உலகில் ஒரே இந்து நாடான நேபாளம் மாவோயிஸ்டுகளின் புரட்சியால் கவிழ்ந்து போனது. இந்து ஆட்சியைக் கவிழ்த்து விட்டு  ஆட்சிக்கு வந்து விட்டார்களே! உருப்படியான வளர்ச்சிப் பாதைக்கு, மதச் சார்பற்றபாட்டைக்கு நாட்டை அழைத்துச் செல்லுவார்கள் என்று பார்த்தால், இந்து மதத்தின் வாடகை மனிதர்களாகத் தான் அவர்களும் இருக்கிறார்கள். இப்போது அங்கே மதமாற்றத்தைத் தடை செய்வதற்கும், பசுக்களைக் கொல்வது குற்றம் என்று சொல்வதற்கும் நேபாள பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் மசோதா சட்டமாவதைத் தடுக்க அந்நாட்டு கிறிஸ்தவர்களும், மதசார்பற்ற அமைப்பினரும் முயன்று வருகின்றனர்.

ஜூன் 23ம் தேதி இந்த மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதும், மத சார்பற்ற அமைப்பினரும், சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்களும் இதை எதிர்த்தனர். இந்த மசோதா சட்டமானால், சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்கள் பொது இடங்களில் தங்கள் மதங்கள் பற்றி பேசுவதும், மதம் குறித்த அச்சுப்பதிப்புக்களை வழங்குவதும் குற்றமாகக் கருதப்படும். அவர்களுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும், 700 டாலர் அபராதமும் வழங்கப்படும்.

இந்த மசோதாவுக்கு பதிலாக, சிறுபான்மையினருக்கென தனியொரு துறை நேபாள அரசில் அமைக்கப்பட வேண்டுமென்று கத்தோலிக்கர், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், புத்த மதத்தினர் அனைவரும் அரசிடம் விண்ணப்பித்துள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் பா.ஜ.க. ஆளும் சில மாநிலங்களில் இது நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் (2001-2006) இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது - பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் கூட, இச்சட்டம் வெற்றி பெற முடியவில்லை என்பதால் இந்துத்துவாக்களே இக்கோரிக்கையை என்றாவது ஒருநாள் உச்சரிக்கும் 'ஸ்லோகமாக' மாறிவிட்ட நிலையில், சின்ன நாடான அதுவும் பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆட்சி நடை பெற்று வரும் நாடான நேபாளத்தில், அதுவும் மதசார்பற்ற கொள்கை என்று கூறப்படும் கம்யூசத்தின் மறுபதிப்பான மாவோயிஸ்டுகள் ஆட்சியில் மனுநீதி சட் டமா? என்று சமூக ஆர்வலர்கள் கொதிக்கிறார்கள். நேபாள ஆட்சியர் இந்த விஷப் பரிட்சையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக வைக்கிறார்கள். அவர்களை நேபாளம் கவனிக்குமா?

Pin It