kuthoosi guruஅந்த நாள்களில், தொண்டை மண்டல முதலியார் சமூகத்தினரை ஒன்றரைப் பிராமணர்கள் என்றே மக்கள் எண்ணுவர், அழைப்பர். அவர்கள் வைதிக, சாதி, மத, சம்பிரதாய ஆசாரங்களைப், பிராமணர்களைவிட அரை மடங்கு அதிகமாகக் கடைப் பிடித்தார்கள் என்பதால் அவ்விதம் எண்ணப்பட்டனர், அழைக்கப்பட்டனர்.

அத்தகைய சைவமரபில் தோன்றிய ஒருவர், சிறுவயது முதல் சைவத் திருமேனியாகத் தலையில் கட்டுக்குடுமியுடனும், நெற்றியில் திரு நீற்றுப் பட்டை யுடனும், கழுத்தில் உருத்திராட்சக் கொட்டையுடனும் தோற்றமளித்தார். சைவத் தமிழ் கற்று, சைவமும் தமிழும் இணைந்து வளர்ந்தவர். கல்லூரியில் கால் பதித்தபோதும்

அதே சைவக் கோலத்தோடும் கையில் தேவார, திருவாசக ஏடுகளுடனும் காட்சியளித்தார்.

பழுத்த வைதிகராகவும், கதர் அணியும் காந்தியவாதியாகவும் கல்லூரி மாணவப் பருவத்தைத் தொடங்கிய அந்த இளைஞர், மெல்ல மெல்லப் பகுத்தறிவாளராக, சுயமரியாதை இயக்கத்தின்மீது பற்றுக்கொண்டவராகக் கல்லூரியைவிட்டு வெளியேறினார். அந்த இளைஞர் யார்? அவர்தான் தோழர் குத்தூசி சா. குருசாமி.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள, குருவிக்கரம்பை என்னும் சிற்றூரில், சாமிநாத முதலி யார், குப்பு அம்மாள் இணையருக்கு, 1906ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 23ஆம் நாள் குருசாமி பிறந்தார்.

திருவாரூரில் தொடக்கப் பள்ளியில் கல்வியைத் தொடங்கினார். உயர்நிலைப் படிப்பைத் திருவாரூர் கழக உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தார். அந்தப் பள்ளி இன்று வடபாதிமங்கலம் சோமசுந்தரம் உயர்நிலைப் பள்ளி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்தக் கழக உயர்நிலைப்பள்ளியில்தான் இக் கட்டுரையாளர் பயின்றுள்ளார். கட்டுரையாளரின் தந்தையார் கமலத் தியாகராஜனும், குருசாமியும் அதே பள்ளியில் பயின் றுள்ளனர். இருவரும் நெருங்கிய நண்பர்களாய் இருந் துள்ளனர்.

திருவாரூர் சைவத் திருத்தலம்; ஆதலால் அவ்வூரில் நாள் தவறாமல் பன்னிரு திருமுறை சொற்பொழிவுகள் நடைபெற்ற வண்ணமிருக்கும்; தேவாரப் பண்கள் இசைக்கப்பட்ட வண்ணமிருக்கும்.

தேவார இசைக் குழுவில் குருசாமியும் கலந்துகொண்டு தேவாரப் பண்களை இசைப்பார். ஆதலால், குருசாமியின் உள்ளத்தில் சைவ சமயக் கோட்பாடுகள் ஆழமாக வேர்விட்டுப் பதிந்திருந்தன. திருவாரூரில் எண்கண் வெங்கடாசல முதலியார் என்பவர் கம்பராமாயணத்தில் ஆழங்காற்பட்ட புலமை மிக்கவர்; கம்பராமாயண இசைச் சொற்பொழிவுகள் அடிக்கடி நிகழ்த்துவார். அந்த உரைகளைக் கேட்டு குருசாமியும் கம்பராமாயணத்தில் நன்குத் தேர்ச்சி பெற்றார்.

1924ஆம் ஆண்டு, திருச்சி தேசியக் கல்லூரியில் இடைநிலை வகுப்பில் சேர்ந்து பயின்றார். கல்லூரியிலும் அவர் சைவத் திருக்கோலத்துடன் வாழ்ந்தார்.

அவர், திருச்சி தேசியக் கல்லூரியில் பயின்ற காலம், காங்கிரசு இயக்கம் ஆங்கில அரசை எதிர்த்துப் போரிட்ட காலம்; வைக்கம் போராட்டம் நிகழ்ந்த காலம் ஆகும். அந்த வரலாற்று நிகழ்வுகள் குருசாமியின் உள்ளத்தில் புதிய சிந்தனைகளை ஊட்டின; வைதிகக் குருசாமியை காந்தியவாதியாக மாற்றின. குருசாமி மாணவர் தேசிய இயக்கத்தில் இணைந்தார்.

காந்தியடிகள், பெரியார், திரு.வி.க போன்றோரின் சொற்பொழிவுகளும், திரு.வி.க-வின் எழுத்து நடையும் குருசாமியின் கருத்தைக் கவர்ந்தன. அதேபோன்று, மேட்டூர் அணை கட்டுதற்குத் தக்க இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த பொறியியல் அறிஞர் பா.வே. மாணிக்க நாயக்கர் பேச்சும் எழுத்தும் அவரை மிகவும் கவர்ந்தன.

1925ஆம் ஆண்டு காந்தியடிகள், தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். குருசாமி மேற் கொண்ட முயற்சியின் பயனாய் காந்தியடிகள் தேசியக் கல்லூரிக்கு வந்துற்றார். கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. வரவேற்புரை சமற்கிருதத்தில் அமைந்திருந்தது. காந்தியடிகள் ஏற்புரை வழங்கியபோது, தனக்குச் சமற்கிருதத்தில் வரவேற்புரை வழங்கியதை வன்மையாகக் கண்டித்தார்.

எனக்குப் படித்த வரவேற் புரையை எத்தனைப் பேர் புரிந்துகொண்டிருக்கிறீர்கள்? கை தூக்குங்கள். பார்க்கலாம்! என்றார். அந்த வரவேற் புரையை எழுதிக்கொடுத்த சமற்கிருதப் பண்டிதர் ஒருவரே கை தூக்கினார். அதைக் கண்ட காந்தியடிகள், உங்களுக்கு வெட்கமாக இல்லை? உங்கள் தாய்மொழி யான தமிழில் ஏன் வரவேற்புரையை அளித்திருக்கக் கூடாது? என்று கேட்டார்.

அருகில் அமர்ந்திருந்த குருசாமி ‘ஹியர்’,’ஹியர்’ என்று உரக்கக் கத்தினார். காந்தியடிகள் சினத்துடன் குருசாமியை நோக்கி, இது அதைவிட மோசமானது, என்று புகன்றார். இந்நிகழ்வு, குருசாமியின் துணிவிற்கும், மொழி உணர்வுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இந்தக் காலத்தில், தமிழ்நாட்டுக் காங்கிரசு இயக்கத்தில் பிராமணர் -பிராமணரல்லாதார் என்ற உணர்வு தலை தூக்கியிருந்தது. அதற்குக் காரணமாகக் காங்கிரசில் அந்நாளில் பிராமணர் ஆதிக்கமே நிலைகொண்டிருந்தது. இந் நிலையினைப் பெரியார் கடுமையாக எதிர்த்து வந்துள்ளார். சேரன்மாதேவி குருகுலத்தில் வ.வே.சு ஐயர் வருண வேறுபாட்டிற்குத் துணையாக, ஆதரவாக இருந்துள்ளார். குருகுலத்தின் வருணாசிரம ஆதரவுப் போக்கினைப் பெரியார் வன்மையாக எதிர்த்தார்.

இவற்றின் விளைவாக 1925 நவம்பர் திங்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் பெரும் பிளவு ஏற்பட்டது. பெரியார், எஸ். இராமநாதன் ஆகிய இருவருடன் பலர் காங்கிரசை விட்டு விலகினர்.

சுயமரியாதைச் சங்கம் தோற்றம் :

பெரியாரும், எஸ்.இராமநாதனும், தமிழரின் வளர்ச்சிக்காகப் போராடுவது, சமுதாயச் சீர்திருத்தம் செய்வது, சாதி-மத வேறுபாட்டை நீக்குவது, மூடப்பழக்க வழக்கங்களை ஒழிப்பது போன்ற பல கொள்கைகளைக் கொண்ட சுயமரியாதைச் சங்கத்தைத் தோற்றுவித்தனர். இந்தக் கொள்கைகளைப் பரப்புதற்கென்று “குடிஅரசு” இதழைத் தொடங்கினார் பெரியார்.

கல்லூரி மாணவர் குருசாமி, தமிழகத்தின் அரசியல், சமுதாய நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனிக்கலானார். “குடிஅரசு” இதழின் தொடர் வாசகரானார். வைதிகக் குருசாமி மெல்லமெல்ல பகுத்தறிவாளர் குருசாமியாக மாறினார். பூவாளூர் பொன்னம்பலனாரின் நட்பும் கிட்டியது.குருசாமிசுயமரியாதைஇயக்கத்தில்இணைந்தார்.

பெரியார் ஈ.வெ.ரா.வுடன் சந்திப்பு :

1928 மே பிற்பகுதியில், பூவாளூர் பொன்னம்பல னார், குருசாமியை, ஈரோட்டில் பெரியாருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பெரியார் : வாங்க என்றார்.

இளைஞனாக உள்ள தன்னை “வா!” என்று ஒருமையில் அழைக்காமல் “வாங்க!” என்று மரியாதை

யுடன் அழைத்த பெரியாரின் பண்பு, குருசாமியின்

உள்ளத்தை மிகவும் கவர்ந்துவிட்டது.

பெரியார் : நீங்க எதுவரை படிச்சிருக்கீங்க?

குருசாமி : பி.ஏ பொருளாதாரம்; இறுதித் தேர்வு எழுதியுள்ளேன். பெரியார் : இப்போ என்ன செய்றீங்க? குருசாமி : சும்மாதான் இருக்கேன். பெரியார் : அப்பா, அம்மா என்ன செய்றாங்க? குருசாமி : இருவரும் இல்லை. பல ஆண்டுகளுக்கு

முன்பே காலமாகிவிட்டார்கள்.

பெரியார் : அப்போ, எப்படிப் படிச்சிங்க?

குருசாமி : அத்தை படிக்க வச்சாங்க.

பெரியார் : குடிஅரசு எவ்வளவு நாளா படிக்கிறீங்க?

குருசாமி : ஆரம்பத்திலிருந்தே படிக்கிறேன்.

பெரியார் : கொள்கை பிடிச்சிருக்குங்களா?

குருசாமி : பிடிச்சிருக்குங்க.

பெரியார் : இங்கேயே தங்கி நம்ப வேலையைக் கவனிக்கிறிங்களா? குருசாமி : கவனிக்கிறேங்க. இதன்பின் குருசாமி ஈரோட்டில் தங்கி இயக்கப் பணி களில் ஈடுபடத் தொடங்கினார். பெரியாரைச் சந்தித்தது குறித்து குருசாமி பிற்காலத்தில், பாஸ்வெல் ஜான்சனைச் சந்தித்தபோது, பாஸ்வெல்லுக்கு ஏற்பட்ட உணர்வு தனக்கும் ஏற்பட்டது, என்று கூறியுள்ளார்.

1929, சூலை 20, 21 நாள்களில் நடைபெற்ற நெல்லை மாவட்ட இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில், மதம், கடவுள், ஆகியவற்றை எதிர்த்து நாத்திகப் பரப்புரை நிகழ்த்தத் தீர்மானிக்கப்பட்டது. அந்த நெல்லை மாவட்ட இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் பேசிய தோழர் குருசாமி, “சாதியை ஒழிப்பதற்குக் கலப்புத் திருமணம் ஒன்றுதான் வழி” என்றும், “கலப்புத் திருமணத்தைத் தவிர வேறு எந்த முறையினாலும் சாதி ஒழியாது” என்றும் உரைத்தார்.

“சாதிக் கொடுமையை எதிர்த்துப் போராடும் சமூகச் சீர்திருத்தவாதியே அரசியல்வாதியைவிட ஆயிரம் பங்கு துணிச்சல் உள்ளவர்” என்றும் பேசினார். பேசிவிட்டுப், பேசிய பேச்சினை அடுத்த விநாடியே மறந்துவிடும் மனிதரல்லர் தோழர் குருசாமி. கலப்புத் திருமணம் என்பது அவருக்கு உயிர்க் கோட்பாடாயிற்று, அக் கொள்கையில் உறுதியாய் நின்றார்.

இதனை அறிந்த மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார், சென்னை ஜியார்ஜ் டவுனில் வசித்துவந்த வயலின் (ஃபிடில்) இசைக் கலைஞர், திருவாரூர் டி. சுப்ர மணியப் பிள்ளையின் முதல்மகள் குஞ்சிதத்தைத் தோழர் குருசாமிக்கு மணமுடிக்கலாம் என்று பெரியாரிடம் தெரிவித்தார். அப்பொழுது தோழர் குஞ்சிதம் இராணி மேரிக் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார்.

பின்னர், 1929 டிசம்பர் 8ஆம் நாள் ஈரோட்டில் பெரியார் இல்லத்தில் குருசாமி-குஞ்சிதம் கலப்புத் திருமணம் நடைபெற்றது. குஞ்சிதம்-குருசாமி இருவரும் கற்றறிந்தவர்கள், மனத்தாலும் கொள்கையாலும் ஒன்றுபட்டவர்கள். பகுத்தறிவாளர் பெட்ரண்டு ரஸ்ஸல், கணவன் மனைவி உறவு பற்றிக் கூறியதற்கிணங்க இவ்விருவரும் செம்மையுடன் வாழ்ந்தனர்.

பெட்ரண்டு ரஸ்ஸல் கணவன்-மனைவி குறித்து : “இருவருக்குமிடையே முழுமையான சமத்துவ உணர்ச்சியிருக்கவேண்டும். ஒருவர் உரிமையில் ஒருவர் தலையிடக்கூடாது. அப்பழுக்கில்லாத நெருக்க மும், உள்ள ஒருமைப்பாடும் இருக்க வேண்டும். வாழ்க்கையில் ஒரே தன்மைத்தான குறிக்கோள் இருக்க வேண்டும்” என்பார்.

இத் தன்மைத்தானதுதான் குஞ்சிதம்-குருசாமி வாழ்வியல் அறம்.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலருடன் நட்பு :

இந்தியாவின் முதல் பொதுவுடைமை இயக்கத் தோழர், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். 1923இல் சென்னையில் விவசாயத் தொழிலாளர் இயக்கத்தைத் தோற்றுவித்து, முதன்முறையாக மேநாளைக் கொண் டாடியபோது இளைஞர் குருசாமியும் அதில் பங்கேற்றார்.

அவரின் தோழமையால் குருசாமியின்பால் மார்க்சிய -பொதுவுடைமைக் கருத்துகள் ஆக்கம் பெற்றன. “குடிஅரசு” இதழ்களில் சிங்காரவேலரின் கட்டுரைகள் குருசாமியால் தொடர்ந்து வெளியிடப்பட்டன; அவரின் கட்டுரைகள் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளுக்கு உரமூட்டின, வளம் சேர்த்தன. குஞ்சிதம் -குருசாமி இருவரும், சிங்காரவேலரின் இல்லத்தில் அமைந்திருந்த மார்க்சிஸ்டு-லெனினிஸ்ட் நூலகத்தை முழுமையாகப்பயன்படுத்திக்கொண்டனர்.அவ்விணையர் மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்டிருந்தார் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். 1935ஆம் ஆண்டு குருசாமி முன்மொழிந்த தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்தத்தை மிகவும் வரவேற்றுப் பாராட்டினார், சிங்காரவேலர்.

“புதுவை முரசும்” புரட்சிப்பாவேந்தர் நட்பும் :

புதுவை முரசில், புரட்சிப்பாவேந்தர் பாரதிதாசன், கவிதைகள், கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். இதனால் குருசாமியும் பாவேந்தரும் நெருங்கிய நண்பர்களாயினர். பாரதிதாசனுடனான ஆழ்ந்த நட்பின் விளைவாக அவரின் முதல் கவிதைத் தொகுதியைப் பதிப்பிக்கும் பொறுப்பைக் குருசாமி ஏற்றார். குருசாமி யின் மனைவி குஞ்சிதம் அம்மையார், முதல் கவிதைத் தொகுப்பினை 1938 சனவரி 1-ஆம் நாள் வெளியிட்டார்.

முதல் பொதுத் தேர்தல் :

1951, அக்டோபர் திங்கள் 21ஆம் நாள் ஐக்கிய முற்பொக்கு முன்னணி என்ற பொதுவுடைமைக் கூட்டணி உருவாயிற்று. அந்தத் தேர்தலில் திராவிடர் கழகம், அந்தப் பொதுவுடைமைக் கூட்டணியினர் வெற்றி பெறவும், காங்கிரசு தோல்வியினைத் தழுவிடவுமான சூழலைத் தங்களின் கடுமையான பரப்புரையின் மூலம் உண்டாக்கினர்.

காங்கிரசு தேர்தலில் வீழ்ச்சியுற்ற போதும், சிறுசிறு அரசியல் அமைப்புகளின் துணை கொண்டு இராஜாஜி ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். இதனைக் கண்டித்து “கொல்லைப்புற வழியில் ஆச்சாரியார்” என்று கடுமையான விமர்சனத்தை “விடுதலையில்” குருசாமி எழுதினார். தேர்தலைச் சந்திக்காமல் முதல்வர் பொறுப்பினை ஏற்றிடும் அரசியல் வாதிகளைச் சாடிடும் சொல்லாட்சியாக “கொல்லைப்புற வழி” என்ற சொற்கள் பிற்காலத்தில் வழங்கலாயிற்று.

1952 முதல் 1960 வரை திராவிடர்கழகம் மேற் கொண்ட போராட்டங்களில் குருசாமி கலந்துகொண்டார்; 13 முறைகள் சிறைத் தண்டனையும் பெற்றார்

1963ஆம் ஆண்டு சூன் 28ஆம் நாள் மதுரை கோயில் குடமுழுக்கு விழாவில் குடிஅரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் கலந்துகொள்ள இருந்தார். இதனைக் கண்டித்து, “குடிஅரசுத் தலைவர் நாட்டின் முதல் குடி மகன்; நாட்டின் அத்தனை மக்களுக்கும் பொதுவான தொரு ஆட்சித் தலைவர்; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் குடமுழக்குத் திருப்பணிக்காக வருவது ஏற்புடையதன்று.

இந்து மத நம்பிக்கை இல்லாத முசுலிம்கள், கிறித்தவர்கள், பவுத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள் ஆகியோர் மக்கள்தொகையில் சரிபாதி ஆவர். அம் மக்கள் வேதனைப்படுவர்; அவர்கள் மனம் புண்படும்” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை விண்ணப்பம் (ரிட்மனு) தாக்கல் செய்தார்.

அதோடு, “குடியரசுத் தலைவர் அந் நிகழ்ச்சியில் கலந்து கொண் டால் சுயமரியாதை இயக்கத்தினர் மறியலில் ஈடுபடுவர்” என்று குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதினார், குருசாமி. குருசாமியின் கடிதம் கண்டவுடன் குடியரசுத் தலைவர் மதுரைக்கு வருவதை விலக்கிக்கொண்டார்.

1965ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 11ஆம் நாள் கடலூரில் சுயமரியாதைக் கழக மத்தியக் குழுக் கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத நிலையில் அந்தக் கொள்கைவேள் தோழர் குருசாமி பகல் ஒருமணிக்கு, மாரடைப்பால் மரணம் எய்தினார்.

தோழர் குருசாமி தம் வாழ்நாளில் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் - பெரியார்தான். அவர் காட்டிய பகுத்தறிவுப் பாதையில் தன் இறுதிவரை இணைந்து பயணித்தவர் தோழர் குத்தூசி குருசாமி ஆவார். பகுத்தறிவுக் கொள்கையை உயிரெனக் கொண்டு வாழ்ந்து மறைந்த அந்த மாத் தமிழரை என்றும் எண்ணுவோம்; அவர் காட்டிய வழியே நல்வழியென்று ஏற்போம்.

- டாக்டர் சோமாஸ்கந்தன்

Pin It