ஆப்கானிஸ்தானிலிருந்து நான்கு கனடிய போர் வீரர்களின் உடல்கள் இராணுவ மரியாதையுடன் எடுத்து வரப்பட்டிருக்கின்றது. எதற்காக இந்த உயிர்கள் பலியிடப்படுகின்றன. யாருக்கும் சரியான பதில் தெரியவில்லை. பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் பொய்யான தவறான தகவல்களையே வழங்குகின்றன. அதே நேரம் வீழ்ந்துவிட்ட இராணுவ வீரர்களுக்கான முக்கியத்துவத்தையும் மரியாதையையும் ஊடகத் துறை தரவில்லை என்பது இவ்வீரர்களின் உறவினர்களால் வைக்கப்படும் குற்றச்சாட்டாகவும் இருக்கின்றது.

Canada Army1989 இல் முடிவுக்கு வந்த சோவியத்தின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் உள்நாட்டு யுத்தத்திலும் கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற சீரழிவிலும் சிக்கித் தவித்தது. அந்த வேளையில்தான் ஒரு கிராமத்து சமய வழிபாட்டுத் தலைவரான முல்லா ஒமர் தலைமையில் மதக் கல்வி மாணவர்கள் ஒன்று சேர்ந்து தலிபான்கள் ஆனார்கள். சிறு சிறு குழுத்தலைவர்களுக்கு எதிராகவும் கற்பழிப்பு போதைப் பொருள் கடத்தல், சட்டம் ஒழுங்குப் பிரச்சனைக்கும் எதிராகப் போராடினார்கள். வெற்றி கொண்ட இடங்களிலெல்லாம் பிரதேச வாத மத அடிப்படைவாத சட்டங்களை நடைமுறைப்படுத்தினார்கள். புஸ்தான் இனக் குழுமத்தில் இருந்து வந்த தலிபான்கள் இவர்கள் 9/11 வகை தீவிரவாதிகளாக இல்லாவிட்டாலும் மத அடிப்படை வாத கொம்யூனிஸத்திற்கு எதிரான கடும் போக்காளர்களாக இருந்தார்கள். தலிபான்கள் ஓப்பியம் மற்றும் ஹீரோயின் உற்பத்தியை முற்று முழுதாக தடை செய்தாலும் பிற்போக்குவாத கடுமையாளர்களாக இனம் காணப்பட்டார்கள்.

வெளிப்படையாக "தீவிரவாதிகளின் முகாம்" (terrorist camps) என்று சொல்லப்பட்டு அமெரிக்காவாலும் மேற்கு நாடுகளாலும் குண்டு போடப்பட்டு அழிக்கப்பட்ட முகாம்கள் அனைத்திலும் கம்யூனிஸத்திற்கெதிராக ஆப்கானிஸ்தானிலும் மத்திய ஆசியாவிலும் போராட இணைந்து கொண்டிருந்த முஸ்லீம் தொண்டர்களே தங்கியிருந்தனர். கம்யூனிஸ்டுகள் 1970 இல் இருந்து கம்யூனிஸக் கொள்கைகளை பாடசாலைக் கல்வித் திட்டத்தின் மூலம் பரப்பி வந்தனர். அதனால் பெண்களுக்கான கல்வி தலிபான்களால் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டது. தலிபான்கள் சிறிய அளவிலான கொடுமைகளுக்காகவும் நீண்ட காலமாக இருந்து வந்த புத்தர் சிலைகள் தகர்ப்புக்காகவும் இன்றும் குறை கூறப்படுகின்றார்கள்.

9/11 தாக்குதல் நடைபெறுவதற்கு நான்கு மாதங்கள் முன் வரை அமெரிக்காவினால் வழங்கப்பட்ட பல மில்லியன் டொலர்கள் உதவி பெற்று வந்தவர்களே இந்தத் தலிபான்கள். இவர்களுடன் 300 அல் கைடா அமைப்பினரையும் பயன்படுத்தி முஸ்லீம்கள் அதிகம் வாழும் சீனாவின் மேற்குப் பிரதேசத்திலும் ரஸ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்த மத்திய ஆசியாவிலும் குழப்பம் விளைவிக்க அமெரிக்கா யோசனை கொண்டிருக்கக் கூடியளவில் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகளாக இருந்தவர்கள் தான் இவர்கள்.

அமெரிக்க எண்ணெய்க் கம்பனிக்கான குழாய்த் திட்டத்தை ஆப்கானிஸ்தானிற்கூடாக எடுத்துவரும் அமெரிக்காவின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது அமெரிக்காவுடனான தேனிலவு முடிவுக்கு வந்தது. 9/11 தாக்குதலுக்குப் பின்னான காலத்தில் ஒஸாம பின் லாடனின் அடைக்கலமும் அமெரிக்காவின் ஓசாமாவை ஒப்படைக்கக் கோரிய கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்ததாலும் வந்தது தொல்லை. 9/11 தாக்குதலுக்கான சூத்திரதாரி ஒஸாமா தான் என்பதற்கு தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்கா கூறியபோது சர்வதேச நீதி மன்றத்தில் ஒஸாமாவை ஒப்படைக்க தலிபான்கள் முன் வந்தார்கள். ஆனாலும் அதனை ஏற்றுக் கொள்ள அமெரிக்கா மறுத்துவிட்டது. தொடர்ந்து 9/11 இற்கான பழியை தலிபான்கள் மேல் போட்டு ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாத முல்லா ஒமர் புஸ்தான் இன மக்களுடன் கலந்து விடுமாறு தலிபான்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். அன்றிலிருந்து இன்று வரை ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக தலிபான்கள் சிறு சிறு கொரில்லா சண்டைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இவர்களுடன் ஹிஸ்பி இஸ்லாமி என்னும் இயக்கமும் இணைந்து போராடி வருகின்றது. அப்படியொரு சண்டையிலேயே நான்கு கனடிய இராணுவ வீரர்களும் வீழ்ந்து பட்டு இராணுவ மரியாதையுடன் கனடாவிற்கு எடுத்து வரப்பட்டார்கள்.

கனடியர்கள் தொடர்ந்தும் அங்கு இருப்பதற்கு முக்கிய பிரச்சார காரணமாகச் சொல்லப்படுவது ஆப்கானிஸ்தானின் ஜனநாயகத்தை காப்பது என்பது. அதற்காக அமெரிக்காவால் அமைக்கப்பட்ட கர்ஸாயின் பொம்மை அரசினால் நடாத்தப்பட்ட தேர்தலில் சோவியத் காலத்தில் நடத்தப்பட்ட தேர்தல்களில் இடம் பெற்றதையும் விட அதிக அளவில் ஊழல் இடம் பெற்றுள்ளது. இதற்காக நூறு மில்லியனுக்கும் அதிகமான டொலர்கள் சிறு சிறு குழுத்தலைவர்களுக்கு இலஞ்சமாக வழங்கப்பட்டிருக்கின்றது.

Talibanதலிபான்களின் பின்னான ஆட்சிக் காலத்தில் மீண்டும் தோன்றிய போதைப் பொருள் கடத்தலால் தங்கள் மடிகளை நிரப்பிக் கொண்டிருக்கும் இவர்கள் மேலும் செல்வந்தர் ஆனார்கள். தலிபான்கள் அகற்றப்பட்டதன் பின் ஓப்பியம் உற்பத்தி 90% வளர்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க - NATO படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள நார்கோ மாகாணத்திலிருந்துதான் உலகின் முழுத் தேவைக்குமான ஹெரோயின் உற்பத்தி செய்யப்படுகின்றது. வெளி நாட்டுப்படைகள் வெளியேறும் கணத்திலேயே ஹர்ஸாயின் அரசும் செயலிழந்துவிடும்.

சோவியத்தின் அராஜகத்தில் இருந்து மீண்ட ஆப்கானியர்களில் 1.5 மில்லியன் ஆப்கானியர்கள் போதைப் பொருள் தாதாக்களாலும் அமெரிக்க கனேடிய NATO படைகளாலும் கொல்லப்பட ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் தினமும் சித்திரவதை செய்யப்படுகின்றார்கள். அதிக அளவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் உஸ்பெக் பகுதிகள்- இன்று அமெரிக்க கனடிய கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள ஆப்கானியர்கள் தலிபான்கள் காலத்தையும் விட அதிக அளவில் சித்திரவதை செய்யப்படுகின்றார்கள்.

கனடா ஆப்கானிஸ்தானில் தங்கியிருப்பதற்காக மேலும் பிரச்சாரப்படுத்தும் காரணம் "பெண்கள் சுதந்திரத்தைப் பாதுகாப்பது" என்பது நகைப்புக்கிடமான முட்டாள்த்தனம். மேற்கு நாடுகளால் குற்றம் சாட்டப்படுவதைப் போல் தலிபான்கள் பெண்களை மற்ற ஆப்கானியர்களை விட ஒன்றும் மோசமாக சித்திரவதை செய்து விடவில்லை. பெண் கொடுமை என்பது தென் ஆசிய நாடுகள் எங்கும் நிறைந்திருக்கின்றது. கனடிய இராணுவம் ஒன்றும் சமூக சேவகர்கள் அல்லவே. அவர்களுடைய சமூகப் பழக்க வழக்கங்களை மாற்றுவதும் முடியாத காரியம். மூளையில்லாதவர்கள் மட்டும்தான் அப்படி முடியும் என்று எண்ணுவார்கள்.

இந்தியாவில் பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் கொளுத்தப்படுகின்றார்கள். சாதி விட்டு சாதி திருமணம் செய்பவர்கள் தூக்கிலிடப்படுகின்றார்கள். அல்லது வெட்டிக் கொல்லப்படுகின்றார்கள். இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமான பெண் சிசுக்கள் கருவிலேயே கொல்லப்பட்டுள்ளதாக Lancet என்ற மருத்துவ சஞ்சிகை கூறுகின்றது.

"பெண்கள் உரிமைக்காக" போராட கனடியர்கள் அடுத்து இந்தியாவிற்குத் தான் செல்ல வேண்டும். செல்வார்களா? 

-
இளந்திரையன்

Pin It