வலக்கரமாய்ப் பெரியார்க்கு வாய்த்த தோழர்

                வைரம்போல் நெஞ்சுறுதி சேர்த்த தீரர்

இலக்கதனைத் தப்பாமல் பாயும் அம்பாய்

                இயக்கத்தைக் காத்திட்ட கொள்கை வீரர்!

கலக்கத்தை அறியாதார்; நீதிக் கட்சி

                காலம்மு தலே பெரியார் படையில் சேர்ந்தார்

உலக்கைஅதன் இடிபோலப் பகைநடுங்க

                உருமுகின்ற அரிமாவாய் மண்ணில் வாழ்ந்தார்

 

மடமைஇருள் போர்த்திருந்த முகவை மண்ணில்

                மணிமணியாய்ச் சாதனைகள் புரிந்தார்; மேல்வாழ்

உடமையரே பேருந்தில் பயணம் செய்யும்

                உரிமையினைப் பெற்றிருந்த அந்த நாளில்

தடையின்றி அவர்க்கீடாய்த் தாழ்த்தப் பட்டோர்

                தாம்செல்ல வழிகண்டார்; தடுக்க வந்த

கெடுமதியர் தமக்கெல்லாம் பேருந் துரிமம்

                கிடைக்காமல் தடைபோட்டார்; நீதி காத்தார்

 

நாடார்குலத் தார்அந்நாள் காங்கிரஸ் தன்னை

                நாடாமல் பிற்பட்டோர் நலத்துக் காகப்

பாடாற்றும் பெரியாரின் சுயமரியாதைப்

                பாதைதனில் பற்றுகொளப் பாடு பட்டார்

நாடுதொறும் மாநாடு கிளர்ச்சி என்றே

                நாள்தோறும் விளக்கி அவர் நெஞ்சைத் தொட்டார்

 

முப்போதும் மறக்கவொணாச் செங்கல் பட்டு

                முதல்சுய மரியாதை மாநாட் டுக்கே

ஒப்பில்லாத் தலைமையினை ஏற்றார்; சாதி

                ஒழிப்பதனை, பெண் உயர்வை உயிராய்க் காத்தார்

எப்போதும் விதவைமணம், சாதிக் கேடே

                இல்லாத கலப்புமணம் நாட்டில் ஓங்கத்

தப்பாமல் உழைத்தவர் யார்? ஊ.பு.அ.ச.

                தலைவர்அவர்! தன்மான இயக்கத்தின்வேர்!

- கவிஞர். தமிழேந்தி

Pin It