இந்த வாழ்க்கை
வழியில்லா மரணத்தின் வாயிலாய்
எந்தன் வலிகளை விழுங்கும் விழிகள்
விந்தையாய் விமர்சிக்கும்!
இந்த வேதனையும் வெட்கமாய் 
மறைந்தே ஒளியில் தோன்றும்!

girl_370_copyஅன்பு, பாசம் அறுத்தெறிந்த
துறவியாய் துறவு கொண்டு
துயிலும் நேரமும் தூங்காக் குருவியாய்
ப(பா)டும் இன்பங்களும் இன்னல்கள்தான்!
இந்த வாழ்க்கையில்தான் இன்பமும்
துன்பம் எனப் பொருள்படும் விந்தை!

உன்னதமான உறவுகள் சொல்ல
உலகில் ஓராயிரம் வார்த்தைகள்!
எந்தன் உதடுகள் மட்டும் உதிற்கும்
எவனாயினும் அவன் ஆண் என்று!

என் அருகில் நிற்க
அசிங்கம் என்று கருதுபவர்கள்கூட
என்னை வார்த்தையால் வசைபாடுவர்
கண் இரண்டால் காமக் கவிபாடுவர்!

என்  இனத்தவளும் இதயம் கனத்து
இருக்கும் பழியெல்லாம் என்மேல்
சுமத்தி சூள் உரைப்பாள்! என்னுடையோன்
தவறிழைக்காத் தங்கமகன் என்று!

என் தலைவிதி மாற்றி
தரங்கெட்டவளாய் தலைகுனிய செய்தவர்கள்,
தாய்மையின் தூய்மை மறந்து
தன் இச்சை தாகம் தணித்தவர்கள்  எல்லாம்
தங்கமகனாய் தரணியில் வலம்வரும்
சூழ்நிலை கொண்ட சமூகத்தில்
நாங்கள் மட்டும் சேறுபடிந்த செருப்பாய்
கோவிலின் வெளியே இருக்கும் பரிதாபம்!
படைத்தவனும் பிழை செய்துவிட்டான்
வாழ்வில் வறுமையை ஊட்டிவிட்டான்!
என் பிள்ளை செய்த பாவம் என்ன?
பிஞ்சு முகம் பிச்சை எடுத்த அவலம்!
நெஞ்சு பொறுக்க நிகழ்வு கண்டு
பந்தியில் பாய் விரித்துவிட்டாள் 
இந்த பத்தினி!

உடலை அறுத்து உணவு ஊட்டுபவளுக்கு
உலகம் பெயர் சொல்லி அழைப்பதோ
"விபசாரி'' எனும் சொல்லால்!...

Pin It