vallasa-vallavan 350(1938 சூன் மாதம் 1, 2ஆம் நாள்களில் விடுதலையில் இந்தி கட்டாயப் பாட மர்மம் என்றத் தலைப்பில் இரண்டு தலையங்கள் எழுதப்பட்டன. இரண்டாவது நாள் வெளியான தலையங்கம் இன்றைக்கும் (மோடி அரசு இந்தியைத் திணிக்கும் சூழலில்) பொருத்தப்பாடு உடையதாக இருப்பதால் அத்தலையங்கத்தை அப்படியே வெளியிடுகிறோம்)

இந்தி கட்டாயப் பாட மர்மம் : 2

தேசியப் பொது மொழியொன்று இல்லாவிட்டால் தேச பக்தி வளராதா? ஒற்றுமை நிலவாதா? தேசம் முன்னேற்றம் அடையாதா? என முதலில் கவனிப்போம்.

ஒரே பாஷை பேசம் நாடு உலகத்திலேயே இல்லை. சுலபமான போக்குவரத்து வசதிகள் ஏற்பட்டு விட்டதினாலும், வயிற்றுப் பிழைப்புக்காக பரதேசம் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டதினாலும் ஒரு சிறு நாட்டிலும்கூட பல மொழி பேசுவோர் உயிர் வாழும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

பூரண சுயராஜ் யம் பெற்ற ஐரோப்பிய நாடுகளில் பல மொழிகள் சர்க்கார் பாஷையாக இருந்து வருவதை காஞ்சி மகாநாட்டுத் தலைவர் ஸர். கே.வி. ரெட்டி நாயுடு அவர்களும் சோழவந்தான் மகாநாட்டுத் தலைவர் தோழர் தளவாய் குமாரசாமி முதலியாரவர்களும் தெள்ளத் தெளிய விளக்கிக் காட்டியுள்ளார்கள்.

சோழ வந்தான் மகாநாட்டில் தளவாய் முதலியார் அவர்கள் எடுத்துக்காட்டிய உதாரணங்கள் பொது பாஷைப் புரளியின் யோக்கியதைகளை வெட்ட வெளிச்சமாக்கக் கூடியவைகளாக இருக்கின்றன.

தோசைப் புரட்டான சீர்த்திருத்தங்கள் திடும்பிரவேசமாய்ச் செய்யப்படும் ருஷிய நாட்டிலே - பண்டித ஜவஹர்லாலின் கனவுப் பொன்னுலகத்திலே - 18 பாஷைகள் சர்க்கார் பாஷை களாக இருந்து வருவதாயும் அவைகளை யொழித்து ருஷிய மக்களுக்கெல்லாம் பொதுவான ஒருமொழியை ஏற்படுத்த சோவியத் சர்க்கார் முயற்சி செய்யவில்லை யென்றும், தோழர் தளவாய் முதலியார் கூறுகிறார்.

ஒரு பொதுமொழி பேசாது 18 மொழிகள் பேசும் காரணத் தால் ருஷியர்களின் தேச பக்தி குன்றிவிட்டதா? ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்பட்டுவிட்டதா? ருஷிய நாடு முன்னேறவில்லையா?

முழு முட்டாள்தனம்

மற்றும் மதுரை ஜில்லாவைவிடச் சிறிய நாடான சுவிட்சர்லாந்து நாட்டில் இதுவரை இத்தாலி, ஜெர்மனி, பிரெஞ்சு ஆகிய மூன்று மொழி கள் சர்க்காரால் ஒப்புக்கொள் ளப்பட்ட மொழிகளாக இருந்தன வென்றும், இப்பொழுது ஒரு மைனாரிட்டி சமூகத்தின் விருத்தி யடையாத சமானிய மொழியும் சர்க்காரால் ஒப்புக்கொள்ளப்பட்டு அம்மொழியில் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதென்றும், தோழர் தளவாய் முதலியார் சொல்லுகிறார்.

தேச மக்களுக்கெல்லாம் பொதுவான ஒரு மொழியில்லாக் குறைவினால் சுவிட்சர் லாந்து மக்களுக்குத் தேசாபிமானம் இல்லாமல் ஆக விடவில்லை. ஒற்றுமைக்குறைவு ஏற்படவில்லை; நாடு பிற்போக்கடையவுமில்லை. ஆகவே 35 கோடி மக்க ளைக் கொண்ட இந்தியாவுக்கு - பல விருத்தியடைந்த பாஷைகள் பேசப்பட்டுவரும் இந்தியாவுக்கு - ஒரு பொது மொழி இன்றியமையாதது என்று கூறுவது முழு முட்டாள்தனமாகும்.

அவ்வாறு கூறுவது முட்டாளதன மென பாஷை விஷயமாக அபிப்பிராயம் கூறவல்லார் தக்க ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டியும் இலட்சியம் செய்யாது “நான் கூறுவதே சரி”யென அசட்டுப் பிடி வாதம் செய்வது எவ்வளவு அக்கிரமமானது! அநீதி யானது! ஜனநாயகத்துவத்துக்கு முரணானது! என்ப தைத் தமிழ் மக்களே முடிவு  செய்து கொள்ளட்டும்.

ஹிந்தி பெரும்பாலார் பேசும் மொழியா?

அப்பால், ஹிந்தி இந்திய மக்கள் பெரும்பாலரால் பேசப்படும் மொழி தானா என்பதை ஆராய்வோம். பல பாஷைகளில் பாண்டித்தியம் பெற்ற நிபுணரான சுவாமி வேதாசலம் அவர்கள் “ஹிந்தி பெரும்பாலரால் பேசப்படும் மொழி” என்ற கட்டுக்கதை பொய்யெனக் காட்டியும் உள்ளார். ஒருகால் அவர் தமிழ் பக்தர் என்ற காரணத்தினால் அவரது அபிப்பிராயத்தை ஒப்புக் கொள்ள ஆச்சாரியார் கோஷ்டியார் தயங்கக்கூடும். ஆனால் அமல்யா சாமிகள் அபிப்பிராயத்தை ஆச் சாரியார் கோஷ்டியாருக்கு அலக்ஷ்யம் செய்ய முடியுமா? “இந்தி பேசுவோர் தொகை அதிகமென்று சொல்லப்படுகிறது.

டர்பங்கா, டில்லி, லக்ஷ்மணபுரி, மீரட், ஆக்ரா ஆகிய ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக ஹிந்தி பேசப்படுகிறது. தற்போதைய ஹிந்திக் கும் அம்மொழிகளுக்கும் சம்பந்தமே காணோம்” என “பங்கீய மகாகோச” ஆசிரியர் பண்டித அமில்யா சரணவித்யா பூஷணர் கூறுகிறாரே! “பதினொரு கோடி மக்கள் ஹிந்தி பேசுகிறார்கள் என்பது ஆதாரமற்ற பேச்சு, பீஹாரில் பேசப்படும் ஹிந்தி வேறு; ராஜ புதனத்தில் பேசப்படும் ஹிந்தி வேறு. ஒரு தேசத்தின் பொது பாஷையென்றால்  அதைக் கட்டாயம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

எந்த நாட்டிலும் இவ்விதம் நடந்ததில்லை” என, கல்கத்தா ஆனந்த பஜார் பத்திரிகையின் உதவி ஆசிரியரான தோழர் பிரபுல்லா குமார சர்க்கார் சொல்லுகிறாரே! இவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லவே! தமிழ் அபிமானிகளுமல்லவே! இவ்விருவரும் தேசபக்தர்கள் அல்ல என்றும், இந்திய முன்னேற்றத்தில் ஆர்வமுடையவர் களல்ல என்றும் கனம் ஆச்சாரியாருக்கு நெஞ்சில் கைவைத்துக் கூறமுடியுமா? இவ்விருவரும் “அறிவிலி கள்” என அலக்ஷ்யம் செய்யும் அளவுக்கு கனம் ஆச்சாரியார் அவ்வளவு பெரிய மேதாவியா! ஆகவே, ‘ஹிந்தியே பெரும்பாலோர் பேசும் பாஷை’யென்பதும் ஒரு சுயநலம் கொண்ட கட்டுக்கதையே.

பொதுமொழி வகுக்கும் பொறுப்பு யாருக்கு?

கடைசியாகத் தேசியப் பொதுமொழியை நிர்ணயம் செய்யும் பொறுப்பு யாருக்கு என்பதையும், பொது மொழியை வகுக்கும் காலம் எது என்பதையும் அலசிப் பார்ப்போம்.

ஹிந்தி கட்டாயா பாடத்துக்குக் கூறப்படும் காரணங் களில் ஒன்று சமஷ்டி அரசியலுக்கு ஒரு பொது பாஷை அவசியம் என்பதாகும். ஆகவே சமஷ்டி ஏற்பட்ட பிறகு, சமஷ்டியில் சேரும் தேசங்களே பொதுமொழியை நிர்ணயம் செய்ய வேண்டும். இந்தியாவிலே நான்கு சக்திகள் இருப்பதாயும், எதிர்கால அரசியல் பொருளா தாரத் திட்டங்கள் எல்லாம் அந்நான்கு சக்திகளும் சேர்ந்தே வகுக்க வேண்டும் என்றும் லார்டு லோதியன் கூறுகிறார். லார்டு லோதியன் ஒரு பிரபல ராஜ்யதந்திரி. இந்திய நிலைமையை நன்குணர்ந்தவர்.

சமீபத்தில் இந்தியாவுக்கு விஜயம் செய்து இந்திய விஷயங்களை நேர்முகமாக உணர்ந்தவர். அரசியல் விஷயங்களில் காங்கிரஸ் தலைவர்கள் அவரை வட பாண்டித்தியம் பெற்றவர்கள் எனக் கூறமுடியாது. அவர் கூறிய நான்கு சக்திகள் எவை? இந்திய சம°தானங்கள் - பிரிட்டிஷ் சர்க்கார் - முஸ்லிம்லீக் - காங்கிரஸ் ஆகியவைகளே. அந்த நான்கில் சிறிய  ஸ்தாபனமாக இருந்தாலும் சரி - பிரம்மாண்டமான  ஸ்தாபனமாயிருந்தாலும் சரி - அதிக மெம்பர்களுடைய  ஸ்தாபனமாயிருந்தாலும் சரி - தியாகிகள் நிறைந்த ஸ்தாபனமாயிருந்தாலும் சரி - “மகாத்மாவை”ப் போல் நூறு “மகாத்மாக்களை” சர்வாதிகாரிகளாயுடைய  ஸ்தாபனமாயிருந்தாலும் சரி - காங்கிரசுக்குத் தனிமையாக ஒரு சிறு புல்லைக்கூட அசைக்க முடியாது என்பது உறுதி.

வகுப்புவாதியென் றும், பிற்போக்காளர் என்றும் அலக்ஷ்யம் செய்யப்பட்ட ஜனாப் ஜின்னாவின் வீட்டு வாயிலில் காங்கிரஸ் சர்வாதிகாரி காந்தியாரும், “ராஷ்டிரபதி” சுபாஷ் சந்திர போசும் வலியச் சென்று தவங்கிடப்பதே அதற்கு மறுக்க முடியாத ஆதாரம். மற்றும் சமஸ்தானங்களையும் பிரிட்டிஷ் சர்க்காரையும் கூட காங்கிரசு அலக்ஷ்யம் செய்ய முடியாது.

சமஷ்டியை “எதிர்ப்போம், தகர்ப் போம், கிழிப்போம்” என்றெல்லாம் ஜவஹர்லால் கம்பெனியார் ஆர்ப்பாட்டம் செய்வது வீண் மிரட்டலே. தேசிய பாஷை விஷயத்தில் சமஸ்தானங்கள், முஸ்லிம் லீக், பிரிட்டன் அபிப்பிராயங்களை அறியத் தேவை யில்லையென வைத்துக் கொண்டாலும், காங்கிர சாவது இவ்விஷயமாக ஒரு முடிவுக்கு வந்ததுண்டா?

சமீபத்தில் கூடிய “ஹரிபுரா” காங்கிரசில் தேசிய பாஷையைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசப்பட்ட துண்டா? காரியக் கமிட்டியாவது ஒரு முடிவு செய்த துண்டா? பம்பாயில் கூடிய பிரதம மந்திரிகள் மாநாட்டி லாவது தேசிய பாஷை விஷயம் யோசனை செய்யப் பட்ட துண்டா? காங்கிரசோ, காரியக் கமிட்டியோ, மற்ற காங்கிரஸ் மாகாணங்களோ தேசீய பாஷையைப் பற்றி சிந்தனை செய்யக்கூட முன்வராதிருக்கையில் ஒரு “தமிழன்” எனக் கூறிக்கொள்ளும் கனம் ஆச்சாரியார் அவசரப்பட்டு ஹிந்தியைத் தமிழர் தலையி லேற்ற முற்படக் காரணம் என்ன? ஹிந்தி கட்டாயப் பாட விஷயமாகத் தமது சகாக்களான மந்திரிகளிடமோ தம்மை ஆதரிக்கும் சட்டசபை பொம்மைகளிடமோ யோசித்ததுண்டா? கல்வி  மந்திரி கனம் டாக்டர் சுப்ப ராயனும், அசம்பிளி, கௌன்சில் மெம்பர்களான தோழர்கள் நாடிமுத்துப்பிள்ளை, நாச்சியப்ப கவுண்டர், டி.எ. ராமலிங்க செட்டியார், போன்றோரும் ஹிந்தி கட்டாயப்பாடத்தை ஆதரிக்கவில்லையெனப் பகிரங்க மாகக் கூறப்படுகிறதே.

அசட்டுப் பிடிவாதமேன்?

கனம் ஆச்சாரியார் தமக்கு வேண்டிய சிலரிடம் அந்தரங்க ஆலோசனை நடத்தியபோது திருச்சி நாஷனல் காலேஜ் பிரின்சிபால் தோழர் சாராநாதஅய்யங்கார் ஹிந்தி கட்டாய பாடத்தை எதிர்க்கவில்லையா? மாஜி சட்ட மந்திரி டி.ஆர். வெங்கட்ராம சாஸ்திரியார் ஹிந்தி கட்டாயப் பாடத்தைக் கண்டிப்பதை கனம் ஆச்சாரியார் அறியாரா? ஹிந்தி கட்டாய பாடத்தைக் கண்டித்து தோழர் சோமசுந்தர பாரதியார் அனுப்பிய பகிரங்கக் கடிதத்தை கனம் ஆச்சாரியார் அலக்ஷ்யம் செய்த தேன்? ஹிந்தி கட்டாய பாடத்துக்கு ஆதரவான காரணங் கள் கனம் ஆச்சாரியார் அபிப்பிராயப்படி இருக்கு மாயின் ஹிந்தியை எதிர்க்கும் இந்த அறிவாளிகளுடன் மரியாதைக்காகவாவது பேச்சுவார்த்தைகள் நடத்தி ஒரு முடிவுக்கு வர கனம் ஆச்சாரியார் ஏன் முயற்சித் திருக்கக் கூடாது?

ஜனநாயக  ஸ்தாபனமெனப்படும் காங்கிரசின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் கனம் ஆச்சாரியார், இம்மாதிரி தான்தோன்றித்தன மாய் தர்பார் நடத்தக் காரணமென்ன? அகந்தையா? அகம்பாவமா? அல்லது அதிகார வெறியா? நல்லார் வார்த்தைகளுக்குக் காது கொடாமல் தம்மிஷ்டப்படி நடந்தோர் கதியை கனம் ஆச்சாரியார் அறியாரா? அவரது அதிகார வெறிக்குக் காரணமாயிருக்கும் “பொது ஜன ஆதரவு” நிமிஷத்துக்கு நிமிஷம் மாறும் தன்மையது என அறியும் அளவுக்காவது கடுகத்தனை அரசியல் ஞானம் கனம் ஆச்சாரியாருக்கு இல்லாமலா போய்விட்டது?

அன்பர்  ஸ்டாலின் ஜெகதீசன் செய்யப்போகும் பிராணத் தியாகம் பாப்பா விளையொட்டென கனம் ஆச்சாரியார் எண்ணிக் கொண்டிருக்கிறாரா? ஜெகதீசன் பிராணத்தியாகம் - ஆத்மயக்ஞம் - ஹிந்தி கட்டாயப் பாடத்தால் நலம்பெற விரும்புவோர் துராக்கிரகத் தையே சாம்பலாக்கும் பெரும் தீயாக மூண்டுவிடக் கூடும் என ஆச்சாரியார் இனியாவது உணர்வாரா?

தமிழர்கள் எல்லாம் அறிவிலிகள், புழுக்கள், அப்பாவி கள் என கனம் ஆச்சாரியார் எண்ணிக்கொண்டிருக் கலாம். ஆனால் தமிழச்சாதி பச்சை ரத்தம் குடித்து வாழ்ந்த சாதியென்பதை கனம் ஆச்சாரியார் அறிய வேண்டும். தலைநாள் கணவன் இறந்த சோகத் தையும் மறந்து, தன் ஒரே இளவலை தலைசீவி பூ முடித்துப் புத்தாடையுடுத்தி, வேலையும் கொடுத்து, போர்க்களத்துக்கனுப்பிய வீரத்தாயின் சாதி தமிழ்ச் சாதி என்பதை கனம் ஆச்சாரியார் கருத்தில் பதிக்க வேண்டும். என் மகன் போரில் புறங்கண்டானாயின் அவனுக்குப் பாலூட்டிய இம்முலையைப் பறித்தெறி வேன் என வீறு கொண்டெழுந்த சுத்த வீரத்தாயின் மரபிற்றோன்றிய சாதி தமிழ்ச்சாதி என்பதை கனம் ஆச்சாரியார் உணரவேண்டும்.

தமிழர்களில் பெரும்பாலோர் பார்ப்பன பக்தர்களாயிருக்கலாம். ஆரிய விஷம் பருகி மயங்கிக் கிடக்கலாம். புராண பக்தர்களா யிருக்கலாம். தம் இனத்தாரை எதிரிகளுக்குக் காட்டிக் கொடுக்கும் விபீஷணர்களாக - அனுமார்களாக - சுக்ரீவர்களாக - அங்கதர்களாக இருக்கலாம். ஆனால் நான்கு கோடி தமிழர்களில் பத்துப் பேராவது சுத்தரத் -----

கொள்ளிக்கே உலகத்தையழிக்கும் சக்தியிருக்கையில், அந்தப் பத்துப்பேருக்கும் ஆச்சாரியார் ஆணவத்தைச் சுட்டெரிக்கும் ஆற்றல் இல்லாமலா போய்விடும்? சுத்தத் தமிழ் வீரர்கள் பத்துப் பேரல்ல - பல்லாயிரம் பேர் தமிழ்நாட்டில் இருப்பதாக வீரத்தி யாகி ஜெகதீசன் அவரது அகக்கண்ணால் காண்கிறார்; வாய்விட்டுச் சொல்லுகிறார். அந்தத் தீரன் வாய்மொழி பொய் மொழியாகாது! அந்த வீரன்சொல் வீண் சொல் ஆகாது! அந்த ஆண்மகன் வார்த்தை அவலமாகாது. ஆச்சாரியாரே! அறிவீர்! அறிவீர்!! அறிவீர்!!

(“விடுதலை”, 2-6-1938)

(தொடரும்)

Pin It