கடந்த 11-03-2013அன்று நடந்த ஆந்திர மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது, முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட்டு அச்சுறுத்தும் காவல்துறையின் சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து மூன்றரை நிமிடங்கள் ஆக்ரோஷமாக பேசியிருக்கிறார் அகில இந்திய மஜ்லிஸ் இத்திஹாத்துல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அக்பருத்தீன் உவைசி.

உருதுவில் அமைந்த அக்பருத்தீன் பேச்சின் தமிழ் வடிவம் இங்கே மக்கள் ரிப்போர்ட் வாசகர்களுக்காக...

“என் மீது தேசத் துரோகக் குற்றத்தை சுமத்தி அநீதி இழைத்திருக்கிறீர்கள். இந்த குற்றம் நாளை உங்களுக்கு எதிராகவும் சுமத்தப்படும். இதுபோன்று அநியாயம் செய்யாதீர்கள்.

நீங்கள் முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்க வேண்டுமென்று நினைத்தால்...மதச்சார்பற்ற கொள்கைகளை நீங்கள் பின்பற்றுபவர்களாக இருந்தால் முமீன் பேட்டில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யுங்கள்.

சமீபத்தில் (நிஸாம்பேட் பள்ளியில்) ஒரு பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற, சிறுமியின் மானத்தோடு விளையாடிய அந்த பிரின்ஸ்பலை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அவரை கைது செய்ய வேண்டும். இந்த நீதி விசாரணை விரைவு நீதிமன்றத்தில் நடத்தி அவருக்கு தண்டனை வழங்க வேண்டும்.

இது உங்கள் மீதான பொறுப்பு.அதற்குப் பெயர்தான் நியாயம் வழங்குவது.இந்த அரசு உண்மையில் மதச்சார்பற்ற அரசாக இருக்கிறதென்றால்...இந்த அரசு,முஸ்லிம்கள் மீது மனித நேயத்தை வெளிப்படுத்துகிற தென்றால்,அது முஸ்லிம்களுடன் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.

அப்பாவி முஸ்லிம்களை சட்ட விரோதமாக கைது செய்தது அனந்தபூரை சேர்ந்த போலீஸ் அதிகாரிகளாக இருந்தாலும் சரி.ஹைதராபாத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகளாக இருந்தாலும் சரி. அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

முஸ்லிம் இளைஞர்கள் மீதான ஹிஸ்டரி ஷீட் (குற்ற நட வடிக்கைகள் தொடர்பான அறிக்கை) கை விடப்படும் என்று உள்துறை அமைச்சர் உறுதியளித்திருக்கிறார் இன்றுவரை அது கைவிடப்படவில்லை.

முதல் முறையாக குற்றம் செய்தவர்களுக்கு எதிரான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதல்வர் உறுதியளித்திருந்தார். அதுவும் வாபஸ் பெறப்படவில்லை என்பதை இந்த சபையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு,நிரபராதிகள் என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மீதான வழக்குகள் கைவிடப்படும் என்று வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. இன்றுவரை யில் அந்த வழக்குகளும் கைவிடப்படவில்லை.

மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு சம்பவத்தில் அப்பகுதி முஸ்லிம் இளைஞர்கள் மீது கொடுமைகள் புரிந்த,சித்திரவதைகள் செய்த காவல்துறை அதிகாரிகள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த அதிகாரிகள் யாரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. கொடுமைகளுக்கு மேல் கொடுமைகள் செய்து கொண்டே போகிறீர் கள்.

கேரக்டர் சர்டிபிகேட் (விடுதலையான முஸ்லிம் இளைஞர்களுக்கு நற்சான்று) கொடுக்கப்படுகிறது என்றால் இது முஸ்லிம்கள் மீதான அநீதியாகும். போலீஸை வைத்து எங்களை அச்சுறுத்த, மிரட்ட இந்த அரசு சதி செய்கிறது. அரசுக்கு எச்சரிக்கிறேன். போலீஸ் எங்களை அச்சுறுத்த முடியாது! போலீஸை வைத்து இந்த அரசு எங்களை வீழ்த்தி விட முடியாது.

நாங்கள் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.போராட தயாராக இருக்கிறோம். ஆனால் எங்கள் மானத்தை விலைபேச நாங்கள் தயாரில்லை.நாங்கள் தூக்கு மேடை ஏறவும் தயாராக இருக்கிறோம். தூக்குக் கயிற்றில் தொங்கவும் தயாராக இருக்கிறோம்.

ஆனால் எங்கள் உரிமைகளைப் பெறுவதற்காக யாரிடமும் தலைவணங்க மாட்டோம்.

எங்களை மண்டியிடச் செய்து விடலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். பயப்படுபவர்களின் பெயர் மஜ்லிஸ் (எம்.ஐ.எம். கட்சி) இல்லை.

தெரிந்து கொள்ளுங்கள் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக போராடி வந்திருக்கிறோம். போராடிக் கொண்டேயிருப்போம். முஸ்லிம்களின் உரிமைகளும், அவர்களுக்கான நீதியும் கிடைக்காதவரை நாங்கள் போராடிக் கொண்டுதான் இருப்போம்.

மாண்புமிகு அவைத் தலைவர் மூலம் நான் இந்த அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன்... முஸ்லிம்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் (பொய்) வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்; கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

அந்த (சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத) போலீஸாருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அவர்களுக்கு (போலீஸாருக்கு) இங்கே முஸ்லிம்கள் பார்க்கப்படுவதில்லை. பெண் என்பவள் பார்க்கப்படுகிறாள். பெண்ணுடைய மானம், மரியாதை பார்க்கப் படுகிறது என்கிற செய்தியை தர வேண்டும். இந்த செய்தியை தருவது உங்கள் மீது பொறுப்பும் கடமையுமாகும்.

எங்களோடு (கட்சியோடு) உங்களுக்கு பகையுணர்வு இருக்கலாம். ஆயினும், எங்களுக்கான நீதி வழங்குவதை மறுக்கின்ற அளவுக்கு நீங்கள் குருடர்கள் ஆகிவிட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நீதிக்கு துணை நில்லுங்கள். நீதி எதுவோ அதை முடிவு செய்யுங்கள். இல்லையென்றால்... நீதியை கைக்கொள்ளும்வரை மஜ்லிஸ் கட்சி ஓயாது!

Pin It