நாம் நினைத்த போது ஒரு உணவகத்தில் அமர்ந்து ஒரு காபியை சுவைக்கவும், ஒரு திரைப்படத்தைப் பார்க்கவும், அல்லது வேண்டியவர்களுடன் ஒரு கச்சேரி அல்லது கால்பந்து விளையாட்டில் கலந்து கொள்ளவும் இயலக்கூடிய அந்த நாட்களுக்கு உலகம் என்று திரும்பப்போகிறது?
இதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன என்று பெரும்பான்மையான கருத்துக்கள் தெரிவிக்கிறன: ஒன்று ஒரு பயனுள்ள தடுப்பூசி, அல்லது குறைந்தது 60-80% மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதன் மூலம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி பெறுவது. இந்த இரண்டு வழிகளிலுமே, மக்கள் COVID-19ஐ ஏற்படுத்தும் கொரோனா வைரஸான SARS-CoV-2 க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி பெற்றாக வேண்டும்.
இந்த வாரம் இணையத்தில் வெளியிடப்பட்ட ஒரு முக்கியமான புதிய ஆய்வு, 2021 மற்றும் அதற்கு பின்னர் நமது எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பெரிதும் பாதிப்பதாக உள்ளது.
SARS-CoV-2 க்கான நமது நோய் எதிர்ப்பு சக்தி மிக நீண்ட காலம் நீடிக்காது என்று இந்த ஆய்வு அறிவுறுத்துகிறது - சிலருக்கு இரண்டு மாதங்கள் வரை மட்டுமே இருக்கலாம். இது சரியாக இருக்குமென்றால், தடுப்பூசி வழக்கத்திற்கு வந்தால் கூட தொடர்ச்சியான பூஸ்டர்கள் (boosters) தேவைப்படலாம் என்பதோடு, மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்ற ஒன்றும் சாத்தியமில்லாமல் போகலாம் என்பதையும் தெரிவிக்கின்றது.
விரைந்து குறையும் நோய் எதிர்ப்பு சக்தி
ஆன்டிபாடிகள் நமது நோயெதிர்ப்பு அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும். அவை முக்கியமாக வைரஸ் துகள்களுடன் உடல் ரீதியாக பிணைக்கப்படுவதன் மூலமும், செல்களில் தொற்று ஏற்படுத்துவதை நிறுத்துவதன் மூலமும் செயல்படுகின்றன. சில வேளைகளில் செல்களின் அழிவைத் தூண்டும்படியாக பாதிக்கப்பட்ட செல்களுடன் ஒட்டிக்கொள்ளலாம்.
நோயெதிர்ப்பு அமைப்பின் மற்றொரு பகுதியான T - செல்கள் நம்மிடம் உள்ளன. இது வைரஸ் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டு கொள்வதிலும் அவற்றை அழிப்பதிலும் மிகவும் சிறப்பாக வேலை செய்யும். ஆனால் COVID-19ஐப் பொறுத்தவரை, ஆன்டிபாடிகள் நுரையீரலில் முக்கியமாகத் தேவைப்படுகின்றன. ஏனெனில் வைரஸ் முதலில் பாதிக்கும் நுரையீரல் காற்றுப்பாதைகளுக்கு T- செல்களால் செல்ல முடிவதில்லை.
ஆன்டிபாடிகள் வைரஸ்களுடன் ஒட்டிக்கொண்டு நமது செல்களுக்கு தொற்று ஏற்படுவதைத் தடுக்கின்றன.
லண்டனின் கிங்ஸ் கல்லூரியில் கேட்டி டூரெஸ் (Katie Doores) மற்றும் அவரது குழுவினர் புதிதாக வெளியிட்ட ஆராய்ச்சி முடிவுகள், COVID-19 ஆல் பாதிக்கப்பட்டவர்களில் ஆன்டிபாடி எதிர்வினை எவ்வளவு காலம் நீடித்தது என்பதைப் பரிசீலித்தது. இது ஒரு ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் சக ஆராய்ச்சியாளர்களால் அது மறுபரிசீலனை (peer-review) செய்யப்படவில்லையாதலால், சற்று எச்சரிக்கையுடனே இந்த முடிவுகள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
ஆய்வு செய்யப்பட்ட 65 நோயாளிகளில் 63 பேர் ஆன்டிபாடி எதிர்வினையை கொண்டிருந்தனர். ஆய்வின் முக்கியமான அளவீடுகள் இந்த எதிர்வினை எவ்வளவு சிறந்ததாக இருந்தது என்பதாக இருந்தது. நோயாளிகளின் இரத்த சீரம் (serum) தொற்று ஏற்படுத்தும், SARS-CoV-2 வைரஸுடன் சேர்த்து, ஒரு ஆய்வக கலத்தில் (Laboratory Dish) அவை செல்களை பாதிக்குமா என ஆய்விடப்பட்டது. இது "நடுநிலைப்படுத்தல் மதிப்பீடு" (Neutralisation assay) என்று அழைக்கப்படுகிறது. இதன் முடிவுகள் நன்றாகவே இருந்தன.
சுமார் 60% மக்கள் மிகவும் சக்திவாய்ந்த நடுநிலைப்படுத்தல் எதிர்வினையை கொண்டிருந்தனர். அதாவது, இது ஆய்வக கலங்களில் வைரஸ் வளர்வதை நிறுத்தியது.
இறுதியாக, ஆன்டிபாடி எதிர்வினை எவ்வளவு காலம் நீடித்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அளவிட்டனர். இது மிக முக்கியமான தரவு. துரதிர்ஷ்டவசமாக, ஆன்டிபாடிகளின் அளவு 20 ஆம் நாளுக்குப் பிறகு வீழ்ச்சியடையத் தொடங்கியது, 17% நோயாளிகள் மட்டுமே 57 வது நாளில் ஒரு சக்தி வாய்ந்த அளவைத் தக்க வைத்துக் கொண்டனர். சில நோயாளிகள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு தங்கள் ஆன்டிபாடிகளை முற்றிலுமாக இழந்தனர்.
SARS-CoV-2 க்கான நமது நோயெதிர்ப்பு நாம் எதிர்பார்த்ததை விட மிக விரைவாக இழக்கப்படலாம் என்றும், பின்னர் மக்கள் மீண்டும் வைரஸ் பாதிப்பிற்க்கு ஆளாக நேரிடும் என்றும் இது அறிவுறுத்துகிறது.
தடுப்பூசி ஒருமுறை போடுவது போதுமானதாக இருக்காது
எனவே COVID-19 தடுப்பூசிகள் நாம் நம்புகிற அளவுக்கு பயனுள்ளதாக இருக்காது என்பதையே இது காட்டுகிறது. ஆன்டிபாடி அளவுகள் காலப்போக்கில் குறைவது இயல்பானதுதான்; ஆனால் இது பொதுவாக மிக மெதுவாக நிகழ்கிறது. பொன்னுக்கு வீங்கி, தட்டம்மை மற்றும் சின்னம்மை வைரஸ்களுக்கு எதிரான ஆன்டிபாடி எதிர்வினை 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும். ஒரு டெட்டனஸ் தடுப்பூசியின் தடுப்பாற்றல் மிக விரைவாக குறைகிறது; ஆனால் 5-10 ஆண்டுகளுக்கு பின்பே அதற்கு ஒரு பூஸ்டர் தேவைப்படும்.
COVID-19க்கான தடுப்பாற்றல் ஏன் இவ்வளவு விரைவாக குறைகிறது? இது SARS-CoV-2 கொரோனா வைரஸின் தன்மையினாலேயே ஏற்படுகிறது. மனிதர்களிடம் சாதாரண ஜலதோஷத்தை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ்களின் நான்கு சாதாரண வடிவங்களும்கூட (strains) நீண்டகால நோயெதிர்ப்பு சக்தியை அளிப்பதில்லை. பெரும்பாலான மக்கள் 6-12 மாதங்களுக்குப் பிறகு ஆன்டிபாடிகளை முழுவதுமாக இழக்கின்றனர். கொரோனா வைரஸ்கள் பொதுவாக நமது நோயெதிர்ப்பு அமைப்பினால் நன்கு நினைவில் கொள்ளப்படாமலே இருந்து வருகின்றன. எனவேதான் சாதாரண ஜலதோஷம் எப்போதும் மனிதர்களை திரும்பத் திரும்ப பாதித்துக்கொண்டே இருக்கின்றன.
2003 ஆம் ஆண்டில் பெரும் தொற்றாக உருவாகிய மற்றொரு கொரோனா வைரஸ் SARS, சற்று நீண்ட கால ஆன்டிபாடி எதிர்வினையை உருவாக்கி, மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கக் கூடியதாக இருந்தது. இது நமது வாழ்நாளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறுகிய காலம்தான் என்றாலும், 2003இல் இந்த வைரஸ் ஏன் மறைந்தது என்பதை விளக்க இது உதவுகிறது.
தற்போது பல தடுப்பூசி ஆய்வுகள் சோதனைக்கட்டங்களுக்கு வந்திருக்கின்றன. மேலும் அவை நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆனால் புதிய சான்றுகள், நோய் எதிர்ப்பு சக்தி விரைவாகக் குறைவதைக் குறிக்கிறது; அதாவது நமக்கு திரும்பத்திரும்ப பூஸ்டர் தடுப்பூசிகள் தேவைப்படலாம்.
மந்தை நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆபத்து
எனவே சிலர் நினைப்பது போல் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி ஒரு தீர்வாக இருக்காது. ஏனெனில், நோய் எதிர்ப்பு சக்தி குறுகிய காலமே தாக்குப் பிடிப்பதாக இருந்தால், நாம் மீண்டும் மீண்டும் நோய்த்தொற்றுக்கு ஆளாகிக் கொண்டே இருப்போம். மந்தை நோய் எதிர்ப்பு சக்தி பயனுள்ளதாக இருக்க வேண்டுமெனில், பரவல் ஏற்படும் சங்கிலித் தொடர்களை அறுந்து போகச் செய்ய ஏறக்குறைய 60% க்கும் அதிகமானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் தொற்று ஏற்படும் பட்சத்தில் இது சாத்தியமில்லை.
தடுப்பூசிகள், COVID-19 இலிருந்து குணம் பெறுவதற்கு உதவுவதை விட, மிகவும் வலுவான மற்றும் நீடித்த நோயெதிர்ப்பினை அளிக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு. உண்மையில், ஜூலை தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட ஃபைசர் (Pfizer) மற்றும் மாடர்னாவின் (Moderna) நிறுவனங்களின் ஆரம்பகட்ட தடுப்பூசிகள் மிகவும் வலுவான நோயெதிர்ப்பினை காண்பித்திருக்கின்றன.
இருப்பினும், இந்த ஆய்வுகள், தடுப்பூசிகள் இடப்பட்டபிறகு, முறையே 14 மற்றும் 57 நாட்களுக்கு மட்டுமே அவை பற்றிய அறிக்கைகளை பகிர்ந்திருக்கின்றன. அவை ஒரு தடுப்பூசி உண்மையிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான நீண்டகால நோயெதிர்ப்பு இருக்கின்றதா என்பதைப் பற்றி அறிவிக்கவில்லை. இதை அளவிட, இதற்காக திட்டமிடப்பட்ட மூன்றாம் கட்ட பரிசோதனைகளுக்காக டிசம்பர் 2020 வரை நாம் காத்திருக்க வேண்டும்.
அதுவரை, கிங்ஸ் கல்லூரி ஆய்வின் முடிவுகள் ஒரு வகையில் ஏமாற்றமளிக்கும் செய்திகளாக இருந்தாலும், இதைப்பற்றிய அறிவானது, மிக சமீபமாக, அதாவது 2019 டிசம்பரில் தோன்றிய ஒரு வைரஸைப் புரிந்துகொள்வதில் நாம் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க அறிவியல் அறிவின் முன்னேற்றத்தினை அடையாளப் படுத்துகிறது என்பதை நினைத்து பெருமை கொள்வோம்.
மூலம்: நைகல் மெக்மில்லன் (Nigel MacMillan), திட்ட இயக்குனர், தொற்று நோய் மற்றும் நோய்தடுப்பு பிரிவு, கிரிஃபித் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா, theconversation.com ஜூலை 16, 2020
தமிழில்: இரா.ஆறுமுகம்