இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்க பின்னணியில் இருந்து செயல்பட்டவர்கள் யார்? யார்? - இது ஒரு முக்கியமான கேள்வி. உயர்மட்ட பார்ப்பன அதிகாரிகள், அமெரிக்காவின் தீவிர ஆதரவாளர்களாக இந்தியாவுக்குள் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களே. இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் நிற்கிறார்கள். அவர்கள் யார்?

1. எம்.கே. நாராயணன் : இவர் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற அதிகார மிக்க பதவியில் இருப்பவர். ராஜீவ் காந்தி ஆட்சியில் உளவுத் துறை இயக்குனராக இருந்தவர். ஈழத் தமிழர் பிரச்சினையில் போராடும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக திரை மறைவில் இந்திய அரசு அதிகாரத்தையும், ராணுவத்தையும், இயங்க வைத்துக் கொண்டிருப்பவர்.

இந்திய கடற்பரப்பில், சிங்கள-இந்திய கப்பல் படைகளின் கூட்டு ரோந்து திட்டத்தை வலியுறுத்தியவர். அந்த முயற்சி, தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பால் தோல்வி அடைந்துவிட்டதால், இப்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளோடு இந்திய கப்பல் படை கூட்டுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்து விட்டார். அணுசக்தி ஒப்பந்தம் உருவாவதற்கு முன்பு - அமெரிக்கா இந்திய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று உருவானது. அதுவே இந்த கூட்டுப் பயிற்சிக்கு வழிவகுத்துள்ளது.

2. ரோனென் சென் : வங்காளப் பார்ப்பனரான இவர் அமெரிக்காவில் இப்போது இந்தியத் தூதராக இருக்கிறார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக அனைத்து சந்திப்புகளையும் ஒருங்கிணைத்தவர் இவர்தான். இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் தலைவெட்டப்பட்ட கோழிகளைப் போல் துடிக்கிறார்கள் என்று வாய்க் கொழுப்போடு இவர் பேசினார். அது இந்திய நாடாளு மன்றத்தில் கடும் புயலை உருவாக்கியது. பிறகு அவ்வாறு பேசவில்லை என்று மறுத்தார். எதிர்ப்பு கடுமையாகவே மன்னிப்புக் கேட்டார்.

3. ஷியாம் சரண் : பிரதமரின் சிறப்பு தூதர் என்ற பொறுப்பில் இருக்கும் இவரும் ஒரு பார்ப்பனர். அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து, இந்த ஒப்பந்தத்துக்கு இவர் தான் ஆதரவு திரட்டியவர்.

4. அனில்ககோட்கர் : இவர் அணுசக்தித் துறையில் தலைவராக இருக்கிறார். இவரது சம்மதம் இல்லாமல் எந்த அணுசக்தி ஒப்பந்தமும் நிறைவேற முடியாது என்று கூறப்படுகிறது. ஒப்பந்தத்தில் - அவ்வப்போது பல சந்தேகங்களை இவர் எழுப்பியது உண்மைதான் என்றாலும், ஒப்பந்தம் உருவாக பச்சைக்கொடி காட்டி விட்டார்.

அணுசக்தித் துறையில் பணியாற்றிய பல விஞ்ஞானிகள், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து கருத்துகளை வெளியிட்டது அனில் ககோட்கருக்கு கடும் நெருக்கடியை உருவாக்கியது. குறிப்பாக பாபா அணுசக்தி மய்யத்தின் முன்னாள் இயக்குனர் மற்றும் அணு உலைப் பாதுகாப்பு ஆலோசகரான ஏ.என். பிரசாத், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஏ. கோபாலகிருட்டிணன் உட்பட பல விஞ்ஞானிகள், இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

5. சிவசங்கர் மேனன் : வெளியுறவுத் துறை செயலாளராக இருக்கும் இவர் - இந்த ஒப்பந்தம் உருவாவதில் சில தடைகள் நேர்ந்தபோது கடைசி நேரத்தில் போய் கலந்து கொண்டு, சிக்கல்களைத் தீர்த்து வைத்தார். இவர் ஏற்கனவே அணுசக்தித் துறையில் பணிபுரிந்த அதிகாரி.

6. எஸ். ஜெய்சங்கர் : இவர் தற்போது சிங்கப்பூரில் இந்தியத் தூதராக இருப்பவர். தீவிர அமெரிக்க ஆதரவாளர். இவரது தலைமையில் தனி அணியே ஒப்பந்தம் உருவாக்குவதில் மூளையாக செயல்பட்டது. ஒப்பந்தத்துக்கு எழுத்து வடிவம் தந்தது, இவரும் இவரது அணியுமேயாகும்.

இப்படி - இந்தியாவின் தரப்பில் பார்ப்பன அதிகாரிகளும், அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யத் துடிக்கும் அதிகாரிகளும், ஒப்பந்தத்தை உருவாக்கி விட்டார்கள்.

இந்தியா - இதுவரை பின்பற்றி வந்ததாகக் கூறப்பட்ட அணிசேராக் கொள்கைகளை புதைகுழிக்கு அனுப்பிவிட்டு, அமெரிக்க ஆதரவு நாடாக இந்தியாவை மாற்றும், இந்த ஒப்பந்தத்தில், மக்கள் பிரதிநிதிகள் பங்களிப்பே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்டங்கள், கொள்கைகளை வகுக்கும் உரிமைகளை பார்ப்பன அதிகார வர்க்கமும் நிர்வாகமும், தங்களது கைகளில் எடுத்துக் கொண்டு விட்டன. மற்றொரு பக்கம் மக்கள் மன்றங்கள் இயற்றக் கூடிய மக்கள் உரிமைக்கான சட்டங்களை முடக்கிப் போடும் உரிமைகளை உயர்நீதிமன்றங்களும், உச்ச நீதி மன்றங்களும், கைப்பற்றிக் கொண்டு விட்டன. பார்ப்பன உயர்சாதி நீதிபதிகள் தான் - இந்த நீதிமன்றங்களில் கோலோச்சுகிறவர்கள்.

சர்வதேச ஒப்பந்தம் ஒன்றை பார்ப்பன அதிகாரிகளே உருவாக்குவற்கு, இந்திய அரசியல் சட்டத்தில், விதிகளே இல்லை என்றும், அப்படி உருவாக்கப்படுகிற ஒப்பந்தங்கள், அரசியல் சட்டப்படி செல்லத் தக்கவையே அல்ல என்றும், உச்சநீதிமன்றத்தின் மூன்று மூத்த நீதிபதிகள் இணைந்து அறிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகளான வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.பி.சாவந்த், எச். சுரேஷ் ஆகிய மூவரும் இணைந்து வெளியிட்டுள்ள விரிவான அதிர்ச்சியான அறிக்கை ‘இந்து’ நாளேட்டில் (செப்.13, 2007) வெளிவந்துள்ளது.

“வெளிநாட்டுடனோ அல்லது வெளிநாட்டிலுள்ள ஒரு அமைப்பிடமோ, நாட்டைக் கட்டுப்படுத்தக்கூடிய எந்த ஒரு ஒப்பந்தத்தையும் செய்து கொள்வதற்கு, நிர்வாக அமைப்புக்கு சட்டரீதியாக அதிகாரம் கிடையாது. அப்படி உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் - நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டால்தான் அது சட்டப்படி செல்லத்தக்கதாகும். நிர்வாகத்திலுள்ள அதிகாரிகளுக்கு, இப்படிப்பட்ட ஒப்பந்தங்களை உருவாக்கும் உரிமைகளை அரசுகள் வழங்குவதற்கும் இந்திய அரசியலமைப்பில், உரிமை வழங்கப்படவில்லை” என்று நீதிபதிகள், அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளதோடு, சட்டப் பிரிவுகளையும், அதற்கான விளக்கங்களையும், எடுத்துக்காட்டியுள்ளனர். நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ள முக்கிய கருத்துகள் :

அரசியல் சட்டத்தின் 253 ஆவது பிரிவு வெளிநாடுகளுடன், ஒப்பந்தம், உடன்பாடுகளை உருவாக்கும் உரிமையை நாடாளுமன்றத்துக்கு மட்டுமே, குறிப்பாக வழங்கியிருக்கிறது. எனவே சர்வதேச அளவில் இந்தியா செய்து கொள்ளும் உடன்பாடுகள், ஒப்பந்தங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும்போதுதான் சட்டமாக முடியும்.

மத்திய அரசுக்கான அதிகாரங்கள் பற்றிய பட்டியல் தொகுப்பில் - 6 ஆவது பிரிவு, அணுசக்தி மற்றம் கனிம வளங்கள் உற்பத்தித் தொடர்பான பிரச்சினைகள், நாடாளுமன்றச் சட்டத்தின் மூலமே நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறுகிறது. அதே பட்டியலில் இடம் பெற்றுள்ள 14 ஆவது பிரிவு வெளிநாடுகளுடன் ஒப்பந்தம், உடன்படிக்கை செய்து கொண்டாலும், அதன் பிறகு நாடாளுமன்றத்தின் வழியாக சட்டமாக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது” என்று நீதிபதிகள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அமெரிக்காவில் ஏற்கனவே அமுலிலுள்ள அணுசக்தி தொடர்பான சட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் அமெரிக்கா, இந்தச் சட்டங்களில் கொண்டு வரும் திருத்தங்கள் அடிப்படையில்தான், அணுசக்தி ஒப்பந்தத்தை அமுல்படுத்த முடியும் என்று, அணுசக்தி ஒப்பந்தத்தின் பிரிவுகள் கூறுகின்றன. இதை நீதிபதிகள் எடுத்துக்காட்டி ஒரு கேள்வியை முன் வைத்துள்ளனர்.

அமெரிக்கா, அண்மையில் தனது நாடாளுமன்றத்தில் (அமெரிக்கன் காங்கிரஸ்) கொண்டு வந்துள்ள ஹைடு சட்டம் உட்பட தனது உள்நாட்டு அணுசக்தி தொடர்பான சட்டங்களில் என்ன திருத்தங்கள் கொண்டு வரப்போகிறது என்பது பற்றி தெரிவதற்கு முன்பாகவே, இந்த ஒப்பந்தத்தை இந்தியா ஏற்கலாமா, என்பதே நீதிபதிகள் எழுப்பியுள்ள கேள்வி.

இந்திய அரசியல் சட்டத்திலேயே வழங்கப்படாத உரிமைகளை - பார்ப்பன அதிகார வர்க்கம் தனது கைகளில் எடுத்துக் கொண்டு செயல்படுகிறது. ஆட்சியிலே அமர்ந்திருக்கும் மக்கள் பிரதிநிதிகள் இதற்கு ஒப்புதல் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இங்கே ‘ஜனநாயகம்’ என்ற பெயரில் ‘பார்ப்பன நாயகம்’ தான் நடந்து கொண்டிருக்கிறது என்பதையே இது உறுதிப்படுத்துகிறது.

மன்னர்கள் சத்திரியர்களாக இருந்தாலும், அவர்களுக்கு தலைமை தாங்கி கட்டளைப் பிறப்பிக்கும் உரிமை பார்ப்பனர்களுக்கே உண்டு என்ற ‘மனுதர்மம்’ தான், இப்போது வேறு வடிவத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டுக்குரிய கடல்பகுதியில் அமெரிக்காவும், ஜப்பானும், ஆஸ்திரேலியாவும், கூட்டுப் பயிற்சி நடத்தும் என்று முடிவு எடுக்கும் அதிகாரம் இந்தியப் பார்ப்பனர்களுக்கு எப்படி வந்தது?

தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் கருத்துகளை கேட்டு, அவர்கள் விவாதம் செய்யும் உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை தமிழ்நாட்டு மக்கள் மீது திணிக்கக் கூடிய உரிமை, பார்ப்பனர்களுக்கு உண்டா?

மரபுசாரா மின் உற்பத்திகளில் முன்னணியில் நிற்கும் தமிழ்நாட்டில் அந்த மின்உற்பத்திக்கு மாறாக, சுற்றுச் சூழலைக் கெடுத்து, மனித சமூகத்துக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அணுசக்தி மின்சாரத்தையே தயாரிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை தமிழ்நாட்டின் மீது ஏன் திணிக்க வேண்டும்? இதைத் தமிழர்கள் ஏன் ஏற்க வேண்டும்?

தமிழர்களை தனிமைப்படுத்தும் - இந்திய தேசிய ஆட்சியை தமிழர்கள் மட்டும் ஏற்க வேண்டுமா?

ஆட்சி அதிகாரத்தில் உள்ள பார்ப்பன-பனியா கும்பலை நோக்கி தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாத மக்கள் எழுப்ப வேண்டிய கேள்விகள் இவை!

(நிறைவு)