விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள பங்காரம் என்ற ஊரில், எஸ்.வி.எஸ். கல்வி மற்றும் சமுதாய சேவை அறக்கட்டளை நடத்து கின்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல் லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் சரண்யா, பிரியங்கா, மோனிசா ஆகிய மூன்று மாணவி களின் உடல்கள் 23.01.2016 கல்லூரிக்கு எதிரில் உள்ள வேளாண் நிலத்தின் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டன.

பொங்கல் விடுமுறை முடிந்து இம் மூன்று மாணவிகளும் 22.1.16 அன்று மாலைதான் கல்லூரி விடுதிக்குச் சென்றனர். அன்று இரவே இவர்கள் இறக்க நேரிட்டது கொலையாலா? தற்கொலையாலா? என்பது இன்னும் புலனாகவில்லை.

ஒன்றுமட்டும் தெளிவாகத் தெரிகிறது-தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பெரும்பாலான மாணவர்கள் மரணப்படு குழியில் விழுந்துவிட்டது போன்ற மனநிலையில் உள்ளனர் என்பது! மனிதனைச் சிங்கத்துக்கு இரையாக்குதல் என்ற தண்டனை முன்பு இருந்ததாம். இதை இப்போது கண்கூடாகக் காண்கிறோம். மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்தினரும் தனியார் கல்வி வணிகர்கள் என்கிற-நாட்டில் வாழும் கொடிய சிங்கங்களுக்கு இரையாகி வருவதைப் பார்க்கிறோம். இதற்கானதோர் சான்றுதான்-எஸ்.வி.எஸ். மருத்துவ மாணவிகள் மூவரின் கொடிய சாவு.

medical students 600இந்த இழிநிலைக்கு மூலமாக இருப்பது அரசின் தனியார் மயக் கொள்கையும், அடிமுதல் நுனிவரை ஊழல்மயமாக இருப்பதுவுமே ஆகும். தனியார் உயர்கல்வி நிறுவனங்கள், கல்வித்தரம் சார்ந்த விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செயல்படு கின்றனவா என்று ஆய்வு செய்யவும், அதன்மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான ஒழுங்காற்று ஏற்பாடுகள் முற்றிலுமாகச் செயலிழந்துவிட்டன. தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றைக்களை வதற்கான எத்தகைய பொறியாமைவும் இல்லை. எனவே தான் இம்மூன்று மாணவிகளின் உயிர்கள் பறிக்கப்பட்டன.

தனியார் கல்வி நிறுவனத்தைத் தொடங்க வேண்டுமானால் முதலில் மாநில அரசிடமிருந்து, தடை இல்லாச் சான்றும், அப்படியானதொரு கல்வி நிறுவனம் கட்டாயம் தேவைப்படுகிறது என்கிற சான்றும் பெறவேண்டும். அதன்பின் பொறியியல் தொடர்பான கல்வி எனில், இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்திடமும் (AICTE) மருத்துவம் சார்ந்ததெனில் இந்திய மருத்துவக் கல்விக் கழகத்திடமும் (MCI) ஏற்பிசைவு பெற வேண்டும். மேலும் அக்கல்லூரி அமைந்துள்ள பகுதியில் உள்ள பல்கலைக்கழகத்தின் இணைவுத் தகுதியையும் பெற வேண்டும்.

ஏட்டளவில் எல்லாம் சரியாக இருப்பது போன்று தோன்றும். ஆனால் சான்று வழங்கும் பொறுப்பில் உள்ள கல்வி யாளர்கள், உயர் அதிகாரிகள், வல்லுநர்கள் ஆகியோர் அக்கல் லூரி அளிக்கும் பொய்யான ஆவணங்கள் அடிப்படையில், கையூட்டுப் பெற்றுக் கொண்டு சான்றளிக்கின்றனர்.

நேரில் ஆய்வு செய்வதற்காகச் செல்லும் குழுவினரும் கையூட்டுப் பெறுகின்றனர். அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவி கோடிகளில் ஏலம் விடப்படும் நிலையில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஊழலில் திளைப்பதில் வியப்பதற்கு இல்லை.

எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா மருத்துக் கல்லூரிக்கு இத்தகைய கல்லூரி தேவையெனும் சான்றும் வழங்கப்பட்டது. 2009 மே 26 அன்று எம்.ஜி.ஆர். மருத்துப் பல்கலைக் கழகம் இணைவுத் தகுதியை அளித்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக இயங்கி வரும் இக்கல்லூரியை நடுவண் அரசின் இந்திய மருத்துவ முறைகளுக்கான (சித்தா, ஆயுர் வேதா, யுனானி) மருத்துவக்கல்விக் கழகமோ, எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகமோ முறையாக ஆய்வு செய்யவில்லை.

அதனால் இக்கல்லூரியில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை; 50 நோயாளிகளுக்கான படுக்கை வசதி இல்லை; ஆய்வுக் கூடத்தில் உரிய கருவிகள் இல்லை. நூலகம் இல்லை என்கிற உண்மை மூடி மறைக்கப்பட்டு வந்தது. மேலும் மாணவர்களிடம் அதிகமான கல்விக் கட்டணம் பெறுவது வெவ்வேறு பெயர்களில் கூடுதல் பணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தல் என்பன நடைபெற்று வந்தன. தேர்வு நடைபெறுவதற்கு முன்பு ஆசிரியர்கள்  வெளியிலிருந்து வருவார்கள்; வேகவேக மாகப் பாடங்களை நடத்தி முடிப்பார்கள்.

எனவே மாணவர்கள் சில ஆண்டுகளாகவே விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று தொடர்ந்து தங்கள் குறைகளை முறையிட்டு வந்தனர். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத் திற்கும் எழுத்து வடிவில் பலதடவை தெரிவித்தனர். ஒரு பயனும் ஏற்படவில்லை. இந்த வழக்கு விசாரணையின் போது எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக நிர்வாகம் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆய்வின்படி, எஸ்.வி.எஸ். கல்லூரியில் எல்லா வசதிகளும் முறையாக இருக்கின்றனவா என்று தெரிவித்தது. அதனால் அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.

தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் இக்கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டது என்று முதலமைச்சர் செயலலிதா குற்றம் சாட்டுகிறார். ஆனால் இந்த “அம்மா”வின் ஆட்சியில் அக்கல் லூரி மாணவர்கள் தங்கள் குறைகளைக் கடந்த நான்கு ஆண்டு களாக முறையீடு செய்தும், போராட்டங்கள் நடத்தியும், அவர்களின் குறைகள் ஏன் நீக்கப்படவில்லை?

2015 சூலை 8 அன்று இக்கல்லூரியை ஆய்வு செய்த எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழு, அக்கல்லூரியில் உள்ள சில குறைபாடுகளை நீக்கிய பிறகு இணைவுத் தகுதியைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு வாய்மொழி யாகத் தெரிவித்ததாக வெட்கமின்றிக் கூறி இப்போது பல்கலைக்கழகம் பல்லிளிக்கிறது. ஆனால் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தின் 2015-16 ஆம் கல்வி ஆண்டிற்கான இணைவுத் தகுதிப் பட்டியலில் இக்கல்லூரி நீடித்தது ஏன்?

எஸ்.வி.எஸ். கல்லூரியின் முறைகேடுகள் ஊடகங்களில் வெளிவந்தபின், 2015 திசம்பர் 31 அன்று எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் நான்கு மருத்துவர்கள் கொண்ட குழுவை அக்கல்லூரியை ஆயவு செய்ய அனுப்பியது. அக்குழு அடுத்த நாளே அக்கல்லூரியில் உள்ள குறைபாடுகளைப் பட்டியலிட்டு அறிக்கை அளித்தது. அதன்மீது விரைந்து நடவடிக்கை எடுத் திருந்தால், இம்மூன்று மாணவிகள் சாகும் நிலை ஏற்பட்டிருக் காதே! இதற்கு எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகப் பதிவாளர் பி.ஆறுமுகம், “இடையில் பொங்கல் விடுமுறை வந்ததால் உடனே நடவடிக்கை எடுக்க முடியவில்லை” என்று பசப்புகிறார். எனவே முதலமைச்சர் செயலலிதா தி.மு.க. மீது பழியைச் சுமத்திவிட்டு இக்குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது.

எஸ்.வி.எஸ். கல்லூரி மட்டுமல்ல; தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் தரமற்ற கல்வியும், அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லாத நிலையும், அதிகக் கட்டணம் வாங்குவதும், மாணவர்களை அச்சுறுவத்துவம் இருக்கின்றன.

ஆதார் அட்டை, பான் அட்டை கட்டாயம் என்று குடிமக்களைக் கெடுபிடி செய்யும் இந்த அரசுகள், தனியார் கல்லூரியில் வேலை செய்யும் ஆசிரியரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளிலும், அவர்கள் வேலை செய்வதாக இடம் பெறு வதை இன்றும் தடுக்கவில்லையே!

ஆட்சியார்கள், அரசியல்வாதிகள், கல்வித்துறை, பல்கலைக் கழகம் என எல்லோரும் தனியார் கல்வி வணிகக் கொள்ளை யில் பங்காளிகளாக இருப்பதே இந்தக் கொடிய அவலநிலைக்குக் காரணமாகும். மாணவர்களின் எதிர்காலம் பாழாவது பற்றியோ, மாணவர்களின் சாவைப் பற்றியோ இவர்களுக்குக் கவலை இல்லை. எனவே தனியார் மயக்கல்வி என்பதை எல்லா நிலைகளிலும் அடியோடு அகற்றி, அரசே கல்விதரும் பொறுப்பை ஏற்கும் நிலையை ஏற்படுத்துவதே ஒரே தீர்வாகும்.

Pin It