சமூக மாற்றத்தில் அக்கறை கொண்டு, மிகச் சிறந்த நூல்களை உலகத்தரத்தில் வெளியிட்டு வரு கின்ற பதிப்பகம் கோவை விடியல் பதிப்பகம். இதன் பதிப்பாளரும் உரிமையாளரும், கோவையில் முற் போக்குச் சிந்தனையாளர்களையெல்லாம் ஒருங் கிணைத்துச் செயல்பட வைத்த ஓர் ஆற்றலாக விளங்கியவரும் ஆகிய தோழர் சிவா என்கின்ற விடியல் சிவஞானம் கடந்த 30.7.2012 திங்கட்கிழமை இயற்கை எய்தினார்.

நுரையீரல் புற்றுநோயால் தாக்கப்பட்டு, கடந்த எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் மருத்துவம் பெற்று வந்தார். கோவை இராமகிருட்டிணா மருத்துவமனை யில் கடந்த சூலை 30 திங்கட்கிழமை பகல் 2 மணிக்கு அவர் உயிர்ப்பு ஒடுங்கியது.

சேலம் மாவட்டம், அக்கிரகார நாட்டார்மங்கலம் என்னும் ஊரில் பிறந்த சிவா அவர்கள், ஐ.டி.ஐ. படிப்பை முடித்தவுடன் கோவை டெக்ஸ்டூலில் வேலை பார்த்து வந்தார். திராவிட இயக்கச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அரசியல் வாழ்வைத் தொடங்கினார். காலம் செல்லச் செல்ல மார்க்சியம் அவரை ஆட் கொண்டது. மாவோயியம் அவருக்குள் ஆளுமை பெற்றது. எனவே முனைப்பான இடதுசாரிச் சிந்தனை யாளராகவும், சமூக விடுதலைப் போராளியாகவும், சாதி எதிர்ப்பாளராகவும், பெண்ணுரிமைச் சிந்தனை யாளராகவும், ஈழ விடுதலை ஆதரவாளராகவும், அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான போரா ளியாகவும் தீவிரமாகச் செயல்பட்டுவந்தார்.

காவல் துறையின் கடுமையான அடக்குமுறை களுக்கெல்லாம் கவலைப்படாமல், துணிவோடு செய லாற்றி வந்த நெஞ்சுரம் சிவாவுக்கு இயல்பாக அமைந் திருந்தது. காவல்துறையின் இடைவிடாத கண்காணிப் பில் இருந்தாலும், அதனை ஒரு தூசு போல் கருதிச் செயல்பாட்டில் மனம் துவளாதவராக அவர் விளங்கினார்.

மாவோயியச் சிந்தனை நெறிப்பட்ட புரட்சியாளர் களின் செயல்பாடுகள் மீது அவர் ஆர்வம் காட்டினார். சாதி, மத மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்தியல் கள் மீது அவர் பெரும் கவனம் செலுத்தினார். எனவே, தந்தை பெரியார், மகாத்மா புலே, அண்ணல் அம் பேத்கர் முதலிய சமூகப் போராளிகளின் படைப்புக ளையும், இவர்களைப் பற்றிய ஆழமான ஆய்வுகளை யும் தொடர்ந்து வெளிக்கொண்டுவந்தார். பெண்ணியச் சிந்தனைகளின் மீது பெரும் கவனம் செலுத்தினார்.

உள்ளூர் ஒடுக்குமுறைகள் பற்றியும், உலகளாவிய ஒடுக்குமுறைகள் பற்றியும், சாதியத்தின் வலிமை பற்றியும், முதலாளியம் எடுக்கும் புதிய வடிவங்கள் பற்றியும், உலகமயம் என்பது எப்படி ஏழை நாடு களைத் தின்று விழுங்கிக் கொண்டிருக்கிறது என்பது பற்றியும், பெருந்தேசிய இனங் களால் சிறு தேசிய இனங் கள் சிதைக்கப்படுவது பற்றி யும் அவர் தெளி வான பார்வை கொண்டிருந்தார்.

ஆழமான தெளிவைத் தரக்கூடிய நூல்களெல்லாம் ஆங்கிலத்திலும், பிற அய் ரோப்பிய மொழிகளிலும் மட்டுமே உலா வந்து கொண்டிருந்த நிலையில், அத்தகைய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து, நல்ல பொலிவுடன் வெளியிடத் திட்டமிட்டார். ஆங்கில மொழித்திறம் நிறைந்த நல்ல தோழமை வட்டத்தை உருவாக்கிக் கொண்டு, மொழிபெயர்ப்புப் பணிக்கான ஏந்துகளைச் செய்து கொடுத்தார். மொழிபெயர்ப்பு களைச் செப்பம் செய்யும் குழுவையும் திட்டமிட்டுக் கொண்டார். கடுமையான பொருளியல் நெருக்கடி களுக்கிடையிலும், நூல்களைச் செம்மையாகப் பதிப்பித்து வெளியிட்டார்.

இவர் வெளியிட்ட நூல்கள் பலவும், அதிகப் பக்கங்கள் கொண்டவையாகவும், அதிக விலையுள்ளவையாகவும் விளங்கினாலும், இயல்பாக வாசிக்கக் கூடியனவா கவும், ஆழ்ந்த கருத்துவளம் உடையனவாகவும் திகழ்ந்தன. எனவே உலக அளவில் விடியல் பதிப்பக நூல்கள் விரும்பி வரவேற்கப்பட்டன. ஈழவிடுதலைச் சிந்தனையாளர்களும் போராளிகளும் விடியல் வெளி யீடுகளை விரும்பி வரவேற்றனர். தமிழகத்தில், சமூக மாறுதலுக்கான அக்கறையும், அரசியல் விடுதலைப் போர்க் குணமும் கொண்டவர்கள் விடியல் வெளி யீடுகளை நாடி வந்தனர்.

“பெரியார் சுயமரியாதை சமதர்மம்”, “சேகுவேரா வாழ்வும் மரணமும்”, “சன்யாட்சென்”, “சுதந்திரத் தின் தேவைகள்”, “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்”, “சூழலியல் புரட்சி”, “இருபத் தொன்றாம் நூற்றாண்டுக்கான சோசலிசம்” முதலாக நூற்றுக்கும் மேற்பட்ட இவர்தம் வெளியீடுகள், இவர் ஆற்றிய சமூகத் தொண்டின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. மக்களுக்கு, இளைஞர்களுக்கு, சமூக விடுதலை நாடும் செயற்பாட்டாளருக்கு அடிப்படைச் சிந்தனைத் தெளிவை ஊட்டக்கூடியவை விடியல் வெளியீடுகள்.

சமூக விடுதலைக் கல்வி பெற்றோராக இளைஞர் களை வளர்த்தெடுக்கும் கல்வியாளராகச் செயல்பட்டு வந்தார் சிவா.

தம் வாழ்வியல் பட்டுணர்வுகளை ஒரு பெரும் நூலாக எழுதி முடிக்க எண்ணியிருந்தார். அந்நூல் முற்றுப்பெற முடியாமல் கொடிய நோய் இவரை ஆட் கொண்டுவிட்டது.

ஈழ இறுதிப் போரின் போது தமிழகத்தில் சிறைப் படுத்தப்பட்ட ஈழ ஆதரவாளர்களை விடுதலை செய்ய வும், ஈழ ஆதரவுக் கனல் இங்கே எப்படித் தகித்துக் கொண்டிருக்கிறது என்பதை உலகிற்குக் காட்டவும், தோழர்களுடன் சேர்ந்து நடத்திய ஈழ ஆதரவாளர் விடுதலை மாநாடும், கடந்த ஆண்டில் கோவையில் நிகழ்ந்த மூவர் உயிர் காப்பு மரண தண்டனை ஒழிப்பு மாநாடும் இவர்தம் திட்டமிடலுக்குச் சிறந்த சான்று களாகும்.

திருமணமே செய்துகொள்ளாமல், இயக்கத்திற் காகவும் அறிவுத் தொண்டுக்காகவும் வாழ்ந்த இத் தோழரை, தங்கள் உடன்பிறப்பாய் ஏற்று, அன்பு காட்டி, ஆதரித்து வந்த இயக்கக் குடும்பம் தோழர் தண்டபாணி - தோழியர் கல்யாணி குடும்பம். தோழர் தண்டபாணியும் மாரடைப்பால் சில ஆண்டுகளுக்கு முன் மரணமுற்றுவிட்டார். தோழியர் கல்யாணி, தங்கையாகவும் தாயாகவும் இருந்து தோழர் சிவாவை இறுதிவரை கவனித்துக் கொண்டார்.

பல நாடுகளில் வாழும் தமிழர்கள் அடிக்கடி சிவா அவர்களின் நலத்தைத் தொலைபேசி வழியாக வினவி வந்தனர். தமிழகத்தின் பல பகுதிகளிலி ருந்தும் தோழர்கள் சிவாவை அடிக்கடி வந்து பார்த்துச் சென்றனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு, தோழர் ஆனைமுத்து அய்யா அவர்கள், சூலூர் பாவேந்தர் பேரவைத் தோழர்களுடன் வந்து உடல்நலம் பற்றிக் கேட்டறிந்து அன்பைப் பகிர்ந்து கொண்டார்.

தோழர் தியாகு அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று சிவாவைப் பார்த்துச் சென்றார்.

தோழர் எஸ்.வி. ராஜதுரை அவர்கள், மருத்துவ மனையில் சிவா அவர்களுடனேயே வாரக் கணக்கில் தங்கியிருந்து உதவிகள் செய்தார். தோழர்கள் அரங்க, இராஜாராம், விஜயகுமார், பொன்னுசாமி முதலான தோழர்கள் பலர் இறுதிவரை சிவா அவர்களுக்கு உற்ற துணையாய்த் திகழ்ந்தனர்.

தமது மரணம் பற்றித் தெளிவாக அறிந்திருந் ததால், “விடியல் பதிப்பகம்” தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதற்காக, தக்க நண்பர்களைக் கொண்ட ஓர் அறக்கட்டளையை உருவாக்கிப் பதிவு செய்து வைத்தார்.

அதுபோலவே, செத்தபின்பும் தம் உடல் பயன்பட வேண்டும் என்பதற்காக, கோவை மருத்துவக் கல்லூரி ஆய்வகத்திற்குத் தம் உடலை உடற்கொடையாக எழுதிக் கொடுத்தார்.

கடந்த 30ஆம் நாள், பிற்பகலில், சிவா அவர் களின் மரணச் செய்தி பரவியவுடன் முற்போக்கு இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் பலரும் இராம கிருட்டிணா மருத்துவமனையில் திரளத் தொடங்கினர்.

தோழர் கோவை கு. இராமகிருட்டிணன், தோழர் கள் பொன். சந்திரன், வழக்கறிஞர் மணிமாறன், விசுவநாதன், செந்தலை கவுதமன், இரணியன், விஜயகுமார், இராசாராம், பொன்னுசாமி, வேனில், புலவர் ஆதி, புலவர் கி.ஆ. குப்புராசு, கருப்புசாமி, மெய்யறிவின்பன், வேலிறையன் முதலான நூற்றுக் கணக்கான தோழர்கள் மருத்துவமனையில் கூடினர். சேலத்திலிருந்து சிவா அவர்களின் குடும்பத்தினரும் வந்து சேர்ந்தனர்.

மாலை 5 மணிக்குக் காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்திற்கு, சிவாவின் உடல் கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. தோழர்களும் உறவினர்களும் மலர்மாலை வைத்து இறுதி வணக்கம் செலுத்தினர்.

எழுத்தாளர் திரு. எஸ்.வி. இராசதுரை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தோழர்கள் கு. இராமகிருட்டிணன், பொன். சந்திரன், மணிமாறன், இரா. அதியமான், தேவேந்திரன், செந் தலை கவுதமன், இரணியன், மணி உள்ளிட்ட பல் வேறு அமைப்புகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட வர்கள் இரங்கல் உரையாற்றினர். சிவா அவர்களின் அண்ணன் இறுதியாகக் கண்ணீர் உரையாற்றினார்.

இரவு ஏழரை மணிக்குமேல், சிவா அவர்களின் உடல், கருப்புக்கொடி ஏந்திய தோழர்கள் முன்னே செல்ல ஊர்வலமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. “வீரவணக்கம், வீரவணக்கம், சிவாவுக்கு வீரவணக்கம். மக்களுக் காகவே வாழ்ந்திட்ட தோழர் சிவாவுக்கு நம் வீர வணக்கம்” என்று தோழர்கள் உணர்ச்சியோடு முழக்க மிட, இரவு 8.45 மணியளவில் சிவா அவர்களின் உடல் மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்கப்பட்டது.

நினைவேந்தல் கூட்டம் பின்பு ஒரு நாளில் நடைபெறும் எனவும், நினைவு மலர் வெளியிடப்படும் எனவும் தோழர்கள் அறிவித்தனர்.

மன்னா உலகத்து மன்னுதல்குறித்த சிவா

தம் புகழ் நிறுவித் தாம் மாய்ந்தாலும்

தம் நூல்களால் நம்முடன் வாழ்கிறார்.

Pin It