அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். முதலான இந்திய ஆட்சிப் பணி தேர்வுகள் சவகர்லால் நேரு தலைமை அமைச்சராக இருந்தகாலம் வரையில் ஆங்கில மொழியில் மட்டுமே நடைபெற்றன. 1964இல் நேருவின் இறப்புக்குப்பின் பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி, அய்.ஏ.எஸ். தேர்வுகளை இந்தியில் நடத்த வேண்டும் என்று கூறினார். இதற்குத் தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அதனால் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வுகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் நடத்தப்படும் என்று நடுவண் அரசு அறிவித்தது.

அப்போது காமராசர் அகில இந்தியக் காங்கிரசுக் கட்சியின் தலைவராக இருந்தார். 1965 பிப்பிரவரி 25 அன்று தில்லியில், காமராசர் தலைமையில் நடைபெற்ற காங்கிரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ‘இந்தியஆட்சிப் பணிக்கான தேர்வுகள் ஆங்கிலம், இந்தி தவிர, அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர் மானத்தின் வரைவு குசராத்தின் மெரார்ஜி தேசாய், கர்நாடகத்தின் நிஜலிங்கப்பா, தமிழ்நாட்டின் சி. சுப்பிரமணியம்  போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்டது’ என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

“மத்தியத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் ஆங்கிலம், இந்தி தவிர, மற்ற பிராந்திய மொழி களில் நடத்தினால்தான், இந்தி பேசாத மக் களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு ஒரு முடிவு கட்ட முடியும்” என்று அந்தக் கூட்டத்தில் காமராசர் வலியுறுத்தினார்.

அதையடுத்து, 1967இல் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, நாடாளுமன்றத்தில், ஆங்கிலம், இந்தி தவிர, எட்டாவது அட்டவணை யில் உள்ள அனைத்து மொழிகளிலும் இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட வேண் டும் என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதன்மீது நடுவண் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதன்பின், 1974இல் ஆட்சிப்பணித் தேர்வு தொடர்பாகப் பரிந்துரைகள் வழங்க டி.எஸ். கோத்தாரி தலைமையில் ஒரு குழுவை நடுவண் அரசு அமைத்தது. 1976இல் கோத்தாரி குழு தன் அறிக்கையை, அரசிடம் அளித்தது. கோத் தாரி குழு, ஆட்சிப்பணி தேர்வுகளை ஆங்கிலம், இந்தி தவிர, எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் எழுதலாம் என்று பரிந்துரைத்தது.

1979இல் நடுவண் அரசு கோத்தாரி குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஆட்சிப்பணி தேர்வில் மாற்றம் கொண்டு வந்தது. தற்போது நடைமுறையில் உள்ள முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று மூன்று கட்டங்களாகத் தேர்வு கள் நடத்தப்படும் முறை செயல்பாட்டுக்கு வந்தது. எனவே 1979 முதல் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் விரும்பினால் முதன்மைத் தேர்வை தமிழில் எழுதும் வாய்ப்பு உருவானது.

ஆனால் 2011 முதல் முதல்நிலைத் தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டது. இதில் வினாக்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே உள்ளன. இது இந்தி பேசும் இளைஞர்களுக்கு ஆக்கம் சேர்ப்பதாகும். ஆட்சிப்பணித் தேர்வுகள் அனைத்தும் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் நடத்தப் படுவதே, பல்வேறு தேசிய மொழிகளையும் அம்மொழி பேசும் மக்களையும் சமமாக நடத்துவதற்கான உண் மையான வழிமுறையாக விளங்கும்.

Pin It