கம்யூனிஸ்டுகள் காங்கிரசிலிருந்து வெளியேறலும் முதல் தேர்தல் அறிக்கையும் :

1944ஆம் ஆண்டு சோவியத் நாட்டின் செஞ்சேனையின் வெற்றி ஆண்டாக இருந்தது. பல்கேரி யா, ஹங்கேரி, யூகோஸ்லாவியா, போலந்து ஆகிய நாடுகள் சோவியத் நாட்டின் உதவியுடன் நாஜிகளின் பிடியிலிருந்து விடுபட்டன. பெர்லின் நகரத்துக்குள் சோவியத் படைகள் புகுந்தன. ஜெர்மனியின் நாடாளு மன்றக் கட்டடமாகிய “ரெயிஷ்டாக்கின்” மீது 1945 ஏப்பிரல் 30 அன்று செஞ்சேனை செங்கொடியை ஏற்றி யது. 1945 மே 2ஆம் நாள் பெர்லின் சரணடைந்தது. இட்லர் தற்கொலை செய்துகொண்டார். ஜெர்மன் படைகள் சோவியத் படைகளிடம் சரணடைந்தன.

சோவியத் அரசு 1945 ஆக°டில் சப்பான் மீது போர்ப் பிரகடனம் செய்தது. வெற்றி நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9ஆம் நாள்களில் ஹிரோஷிமா, நாகசாகி என்னும் இரு சப்பானிய நகரங்கள் மீது அமெரிக்கா அணு குண்டுகளை வீசி இரு நகரங்களையும் முழுமையாக அழித்தது. செப்டம்பர் 20ஆம் நாள் சப்பான் சரண டைந்தது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது.

1945 மே மாதத்தில் இந்திய அரசியல் அரங்கில், காங்கிரசு-முசுலீம் லீக் ஒற்றுமைக்காக ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மத்திய சட்டசபையின் காங்கிரஸ் தலைவர் புலாபாய் தேசாய்க்கும், முசுலீம் லீக் தலைவர் லியாகத் அலிகானுக்கும் இடையில் ஒரு தற்காலிக உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, தேசிய இடைக்கால அரசாங்கம் அமைப்பது என்றும், அதில் காங்கிரசுக்கும், லீகுக்கும் தலா 40 விழுக்காடு பிரதி நிதித்துவம் என்றும், மற்றவர்களுக்கு 20 விழுக்காடு என்றும் முடிவாயிற்று.

ஆங்கிலேய வைசுராய் வேவல் பிரபு, இடைக் கால தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவதை ஒப்புக் கொண்டு தாய்நாடு திரும்பினார். எனினும் காங்கிரசு - லீக் சமநிலை என்பதனை ‘சாதி இந்து - முசுலீம் சமநிலை’ என்ற பிரித்தாளும் சூழ்ச்சியுடன் மாற்றப் பட்டிருந்தது. இதற்காக நடைபெற்ற சிம்லா மாநாட்டில் காங்கிரசு - லீக் தலைவர்கள் மீண்டும் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். அதனால் தேசாய் - லியாகத் ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தது.

இந்திய கம்யூனி°ட் கட்சியின் அனைத்திந்திய முதல் மாநாடு 1943 மே 23 முதல் சூன் 9 வரை பம்பாயில் நடைபெற்றது. இம்மாநாட்டில்தான் கட்சி யின் திட்டம், அமைப்புக் கூட்டம், நடைமுறைக் கொள் கைகள் ஆகியவை திட்டவட்டமான முறையில் தீர் மானிக்கப்பட்டன. இம்மாநாட்டில் 139 பிரதிநிதிகளும், அதே அளவுக்குப் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.

மாநாடு மூன்று முக்கிய பணிகளைச் செய்து முடித்தது. 1. அரசியல் தீர்மானம் ஒன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 2. பொதுச் செயலாளர் பி.சி. ஜோஷியின், ‘அரசியல் மற்றும் °தாபன அறிக்கை’ விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 3. கட்சிக்குப் புதியதொரு ‘அமைப்புச் சட்டம்’ உருவாக்கப்பட்டது.

இந்தியக் கம்யூனி°ட் கட்சியின் முதல் மாநாட்டின் இறுதியில் 22 பேரைக் கொண்ட புதிய மத்தியக் குழு ஒன்றும், பி.சி. ஜோஷி, டாக்டர் அதிகாரி, பி.டி. ரணதிவே ஆகியோர் அடங்கிய ஓர் அரசியல் தலைமைக் குழு வும் (பொலிட் பீரோ) தேர்ந்தெடுக்கப்பட்டன. கட்சியின் பொதுச் செயலாளராக பி.சி. ஜோஷி மீண்டும் தேர்ந் தெடுக்கப்பட்டார்.

சப்பானியப் படைகள் இந்தியாவுக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது, தேசத்தின் பாதுகாப்புக்குக் கெடுதல் விளைவிக்கும் போராட்ட முறையாக உள்ளது எனக் கூறி, “வெள்ளையனே வெளியேறு” எனும் ஆகஸ்ட் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் கலந்துகொள்ள வில்லை. இதைக் காரணமாகக் காட்டி, ‘கம்யூனி°டுகள் தேச விரோதிகள்’, ‘அரசிடமிருந்து பணம் பெறுபவர்கள்’, ‘காங்கிரஸ் தடை செய்யப்பட்டதால்தான் கம்யூனிஸ்ட் கட்சி வளர்கிறது’ என்று கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள் வசைபாடினர்.

இது தொடர்பாகக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பி.சி. ஜோஷி 1944 சூன் மாதத்தில் காந்தியடிகளைச் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து காந்தியாருக்கும் ஜோசிக்கும் இடையில் கடிதப் போக்குவரத்து 1945 மே மாதம் வரை நீடித்தது. தன் மனதில் ஏற்கெனவே உருவாக்கியிருந்த தப்பபிப் பிராயத்தின் காரணமாக உண்மையை ஏற்க மறுத் தார் காந்தி.

காங்கிரசுக் கட்சி நியமித்த ஒரு துணைக் குழுவின் குற்றச்சாட்டுகளின்படி, கம்யூனிஸ்டுகளின் கொள்கை, காங்கிரசின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானது என்று தீர்மானித்து, “ஆகஸ்டு போராட்டத்தைக் கம்யூனி°டுகள் எதிர்க்கலாமா?” என்று ஒவ்வொரு கம்யூனிஸ்டுக்கும் ஒரு குற்றப் பத்திரிகையைக் கொடுத்தது.

கம்யூனிஸ்டுகளிடம் காங்கிரஸ் தலைவர்கள் காட்டிய வெறுப்பைக் கண்டதும், 1945 அக்டோபர் மாதத்தில், அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியிலிருந்த வர்களைத் தவிர, மற்ற கம்யூனி°டுகள் காங்கிரசை விட்டு விலகுமாறு கட்சி பணித்தது. மேலும் கிட்டத்தட்ட 300 பக்க அளவுள்ள பதில் அறிக்கை கம்யூனிஸ்டு களால் காங்கிரசிடம் தரப்பட்டது. எவ்வளவு சிறப்பாகப் பதில் கூறினால் என்ன?

ஏற்கெனவே கம்யூனிஸ்டு களைக் காங்கிரசிலிருந்து வெளியேற்ற முடிவு செய்து விட்டவர்கள் - மாற்றிக்கொள்ளவா போகிறார்கள்? கல்கத்தாவில் 1945 திசம்பர் 11, 12இல் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி, கம்யூனி°டுகளைக் காங்கிரசி லிருந்து வெளியேற்ற முடிவு செய்தது.

இந்தியக் கம்யூனிஸ்டுகளின் வரலாற்றில் வேறொரு கட்சியில் இயங்குவது எனும் அத்தியாயம் அத்தோடு முடிந்தது. தங்களுடைய சொந்தக் கம்யூனி°ட் கட்சி யைத் தீவிரமாகக் கட்டி வளர்க்கும் பணியில் முழுவது மாக ஈடுபடவும் அவர்களுக்கு வழிவகுத்துக் கொடுத்தது.

ஒருபுறம் கம்யூனிஸ்டுகளைக் காங்கிரசிலிருந்து வெளியேற்றிக் கொண்டிருந்தபோது, மறுபுறம் சோவியத்தின் வெற்றியும் பாசிசத்தின் தோல்வியும், அய்ரோப் பாவிலும், சீனாவிலும் எழுச்சி பெற்று வளர்ந்து வந்த சனநாயக இயக்கப் பேரலையும் இந்தியாவையும் உலுக்கி வந்தன. அந்தச் சமயத்தில் சுபாஷ் சந்திரபோசின் ‘இந்திய தேசிய இராணுவத்தில்’ பணிபுரிந்திருந்த மூன்று தளபதிகள் மீது விசாரணை நடத்தத் திட்டமிட்டது ஏகாதிபத்திய அரசு. விசாரணை 1945 நவம்பரில் தொடங் கியது. அதனை எதிர்த்து மக்கள் கிளர்ந்தெழுந்தனர்.

காங்கிரசு-லீக் கொடிகளை ஏந்திக்கொண்டு கல்கத்தா வீதிகளில் மக்கள் பேரணி நடத்தினர். அவர்கள் மீது ஏகாதிபத்திய அரசின் இராணுவமும் போலீசும் துப்பாக் கிச் சூடு நடத்தின. இப்போராட்டம் பம்பாய், மதுரை என பல நகரங்களுக்கும் பரவியது. இறுதியில் 1946 சனவரியில் அந்த மூன்று ஐ.என்.ஏ. தளபதிகளையும் ஏகாதிபத்தியம் விடுதலை செய்தது.

இத்தகைய சூழலில் 1946ஆம் ஆண்டின் தொடக் கத்தில் தேர்தல்கள் வந்தன. கம்யூனிஸ்ட் கட்சி 1945 நவம்பரில் வெளியிட்ட முதல் தேர்தல் அறிக்கையில் இரண்டு முக்கியமான கொள்கைகளைக் குறிப்பிட் டிருந்தது. 1. சர்வஜன வாக்குரிமை. வயது வந்த ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் வாக்குரிமை இருக்க வேண்டும். 2. ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் பரிபூரண சுதந்தரம் பெற்ற அரசுரிமை அந்தஸ்துடைய அரசியல் நிர்ணய சபை வேண்டும். இத்தேர்தலில் மத்திய சட்டசபையில் காங்கிரசு, மொத்த வாக்குகளில் 59 விழுக்காடு பெற்று 59 இடங்களைப் பிடித்தது. முசுலீம் லீக் 28 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 30 இடங் களை வென்றது. மாகாண சட்டசபைகளில்  காங்கிரசு 930 இடங்களையும் முசுலீம் லீக் 427 இடங்களையும் பிடித்தன.

அதாவது இந்துக்கள் பெருவாரியாக இருந்த இடங் களில் காங்கிரசும், முசுலீம்கள் பெருவாரியாக இருந்த இடங்களில் முசுலீம் லீக்கும் வென்றன. கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை 108 வேட்பாளர்களை நிறுத்தி, ஏறத்தாழ ஏழு இலட்சம் வாக்குகளைப் பெற்றது. மாகாண சட்டசபைகளில் எண்பது இடங்களைக் கைப் பற்றியது. இதன் பயனாகப் பின்னர் அரசியல் நிர்ணய சபைக்கு ஓர் உறுப்பினரைக் கம்யூனிஸ்ட் கட்சி அனுப்ப முடிந்தது. அவர் - சோம்நாத் லாகிரி.

கடற்படை எழுச்சியும் மக்கள் போராட்டங்களும் :

1946 பிப்பிரவரி 18அம் நாள் காலையில் ‘தல்வார்’ எனும் கப்பலில் ‘ராயல் இந்தியக் கடற்படை’யினரின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. அவர்கள் தங்களது நீண்டகாலக் கோரிக்கைகளை வலியுறுத்தி யும், ஆங்கிலேயே அதிகாரிகள் தங்களைக் கேவலமாக நடத்துவதை நிறுத்த கோரியும் அப்போராட்டத்தைத் தொடங்கினர்.

அடுத்த நாளில் பம்பாய்த் துறைமுகத் திலிருந்து இருபது கப்பல்களுக்கும் இப்போராட்டம் பரவியது. கப்பல்களில் பறந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் அரசின் கொடியாகிய ‘யூனியன் ஜாக்’ இறக்கப்பட்டது. அதற்குப் பதிலாகக் காங்கிரசின் மூவண்ணக் கொடியும், மு°லீம் லீகின் பிறைக் கொடியும், கம்யூனி°ட் கட்சி யின் செங்கொடியும் பட்டொளி வீசிப் பறக்கவிடப்பட்டன. இது இந்து முசுலீம் ஒற்றுமையையும், பாட்டாளி வர்க்கப் படைவீரர் ஒற்றுமையையும் எடுத்துக் காட்டுவதாக இருந்தது.

சுமார் 2000 கடற்படை வீரர்கள் இந்தப் புரட்சி யின் எழுச்சியில் பங்கேற்றனர். இப்போராட்டம் விரை வில் தாணா, கராச்சி, கல்கத்தா, விசாகப்பட்டினம் என்று பிற துறைமுகங்களுக்கும் பரவியது. பிப்பிரவரி 21ஆம் நாளுக்குள் எல்லா ராயல் இந்தியக் கடற்படை முழுவதுமே போராட்டத்தில் குதித்திருந்தது.

1857இன் மாபெரும் சிப்பாய் கலகத்தின் எழுச்சிக்குப் பிறகு, இப்பொழுது மீண்டும் ஒரு மாபெரும் எழுச்சி ஏற்பட்டது. அதுவரை ஏகாதிபத்தியத்திற்காகப் போர்க்களம் கண்டு வந்தவர்கள், இப்பொழுது தங்களுக்காகவும், தங்கள் தாய்நாட்டிற்காகவும் போர்க்களத்தில் புகுந்தனர்.

மாலுமிகளைக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் சந்தித்தனர்; பல ஆலோசனைகளை வழங்கினர். படைவீரர்களுக்கு ஆதரவாக வேலைநிறுத்தம், முழு அடைப்பு நடத்துமாறு நாட்டு மக்களுக்குக் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்தது. பம்பாய், கல்கத்தா, சென்னை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன.

1946 பிப்பிரவரி 22ஆம் நாள் இந்த மாலுமி களின் எழுச்சியை அடக்க துருப்புக்களைக் கொண்டு வந்தனர். வீதிகளில் மக்கள் காக்கை-குருவி போலச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டு நாள்களில் 27 பேர் மாண்டனர்.

1700க்கும் அதிகமானோர் படுகாயமடைந் தனர். கடற்படை மாலுமிகள் கலகம் செய்திருக்கக் கூடாது என்றும் கடற்படையில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்கிற தளபதியின் கூற்றைத் தாம் ஆதரிப்பதாகவும் வல்லபாய் பட்டேல் ஓர் அறிக்கை வெளியிட்டார். காந்தியோ, ‘அகிம்சைக் கொள்கையை மீறி, இந்துக்களும் முசுலீம்களும் ஒன்றுபட்டிருப்பது பாவகரமான சேர்க்கை’ என வருணித்தார்.

மேலும், ‘இது இந்தியாவை வெறிக் கூட்டத்திடம்  ஒப்படைப்பதாகும். அந்த முடிவைக் காண 125 வயது வரை உயிர் வாழ நான் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக நெருப்பில் விழுந்து அழியவே விரும்புகிறேன்’ என்று எழுதினார் (ஹரிஜன் 7.4.1946).

இந்திய விடுதலை இயக்கம் ஓர் உயர் கட்டத்தை எட்டும் பொழுதெல்லாம் - தங்கள் ஆதிக்கம், தம் கையை விட்டு நழுவிவிடுமோ என அஞ்சி - தேசிய முதலாளித் துவ வர்க்கத் தலைமை சமரசப் பாதையில் இறங்கி விடுவது என்பது காங்கிரசு வரலாற்றில் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. 1922இல் சௌரி சௌரா நிகழ்ச்சி யில் அது வெளிப்பட்டது.

1931இல் காந்தி-இர்வின் ஒப்பந்த மாய் அது அம்பலப்பட்டது. 1946-இல் கடற்படை வீரர் களின் எழுச்சியினைக் கண்டனம் செய்வதில் அது வெளிப்பட்டது. கடற்படை வீரர்களை ஆங்கிலேய ஆட்சி யாளர்களிடம் சரணடையுமாறு வல்லபாய் பட்டேலும், முகம்மது அலி ஜின்னாவும் வற்புறுத்திய வண்ணம் இருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே போராடும் மாலுமிகள் பக்கம் உறுதியாக நின்றது.

இந்தியாவின் இருபெரும் கட்சிகளான காங்கிரசும் முசுலீம் லீகும் கைவிட்டுவிட்ட நிலையில், பிப்பிரவரி 23-ஆம் நாள் மத்திய கடற்படை வேலை நிறுத்தக் குழு, சரணடைவது என முடிவு செய்தது. “நாங்கள் இந்தியாவிடம் சரணடைகிறோம்; இங்கிலாந்திடம் அல்ல” என வேலை நிறுத்தக் குழுவின் அறிக்கை கூறியது.

ஆறு நாள்களில் நடந்து முடிந்துவிட்டது என்றாலும், இந்தக் கடற்படை எழுச்சியானது இந்தியா ஒரு எரி மலையாய்க் குமுறிக் கொண்டிருக்கிறது என்பதனை நிரூபித்தது. 1946இல் உருவான ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியின் பிரதிபலிப்பாக இந்தியா முழுவதும் பல நகரங்களில் மக்கள் பேரணிகளும், தொழிலாளர் களின் வேலை நிறுத்தங்களும் நடந்தன.

இதேகாலத்தில் அய்க்கிய மாகாணங்கள், பீகார், மலபார், தஞ்சாவூர், மேற்குப் பஞ்சாப், வங்காளம் ஆகிய பகுதிகளில் விவசாய இயக்கப் போராட்டங்கள் வீறுடன் நடந்தன.

தமிழகத்தின் கோவைப் பஞ்சாலைகளில் வீரஞ் செறிந்த போராட்டங்கள் கிளர்ந்து எழுந்தன. உரிமை கேட்டுப் போராடிய தொழிலாளர்கள் மீது °டேனி° மில் வாசலில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பெண்கள் உட்பட 6 பேர் மாண்டனர். 1946 சனவரியில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு, கோவை சின்னியம்பாளையத்தில் உழைப்பாளிகள் நால்வர் தூக்கிலிடப்பட்டனர்.

1946 திசம்பரில் பிரிட்டிஷ் அரசு, தமிழகக் கம் யூனிஸ்டுக்ள் மீது சதி வழக்குத் தொடுத்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாகாணத் தலைவர்கள் உள்ளிட்ட நூறு பேர் மீது இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது. அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரசார், சென்னை பொது ஒழுங்கு பாதுகாப்பு அவசரச் சட்டம் ஒன்றினைப் பிறப்பித்து, எவரையும் விசாரணையின்றிச் சிறையில் அடைக்கும் அதிகாரம் பெற்றனர்.

இதன்கீழ் ஈ.எம்.எஸ். நம்பூதிரி பாத், ஏ.கே. கோபாலன், என்.கே. கிருஷ்ணன், என். ராஜசேகர ரெட்டி, டி. நாகிரெட்டி போன்ற கம்யூனிஸ்டு தலைவர்களை வேலூர் சிறையில் அடைத்தனர். 1946 மே மாதம் நெல்லை விக்கிரமசிங்கபுரம் மில் தொழிலாளர் போராட்டத்தில் ஏ.நல்லசிவன் கைதானார்.

1945-1946-இல் நடைபெற்ற இந்த மகத்தான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில், உழைக்கும் மக்களுக்கான போராட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமான பங்காற்றி, போற்றுதலுக்குரிய தியாகங் களைச் செய்தது. அதன் வரலாற்றில் இந்த அத்தியாயம் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியதாகும். இந்த எழுச்சியில் காங்கிரசு ஏன் அரங்கத்திற்கு வர வில்லை? மாறாக இதனை ஒடுக்குவதில் துணை போனது ஏன்?

- தொடரும்

Pin It