விழிநான்கு விதையூன்ற இருநெஞ் சங்கள்

     விளைவிக்கும் அறுவடைதான் காதல்!அந்த

எழிற்காதல் ஆட்சிமட்டும் இல்லை யென்றால்

     இனவளர்ச்சி மண்மீதில் உண்டா? ஆனால்

மழுங்கிவிட்ட சாதிமத வெறியர் இன்னும்

     ‘மணம்என்றால் குலாச்சாதிக் குள்தான்’ என்றார்!

இழிக்கொடுமைச் சாதிப்பேய் ஒழிய வேண்டின்

     எங்கெங்கும் காதல்மணம் தழைக்க வேண்டும்!

சாதகத்தின் சாதகத்தைப் பார்த்தி ணைந்த

     தம்பதியர் மணமுறிவு காணல் ஏன்?ஏன்?

சாதிவழிச் சொந்தத்துள் மணம்செய் வோரின்

     சந்ததிகள் நோய்தாக்கி வாடல் ஏன்?ஏன்?

மாதிடத்தில் தட்சணையை நீதி யின்றி

     வாங்கும்பாழ் வேதனைகள் மிகுதல் ஏன்?ஏன்

ஆதலினால் காதல்மணம் ஒன்றே பேதம்    

     அறியாத சமுதாயம் உருவாய் ஆக்கும்!

கட்டாயச் சட்டமொன்றை இயற்ற வேண்டும்

     கலியாணம் சாதிக்குள் கூடா தென்றே!

ஒட்டுமாங் கனிமிகவும் இனிப்ப தேன்? ஏன்

     ஒரே சாதி மரங்களிங்கே இணைவ தில்லை!

மட்டில்லா வளர்ச்சிபெற்ற மேலைநாட்டார்

     மடச்சாதி வளையத்துள் சிறைப்பட் டாரா?

திட்டமுடன் தினைக்காட்டுக் கிளிகள் போலே,

     ‘தித்திக்கும் காதல்மணம் வாழ்க!’ என்போம்!

Pin It