அன்றொருநாள் வாசலிலே அமர்ந்தி ருந்தேன்;

                ‘ஆயுதபூசை‘ யும்வந்த தென்றே கூறி,

என்றுமில்லாப் பரபரப்பில் சிலர்ப றந்தார்!

                ‘இல்லத்துக் கருவியெலாம் அடுக்கி வைத்தே

இன்றைக்குப் பூசைசெய வேண்டும்!’ என்றே

                எலுமிச்சை, பொரிகடலை,பூச ணிக்காய்

சென்றவர்கள் வாங்கிவந்தார்! பக்தி யோடு

                சித்தையுடன் வழிபாட்டைத் தொடங்கி னார்கள்!

வாங்கிவந்த பூசுணைமேல் மஞ்சள் பூசி

                வண்ணவண்ணப் பொட்டுவைத்தார்;

                துளையைப் போட்டார்;

ஆங்குசில காசுகளை அதற்குள் இட்டார்!

                ஆர்ப்பாட்டப் பூசையெலாம் முடித்தார்! பின்னர்

ஓங்கியந்தப் பூசுணையைத் தெருவில் போட்டே

                உடைத்திட்டார்; உள்ளிருந்த காசெல் லாமும்

ஆங்கொன்றும் ஈங்கொன்றும் சிதறி யோட,

                அவற்றினையே பொறுக்குதற்குச் சிறுவர் சேர்ந்தார்!

ஏழ்மையிலே வாடும்ஒரு சிறுமி வந்தாள்;

                எப்படியும் ஒருகாசை எடுப்ப தற்குச்

சூழ்ந்த அந்தக் கும்பலுடன் பாய்ந்தாள்! பாழும்

                சோதனையே ‘கார்’ உருவில் வந்த தைப்போல்

வீழ்ந்தஅவள் உடல்மீது ஏறிற் றம்மா!

                மென்மலரை அம்மிவைத்தே அரைத்த தைப்போல்,

கூழாக அச்சிறுமி சிதைந்தாள்! பச்சைத்

                குருதிவெள்ளம் பாய்ந்ததங்கே வீதி யெல்லாம்!

நல்லோரே! நாட்டோரே! உம்மை யெல்லாம்

                நான்கெஞ்சிக் கேட்கின்றேன்; நெஞ்சைத் தொட்டுச்

சொல்லுங்கள்! உம்முடைய பூசை யாலே

                தூயஉயிர் மாள்வதெலாம் சரியா? பக்தி

இல்லத்துள் இருக்கட்டும்; வீதி வந்தே

                இழப்புகளை, இறப்புகளை விளைக்க லாமா?

பொல்லாத சடங்குகளால் கிடைப்ப தெல்லாம்

                புண்ணியமா? இல்லை, இல்லை; பாவந் தானே?
Pin It