கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த தி.மு.க. அரசு ஆட்சி அமைத்த நூறாவது நாளில் 14.8.2021 அன்று பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் கோரிக்கையான அனைத்துச் சாதியினர் அர்ச்சகர் ஆகும் செயல்பாட்டை நடைமுறைப்படுத்தியது. தமிழ் நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் கோயில் பணியாளர்கள் 58 பேருக்கு பணி ஆணை வழங்கினார். அதில் தமிழ்நாட்டு அரசின் ஆகமப் பள்ளிகளில் பயின்று தகுதி படைத்தவர்கள் இருபத்து நான்கு பேர்கள் ஆவர்.

தமிழ்நாட்டின் முதலமைச்சரால் பணியமர்த்தம் செய்யப்பட்டவர்களில் மூவர் திருச்சி மாவட்டம், திருவரங்கம் வட்டம், குமார வயலூர் சுப்பிரமணியர் திருக்கோயிலில் பணியில் சேர்ந்தனர். மூவரில் கே. கைலாசு என்பவர் பார்ப்பனர். எஸ்.செயபாலன், எஸ்.பிரபு இருவரும் பார்ப்பனர் அல்லாதவர்கள். இந்த இருவரின் பணிநிய மனத்தை எதிர்த்த அதே கோயிலில் பணிபுரியும் அர்ச்சகரின் உறவினர்கள் கார்திக், பரமேசுவரன் இருவரும் அர்ச்சகர் பணிக்கான நேர்காணலில் தோல்வியுற்றவர்கள். அது மட்டுமல்ல, அவர்கள் ஆகமப் பயிற்சி பெறாதவர்கள். ஆதி சைவர்கள் என்ற பிறப்பின் அடிப்படையில் தங்களுக்குத் தான் அக்கோயிலில் பூசை செய்ய உரிமை உண்டு என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் அவ்விருவரும் வழக்குத் தொடுத்தனர்.

“குமார வயலூர் சுப்பிரமணியர் கோயில் காமிக ஆகமத்தின் அடிப்படையில் அமைந்தது. இங்கு சிவாச்சாரியார்கள் ஆகிய நாங்கள் தான் பூசை செய்ய உரிமை உள்ளவர்கள். மற்ற பிரிவினர் இக்கோயிலின் சிலையைத் தொட்டுப் பூசை செய்தால் கடவுள் தன் சக்தியை இழந்து விடுவார்; எனவே “அர்ச்சகர் பணி நியமன ஆணையை நீக்க வேண்டும்” என்று வழக்காடினர். கார்த்திக், பரமேசுவரன்.non brahmin priests24.2.2023 அன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் பார்ப்பன நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் சுமார்த்தப் பிரிவைச் சார்ந்த நானே கோவில் கருவறைக்குள் செல்ல முடியாது. ஆகவே மற்றவர்கள் எப்படி நுழைய முடியும்? ஆகமத்தின் அடிப்படையில் ஆதி சிவாச்சாரியார் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் அர்ச்சகராக இருக்க முடியும் என்றும் தமிழ்நாட்டு அரசின் - இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நியமிக்கப்பட்ட பார்ப்பனரல்லாத இரு அர்ச்சகர்களையும் ஒரு மாத கலத்திற்குள் நீக்கிவிட்டு, மனுதாரர்களான பார்ப்பனர்களுக்கு அந்த அர்ச்சகர் பணியை  வழங்க வேண்டும் என்று ஜி.ஆர். சாமிநாதன் தீர்ப்பளித்துள்ளார்.

மதுரை மக்கள் பாதுகாப்பு மையத்தின் சார்பில் வழக்குரைஞர் வாஞ்சிநாதன் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களுக்காக வாதாடினார். ஆனால் அவருடைய வாதத்தை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற போராட்டம் அய்ம்பதாண்டு கால வரலாறு உடையது.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் 1969-இல் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்.

“இந்துக்கள் என்கிற சமுதாயத்தில் பார்ப்பனர் அல்லாத மக்களாகிய நாம் எல்லோரும் “சூத்திரர்கள்”, “கீழ்ப் பிறவியாளர்” என்று சட்டம், சாத்திரம் முதலிய வற்றில் குறிப்பிடப்பட்டிருப்பதோடு, “கோவில்கள் முதலிய வற்றின் மூலஸ்தானம், கர்ப்பகிரகம் என்பவற்றில் பிரவேசிக்கக் கூடாதவர்கள்” என்று இழிவுபடுத்தப் பட்டிருக்கிறோம்...

ஆகவே தமிழ்நாட்டில் தமிழ்நாட்டுப் பார்ப்பனர் அல்லாத மக்களாகிய நம்மை இழிவுபடுத்தவும், கீழ்மைப்படுத்தவும் சட்டத்தின் மூலம் செய்து கொண்டிருக்கிற ஏற்பாட்டை நாம் உடைத்தெறிய வேண்டியது நம் ஜீவிதக் கடமையாக இருக்கிறது” என்று எழுதினார் (விடுதலை 13.10.1969).

“தமிழர்களின் பிறவி இழிவு நீக்கக் கிளர்ச்சிக்கு அதாவது, கோயில்களில், “சூத்திரர் செல்லக்கூடாத இடம்”, “கர்ப்பக்கிரகம்”, “மூலஸ்தானம்” என்று பார்ப்பனர் அல்லாத இந்து மக்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கும் இடத்திற்குள் செல்லும் கிளர்ச்சியில் கலந்து கொள்ள இஷ்டமுள்ள ஆண், பெண் ஆகியோர் தயவுசெய்து உடனே தங்கள் பெயரைக் கையொப்பத்துடன் எனக்கு அனுப்பிக் கொடுக்க வேண்டுகிறேன்” (விடுதலை 10.10.1969).

16.11.1969-இல் திருச்சியில் நடைபெற்ற தி.க. மத்தியக் குழுக் கூட்டத்தில் 26.1.1970 அன்று கருவறை நுழைவுப் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 17.1.1970 அன்று “அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக்கிட இந்த அரசு முயற்சி செய்யும். எனவே பெரியார் அவர்கள் போராட்டம் நடத்த வேண்டாம்” என்று அறிக்கை வெளியிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று, பெரியார் 19.1.1970 அன்று கருவறை நுழைவுப் போராட்டக் கிளர்ச்சியை ஒத்தி வைத்தார்.

தமிழ்நாட்டு அரசின் சட்டமன்றத்தில் 30.11.1970 அன்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக ஏற்ற வகையில் சட்ட முன்வடிவு முன்மொழியப்பட்டு, 2.12.1970 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றத் தீர்மானத்தையொட்டி 1971-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு அரசு அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வருவதற்கு வழிவகை செய்யும் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது.

இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து சேசம்மாள் உள்ளிட்ட 12 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த எம்.எஸ்.சிக்ரி தலைமையில் அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு 14.3.1972 அன்று தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பில் “பரம்பரை அர்ச்சகர் முறையை ஒழிக்கும் தமிழக அரசின் சட்டத்தை வரவேற்ற போதிலும், ஆகம விதிகளை மீறக்கூடாது; அப்படி மீறுவது இந்திய அரசியல் சட்டம் 25(1)-இல் அளிக்கப் பட்டுள்ள மத உரிமைகளுக்கு எதிரானது என்று கூறப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பெரியார் வன்மை யாகக் கண்டித்தார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு “ஆபரேஷன் வெற்றி; நோயாளி செத்தார்” என்று விடுதலையில் 15, 16.3.1972-இல் ஆசிரியர் கி.வீரமணி அந்தத் தீர்ப்பை விமர்சனம் செய்து தலையங்கம் எழுதி இருந்தார்.

தமிழ்நாட்டைச் சார்ந்த எஸ்.இராசேந்திர பாபு, துரைசாமி ராசு இரண்டு நீதிபதிகள் உச்சநீதிமன்ற அமர்வு இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்ட பிறகு சாதியைக் காரணம் காட்டி அவர்கள் பணிநியமனத்தை எதிர்ப்பது தவறானது. அவர்கள் பயிற்சி பெற்று, தீட்சை பெற்று உள்ளனர். அவர்கள் பணிநியமனம் செல்லும் என்று 3.10.2002 அன்று ஆதித்தன் வழக்கில் தீர்ப்பு கூறியது.

இதன் அடிப்படையில் கேரளாவில் சிவன் கோயிலில் ஆதி திராவிடர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டனர்.

1979இல் அ.தி.மு.க. அரசு நீதிபதி மகராசன் தலைமையில் குழுவை அமைத்தது. அதன் அறிக்கை 1982இல் வெளியிடப்பட்டது. பயிற்சி பெற்ற பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகர் ஆகலாம் என அக்குழு பரிந்துரைச் செய்தது. ஆகமங்கள் எவ்வாறெல்லாம் மீறப்பட்டுள்ளன என்ற செய்தியையும் கள ஆய்வில் கண்டு வெளிப்படுத்தியது.

2006 ஆம் ஆண்டில் தி.மு.க. அரசு நீதிபதி ஏ.கே.இராசன் தலைமையில் குழு அமைத்து, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக்கும் சட்டத்தை 29.8.2006-இல் மீண்டும் இயற்றியது. இதை எதிர்த்து ஆதி சிவாச்சாரி யார்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இதில் தீர்ப்பளித்த இரஞ்சன் கோகாய், என்.வி. ரமணா அமர்வு 1972-இல் சேசம்மாள் தீர்ப்பில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பைச் சுட்டிக்காட்டி ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித் தனர். மேலும் இந்த  அரசின் சட்டத்தால் பாதிக்கப்படும் அர்ச்சகர்கள் கீழ் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம் என்று கூறினர்.

ஆதி சிவாச்சாரியார்களின் மனுவைத் தள்ளுபடி செய்த போதிலும், ஆகம விதி கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.

2021-இல் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமித்தது. இதை எதிர்த்து ஆதி சிவாச்சாரியார்கள் சங்கத்தினர் மற்றும் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு 22.8.2022 அன்று தலைமை நீதிபதி முனுசுவரநாத் பண்டாரி, நீதிபதி என். மாலா அமர்வு ஆகமப்படி அமைந்த கோவில்களில் அந்தந்த ஆகமத்தில் கூறப் பட்டுள்ள பிரிவினரைத்தான் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என்றும் எந்தெந்த கோவில்கள், எந்தெந்த ஆகமத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன என்பதைக் கண்டறிய அய்வர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சொக்க லிங்கம் அவர்கள் தலைமையில் சென்னை பல்கலைக் கழக சமற்கிருதத் துறைத் தலைவர் என்.கோபாலசாமி அவர்களையும் அக்குழுவில் நியமனம் செய்தனர். அந்தத் துறைச் சார்ந்த வல்லுநர் ஒருவரையும் மற்ற இருவரையும் நியமனம் செய்து, தமிழ்நாட்டில் எந்தெந்த கோவில்கள் ஆகம அடிப்படையில் அமைந்தவை என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும் கூறினர்.

இந்தத் தீர்ப்பு தமிழ்நாட்டு அரசின் முயற்சிக்கு ஒரு பின்னடைவாகும். அரசு வழக்குரைகள், நீதிபதி மகராசன் குழு அறிக்கை மற்றும் நீதிபதி ஏ.கே. இராசன் குழு அறிக்கையைச் சுட்டிக்காட்டி சிறப்பாக வாதிடவில்லை என்பது வருத்தத்திற்குரியதாகும்.

தமிழ்நாடு அரசு சத்தியவேல் முருகனார் அவர் களை இக்குழுவில் சேர்த்தது. அவர் தமிழ் வழியில் குட முழுக்குகளை ஏராளம் நடத்தியவர். ஆகம அறிஞர், ஆகமப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். ஆனால் சிவாச்சாரியார் சங்கம் அவர் ஆகமத்துக்கு எதிரானவர். அவரை இக்குழுவில் இருந்து நீக்கவேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. 8.2.2023-இல் நியமிக்கப்பட்ட அவரை ஒரே வாரத்தில் 15.2.2023 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராசா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு சத்தியவேல் முருகனார் நியமனத்தை நீக்கி உத்தரவிட்டது.

மேலும் ஆகமங்கள் குறித்து அவர் தயாரித்து அளித்த அய்ம்பது கேள்விகளையும் தடை செய்து உத்தரவிட்டது.

இவ்வாறு தமிழ்நாட்டு அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள 25(1), 26 பிரிவுகள் பழக்கம், வழக்கம் (custom and usage) என்பதும் தனித்த பிரிவினர் (Denomination) என்பதையும் பார்ப்பனர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த ஆகமம் என்பது பல கோயில்களில் மீறப்பட்டுள்ளதை நீதிபதி இராச மன்னார் குழு அறிக்கையிலும், நீதிபதி ஏ.கே.இராசன் குழு அறிக்கையிலும் வெளியிட்டுள்ளனர்.

ஆகமப்படி சுமார்த்தப் பார்ப்பனர்கள் எந்தக் கோயில்களிலும் அர்ச்சகர்களாக இருக்கக்கூடாது. பல கோயில்களில் அவர்கள் அர்ச்சகர்களாக இருப்பதை இக்குழுவினர் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். எந்த ஆகமத்திலும் குறிப்பிட்ட இந்தச் சாதியினர்தான் அர்ச்சகர்களாக இருக்க வேண்டும் என்று எழுதப்படவில்லை என்பதையும் இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசினர் இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும். சிறந்த வழக்குரைஞர்களை அமர்த்தி வழக்காடி அனைத்துச் சாதியினர் அர்ச்சகர் சட்டத்திற்குப் பின்னடைவு ஏற்படாமல் செயல்பட வேண்டும்.

ஆகமம் என்பது தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. பார்ப்பனர்கள் வழிவழியாக (பரம்பரையாக) அர்ச்சகர் தொழிலைக் கைப்பற்றிக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். மநுநீதியை எதிர்ப்பதுபோல் ஆகமத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும்.

மக்கள் திரள் போராட்டங்கள்தான் நீதிமன்றத் தீர்ப்புகளையும் மாற்றியமைக்கப் பயன்படும்.

- வாலாசா வல்லவன்