தெருக்களிலே செய்துவந்த பெரியார் தொண்டு

                சௌந்திரபாண்டியனாரால் மேலும் வெற்றிப்

பெருக்கத்தைக் கண்டதென்றால் உண்மை! உண்மை!

                பின்தங்கி இருந்தவர்கள் முன்னே செல்ல

திருக்குறளின் இருவரிபோல் பெரியாரோடு

                சேர்ந்து பணி செய்தாரே! ஏழை வாழ

உருக்கமுடன் உழைத்துவென்ற வீரர்! நெஞ்சில்

                உயர்ந்திருக்கும் பட்டிவீரன் பட்டி சான்றோர்!

 

பகுத்தறிவுப் போர்க்களத்தில் பாய்ந்து சென்று

                பழைமைக்கு வைத்தவொரு வேட்டு! கற்றோர்

வகுத்துவைத்த நல்லறிவை வாரித் தந்து

                வறண்டுவிட்ட மூடத்தனங்கள் ஓடத்

தொகுத்துவைத்தார் நல்லொளியை மக்கள் காண!

                தொட மறுத்தார் கயமைகளை! வாய்மையாளர்

நகைத்துவர நல்லோர்பின் நடக்கப் பொய்யின்

                நரித்தனத்தைத் தோலுரித்துக் காட்டினாரே!

 

பசியறிந்த மக்களுக்கு வாய்த்த சோறு

                பதவிகளில் மயங்காமல் நின்ற ஏறு!

விசையொடிந்த பாட்டாளித் தோழர் வாழ

                விலைபோகா மாணிக்கம் இவரே ஆகும்!

தசையிருந்த நாள்மட்டும் தமிழருக்கே

                தலைபணிந்தார்! குருதிதந்தார்! கொள்கைக் குன்றம்

அசைவின்றி ஆடாமல் அங்கும் இங்கும்

                அகலாமல் ஒருகொடிக்கே ஒப்படைத்தார்!

 

வயல்வெளியில் பறவைகொத்தும் கதிராய் நின்று

                வையத்தார் வாழ்வுபெறப் பாடுபட்டார்

புயல்வந்து மறித்தாலும் பூகம் பத்தால்

                புதைந்தாலும் குலைந்தாலும் கலங்கி டாத

செயல்மறவர்! சீர்திருத்தச் சிற்பி! நாட்டோர்

                தினம்வணங்கும் சௌந்திரபாண்டியாரின் மேன்மை

உயரத்தில் பறந்திருக்கும்! நல்லோர் உள்ளம்

                ஒருநாளும் மறவாமல் வணங்கி நிற்கும்!

– ஆலந்தூர் முனைவர்.கோ.மோகனரங்கன்

Pin It