வாகனம்
புழுதியைக் கிளப்பியபடி
சென்றது
சாலையின் நடுவே
ஆட்டுக்குட்டி
அசையாமல் படுத்திருந்தது
இன்றைக்கு என்ன தேதி
சரியாக ஞாபகம் இல்லை
கோவில் யானை
வீதி வழியே போகிறது
நெற்றியில் நாமமா, பட்டையா
சரியாகத் தெரியவில்லை
மேற்கே ஒளிப்பிழம்பு
எத்தனை சூரிய அஸ்தமனத்தை
பார்த்திருக்கிறேன்
யாரோ பேர் சொல்லி
அழைப்பது போலிருந்தது
திரும்பிப் பார்த்தேன்
யாரையும் காணோம்
சித்திரகுப்தன் என் கணக்கை
முடிக்கிறானோ
புதுவிதமான வியாதிகள்
படையெடுக்கும் போது
மரணத்தை வாரி
அணைத்துக் கொள்ளத்
தோன்றுகிறது.

முன்னறிவிப்பு

இரைச்சலில்லை
வருடிச் செல்லும் காற்று
மண்ணைத் தின்னும் புழுவாக
காலநதியில்
கால் நனைத்துக் கொண்டிருந்தது
மனம்
நேற்றைக்கும் இன்றைக்கும்
வித்தியாசம் இருப்பதால் தான்
வாழ முடிகிறது
இரைக்கு ஆசைப்பட்ட மீன்
உலையில் கொதிப்பது போல
இன்பத்துக்கு ஏங்கும் உள்ளத்தால்
மீண்டும் மீண்டும்
பிறவி எடுக்கிறோம்
கண்ணைப் பார்த்து
பேச முடியவில்லை இப்போது
உள்ளேயும் சாக்கடை
வெளியேயும் சாக்கடை
பெண்ணின் நினைப்பு
லேசில் விடாது போலிருக்கு
பீஷ்மரைப் போல் வாழ
யாருக்குத்தான் ஆசை இருக்காது
நேற்று வந்தான்
இன்றும் வந்தான்
நாளையும் வருவான்
வானத்துக்கு கீழேயுள்ள
ஒவ்வொன்றையும்
பேசிப் பேசி தீர்த்தாலென்ன.

கோடம்பாக்கம்

கனவுகளோடு
வந்திறங்குகிறார்கள்
கோடம்பாக்கத்துக்கு
கம்பெனி
படியேறி படியேறி
செருப்பு தேய்ந்து போச்சி
வாய்ப்புக்காக
அவமானங்களையும்
புறக்கணிப்புகளையும்
ஏத்துக்க வேண்டியதாச்சி
இழுத்தடித்த போது தான்
சினிமான்னா என்னண்ணு
புரியலாச்சி
கற்பனைகள்
வறண்டு போச்சி
பசி மயக்கத்தில்
கண்கள் இருட்டாச்சி
வெறுங்கையா
திரும்பிப் போனா
ஊரு சனம் கிண்டல் பண்ணும்
கனவுலக கனவுகளை
மூட்டை கட்டி வைத்துவிட்டு
டீ கிளாஸ் கழுவி
வயிற்றை நிரப்பலாச்சி
சினிமா கம்பெனி முகவரியை
விசாரித்து வருபவர்களின்
எண்ணிக்கை
நாளுக்கு நாள்
கூடிக்கிட்டே போச்சி
இப்போது
திரையரங்குக்குச் சென்று
படம் பார்ப்பதைக் கூட
நிறுத்தியாச்சி.

பரிசு

என்றைக்கும்
எனக்கு விடுமுறை தான்
மேலதிகாரியின்
நச்சரிப்புகளையோ
சகபணியாளர்களின்
கிண்டல் பேச்சுக்களையோ
இனி கேட்க வேண்டியதில்லை
அலாரம் வைத்து
எழுந்திருப்பதிலிருந்தும்
அவசரமாக
குளிப்பதிலிருந்தும்
பேருந்து கூட்ட நெரிசலில்
சிக்கித் தவிப்பதிலிருந்தும்
இனி விடுதலை
பயணத்தின் போது
அவசரப்பட வேண்டியதில்லை
பணிக்கு திரும்ப வேண்டுமேயென
வேலைப் பளுவால்
வீட்டில் உள்ளவர்கள் மேல்
எரிந்து விழும் சந்தர்ப்பம்
இனி நேராது
கோப்புகள் அடுக்கப்பட்ட
மேஜையை
இனி நினைத்துப் பார்க்க
முடியாது
பதவி உயர்வுக்காக
இனி ஏங்கித் தவிக்க
வேண்டியதில்லை
கவர்மெண்ட் மாறினாலும்
கவலைப்படத் தேவையில்லை
டிரான்ஸ்பர் செய்துவிடுவேன்
என யாரும் மிரட்டப்
போவதில்லை
ஒற்றை வரியில் சொன்னால்
நான் பணிஓய்வு பெறுகிறேன்.

- ப.மதியழகன்

Pin It