மக்களின் சுயமரியாதை, அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அவர்களுக்கு இடையிலான சமத்துவம் இந்த அடிப்படையான பார்வையோடு, மொழி, இனம், தேசியம், தேசபக்தி என்ற கோட்பாடுகளை அனுக வேண்டும். இதற்கு மாறான பார்வை பாசிச ஆபத்திற்கு அழைத்துச் சென்றுவிடும். பார்ப்பனியம் தன்னை பாசிசமாக உருவாக்கம் செய்து கொண்டதை எதிர்த்துத்தான் பெரியார் பார்ப்பன எதிர்ப்பைப் பேசினார்.

ஆப்கானில் தற்போது தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறார்கள். சொந்த மண்ணிலிருந்து இரஷ்யாவையும், அமெரிக்காவையும் அவர்கள் வெளியேற்றி இருக்கிறார்கள். எனவே அவர்கள் நடத்தியது தேசியத்திற்கான விடுதலைப் போராட்டம் என்ற பார்வையோடு சில தமிழ் தேசியர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். சில இடதுசாரி பிரிவினர் அமெரிக்காவை ஆப்கான்கள் எதிர்ப்பதை ஏகாதிபத்திய எதிர்ப்பாக போற்றுகிறார்கள். இந்த பார்வை சரியானது அல்ல என்பதே நமது கருத்து.

தாலிபான் இப்போது அனைவரையும் உள்ளடக்கிய அமைச்சரவையை அமைக்காமல் ‘இஸ்லாமிய ஆப்கான் அமீரக ஆட்சி’ என்று தனது ஆட்சியை அறிவித்திருக்கிறது. 'ஷரியத்' சட்டப்படி ஆட்சி நடத்தப் போவதாகவும் பிரகடனப்படுத்தியிருக்கிறது. பெண்கள் 'ஹஷாரா ஷியா' பிரிவு, அமைச்சரவையில் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. 33 அமைச்சர்களில் 30 அமைச்சர்கள், இஸ்லாமியர்களிலேயே ‘பட்டானி (பஷ்டான்)’ என்ற பிரிவைச் சார்ந்தவர்கள். டாஜிக்ஸ் இனக் குழுவைச் சார்ந்த இருவரும், ‘உஷ்பக்’ இனக்குழுவைச் சார்ந்த ஒருவரும் அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கிறார்கள். அமைச்சரவையில் இடம் பெற்ற 17 பேர் அய்.நா.வால் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றவர்கள். ஆட்சியின் தலைவரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

1990களில் ஆட்சியை கைப்பற்றிய போது இருந்த நிலைமை இப்போது முற்றாக மாறுபட்டுள்ளது. அப்போது அஞ்சியிருந்த பெண்கள், இப்போது உரிமை கோரி போராட தொடங்கிவிட்டார்கள். அவர்களை துப்பாக்கி முனையில் ஆட்சி ஒடுக்குகிறது. ‘பஞ்சிஷீர்’ மாகாணத்தில் வாழும் இனக் குழுவினர் தாலிபான்களை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தை நடத்துகிறார்கள். அந்த மாகாணத்தை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்ததற்குப் பிறகு அவர்கள் மலைகளில் போய் பதுங்கி மீண்டும் தொடர்ச்சியாக ஆயுதப் போராட்டத்தை நடத்தும் சூழ்நிலை உருவாகிவிட்டது.

பாகிஸ்தான், சீனா, இரஷ்யா, ஆதரவும் இப்போது தாலிபான்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்தப் பிண்ணனியில் அனைவரையும், அனைத்து இனங்களையும் உள்ளடக்காத ஒரு ஆட்சியை தேசிய விடுதலைக்கான ஆட்சியாக பார்ப்பது என்பது பாசிச ஆதரவுப் பார்வையாகவே இருக்க முடியும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It