இந்தியாவின் தென்னகத்தையும் வடக்கையும் அரசியல் நிலையில் வேறுபடுத்தும் காரணிகள் எவை என்பது பற்றி அறிஞர்களின் கருத்தாடல் அண்மையில் நடந்தது (The Hindu, June 2, 2023).

தென்னகத்தின் மொழி அரசியல், மாநிலக் கட்சிகள், அவை மாநில அரசுகளுக்கு அதிக உரிமைகள் கோருவதும், பல மொழிகள் பேசப்படுவதும் பண்பாடுகளும் சாதியமைப்புக்கு எதிராகவும், பார்ப்பனர்களுக்கு எதிராகவும் நிலவுதல் ஆகியவற்றுடன் சாதி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு இயக்கங்கள் - இவற்றால் உருவெடுத்துள்ள புதிய கலாச்சாரம் ஆகியவையும் காரணங்களாகும். மேலும் பொருளியல் நிலையில் மேம்பட்டிருப்பது, கல்விக்கு அதிக முதலீடு செய்வது, சமூக மேம்பாட்டுக்கான புதிய இயக்கங்கள் செயல்படுவது, தொழில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது முதலான பிற காரணங்களும் ஆகும். இவற்றுடன் ஒப்பிட தென்னகத்தைவிட வட மாநிலங்கள் பல நிலைகளில் பின்தங்கியுள்ளன என்பவையும் தென்னகத்தையும் வடக்கையும் வேறுபடுத்திடும் காரணங்கள் ஆகும்.

மொழிசார் இயக்கங்கள்

இதேபோன்று “வடக்கு மாறுதல் விரும்பாத பிற்போக்கினதாகவும், மூடநம்பிக்கையில் மூழ்கியும், கல்வியில் பின் தங்கியும் உள்ளது. அதே வேளையில் தென்னகம் முற்போக் கானதாகவும், பகுத்தறிவிலும் கல்வியிலும் முன்னேறியும் உள்ளது” என்று டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் 1956-இல் எடுத்துரைத்துள்ளார். மேலும் அவர் சவகர்லால் நேரு பார்ப்பனியச் சடங்குகளைக் கடைப்பிடிப்பதைக் கண்டித்துள்ளார். இராசேந்திர பிரசாத் வாரணாசியில் பார்ப்பனர்களை வழிபடுவதற்கு அவர்களின் பாதங்களைக் கழுவி, அந்தக் கழுவிய நீரைப் பருகியதையும் மேதை அம்பேத்கர் குறை கூறியுள்ளார். மேலும், “இந்தத் தலைவர்களின் ‘வடக்கர் ஆட்சியை’ எப்படித் தென்னகத்தில் உள்ளவர்கள் ஏற்பர்?” எனவும் வினவியுள்ளார். வடக்கில் உள்ளவர்கள் இந்துத்துவக் கடும்போக்கை ஊட்டி வளர்ப்பதையும் தென்னகப் பகுதியில் பா.ச.க. நுழைவதைத் தடுப்பதையும் காண்கையில் மேதை அம்பேத்கர் கூறியது இன்றும் பொருந்துவதாக உள்ளது. தென்னகம் பா.ச.க. வெல்ல முடியாதக் கோட்டையாக இப்போதும் திகழ்வது சிக்கலான வினாவாக உள்ளது.

இந்த நிலையைப் புரிந்து கொள்வதற்கு இவ்விரு நிலப்பகுதிகளை வேறுபடுத்தும் மிக முதன்மையான வரலாற்றுக் காரணிகளைக் காணல் வேண்டும். தென்னகத்தில் இயங்கிய மொழிவழித் தேசிய இன இயக்கங்கள் இந்தியாவைத் தேசிய இனங்களின் கூட்டமைப்பாகக் கண்டனர். அதே வேளையில் வடவர்களால் இந்தி-இந்து-இந்துஸ்தான் என்ற முழக்கத்தினால் ஒரே படித்தான தேசமாக இந்தியாவைப் புரிந்து கொண்டனர். ஆனால் தென்னகத்தார் இந்தியாவை மொழித் தேசியங்களின் ஒரு கூட்டமைப்பாகக் காண விழைந்தனர். தென்னகத்தில் வெளியிடப்பட்ட ஏடுகள், நூல்கள், பண்பாடு, மொழியின் தனித்தன்மையைப் பொது மக்களிடையே பரப்பின. மேலும் திரைப்படங்கள் குறிப்பாகத் தமிழில் எம்.ஜி. இராமச்சந்திரன், தெலுங்கில் என்.டி. இராமராவ், கன்னடத்தில் இராஜ்குமார் ஆகியோர் நடித்தவை இக்கருத்தை உருவாக்கிட உதவின.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னகத்தில் வேறுபட்ட மொழி பேசும் மக்கள் தங்களைத் தனித் தேசிய இனமாகக் கருதுமாறு கோரினர். அய்ரோப்பிய நாடுகளில் புரட்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில் மொழி அடிப்படையிலும் அரசியல்நோக்கு அடிப்படையிலும் இறையாண்மையுள்ள தனித்தனி தேசங்கள் அமைந்ததைக் கண்டு ஊக்கம் பெற்றத் தென்னகத் தலைவர்கள் அதேபோன்று மொழி வழித் தேசிய இனக் குடியரசாகத் தங்களையும் கருதினர்.

அப்போதைய சென்னை மாகாணத்தில் இருந்த தலைவர்கள் இன, மத அடையாளங்களைக் காட்டிலும் நெகிழ்வுத் தன்மையுள்ள மதச்சார்பற்ற, மொழி அடிப்படை யிலான அடையாளத்தைத் திட்டமிட்டு வளர்த்தனர். தென்னகத்தில் இடைநிலை மக்களிடையே இருந்த சிந்தனையாளர்கள் மொழிசார் தேசியத்திற்கும் குடியாட்சிக்கும் இடையே இருந்த முக்கியமானப் பிணைப்பை அறிந்தேற்றிருந்தனர்.

ஜனநாயகம் செம்மையாகச் செயல்படுவதற்கு கல்வித் துறை, நிர்வாகத் துறை, நீதித்துறை ஆகியவை மக்களின் மொழியில் நடத்தப்பட்டாக வேண்டும். இதுவே மக்களிடையே சமத்துவத்தையும் நீதியையும் சாத்தியப்படுத்தும் என அச்சிந்தனையாளர்கள் உணர்ந்திருந்தனர். மேலும் இந்தப் புதிய நடவடிக்கைகளின் தேவைக்கு ஏற்ற வகையில் மக்களின் மொழிகள் போதிய நவீனத்துவம் பெறல் வேண்டும். எப்படி இருப்பினும் இந்தியா தேசிய இனக் குடியரசுகளின் கூட்டமைப்பாக மாறும்போது இவை சாத்தியமாகும் என அவர்கள் நம்பினர். அப்படி இல்லாமல் இந்தியா ஒரே படித்தான ஒற்றைத் தேசமாக இருக்கக் கட்டாயப்படுத்தினால் இம்மொழிகள் அழிக்கப்பட்டு விடும் எனவும் கருதினர். தென்னகத்தில் உள்ள மொழிகளின் நிலையை மேலோட்டமாகப் பார்த்தால் கூட தங்கள் மொழிகள் அழிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் நியாய மானது என இன்றுள்ள நிலையில் தெளிவாக அறியலாம்.pattabi sitaramaiah and konda venkadapayyaஆந்திர மகாசபைத் தலைவர்களான கொண்டா வெங்கடப்பய்யாவும் பட்டாபி சீத்தாராமய்யாவும் 1913­இலேயே ஒற்றை இந்தியா உருவாக்கத்திற்கு எதிராக காங்கிரசுத் தலைமையை எச்சரித்தனர். மக்களில் பெரும்பான்மையினர் இந்து மதத்தினர் என்ற அடிப்படையைக் கொண்டால், அது தவறான செயலாகி விடும் என்றும் எச்சரித்தனர்.

பின்னர், தெலுங்கரான புச்சலப்பள்ளி சுந்தரய்யா, தமிழர்களான அண்ணாதுரையும் பெரியாரும், மலையாளரான இ.எம்.எஸ். நம்பூதிரிபாத் அதன் பின்னர் கன்னடரான வி.கே. கோகக் முதலானோரும் மற்றவர்களும் உண்மையான கூட்டமைப்பாக இந்தியாவை உருவாக்க வேண்டியதன் முதன்மையை வலியுறுத்தி எழுதியும் பேசியும் உள்ளனர்.

வலுவான இணைப்பிற்கானத் தேவை

இந்தியா ஒரு தேசமன்று; மாறாக அய்ரோப்பாவைப் போன்று பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு துணைக் கண்டம் என்பதைக் குறிப்பாக ஆந்திர மகாசபைத் தலைவைர்கள் வாதிட்டுள்ளனர். ஒற்றை இந்தியா என்பது ஜனநாயகத்திற்குப் பொருந்தாத ஒன்றாக அமையும் என்றும் இறைமையுள்ள குடிமக்கள் தேசிய அரசின் முடிவுகளை மேற்கொள்ளும் செயல்முறைகளில் துடிப்பாகப் பங்கேற்பதில் தான் ஜனநாயகம் தழைக்கும் என்றும் வாதிட்டுள்ளனர். இந்தியத் துணைக் கண்டம் முழுமைக்கும் ஒரே மொழி என்பது மேற்சுட்டிய மக்கள் பங்கேற்கும் நடைமுறைக்குத் துணைபுரிய இயலாது என அவர்கள் வாதிட்டுள்ளனர். மேலும் வலுவான தேசத்திற்கு மக்களிடையே வலுவானப் பிணைப்புத் தேவை. ஆனால் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள மக்கள் பற்பல மொழிகளைப் பேசுபவர்களாக உள்ளனர். இம்மக்களை ஒரே தேசச் சமூகமாகப் பிணைத்திட எந்த ஒரு மொழியாலும் முடியாது. இந்தி இந்தியாவைச் சேர்த்து வைக்கும் என்ற பிழையானக் கருத்தே இன்றும் தொடர்கிறது. இந்தி பேசாத மக்களை அவர்கள் அம்மொழியைப் பேசாத நிலையிலும் ஒன்றிணைக்க இந்தி மொழியால் முடியும் எனும் முற்றிலும் தவறான புரிதல் தொடர்ந்து வெளிப்படுகிறது.

பிரெஞ்சு மொழி பேசும் மக்களை அம்மொழியால் ஒன்றிணைக்க முடிகிறது என்பதை அறிவோம்; அதேபோல் தமிழ்மொழியில் அன்றாடம் பேசுபவர்களைத் தமிழ்மொழி யால் ஒன்றிணைக்க முடிகிறது. கேரளர்களையும் பஞ்சாபியர்களையும் அல்லது இந்திமொழி அறியாத வங்காளியரையும் இந்தி மொழியால் ஒன்றிணைக்க இயலும் என்பது சாத்தியமற்ற ஒன்று.

சுதந்திரத்திற்குப் பின் காங்கிரசுக் கட்சி தென்னக மக்களுடன் இணக்கமான ஒரு தீர்வாக, அரசமைப்புச் சட்டத்தில் வரம்புப்படுத்தப்பட்டுள்ள அதிகாரங்களுடன் கூடிய மொழிவழி மாநில அரசுகள் அமைத்திட அமைதி வழியில் உடன்பாடு காணப்பட்டது. ஆனாலும் ஆந்திர மகா சபை எதிர்பார்த்த தேசிய இனங்களின் உரிமைகளிலிருந்து அவை வெகு தொலைவில் உள்ளது. இந்துத்துவ வலதுசாரிகளின் குழுக்கள், கூட்டாட்சி என்ற கருத்தையே கடுமையாக எதிர்க்கின்றனர். அவர்கள் கனவு கண்டுகொண்டுள்ள ஒற்றை இந்து தேசம் என்ற நோக்கத்திற்குக் கூட்டமைப்பு என்பது முட்டுக்கட்டையாகி விடும் என்று எதிர்க்கின்றனர்.

இந்திய அரசு தென்னகத்தின் தேசிய இனங்களை வெற்றி கொண்டுள்ள போதிலும் தேர்தல் வேளையில் தென்னிந்திய தேசிய இனங்களின் மக்கள் இந்திய ஆட்சிகளுக்குப் பெரும் அச்சம் தருவோராக உள்ளனர்.

- என்.மனோகர் ரெட்டி

(The Hindu நாளேட்டில் 26.6.23 அன்று வெளிவந்த கட்டுரை. தமிழில் : சா. குப்பன். இக்கட்டுரையாளர் என். மனோகர் ரெட்டி, அய்தராபாத்தில் உள்ள NALSAR தேசியச் சட்டப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக உள்ளவர்)

Pin It