நாடாளுமன்றம் என்னும் சிறப்புக்குரிய மக்கள் மன்றமும் (லோக் சபா)மாநிலங்கள் அவையும் (இராஜ்ய சபா) நாட்டிலுள்ள அனைத்து மக்களின் உரிமையையும், மாநிலங்களின் உரிமையையும் காத்துச் செயல்படுவதற்குரிய அவைகளாகும்.

குடியாட்சி முறையின் மகுடமாக உள்ள மன்றங்கள் அவை மக்களின் அடிப்படை உரிமைகட்கு ஊறு நேராவண்ணம் காத்திடும் நெறியில் சட்டங்கள் இயற்றவும், அரசமைப்புச் சட்டத்தின் குறிக்கோளைப் போற்றவும், நாட்டின் பாதுகாப்பையும், ஒற்றுமையையும் உறுதி செய்யவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது மக்கள் மன்றம். மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டது மாநிலங்களவை.

அந்த மன்றங்களில் இடம் பெறுவோர் –இந்திய நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வருபவர்கள். பல்வேறு மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். சுமார் எட்டு இலட்சம் மக்கள்–பத்து இலட்சம் மக்களுக்கு ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்படும் நிலையினால் –மிகப்பெரிய கடமையும் பொறுப்பும் வாய்ந்தவர்கள் அவர்கள் எல்லோரும் படித்தவராகவோ, பட்டம் பெற்றவராகவோ, ஆங்கிலமோ – இந்தியோ அறிந்தவராகவோ இருப்பது இயலாது. குடியாட்சி முறையில் வயது வந்தவர்கட்கு எல்லாம் வாக்குரிமையும், வாக்குரிமை உள்ளவர் எவரும் போட்டியிடும் உரிமையும் உள்ளதன் காரணமாக அவர்களது தாய்மொழி தவிர வேறு எம்மொழியும் அறியாதவரும் தேர்ந்தெடுக்கப்படலாம்.

எனவே,அப்படிப்பட்ட நிலையில் அந்த மன்றங்களில் இடம் பெறுவோர் தம் கடமையைச் செய்வதற்கு "மொழி' ஒரு தடையாக இருத்தல் ஆகாது. தத்தம் மொழியில் – தமது உள்ளத்து உணர்வுகளையும், எண்ணங்களையும் வெளியிடும் வாய்ப்பு உறுப்பினர்கட்கு இன்றியமையாததாகும்.

காசுமீர் முதல் நாகாலாந்து வரையில் சிம்லா முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள பரப்பினில் உள்ள பலமொழி பேசும் மக்களின் பிரதிநிதிகள் இந்தியையோ – ஆங்கிலத்தையோ தான் பயன்படுத்த வேண்டும் என்னும் நிலை ஒரு பெருங்குறையாகும்.

சுதந்திரம் கிடைத்து குடியரசு ஆட்சி உதயமான நாள் முதலாகவே, அந்த ஆட்சி மன்றங்களில், ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமன்றிப் பிற தேசிய மொழிகளிலும் பேசுவதற்கான உரிமை கேட்கப்பட்டு வந்தது. குறிப்பாகத் தமிழ் – தெலுங்கு – கன்னடம்– மலையாளம் ஆகிய தென்னாட்டு மொழிகளில் பேசும் உரிமை பலமுறை வற்புறுத்தப்பட்டது.

அதன் பயனாக அப்படிப் பேச விரும்பும் உறுப்பினர்கள் குறிப்பாகத் தென்னாட்டு உறுப்பினர்கள்,தமது பேச்சினை முதலில் ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்துவிட்டுப் பேச வேண்டும் என்று கூறப்பட்டது. அவ்வாறு எழுதிக் கொடுத்துவிட்டால்தான் பேச்சினைப் பதிவு செய்து கொள்ளவும், பேசும்போது மொழிபெயர்க்கவும் முடியும் என்று கூறப்பட்டது.

நாடாளுமன்றத்தில் – ஆங்கிலத்திலோ, இந்தியிலோ பேசப்படும் பேச்சுகள் அதே சமயத்தில் மொழி பெயர்க்கப்படுகின்றன. ஒவ்வொர் உறுப்பினரும் இந்தியில் பேச்சு நிகழும்போது ஆங்கில மொழிபெயர்ப்பையும்–ஆங்கிலத்தில் பேச்சு நிகழும் போது இந்தி மொழிபெயர்ப்பையும் கேட்க, காதில் பொருத்திக் கொள்ளும் ஒலிக்கருவி வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிற மொழியில்பேசுவதையும் மொழிபெயர்ப்பு மூலம் ஆங்கிலத்திலோ, இந்தியிலோ கேட்டு கொள்ளும் வாய்ப்பும் கடந்த பத்து ஆண்டு காலமாய் உள்ளது. ஆனால், ஆங்கிலமும், இந்தியும் அறியாதார் அவரவர் மொழியில் எதையும் கேட்டறிய முடியாது.மன்றத்தின் நடவடிக்கையைப் பொறுத்த வரையில் அவர்கள் எதையும் தெளிவாக அறியமுடியாத நிலைக்கே ஆளாக்கப்படுகின்றனர்.

ஒவ்வோர் அளவில் அறிந்துள்ள ஆங்கிலத்தின் மூலமே இந்திய மொழியினர் அல்லத பிற மொழி உறுப்பினர்கள் அந்தந்த அளவில் மன்றத்தின் பேச்சுகளை அறிந்து கொள்ளும் நிலையே உள்ளது.

எனவே, இந்த அவலநிலை நீங்க, உறுப்பினர்கள், அவரவர் மொழியில் (ஏற்கப்பட்டுள்ள தேசிய மொழிகளில்) பேசவும், பிறர் பேச்சின் மொழி பெயர்ப்பையும் தம்மொழியிலேயே கேட்கவும் வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும்.

பிறமொழி பேசும் பிரதிநிதிகளைவிட, ஆங்கிலத்தில் தேர்ச்சியும் பயிற்சியும் பெறாத இந்தி மொழிப் பிரதிநிதிகள், அறிவாற்றலில் உயர்ந்தவர்களோ, "கருத்துகளை நுணுக்கமாகவோ, திறம்படவோ விளக்குபவர்களோ அல்ல. என்பது உண்மையெனினும் ஆங்கிலம் தவிர்த்து இந்தி ஒன்றே (இந்துத்தானியும்) அவையில் அடிக்கடியும் பெரும் அளவு நேரமும் இடம் பெறும் நிலை இருப்பதால் இந்தி வட்டாரத்தினர்தாம் ஏதோ அறிவாற்றல் மிக்கவர்கள் போலவும் அரசியல் அறிந்த வித்தகர்கள் போலவும் அவர்களே நாட்டின் பாதுகாவலர்கள் போலவும்,அவர்கள் அறியாதது ஏதும் இல்லாதது போலவும் கருதிக் கொள்ள வேண்டிய ஒரு மயக்க உணர்வு மற்றவர்கட்கெல்லாம் ஏற்படுகிறது.

உறுப்பினர் எல்லோரும் அவரவர் மொழியில் பேசவும் அந்தப்பேச்சு உடனுக்குடன் மொழி பெயர்க்கப்படவும்,ஐக்கிய நாடுகள் மன்றத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது போன்று, ஒரே நேரத்தில் பலமொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு அவரவர் விரும்பும் மொழியில் கேட்டுக்கொள்ளும் வழிவகை காணப்படுமானால்,அவையில் உள்ள உறுப்பினர்களின் பங்கும் – பாங்கும் உயரும்.

இந்தி மொழியினரின் வல்லடி வழக்கும் குறையும்.இந்தியாவின் பரந்துப்பட்ட தன்மையையும் அதன் வகையையும், தேசிய நாடாளுமன்றம் எடுத்துக்காட்டும் வகையில் விளங்கும்.

இந்துவும், முசுலீமும், பௌத்தரும், கிறித்துவரும், சமணரும், பார்சீக்களும், அவர்களுள்ளே காவியுடையாளரும்,சரிகைத் தலைப்பாகையினரும், வழக்கறிஞர்களும்,பேராசிரியர்களும், கலைஞர்களும், எழுத்தாளர்களும், விவசாயிகளும், தொழிலாளர் தலைவர்களுமாகப் – பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், வெவ்வேறு இனப் பண்பாட்டோடு கூடிய மொழிகளைப் பேசுவோர் தேர்தல் மூலம் இடம் பெறும் அவை, அந்த அளவுக்கு அவர்தம் மொத்தப் பிரதிபலிப்பாக விளங்க வேண்டுமானால், அவர்தம் மொழிகளுக்கு இடந்தருவதன் மூலம், முழு அளவுக்குத் தத்தம் மொழியைப் பயன்படுத்தி – அவையினரின் கருத்துடன் –தம் கருத்தையும் இடம்பெறச் செய்யும் உரிமை வழங்க வேண்டும் அதன் மூலமே இந்திய மக்களாட்சியின் மாட்சி உலகம் மதிக்கத் தக்கதான தனிச்சிறப்பு எய்தும்.

மொழி பெயர்ப்புச் சாதனம் அமைப்பதிலும், பல மொழிகளிலும் மொழி பெயர்ப்பினைக் கேட்கும் வசதி செய்வதிலும் சில இடையூறுகள் உள்ளன என்று கூறப்படுகிறது.ஆயினும், ஐந்து ஆறு மொழிகள் வரையில் ஒரே நேரத்தில் மொழி பெயர்க்கப்படுவது பன்னாட்டு அவைகளின் நடைமுறையில் அறியப்படுகிறது. அந்த அடிப்படையில், இந்தி, ஆங்கிலம் தவிர்த்துத் தென்னாட்டு மொழிகள் நான்கிற்கும், வங்காள மொழிக்கும் அந்த முறையை மேற்கொள்வது இயலாததல்ல; அதற்கான அலுவலர்கட்குத் தனிப்பயிற்சிதான் தேவை.

கேட்டு கொள்ளும் உறுப்பினர்கட்குப் பிறமொழிகளில் பேசும் உரிமை வழங்கிய போதிலும் – நாடாளுமன்ற நடவடிக்கைகள் அச்சாகும்போது, அந்தப் பேச்சுகளின் ஆங்கில மொழி பெயர்ப்புகள்தாம் அச்சாகும் நிலை உள்ளது.ஆங்கில மொழிபெயர்ப்பு இடம் பெறுவது அவசியம்.மற்றவர்கள் அறிந்து கொள்ள அதுவே வழி.எனினும் அவரவர் பேசிய மொழியிலும் அச்சியற்றப்படுவது வேண்டப்படுவதாகும்.

மன்ற நடவடிக்கைகள் அச்சியற்றப்படும்போது,இந்திப் பேச்சினிடையிலே இரண்டு வரி உருதுக் கவிதை ஒன்றைக் கூறினும் அது உருதுவிலேயே அச்சியற்றப்படும் முறை உள்ளது என்பதையும் எண்ணிப்பார்ப்போர் பிற மொழிகளின் உரிமையையும் மதிக்க வேண்டிய அவசியத்தை உணர வேண்டும்.

மாநிலங்கள் அவை நடவடிக்கை ஏட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்டு முப்பதாம் நாள் அரசமைப்புச் சட்டம் 45 ஆவது திருத்தம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் உருதுப் பேச்சு உருதுவிலேயே அச்சாகியுள்ளதை யாரும் காணலாம்.

கழகத் தோழனே! நான் எடுத்துக்காட்டியுள்ளது உருதுவில் பேசுவதும், அச்சியற்றவதும் முறையல்ல என்பதற்கல்ல. வடநாட்டில் இதற்கு முன்னர் என்றுமே ஓர் ஆட்சி மொழியாக நிலவாத இந்தியும்,வடநாட்டில் ஆட்சிமொழியாய் நிலவிய உருதுவும்,நாடாளுமன்ற நடவடிக்கையில் உரிமையுடன் திகழும் போது, தென்னாட்டில் ஆட்சி மொழிகளாய் அன்றும் இன்றும் நிலவும் தமிழ் –தெலுங்கு முதலான மொழிகள் இந்தி,உருது ஆகிய இருமொழிகளினின்றும் முற்றிலும் வேறுபட்ட தனித்தன்மையுடைய மொழிகள், நாடாளுமன்ற நடவடிக்கையில் முழு உரிமை பெறுவது நியாயமல்லவா.......

Pin It