உலகம் முழுவதும் ‘கொரோனா’ என்கின்ற உயிர்க்கொல்லி கிருமிகள் அதிக அளவில் பரவியுள்ளன. இந்தத் தருணத்தை பயன்படுத்திப் பல வழிகளில் பொதுமக்களை சுரண்டும் கொள்ளைக் கும்பல் அதிக அளவில் தோன்றியுள்ளன. அவற்றில் சில.

மருத்துவத் துறை முதன்மையாக மக்களைக் காப்பது போல் நடந்து கொள்கின்றன. ஏழு மாதங்கள் கடந்தும் கிருமியை வெல்லும் மருந்தைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் மருத்துவமனையில் சேர்த்து அதிக அளவில் மருத்துவச் செலவு என்ற பெயரில் கொள்ளையடிக்கின்றனர். ஆளுக்கு ஒரு மருத்துவத்தைச் சொல்லி மக்களைப் பயமுறுத்துகின்றனர்.

ஒருவர் கைதட்டச் சொல்கின்றார்; குறிப்பிட்ட நேரம் வரை இரவில் விளக்கை அணைக்கச் சொல்கின்றார். ரசம் குடித்தால் கொரோனா வராது என்றவுடன் ரசத்தை வியாபாரம் செய்கின்றனர். பப்பாளி இலைச் சாறு குடித்தால் நோய் தீரும் என்றவுடன் பப்பாளி இலையை விற்கத் தொடங்குகின்றனர். ஒரு ரூபாய்க்கு விற்ற முக கவசம் ரூ.10 முதல் ரூ.100 வரை விற்கின்றனர்.

விற்காமல் கிடந்த பொருட்களை வியாபாரிகள் தந்திரமாக மருத்துவ குணம் உடையது என்று சொல்லி, வியாபாரம் செய்கின்றனர். வியாபாரிகள் அனைவரும் மக்கள் நலன் காப்போர் போல் விளம்பரம் செய்து, அதிக விலைக்கும் எடை குறைத்தும் கலப்படம் செய்தும் வியாபாரம் செய்வதை எந்த ஒரு அரசு அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை. கடந்த பத்தாண்டுகளாக அதிகாரிகளும் வியாபாரிகளுடன் கைகோத்து கொண்டனர்.

சத்தமின்றி, நம்மை ஆளும் மத்திய, மாநில அரசுகள் மக்கள் பீதியில் உள்ள இந்தத் தருணத்தில் தேவையான திட்டங்களைத் தீட்டி, வரிகள், கல்விக் கட்டணங்கள், மின் பயன்பாட்டுக் கட்டணங்கள், மருத்துவக் கட்டணங்கள் போன்ற வழிகளில் பொது மக்களைச் சுரண்டுகின்றனர். தொலைக்காட்சி, சோசியல் மீடியா, செய்தித்தாள்கள், இதழ்கள் போன்ற ஊடகங்களும் தகுதியிழந்து உரிமையை விபச்சாரமாக்கி விட்டனர். கொரோனாவைக் கட்டுப்படுத்த, மக்களைப் பாதுகாக்கத் தேவையான பொருளாதாரம் மத்திய அரசு மனசு வைத்தால் மல்லையா போன்ற கொள்ளையரின் சொத்துக் களும், மக்கள் பெரிய கோவில்களில் செலுத்திய காணிக்கைகளும் பயன்படுத்தினால் இன்னும் இருபது ஆண்டுகள் எந்த வரியும் கட்டணமும் மக்களிடம் வாங்காமல் ஆட்சி செய்யலாம்.

கொரோனாவைக் கண்டு நடுங்கும் கோயில்களாலும், கொள்ளையர்களாலும் மக்களுக்கு என்ன பயன்? ஒன்றுமில்லை. எதிர்காலத்தைச் சோசியமாகச் சொல்லிப் பிழைக்கும் கும்பலை இன்னமும் பரப்பும் ஊடகங்களைக் கைவிட வேண்டும். பகுத்தறிவுச் சிந்தனையையும், நீர்நிலைகள், ஆறுகள், காடுகள், மலைகள் போன்ற இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் சிந்தனையயையும் வளர்க்க வேண்டும். மனிதனின் சுயமரியாதையையும் சம உரிமையையும் நாட்டுப்பற்றை யும் மொழிப் பற்றையும் வளர்க்காத அரசும், அரசியல்வாதிகளும் மக்கள் விரோதிகளே!

- உழவர் மகன் ப. வடிவேலு 

Pin It