அமெரிக்க வெள்ளை இனவெறிக்கு, கறுப்பர் படுகொலை!

அசாமிய இந்து மதவெறிக்கு, இஸ்லாமியர் படும்பாடு!

பாக். இஸ்லாமியர் ஆதிக்கத்தில், இந்துக்கள் படும் அல்லல்!

இவர்களை மிதிக்க வேண்டியவர்கள் மக்களே!

720 கோடி மக்கள் வாழும் இன்றைய உலகில், கடவுளை நம்புகிறவர்களே அதிகம் பேர். இந்துக்கள், கிறித்துவர்கள், இஸ்லாமியர், சீக்கியர்களில் கடவுள் நம்பிக்கைக்காரரே அதிகம் பேர்.

அமெரிக்கக் கிறித்துவ வெள்ளையர்கள், கறுப் பரை மாடுகளைப் போல் - விலங்குகளைப் போல் வதைப்பதைச் செய்பவர்கள். 1860களில் அந்நாட்டின் குடிஅரசுத் தலைவராக இருந்த ஆப்ரகாம் லிங்கன் கறுப்பு நிற அடிமைகளுக்கு விடுதலை அளித்தார் என்பதாலேயே ஒரு திரைப்படக் கொட்டகையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1945 முதல் உலக நாடுகளின் இயற்கை வளங் களையும், மனிதர்களின் மூளை உழைப்பையும் சுரண்டி, அமெரிக்க வெள்ளையரைக் கொழுக்க வைப் பதில் அமெரிக்கருக்குத் தீராத ஆர்வம். அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் அய்க்கிய நாடுகள் அவை, அதன் பிரிவு அமைப்பான உலகப் பாதுகாப்பு அவை யம், உலக வங்கி, பன்னாட்டு நிதியம் மற்றும் முத லாளித்துவ நாடுகள் அமெரிக்கரின் ஆதிக்கத்துக்குத் துணைபோகின்றன. இந்தியாவும் துணைபோகிறது.

அமெரிக்காவின் 2010ஆம் ஆண்டைய மக்கள் தொகைக் கணக்குப்படி - மொத்த மக்கள் தொகை 31 கோடி. இவர்களுள் 4 கோடிப் பேர் அயல்நாடுகளி லிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள். இந்த 4 கோடிப் பேருள் 1.1 கோடிப்பேர் சட்ட ஏற்புப் பெறாமல் குடியேறியோர்.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய இந்துக்கள் பல இந்துக்கோவில்களையும், இந்திய சீக்கியர்கள் பல குருத்துவாரக்களையும், இஸ்லாமியர் கள் பல மசூதிகளையும் அங்குக் கட்டியுள்ளனர். தனியார் நிறுவனங்களிலும், அரசு நிறுவனங்களிலும், வேலை பார்ப்போர்; சிறிய - பெரிய வணிகம் செய் வோர் எனப் பல தொழில்களில் இவர்கள் ஈடுபட் டுள்ளனர்.

இந்தியாவிலிருந்து 1982இல் அமெரிக்காவுக்குச் சென்ற சத்வந்த்சிங் (65) என்ற சீக்கியர் ஒரு வணிகர். தன் சொந்தப் பணத்தைக் கொண்டு அமெரிக்காவில் விஸ்கன்சின் மாகாணத்தில், ஓக் கிரீக் என்ற இடத்தில் சீக்கியக் குருத்வாரா ஒன்றைக் கட்டுவித்தார்.

அங்கு 5.8.2012 ஞாயிறு அன்று, தொழுகை நேரத்தில், துப்பாக்கியுடன் ஒரு வெள்ளையர் நுழை வதைக் கண்ட இரண்டு குழந்தைகள் அலறிக் கூச்சல் போட்டுள்ளனர். கண் இமைக் கும் நேரத்தில் அவன் துப் பாக்கியால் சுட்டு 5 பேரைக் கொன்றான். அவ னோடு உடைவாளைக் கொண்டு போராடிய மேற்படி சத்வந்த் சிங் என்பவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு, தானே சுட்டுக் கொண்டு அந்த வெள்ளை இன வெறியனும் மாண்டான்.

வேட் மைக்கேல் பேஜ் (40) என்ற அந்த வெள்ளை இன வெறியன் யார்?

அமெரிக்காவில் வெள்ளையர் இனவெறியை - கறுப்பர், யூதர் பேரில் கொலைவெறியை வளர்க்கும் புதிய நாசிச அமைப்பின் இசைக்குழுவில் ஒரு பாடகனாக இருந்த ஓர் இராணுவ வீரன், அவன்.

அவன் வலக் கைப் பக்கம் தோளுக்கும் கீழே - இனவெறிக் கொள்கையைக் கொண்ட நாசிச முழக் கங்களை, கெல்டிக் முறையில் 14 இடங்களில் பச்சை குத்திக் கொண்டிருந்தான்.

அவனால் சில மணித்துளிகளில் சீக்கியக் குருத்து- வாராவில் சுட்டு வீழ்த்தப்பட்டவர்கள் ஆண்கள் சிதாசிங் (41), இரஞ்சித் சிங் (49), பிரகாஷ் சிங் (39), ஷோபால்க் சிங் (84), போராடிய சத்வந்த் சிங் (65) அய்வர்; பரம்ஜித் கவுர் (41) எனும் பெண்மணி ஒருவர் - ஆக 6 பேர் ஆவர். 30 பேர் காயம் அடைந் தனர்; 3 பேர் படுகாயம் அடைந்தனர். சத்வந்த் சிங் எதிர்த்துப் போராடிய இடைப்பட்ட சற்றுநேரத்தில், ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் உயிருக்கு அஞ்சி குருத்துவாராவிலிருந்து ஓடிவிட்டனர்.

தன் மகன் இப்படிப்பட்ட படுகொலை செய்துவிட் டதைக் கேள்விப்பட்ட கொலையாளியின் தாயார் லாரா லைன் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வருத்தம் தெரி வித்து, 10.8.12 வரையில் இதற்காகத் துக்கம் கொண் டாடும் அறிகுறியாக அமெரிக்கத் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடும்படிக் கூறி, எல்லோரும் ஆன்ம ஆய்வு செய்ய வேண்டுமென அறிவுறுத்தி யுள்ளார்.

கொலையாளியின் முன்னாள் காதலியான - செவிலியர் மிஸ்ட்டி குக் என்பவரும் இதேபோல் கறுப்பர் இன வெறுப்பாளர்கள் குழுவில் ஈடுபட்டவர் என்பதும், அவரும் துப்பாக்கி வைத்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஏன் இவ்வளவு கொடுமை நடந்தது?

இந்தியப் பார்ப்பனர்கள் பிறவி உயர்வு என்கிற ஆயுதத்தைக் கொண்டே இந்து மதத்திலுள்ள பெரிய எண்ணிக்கையுள்ள மக்களை - 95 விழுக்காடு பேரை மனத்தாலும், சிந்தனையாலும், செயலாளலும் பச்சை அடிமைகளாக ஆக்கி வைத்திருப்போர். “சாதி உயர்வு” என்கிற அதுவே அவர்களுக்குத் துப்பாக்கி - சுழல் துப்பாக்கி - பீரங்கி எல்லாம்.

அமbரிக்க வெள்ளை அதிகார வர்க்கமும், ஆளும் வர்க்கமும் - சீக்கியர்கள் பலமுறை பாதுகாப்புக் கோரி முறையீடு செய்தும்கூட, அவர்கள் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.

கறுப்பரை வெறுத்துக் கொலை செய்வது போலவே தொழிலாளர்களைச் சுட்டுக்கொல்லுவதும் அமெரிக்க வெள்ளையரின் வழக்கம்.

24.8.12 வெள்ளி அன்று ஜெஃப்ரி ஜான்சன் என்பவன் 2 தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்றான்.

அமெரிக்காவில் துப்பாக்கி இல்லாத வீடோ, ஆளோ இல்லை என்கிற அளவுக்கு இனவெறுப்பு - மத வெறுப்பு - மனித வெறுப்பு காரணமாக வளர்க்கப் பட்டுவிட்டது.

முஸ்லீம் ஆதிக்க உணர்வினரால் 2001 செப்டம்பர் 11இல் அமெரிக்க உலக வணிக இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பிறகு, அமெரிக்கருக்கு இஸ்லாமியர் பேரிலான ஆத்திரம் வளர்ந்துவிட்டது. ஒசாமா பின்லேடன், அந்நிய நாட்டில் அமெரிக்கரால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகும், ஆப்கனில் தலிபன் என்கிற மதவெறியர் களைக் கொல்லுவது என்கிற பேரால் தானடித்த மூப்பாக அமெரிக்கா ஆப்கனிஸ்தானில் குண்டுவீசிக் கொல்கிறது.

அய்ரோப்பியர் துப்பாக்கிகளை வைத்துக் கொண் டிருப்பதை அநாகரிகம் என்று கருதுகிறார்கள். ஆனால் அமெரிக்கர்கள் தங்கள் நாட்டுப் பேராதிக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள - துப்பாக்கி வைத்திருப்பதும், வெளியிடங்களில் அதை ஏந்திச் செல்வதும் சுடுவதும் சமூகத் தற்காப்புக்குத் தேவை என்று நம்புகிறார்கள்.

துப்பாக்கியைப் பெருக்கி வைத்திருக்கிற - மற்ற 22 முதலாளித்துவ நாடுகளில் துப்பாக்கிச் சூட்டினால் நடந்துள்ள கொலைகளைப் போல 20 மடங்கு எண் ணிக்கையான கொலைகள், அமெரிக்காவில் நடந்து விட்டதாக அண்மையில் வெளிவந்த ஒரு கணக்கு மூலம் அறிய முடிகிறது.

அமெரிக்காவில் உள்ள முஸ்லீம்களில் பெரும் பாலோர் அல்-கொய்தாவின் ஆதரவாளர்கள் என அமெரிக்கரில் 9 கோடிப்பேர் நம்புகின்றனர். முஸ்லீம் மதத்தினரையும் அவர்கள் வெறுக்கின்றனர்.

அந்த வெறுப்பின் காரணமாக-வெளிப்பாடாக அமெரிக்கர்கள், மிசௌரி பகுதியில் உள்ள இஸ்லா மியரின் மசூதியை, 6.8.12 திங்கட்கிழமை தீ வைத்து எரித்துச் சாம்பலாக்கிவிட்டனர். இதே மசூதியில் 4.7.12இல் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றிய துப்பும் அறியப்படவில்லை.

அமெரிக்கர் வெள்ளை இனவெறி - கறுப்பர் இன வெறுப்பு வெறி, கொலை வெறி இவற்றுடன் கிறித்துவ மதவெறி - இஸ்லாமிய மத அழிப்பு வெறி பிடித்து அலைகின்றனர்.

இன்று, அசாமில் நடக்கும் மதக் கலவரம் மதb வறிக் கலவரமே.

இந்தியாவில் உள்ள இந்துக்களும், இந்து மதத்தை நம்பாத பழங்குடிகளும் இஸ்லாமிய எதிர்ப்பு வெறி - கிறித்துவ மத எதிர்ப்பு வெறி பிடித்து அலைகின்றனர்.

அசாமில் ஏற்பட்டுள்ள இந்த இஸ்லாமிய எதிர்ப்பு வெறி வளர்ப்புக்கு. 1980 தேர்தலின் போது விதிட்ட வர், இந்திரா காங்கிரசுத் தலைவி இந்திரா காந்திதான்.

இன்றைய அசாமிலும், அசாமின் பகுதியான போடோ சமவெளிப் பகுதியில் உள்ள கோக்ரஜாரிலும் இஸ்லாமியர்கள் - பங்களாதேஷ் அகதிகள், பங்களா தேசிலிருந்து கள்ளத்தனமாக நுழைந்தவர்கள் - ஆகியவர்களின் எண்ணிக்கையும் - அங்கிருந்து வந்த பழங்குடிகளின் எண்ணிக்கையும் அசாமில் பெரு கினால் - சிறுபான்மை மத மக்களின் ஆதிக்கம் அசாமிய வாக்கு வங்கியில் பெருகி விடும் என்ற பொய்யை - தீமையான சிந்தனையைப் பரப்பியவரே இந்திரா காந்திதான்.

அப்படிச் சொல்லி ஒரே கல்லில் இரண்டு மாங் காய்களை அடிக்க இந்திரா திட்டமிட்டார்.

அசாமில் வெள்ளையர்கள் காலூன்றுவதற்கு முன்னர் “அஹோம்” (AHOM) என்கிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் அசாமை ஆளும் அரசர் களாக இருந்தனர். பின்னாளில் காங்கிரசில் அவர்கள் செல்வாக்குப் பெற்று, ஒரு அஹோம் முதலமைச்சர் ஆனார். ஆனால் அசாமின் நில உடைமையும், கல்வி உடைமையும், அதிகார ஆதிக்கமும் பார்ப்பனர், காயஸ்தர், கொலிதா என்கிற உயர்சாதிக்காரர்களிடமே இருந்தன. இந்த மேல்சாதியினர் காங்கிரசில் செல் வாக்குப் பெற முடியவில்லை.

இப்படிச் செல்வாக்கு வரமுடியாததற்கு மூல காரணம் அஹோம் வகுப்பினர் பெரும்பான்மை யினராக இருந்ததுதான். அதை மறைக்க விரும்பிய இந்திராகாந்தி - “அசாமியர் அல்லாதார் எண்ணிக்கை 1971க்குப் பிறகு அசாமில் பெருகிவிட்டது” என்று ஒரு பெரிய பொய்த் தேற்றத்தை உருவாக்கினார்.

“அசாமியர் அல்லாதாரே, வெளியேறுங்கள்” என்ற ஒரே முழக்கத்தை எழுப்பித்தான், அசாமில் உள்ள கோஸ்வாமி என்கிற பார்ப்பனர்களும், மகிந்தா போன்ற காயஸ்தர் வகுப்பு மாணவர்களும், கொலிதா வகுப்பைச் சார்ந்த புகான் போன்ற மாணவர்களும் சேர்ந்து, இளைய தலைமுறையைச் சார்ந்த அசாமி யரிடம் எழுச்சியை உண்டுபண்ணி, ‘அசாம் கண பரிஷத்’ என்கிற கட்சியின் மூலம், பதவியைப் பிடிக்கச் செய்தார்.

இவர்கள் பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டுக் கும் எதிரிகள். எனவே பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக் கீட்டுக்காக இவர்களை எதிர்த்து “ஒன்றுபட்ட அசாமிய வகுப்புரிமை இயக்கம்” (United Reservation Movement Council of Assam - URMCA) என்ற ஓர் இயக்கத்தைத் தொடங்கினர்; சந்தோஷ் ராணா, வாஸ்கர் நந்தி ஆகியோர் மூலம் தொடர்பு கொண்டு என்ன அசாமுக்கு அழைத்தனர். 1986-1987இல் மேற்குவங்காளத்திலும், அசாமிலும் மார்க்சிய இளைஞர்களுடன் இணைந்து, மிதிவண்டியிலும், பேருந் திலும், தொடர்வண்டியிலும் பயணித்துப் பரப்புரை யை நான் மேற்கொண்டேன்.

 

கோக்ரஜாரில் பிரம்மா என்ற இளைஞர் தலை மையில், இயங்கிய சமவெளி போடோக்கள் பேரணி யையும் நான் தொடங்கிவைத்து உரையாற்றினேன். இவர்கள் யூனியன் தகுதி கோரியே போராடினார்கள். மலைவாழ் போடோக் களுக்கு எதிராக இவர்களைத் தூண்டி விட்டவரும், காங்கிரசார் மூலம் இவர்களுக்கு நிதி அளித்தவரும் இந்திராகாந்திதான்.

அங்கு களப்பணியாற்றிய நான் அறிந்த உண்மை என்ன?

பிரம்மபுத்ரா ஆறு பாயும் அங்குள்ள செழுமை யான நிலங்களில் பெரும் பகுதி கோஸ்வாமி என்கிற பார்ப்பனர்களுக்கும், கொலிதா, காயஸ்தர் என்கிற மேல்சாதியினருக்கும் சொந்தம். இந்தச் சாதியினர் உழுவது, பறம்பு அடிப்பது, பயிர் நடுவது, களை யெடுப்பது, அறுப்பது, அடிப்பது என்கிற எதையும் செய்யாத சாதிகளைச் சார்ந்தவர்கள்.

இப்படிப்பட்ட உடலுழைப்பு வேலைகளைச் செய் வதற்கென்று - பழைய கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து (இன்றைய பங்களாதேஷ்) நிலமற்ற இஸ்லாமியக் குடும்பங்களையும், பழங்குடியினர் - தாழ்த்தப்பட் டோர் குடும்பங்களையும் இந்த மேல்சாதி நில உடைமைக்காரர்கள்தான் தன்னலம் கருதி 1920 களில் அழைத்து வந்தனர். அவர்கள் கள்ளத்தனமாக அசாமுக்குள் நுழைந்தவர்கள் அல்ல. நான் 1986-87இல் போனபோது 60 ஆண்டுகளாக அவர்கள் அங்கே வாழ்ந்தார்கள்; இன்றும் வாழ்கிறார்கள். அவர் களை “அந்நியர்” என்று கூறுவது மானுட உரி மைக்கும் சட்டத்துக்கும் எதிரானது.

1971இல் பங்களாதேஷ் முகிழ்த்த பிறகு வந்த மிகச் சில இஸ்லாமியரும், பழங்குடியினரும், அங்கே இருந்தார்கள்.

இந்த உண்மைகளை மனத்தில் கொண்டு, இன்று அசாமிலும், கோக்ரஜாரிலும் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் வன்கொடு மையை - படுகொலையை நாம் நோக்க வேண்டும்.

அசாமின் ஆட்சிக்குட்பட்டது - “போடோலாந்து பிரதேசத் தன்னிச்சை மாவட்டங்களின் ஆட்சிப்பகுதி.

இப்பகுதியிலுள்ள கோக்ரஜார், போங்கைகோன், சிராங் முதலான மாவட்டங்களில் நடந்த கலவரத்தில் மட்டும் 7.8.12க்குள் 73 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். 500 சிற்றூர்கள் எரிக்கப்பட்டுவிட்டன. வீடுகளை இழந்த - உயிருக்கு அஞ்சிய 4 இலட்சம் மக்கள் வெளி யேறி, 273 இடங்களில் உள்நாட்டு அகதிகளாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு இடையில் இப்படிப்பட்ட கலவரங்களை உண்டாக்க வேண்டுமென்று திட்டமிட்ட இந்துமத வெறியர்களும், இஸ்லாமியத் தீவிரவாதிகளும் 2012 மே முதல் - 300க்கும் மேற்பட்ட சமூக வலைத்தளங் களின் மூலம் இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங் களிலும் இதுபற்றிய செய்தியைப் பரப்பியிருந்தனர். கலவரம் வெடித்ததற்கு அடிப்படை என்ன?

கள்ளத்தனமாக - பங்களாதேசிலிருந்து நுழைந்த வர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது; அவர்களின் வாக்கு வங்கி வலிவாகிவிட்டது. அது அசாமியருக்கு ஆபத்தானது என்பதுதான் காரணம். இது உண் மையா? இல்லை. இது கடைந்தெடுத்த பொய். எப்படி?

1901 மக்கள் தொகைக் கணக்குப்படி அசாம் மக்கள் தொகை 33 இலட்சம். 1901க்கும் 1941க்கும் இடையில் 40 ஆண்டுகளில் ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகை - 1901இல் இருந்ததைவிட 74.82 விழுக்காடு கூடி யிருந்தது. அந்த விகிதப்படி, 1941இல் அசாம் மக்கள் தொகை 57.69 இலட்சம் ஆகத்தான் பெருகியிருக்க வேண்டும் - ஆனால் 1941இல் 67 இலட்சமாக உயர்ந்துவிட்டது. இந்தக் கணக்குப்படி 1941க்குள் வெளியிலிருந்து அசாமில் குடியேறியவர்கள் 9.31 இலட்சம் பேர் ஆகும்.. இது கிழக்கு வங்காளத்தி லிருந்து கோக்ரஜார், போங்கோகோன், சிராங், துப்ரி மாவட்டங்களை உள்ளடக்கிய - பழைய - பிரிக்கப்படாத கோல்பரா மாவட்டத்தின் நிலை ஆகும்.

அசாம் தேர்தல் ஆணையர் தந்த கணக்குப்படிப் பார்த்தால், கிழக்கு வங்காளத்திலிருந்து வந்து குடி யேறிய முஸ்லீம்களின் எண்ணிக்கை, இன்று, இன் னும் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை.

1971 மக்கள் தொகைக் கணக்குப்படி, பிரிக்கப் படாத மாவட்டத்தில் கோக்ரஜாரில் இஸ்லாமியர் 17 விழுக்காடு மட்டுமே; 1981இல் கணக்கெடுப்பு இல்லை; 1991இல் 19.3 விழுக்காடு, 2001இல் 20.4 விழுக்காடு மட்டுமே இருந்தனர் (The Hindu, 8.8.2012 – By BANAJIT HUSSAIN).

 

உண்மை நிலை இப்படியிருக்க - அசாம் கலவரத் தை முன்வைத்து மும்பையில் கொலைகளும் தீ வைப்பும் நடந்தன. மும்பை, பெங்களூர், கோவை, சென்னை முதலான பெரிய நகரங்களிலிருந்து - உயிருக்கு அஞ்சிய வடகிழக்கு மாநிலங்களிலிருந்து ஏற்கெனவே பிழைப்புத் தேடிவந்த மக்கள் பல்லாயிரக் கணக்கில் 22.8.12 வாக்கில் தொடர் வண்டிகளில் கூட்டங்கூட்டமாக வெளியேறிவிட்டனர்.

முஸ்லீம்களை ஒழிப்பதையே குறியாகக் கொண்ட பாரதிய சனதா, முதலான கட்சிகள் எரிகிற நெருப்பில் எண்ணெய்யை வாரி வீசுகிற மாதிரியில் - “அசாமிலி ருந்து அந்நிய நாட்டு முஸ்லீம்களை வெளியேற்று!” என ஓலமிடுகின்றன.

இடித்து வைத்த புளிப் பிள்ளையார் மாதிரி உள்ள - அசாமின் பிரதிநிதியாக மாநிலங்கள் அவையில் நுழைந்து, செயல்படாத பிரதமராக உள்ள சோனியா காந்தியின் ஏவலராக - அமெரிக்காவின் கையாளராக விளங்கும் டாக்டர் மன்மோகன் சிங், உள்நாட்டில் அகதிகள், மற்றும் வெளிநாட்டிலிருந்து கள்ளத்தனமாக வந்தவர்கள், 1920களில் அசாமில் குடியேறியவர்கள் என்ற பாகுபாடுகளை அறிந்து, அசாம் வன்முறைக்குத் தீர்வு காணாமல் இருப்பது மாபெரும் குற்றமாகும்.

அசாம் மாநில அரசினர், கோக்ரஜார் கலவரங் களையும், கொலைகளையும் அடக்க, உடனே இராணுவத்தை அனுப்புங்கள் என்று 21-7-12 லேயே அவசரக் கோரிக்கை விடுத்தனர். பிரதமர் மன்மோகன் சிங், இராணுவ அமைச்சர் அந்தோணி மற்றும் அதிகார வர்க்கத்தினர்-‘முஸ்லீம்கள்தானே கொல்லப் படுகிறார்கள் என்று கருதி மந்திகளாகவே இருந்து விட்டனர்.’

இனவெறியும், மதவெறியும் அமெரிக்காவிலும், அசாமிலும் தலைவிரித்தாடுவது போலவே, இன்று பாக்கிஸ்தானிலும், சிறுபான்மை இந்துக்களுக்கு எதிரான மனிதாபிமானம் அற்ற கொடுமைகள் நடக்கின்றன.

இன்றைய பாக்கிஸ்தான் மக்கள் தொகை 18 கோடி. இதில் இந்துக்களின் தொகை வெறும் 36 இலட்சம் மட்டுமே.

இவர்களில் பாக்கிஸ்தானிலிருந்து அனுமதியுடன் இந்தியாவுக்கு வருகிறவர்கள் இரண்டு வகையினர். இந்தியாவில் உள்ள தங்களின் குல தெய்வங்களைக் கும்பிடவும், இந்துமதப் புனித இடங்களைக் கண்டு களிக்கவும் வருகிறவர்கள் ஒருவகை. பாக்கிஸ்தான் காவல்துறையும், அரசு அதிகாரிகளும், கொள்ளைக் காரர்களும், கொலைகாரர்களும், இந்துப் பெண்களைக் கடத்துவோரும் செய்யும் அட்டூழியம் தாங்கமாட்டாமல் அனுமதி பெற்றும் பெறாமலும் இந்தியாவுக்குள் வருவோர் இன்னொருவகை.

பாக்கிஸ்தானிலுள்ள இந்துக்களில் அதிகம் பேர் சிந்து மாகாணத்தில் தான் வாழ்கின்றனர். அங்கு மிர் புர்காஸ் பகுதியிலுள்ளவர்களுக்கு இஸ் லாமியர் இழைக்கும் கொடுமை தாங்காமல் கடந்த 5 மாத காலத்தில் 20 குடும்பத்தினர் இந்தியாவை நோக்கி வந்துவிட்டனர். 18 குடும்பங்கள் இந்தியா வுக்கும், மேலும் சில குடும்பங்கள் துபாய்க்கும் ஓடிவிட் டனர். அதே சமகாலத்தின் மிர்புர்காஸில் உள்ள 70 இந்துக் குடும்பங்களின் வீடுகளில் கன்னம் வைத்துத் திருடிவிட்டனர்.

பணத்துக்காகக் கடத்தப்பட்ட 2 இந்து இளைஞர்கள் பணம் தர முடியாததால் கொல்லப்பட்டுவிட்டனர். இரண்டு பெரிய இந்து வணிகர்களைக் கடத்திச் சென்று கொடுமை செய்து கோடிக்கணக்கான ரூபாயைப் பெற்றுக்கொண்டு விடுவித்தனர்.

சிந்து மாகாணம் ஜகோபபாத் என்ற ஊரைச் சார்ந்த 14 வயதுள்ள இந்துப் பெண்ணை, 7.8.12 அன்று கடத்திச் சென்று கற்பழித்துக் கொடுமை செய்தனர். அப்பெண்ணின் கதி பற்றி இன்றுவரை ஏதும் தெரியவில்லை.

இவ்வளவு கொடுமைகளையும் விளக்கி இந்து பஞ்சாயத்துத் தலைவர் இலட்சுமண்தாஸ் பெர்வா னியும்; சிந்து சட்டமன்ற முன்னாள் உறுப்பினரான இன்னொரு பெர்வானியும் பாக்கிஸ்தான் அதிகாரி களிடம் முறையிட்டும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இவற்றைக் கேட்கவே உள்ளம் நடுங்குகிறது (The New Indian Express, 13.8.2012, Page 9).

இந்து, இஸ்லாம், கிறித்துவ மதங்கள், “ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம்” என்றே கூறுவதாக மதவாதிகள் சாதிக்கின்றனர்.

‘ஜிகாத்’ என்பது மதமாற்றப் போராட்டமல்ல; “புனிதப் பயணம்” என்று இஸ்லாம் கற்பிக்கிறது.

“வலக் கன்னத்தில் அறைந்தால் இடக் கன்னத்தையும் திருப்பிக்காட்டு” என்று இயேசு உரைத்தார் என, கிறித்துவ மதம் கற்பிக்கிறது.

இந்து மதம் அப்படிச் சொல்லுவது இல்லை. “பிறவியில், மனிதருள், உயர்வு, தாழ்வு உண்டு” என்றே கற்பிக்கிறது.

அமெரிக்கரும், இந்தியர்களும், பாக்கிஸ்தானி யரும் - அந்நாடுகளின் அரசுகளும், மக்களும் காட்டு விலங்காண்டிக் காலத்துக்கே இன்றைய மக்களை இழுத்துச் செல்லுகிறார்கள்.

இவர்களை இழுத்துக் கீழே போட்டுத் துவைக்க வேண்டியவர்கள் மக்களே! மக்களே!

 வே. ஆனைமுத்து

Pin It