவிதைகள்
தமிழில் ஆர்.அபிலாஷ்

ஆய்வகத்தில்

கண்ணாடி முகவையில் உள்ள தரவுகள்:
பல்வேறு இனங்களை சேர்ந்த
ஒரு டஜன் தேள்கள்  கூட்டமாய் நகரும்,
sci_370சமரசம் செய்யும்
சமத்துவநோக்காளர்களின் ஒரு சமூகம்.
மிதித்து மிதிக்கப்பட்டு.
இப்போது அந்தப் பரிசோதனை:
அறிவுவேட்கை மிக்க படைப்பாளன் உள்ளே
விஷ வாயு ஊதுகிறான்;
உடனடியாக
ஒவ்வொன்றும் உலகில் தனியாகிறது
விரைத்த வாலைத் தூக்கியபடி,
இன்னும் ஒரே ஒரு நொடிக்காக
கண்ணாடிச் சுவரை இறைஞ்சுகிறது.
அந்தக் கொட்டு ஏற்கனவே பயனற்றதாகி விட்டது;
அந்த கொடுக்குகள் புரிந்து கொள்வதில்லை;
அந்த வெளிறிய மஞ்சள் உடல் காத்திருக்கிறது
இறுதி நடுக்கத்துக்காக.
வெகு தொலைவில், தூசுக்கு மத்தியில்,
துர்தேவதைகள்
அச்சமுற்று உள்ளன.
இது வெறும் ஒரு பரிசோதனைதான்.
ஒரு பரிசோதனை.
விஷம் மீதான விஷத்தின் தீர்ப்பு அல்ல.

டி.கார்மி: சிறுகுறிப்பு

1925இல் நியுயார்க்கில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்த டி.கார்மி 1947இல் இஸ்ரேலில் சென்று வாழத் தொடங்கினார். இருவருடங்கள் இஸ்ரேலிய ராணுவத்தில் சேவை செய்த பின், பிரண்டைஸ் பல்கலை, ஆக்ஸ்போர்டு எரேபிய முதுகலை கல்வி மையம், மற்றும் நியுயார்க் கவிதை மையத்தில் பேராசிரியராக பணி புரிந்தார். எரேபிய மொழியில் எட்டு கவிதை தொகுதிகள் வெளியிட்டுள்ள டி.கார்மியின் இரு நூல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கப்பட்டு வந்துள்ளன. அவை Brass Serpent (1964) மற்றும் Somebody Like You (1971). ஷேக்ச்பியரின்  A Midsummer Night's Dream எனும் நகைச்சுவை நாடகத்தை எரேபியத்தில் மொழியாக்கியுள்ளார்.

Pin It