1871இல் இந்தியாவில் முதன்முறையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகைக் கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. 1931 வரை ஒரே நாள் இரவில் மட்டும் மக்கள் தொகைக் கணக்கு எடுக்கும் முறை இருந்தது. 1941 முதல் இது பல நாட்களுக்கு என விரிவுபடுத்தப்பட்டு மேலும் கூடுதலான விவரங்கள் திரட்டப்பட்டன. 1931ஆம் ஆண்டில் மட்டும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தியாவில் 15ஆவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2011 பிப்பிரவரி 9 முதல் 28 வரை நடத்தப்பட்டது.

மால்தசின் மக்கள் தொகைக் கோட்பாடு

மக்கள் தொகை குறித்த விவாதம் பிரான்சு நாட்டில் 1700களில் தொடங்கியது. அப்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மக்கள் தொகையைப் பெருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. 1756இல் மிராபென் என்பவர் ‘மனித குலத்தின் நண்பன்’ என்ற நூலை எழுதினார். அந்நூலில், மக்கள் தொகைப் பெருக்கத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரான்சின் மாபெரும் சிந்தனையாளரான ரூசோ 1762இல் எழுதிய ‘சமுதாய ஒப்பந்தம்’ என்ற நூலிலும் இதே கருத்தைக் கூறினார்.

ஆனால் 1760 முதல் எரிசக்தியைக் கொண்டு இயந்தி ரங்கள் மூலம் உற்பத்தி செய்யும் முதலாளிய உற்பத்தி முறை வளர்ந்து. அதனால் உற்பத்தித் திறனும் உற்பத்தியின் அளவும் பல மடங்கு உயர்ந்தன. இத்தகைய முதலாளிய உற்பத்தி முறை சமூக உற்பத்தியிலும், சமூக உறவுகளிலும் பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தியது. இங்கிலாந்தில் தொழில்புரட்சி முதலில் வேகமாக வளர்ந்தது. இந்தச் சூழலில் இங்கிலாந்து நாட்டவரான இராபர்ட் தாமசு மால்தஸ் என்பவர் 1798இல் ‘மக்கள் தொகைக் கோட்பாடு’ (An essay on the principle of population) என்ற நூலை வெளியிட்டார். இன்றளவும் முதலாளிய அறிஞர்களுக்கு இந்நூல் ஒரு கையேடாகத் திகழ்கிறது.

அந்நூலில், மால்தஸ், “மனிதர்களின் வாழ்க்கைத் தேவைகளுக்காக இயற்கையிலிருந்து உற்பத்தி செய்வதற் காக இருக்கும் வளத்தின் ஆற்றலை விட, மக்கள் தொகைப் பெருக்கத்தின் ஆற்றல் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. இப்போக்கைத் தடுக்காவிட்டால், மக்கள் தொகை, பெருக்கல் விகிதத்தில் அதிகமாகும். மனிதர்களின் தேவைக்கான உற்பத்தியோ கூட்டல் விகிதத்தில் மட்டுமே அதிகமாகும்”.

“மனித குலத்தின் இருத்தலுக்கு வறுமை இயல்பாய் இருக்க வேண்டிய ஒன்றாகும். வறுமை, மனிதன் உருவாக் கிய நிறுவனங்களால் விளைந்ததன்று. ஏழைகள் வறுமை யின் துன்பத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் வறுமை தான் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துகிறது.”

“உலகம் தோன்றிய நாள் முதலாய், மக்கள் தொகைப் பெருகுவதற்கும் குறைவதற்கு மான காரணிகள், இயற்கையின் நிலையான விதிகள் போல் செயல்பட்டு வருகின்றன. சில மனிதர்கள் வறுமையில் வாட வேண்டி யது தவிர்க்க முடியாததாகும். கடவுள் விரும்பினால் இந்த விதியை மாற்றலாம்” என்று அவர் எழுதியுள்ளார்.

1891ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக் கையில், மால்தஸ் எழுதியதை மேற்கோளாகக் காட்டி, இந்தி யாவின் வறுமைக்கு, மக்கள் தொகை அதிகமாக இருப்பதே காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியாவில் வறு மைக்கு, மூடத்தனமான பழக்க வழக்கங்களும், மாற்றத்தை விரும்பாத மனநிலையும் காரணங்கள் ஆகும் என்று ஆங்கி லேய ஆட்சி கூறியது. 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மக்கள் தொகையில் குறிப்பிடும்படியான பெருக்கம் இல்லை. பிரித்தானிய ஆட்சி இந்தியாவின் வளங்களையும், மக்கள் உழைப்பையும் சுரண்டியதே வறுமைக்கும், பஞ்சங்களுக் கும் உண்மையான காரணம் என்பதை மறைப்பதற்காக மக்கள் தொகைப் பெருக்கமே காரணம் என்று பொய்யாகப் பரப்புரை செய்யப்பட்டது.

மால்தஸ், ‘அரசியல் பொருளாதாரக் கோட்பாடுகள்’என்ற நூலையும் எழுதினார். மேல்தட்டு வர்க்கத்தினரின் நிலையான வாங்கும் சக்திதான் மூலதனத்தை வளர்க்கும். இவர்கள்தான் முதலீடு செய்யும் நிலையில் உள்ளனர். அதனால் தொழில்கள் பெருகும். அவர்களின் மூலதனத்தால்தான் ஏழைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மேல்தட்டு வர்க்கத்தினரின் நுகர்வின் தேவை குறைதல் என்பது வேலையில்லா நிலையைத் தோற்று விக்கும். ஏழைகளாகிவிடக் கூடாது என்பதற்காகவே மேல் தட்டினர் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில்லை என்றும் அந்நூலில் மால்தஸ் கூறியுள்ளார்.

காரல்மார்க்ஸ், தன்னுடைய மூலதனம் நூலில், மால்தசின் அரசியல் பொருளாதாரக் கோட்பாடுகளும் மக்கள் தொகை கோட்பாடுகளும் எவ்வளவு தவறானவை என்றும், அவை முதலாளிய வளர்ச்சிக்கு அரண் சேர்ப்பவை என்றும் விரிவாகத் திறனாய்வு செய்துள்ளார்.

“மக்கள் தொகை குறித்துப் பொதுவான உலகு தழுவிய விதி என்று ஏதுமில்லை. குறிப்பிட்ட வரலாற்றுக் காலக் கட்டத்தில் நிலவும் சமூக உற்பத்திக்கு ஏற்ப, மக்கள் தொகை பற்றிய விதி உருவாக்கப்படுகிறது. முதலாளிய உற்பத்திக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் மால்தஸ் மக்கள் தொகை விதியை வகுத்தார்” என்று மார்க்சும் எங்கெல்சும் ஆணித் தரமாகக் கூறியுள்ளனர்.

2011இல் மக்கள் தொகை

2011 பிப்பிரவரி 9 முதல் 28 வரை இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதன் முதல் கட்ட மாக 2010 ஏப்பிரல் முதல் செப்டம்பர் வரை வீடுகள் குறித்த விவரங்கள் எடுக்கப் பட்டன. மக்கள் தொகை கணக்கெடுப்பின் முழு விவரம் வெளியிடப்படுவதற்கு வழக்கமாக 4-5 ஆண்டுகளாகும். ஆனால் உயர் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, இம்முறை இரண்டு ஆண்டுகளுக்குள் வெளியிடப்படுமாறு திட்டமிடப்பட்டுள்ளது. ஆயினும் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முன்னோட்ட அறிக்கையை 2011 மார்ச்சு 31 அன்று தில்லியில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் சி. சந்திரமௌலி வெளியிட்டார்.

இந்தியாவில் 6,41,000 சிற்றூர்களில், 7936 நகரங் களில் உள்ள 24 கோடி வீடுகளில் 27 இலட்சம் அரசு ஊழியர்கள் மக்கள் தொகைக் கணக்கு எடுத்தனர். இதற்காக 18 மொழிகளில் 54 இலட்சம் விளக்க அறிக்கைகளும், 16 மொழிகளில் 34 கோடிப் படிவங்களும் அச்சிடப்பட்டன. இதற்காக உருவா 2,200 கோடி செலவிடப்பட்டது. இதன்படி ஒருவருக்கு உருவா 18.33 செலவிடப்பட்டது. இந்தத் தடவை திருநங்கையர் எண்ணிக்கை தனியாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

2011 மார்ச்சு 1ஆம் நாளில், இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடியே 10 இலட்சத்து 20,000 ஆகும் (121.1 கோடி). தமிழ்நாட்டில் 7 கோடியே 21 இலட்சத்து 38 ஆயிரத்து 958 ஆகும் (7.21 கோடி).

2011இல் இந்தியாவின் 121 கோடி மக்களில் ஆண்கள் 62.37 கோடி, பெண்கள் 58.65 கோடியாக உள்ளனர். 2001-2011 ஆகிய 10 ஆண்டுகளில் மக்கள் தொகை 17.64 விழுக்காடு அதாவது 18.15 கோடி மக்கள் அதிகமாகி உள்ளனர். பிரேசில், உலகில் 5ஆவது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு. முதல் நான்கு இடங்களில் இருக்கும் நாடுகள் சீனா, இந்தியா, வடஅமெரிக்கா, இந்தோனேசியா - கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் கூடுதலாக உயர்ந்த 18.15 கோடி மக்கள் என்பது பிரேசில் நாட்டின் மொத்த மக்கள் தொகையைவிடச் சற்று குறைவாகும். சீனாவில் 2010இன் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 134 கோடிப் பேர் உள்ளனர். 2000-2010 ஆகிய 10 ஆண்டுகளில் சீனாவில் 7 கோடி மக்கள் மட்டுமே கூடுதலாயினர். ஆனால் இந்தியாவில் 2001-2011 பத்தாண்டுக் காலத்தில் 18.15 கோடி மக்கள் அதிகமாகியுள்ளனர். 2030க்குள் இந்தியா சீனாவின் மக்கள் தொகையை விஞ்சி, உலகில் முதல் இடத்தைப் பிடிக்கும். 2011இல் இந்தியாவின் 121 கோடி மக்கள் தொகை என்பது, வடஅமெரிக்கா, இந்தோனேசியா, பிரேசில், பாக்கிஸ்தான், வங்கதேசம், சப்பான் ஆகிய நாடுகளின் மொத்த மக்கள் தொகைக்குச் சமமாகும்.

இந்தியாவின் மக்கள் தொகை

ஆண்டு       -      கோடியில்

1901  -      23.84

1911  -      25.21

1921  -      25.13

1931  -      27.90

1941  -      31.87

1951  -      36.11

1961  -      43.92

1971  -      54.82

1981  -      68.33

1991  -      84.64

2001  -      102.87

2011  -      121.10

1901-1951 இடையிலான 50 ஆண்டுகளில் மக்கள் தொகை 12.27 கோடி மட்டுமே உயர்ந்துள்ளது ஆனால் 1951-2011 இடையிலான 60 ஆண்டுகளில் 85 கோடி அதிகமாகி உள்ளது.

குடும்பக் கட்டுப்பாடு

1856இல் சார்லஸ் டார்வினின் “உயிர்களின் தோற்றம்” எனும் நூல் வெளியிடப்பட்டது. 1871இல் “மனிதனின் தோற்றம்” - என்ற நூல் வெளிவந்தது. மனிதனும் பிற உயிர்களும் கடவுளால் படைக் கப்பட்டவை என்ற பழைமைவாதத் தத்துவக் கோட்டையை டார்வினின் பரிணாமக் கோட்பாடு தகர்த்தது. ஆனால் ஆதிக்கவாதிகள், டார்வினின் ‘இயற்கை தேர்வு’, ‘வலுத்தவை வாழும்’ எனும் கோட்பாடுகளை மக்கள் தொகை பெருக்கத்துக்குத் தவறாகப் பொருத்தி விபரீதமான விளக்கங்களை அளித்தனர்.

தகுதியும் திறமையும் கொண்ட மேல்தட்டு வர்க்கத்தி னரின் இனப்பெருக்கம் ஊக்குவிக்கப்பட வேண்டும். நோயுற் றவர், மனநிலை சரியில்லாதவர், காமவெறியர், ஏழைகள், குடிகாரர்கள் ஆகியோரின் இனப்பெருக்கம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று ஆதிக்கவாதிகள் கூறினர். இவர்கள் ‘சமூக டார்வினியர்’எனப்பட்டனர். இவர்களின் வாதத்திலிருந்தே ‘இனத்தூய்மை’ கோட்பாடு முளைத்தது. ஆங்கிலேயர் உயர்ந்த இனம் என்பதால், உலகை ஆளத் தகுதி உடையவர்கள் என்ற கருத்து பரப்பப்பட்டது.

தகுதி-திறமை அற்றவர்கள் எப்போதும் அதிக எண் ணிக்கையில் இருக்கின்றனர். அவர்களின் தடையற்ற இனப் பெருக்கம், தகுதியும் திறமையும் அற்ற சமூகத்தை உரு வாக்கும். எனவே இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று, ‘தகுதிசான்ற மனித குலத்தை உருவாக்க வேண்டும்’ எனும் கோட்பாட்டாளர்கள் கூறினர்.

1907 தொடங்கி, பத்து ஆண்டுகளில் அமெரிக்காவில் பல மாநிலங்களில், கொடிய குற்றவாளிகள், காமவெறியர், பால்வினை நோயினர், மனநிலை குன்றியவர்கள், முட்டாள் கள் முதலானோர்க்குக் கட்டாயக் கருத்தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. தூய ஆரிய இனக்கோட்பாட்டு வெறிய ரான இட்லர் 1933இல், யூதர்கள், கம்யூனிஸ்டுகள், ஓரினச் சேர்க்கையர், நாடோடிகள் ஆகியோருக்குக் கருத்தடை செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்றினார்.

தரமான இனத்தைப் பேணுதல் எனும் கொள்கையை ஜார்ஜ் பெர்னாட்ஷா, எச்.ஜி. வெல்ஸ், டார்வினின் மகன் மேஜர் டார்வின், ஜூலியன் ஹக்ஸ்லி போன்ற புகழ்பெற்ற அறிஞர்கள் ஆதரித்தனர். ஆனால் அறிவியல் அறிஞரான ஜெ.பி. எஸ். ஹால்டேன் இக்கொள்கையை எதிர்த்தார். 1940இல் ஹெர்மன் முல்லர் என்பவர் மரபியலில் ‘திடீர்ப் பாய்ச்சல்’ நிகழ்வதைக் கண்டுபிடித்தார். பெற் றோரின் மரபுக் கூறுகளைக் கொண்ட ஜீன்கள் அப்படியே அவர்களின் குழந்தைகளுக்குச் செல்வதில்லை. பெற்றோரின் மரபணுக்கள் இணையும்போது பல்வேறுபட்ட மாற்றங்கள் நிகழ்கின்றன என்றார் முல்லர். அதன் பிறகே தரமான இனத்தைப் பேணுதல் எனும் கோட்பாட்டுக்குக் கூறப்பட்டு வந்த அறிவியல் அடித்தளம் தகர்க்கப்பட்டது.

ஆயினும் தரமான - தகுதி, திறமை வாய்ந்த மனித குலத்தைப் பேணிட - தகுதியும் திறமையும் குறைந்த மனி தர்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோட்பாட்டிலிருந்தே இன்றுள்ள குடும்பக் கட்டுப்பாடு முறை உருவானது.

1938இல் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சி, நேரு தலைமையில் தேசிய திட்டக் குழுவை அமைத்தது. அக்குழு உருவாக்கிய அறிக்கையில், மக்கள் தொகை பெருக்கம், மகப்பேறு காலத்தில் பெண்கள் இறப்பு, குழந்தைகள் இறப்பு குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது. கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்தி மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டது. இதே காலக்கட்டத்தில்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், ‘காதலுக்கு வழி வைத்து, கருப்பாதை சாத்த வழி ஒன்று கண்டறிவோம்’ என்று பாடினார். இதற்கு முன்பிருந்தே, பெரியார், பெண்களுக்குத் தங்கள் கருப்பை மீது முழுச் சுதந்தரமும் உரிமையும் இருக்க வேண்டும் என்று கூறிவந்தார்.

காந்தியார் கருத்தடைக்கு எதிரானவர். கருத்தடை வசதி, காமச் செயலை அதிகமாக்கும். கணவனும் மனைவியும் மக்கட்பேற்றிற்காக மட்டுமே உறவு கொள்ள வேண்டும். இந்த நோக்கத்திற்காக அல்லாமல் கூடுவது கடவுளுக்கும் மனித குலத்துக்கும் எதிரானதாகும் என்று கூறினார். ஆனால் பெரியார், கருத்தடை பெண்களின் உடல்நலத்துக்கும், ஆணாதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கும், குடும்ப நலத்துக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உற்ற சாதனமாகும் என்று வலியுறுத்தினார். மேலும் பெண்கள் சுதந்தரமாகத் தாமே முடிவெடுத்துச் செயல்படக் கூடிய வாழ்க்கையை வாழ்வதற்குக் கருத்தடை கட்டாயம் தேவை என்றார் பெரியார்.

ஆனால், இந்திய அரசோ 1952இல் தான் குடும்ப நலத் திட்டத்தைத் தொடங்கியது. உலகிலேயே அரசு அறிவித்த முதல் குடும்பநலத் திட்டம் இதுதான். 1952 இல் 65 இலட்சம் பேருக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்வது என இலக்கு குறிக்கப்பட்டது. 1956இல் இங்கிலாந்தில் குடும்ப நலத்திட்டம் தொடங்கப்பட்டது. 1959இல் இந்தியாவில் மாநிலங் களில் குடும்பக் கட்டுப்பாடு குழுக்கள் அமைக்கப்பட்டன.

அமெரிக்காவின் ஃபோர்டு அறக்கட்டளை 1952இல் இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்திற்காக 90 இலட்சம் டாலர் நிதி உதவி அளித்தது. அதன்பின் ராக்பெல்லர் நிறு வனமும் நிதி உதவி செய்தது. அவ்வாறு நிதி உதவி செய் வதன் மூலம் தங்கள் நிறுவனங்கள் மீது இந்திய மக்களை நல்லெண்ணம் கொள்ளச் செய்வது, தங்கள் தொழில்களை இந்தியாவில் வளர்த்தெடுப்பது ஆகியவை அமெரிக்காவின் நோக்கங்களாகும். 1960களில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத் திற்கு நிதி உதவி செய்யும் பொறுப்பை, பன்னாட்டு வளர்ச்சிக் கான அமெரிக்காவின் முகமை ஏற்றுக்கொண்டது. இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்திற்காக மொத்தம் செலவிடப்பட்ட தொகையில் அமெரிக்கா வழங்கியது 10 விழுக்காடு கூட இல்லை. ஆனால் அமெரிக்க வல்லுநர்கள் இந்தியாவின் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை வகுப்பதிலும், செயல்படுத்துவதிலும் முதன்மையான பங்கு வகித்தனர்.

உலக வங்கியின் வழிகாட்டுதலின்படி, 1965இல் முகர்ஜி குழு, பெண்களுக்குக் கருத்தடை செய்வதற்கான இலக்கை நிர்ணயித்தது. சுகாதார அலுவலர்களுக்கும், குடும்பக் கட்டுப் பாடு செய்து கொள்பவர்களுக்கும் ஊக்கத் தொகை அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்களும், அமெரிக்க அரசும், உலக வங்கியும் இந்தியா விலும் மற்ற மூன்றாம் உலக நாடுகளிலும் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களுக்கு வழிகாட்டுவதும், நிதி உதவி செய்வதும் அந்நாடுகளின் நலனில் கொண்டுள்ள அக்கறை யால் அன்று. அதற்கு மாறாக மூன்றாம் உலக நாடுகளில் மக்கள் தொகை, கட்டுப்பாடின்றிப் பெருகினால், அந்நாடுகளில் பொதுவுடைமைத் தத்துவம் வளருவதற்கும், அது புரட்சியாக வெடிப்பதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்ற அச்சத்தினாலேயே ஆகும். இந்நிலை உருவாகாமல் தடுப்பதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கமாக இருந்தது.

1967இல் பெண்களுக்கான கருத்தடை மாத்திரையும், 1968இல் ஆணுறையும் (நிரோத்) அறிமுகப்படுத்தப்பட்டன. இவை அமெரிக்க நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டன. குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கையைக் குறைக்கவும், முரட்டுத்தனமான வழிமுறைகளால் கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களின் உடல் நலன் சீரழிவதைத் தடுக்கவும் 1971ஆம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. மேலை நாடுகளில் பெண்ணிய இயக்கங்கள் கிறித்துவ மதத் தலைமையின் எதிர்ப்பு காரணமாக, 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிக் கருக்கலைப்புச் சட்ட உரிமையைப் பெற்றன. இந்தியாவிலோ இது ஒரே நாளில் நிகழ்ந்துவிட்டது. அமெரிக்காவில் 1973இல் தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம், கருக்கலைப்பு குறித்த சட்டச் சிக்கல்களுக்கு முடிவு கட்டப்பட்டது.

“மக்களுக்குக் கல்வி அளிப்பது, அவர்களின் பொருளா தார நிலையை மேம்படுத்துவது ஆகியவற்றின் மூலம் பிறப்பு விகிதத்தைக் குறைக்கலாம் என்று காத்திராமல், காலத்தின் அருமையையும், நாட்டின் முன்னேற்றத்தையும் கருதி, நேரடியான குடும்பக் கட்டுப்பாடு முறைகளை மக்கள் பின்பற்றுமாறு செய்யவேண்டும்” என்பதை 1975இல் நெருக்கடி நிலை காலத்தில் நடுவண் அரசு, தேசிய மக்கள் தொகைக் கொள்கையாக அறிவித்தது. இந்திராகாந்தி தலைமையிலான அதே நடுவண் அரசு இதற்கு ஓராண்டிற்கு முன் - 1974இல் நடைபெற்ற உலக மக்கள் தொகை மாநாட்டில், ‘வளர்ச்சியே சிறந்த கருத்தடைச் சாதனம்’என்று முழங்கியது.

இந்தியாவின் இளவரசர்போல் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த சஞ்சய் காந்தியின் கொடிய கெடுபிடியால் 70 இலட்சம் பேருக்குக் கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டது. இதை எதிர்த்தவர்கள் காவல்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டனர்.

வளர்ச்சியடைந்த அய்ரோப்பிய நாடுகளில், கருத்தடைச் சாதனங்களும், முறைகளும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, மக்கள் தொகை கிட்டத்தட்ட சமநிலையை எட்டிவிட்டது. இதற்கு, மக்களின் கல்வியும் வாழ்க்கைத்தரமும், மருத்துவ ஏந்துகளும் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றதே காரணங்களாகும். இந்தியாவிலும் இத்தகைய நிலையை உருவாக்குவதன் வாயிலாகவே, கணவன்-மனைவி இணையருக்கு இரண்டு குழந்தைகள் என்ற நிலையை எய்திட முடியும். இந்தியாவில் கேரளமும், தமிழ்நாடும் இந்த இலக்கை அடைந்துள்ளன.

இந்திய அளவில் இந்த நிலை 2060இல் உண்டாகும் என்றும், அப்போது இந்திய மக்கள் தொகை 165 கோடி என்ற அளவில் நிலைப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று உலக மக்கள் தொகை 900 கோடி என்ற அளவில் நிலைப்படும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்தியாவிலும் உலக அளவிலும் உலகமயம் என்ற கோட்பாட்டால், பணக்காரன் - ஏழை இடையிலான வேறுபாடு விரிவடைந்து கொண்டே செல்கிறது. அடிப்படை வசதிகளை மக்களுக்கு வழங்கும் பொறுப் பிலிருந்து அரசு விலகி வருகிறது. எனவே எதிர்பார்க்கப்படும் இலக்கை அடைவது அயத்திற்கிடமானதேயாகும்.

பாலின விகிதம்

ஒரு நாட்டில் ஆண்கள் 1000 பேர் இருந்தால், எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் என்பதே பாலின விகிதம் எனப் படுகிறது. காலங்காலமாக ஆண்களுக்கு அடிமைகளாக்கப் பட்டிருந்த பெண்கள், இப்போது ஆண்களுக்கு நிகராக எந்த அளவுக்கு சமூகத்தில் வளர்ந்திருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதற்கான ஒரு அளவுகோலாகப் பாலின விகிதம் விளங்குகிறது.

அய்ரோப்பிய நாடுகள், அமெரிக்கா, இரஷ்யா, பிரேசில் இசுலாமிய நாடான இந்தோனேசியா, சப்பான், நைஜிரியா முதலான நாடுகளில் மொத்த மக்கள் தொகையில் ஆண் களைவிட பெண்கள் அதிகமாக உள்ளனர். நம் அண்டை நாடு களான இலங்கை, மியான்மர், நேபாளம் ஆகிய நாடுகளில் கூட பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கி றார்கள். ஆனால், இந்தியா, சீனா, வங்கதேசம் ஆகிய வற்றில் பெண்கள் விகிதம் மிகவும் குறை வாக உள்ளது. இந்தி யாவில் கேரளத்தில் மட்டும் பெண்கள் விகிதம் 1084 என முதல் நிலையில் உள்ளது. இது தமிழ் நாட்டில் 995, ஆந்தி ரம் 992, கருநாடகம் 960 என உள்ளது. வட இந்திய மாநிலங் களில் பெண்கள் விகி தம் குறைவாக உள் ளது. உ.பி. 908, பீகார் 916, குசராத் 918, இராஜஸ்தான் 925 என உள்ளது.

இந்திய அளவில் பாலின விகிதம்

ஆண்டு              பொதுவாக           0-6 அகவையினர்

1961  -      941   -      960

1971  -      930   -      964

1981  -      934   -      962

1991  -      927   -      945

2001  -      933   -      927

2011  -      940   -      914

1901 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது 1000 ஆண்களுக்கு 970 பெண்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை 1991இல் 927ஆக மிகவும் குறைந்தது. 2011இல் 940 ஆக - மீண்டும் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை எட்டியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் பொது வாகப் பெண்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்பதை இதுகாட்டுகிறது. ஆனால் 5 அகவைக்குட்பட்ட சிறுவர் பாலின விகிதம் வெட்கித் தலைகுனியும் படியான அளவில் குறைந்துள்ளது.

1981இல் 5 அகவைக்குட்பட்ட 1000 ஆண் குழந்தை களுக்கு 962 பெண் குழந்தைகள் இருந்தனர். ஆனால் இது 2001இல் 927 எனவும் 2011இல் 914 எனவும் மிகவும் குறைந்துவிட்டது. 2020க்குள் இந்தியாவை ஒரு வல்லர சாக்கிட வேண்டும் என்று இந்திய ஆளும்வர்க்கம் வாய் கிழியப் பேசுகிறது. ஆனால் பெண் குழந்தைகள் விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. பெண் குழந்தை வேண் டாம் என்கிற பிற்போக்குச் சிந்தனை மேலோங்கி வருகிறது. அதனால் கருநிலையிலேயே பெண் குழவிகள் கொல்லப் படுவது அதிகமாகி வருகிறது.

கருவில் இருப்பது பெண்குழவிதான் என மருத்துவத் தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்து, அக்கருவைக் கலைப்ப தைத் தடுப்பதற்கான சட்டம் 1996இல் இயற்றப் பட்டது. இச்சட்டத்தின் செயல்பாடு குறித்து ஆராய, நடுவண் மேற்பார்வைக் குழு என்பது உருவாக்கப்பட்டது. இக்குழு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஆராய வேண்டும். ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட வேண்டும். ஆனால் இக்குழு 2007 திசம்பருக்குப்பின் கூடவே இல்லை. ஆண்டு அறிக்கையும் வெளியிடுவதில்லை. சிறுவர் பாலின விகிதம் 914 என மிகவும் குறைந்திருப்பதற்கு அரசின் பொறுப்பற்ற தன்மையும் பெருங்காரணமாகும். பெண் சிசு கலைப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் 805 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 55 வழக்குகளில் மட்டுமே பெயரளவில் தண்டனை விதிக் கப்பட்டது.

இந்தியாவிலேயே சிறுவர் பாலின விகிதம் அரியானா மாநிலத்தில் 877 என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது. அம்மாநிலத்தில் ஜஜ்ஜார் மாவட்டத்தில் சிறுவர் பாலின விகிதம் 774 ஆக மட்டுமே உள்ளது. ஜஜ்ஜார் மாவட்டத்தில் 80.8% பேர் எழுத்தறிவு பெற்றுள்ளனர். ஆண் களில் 89.4% பேரும் பெண்களில் 71% பேரும் எழுத்தறிவு பெற்றிருக்கின்றனர். சமூகப் பொறுப்புணர்வற்ற பழைமை யைக் கட்டிக்காக்கும் இன்றைய கல்வியை மக்களுக்கு அளிப்பதன் மூலம் மட்டுமே பெண் சிசு கொலையைத் தடுக்க வோ, பெண்களுக்கு சம உரிமையை வழங்கிடவோ முடியாது. ஆணுக்குப் பெண் கட்டுப்பட்டவள் என்கிற மனுநீதியின் கோட்பாடு மக்கள் மனதில் கோலோச்சுகின்ற வரையில், பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடரும். மதமும் சாதியும் காப்பாற்றிவரும் பெண்ணடிமைத்தன கருத்துகளை யும், சடங்குகளையும், வாழ்வியல் நடைமுறைகளையும் தகர்த்தெறிகின்ற ஒரு பண்பாட்டுப் புரட்சியின் மூலமே பெண்ணுரிமையையும், பெண் விடுதலையையும் அடைய முடியும்.

இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பார்கள். அதைவிட, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, மக்களின் வாழ்நிலையைக் காட்டும் கண்ணாடியாக விளங்குகிறது. கல்வி, வேலை நிலை, வருவாய், வாழ்க்கைத்தரத்தை அளவிடும் பல்வேறு கூறுகள் பற்றி விவரங்கள் திரட்டப்படுகின்றன.

2001ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப் பின்படி, 65% பேர் எழுத்தறிவு பெற்றிருந்தனர். மொத்தம் 19.2 கோடி வீடுகளில் கணக்கு எடுக்கப்பட்டது. 35.5% வீட்டினர் வங்கிகளில் கணக்கு வைத்திருந்தனர். 35% வீடுகளில் வானொலி இருந்தது. 31.6% வீடுகளில் தொலைக்காட்சி, 9.1% வீடுகளில் தொலைபேசி, 43.7% வீடுகளில் மோட்டர் சைக்கிள், 2.5% வீடுகளில் மகிழுந்துகள் முதலானவை இருந்தன. அதேசமயம், 63.6% வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. 53.6% வீடுகளுக்குக் கழிவுநீர்க் கால்வாய் இணைப்பு இல்லை. சிற்றூர்களில் 40% வீடுகளுக்கு மின்சார வசதி இல்லை. சமையல் எரிவாயு இணைப்பு 17.5% வீடுகளுக்கு மட்டுமே இருந்தது. 52.5% வீடுகளில் சமைப்பதற்கு விறகு பயன்படுத்தினர். 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், கணினி, மடிகணினி, இணையதள இணைப்பு, குளிரூட்டி சாதனங்கள் (ஏ.சி., பிரிட்ஜ்), மின்விசிறி முதலானவை பற்றிய விவரங் களும் திரட்டப்படுகின்றன.

மக்கள் அனைவருக்கும் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவ வசதிகள், மின்சாரம், குடிநீர், கழிவுநீர்க் கால்வாய் இணைப்பு, சாலைகள், பொதுப் போக்குவரத்து ஏந்துகள் (பேருந்து, தொடர்வண்டி) ஆகியவற்றை அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு, அடிப் படைக் கட்டமைப்பு வாழ்க்கை வசதிகள் முற்றிலும் கிடைக் காத அல்லது போதிய அளவில் கிடைக்காத மக்கள் பிரிவி னருக்குக் குறிப்பிட்ட கால அளவுக்குள் அளிக்க வேண்டியதே அரசின் முதன்மையான கடமையாகும். அய்ந்தாண்டுத் திட்டங்களும், பிற திட்டங்களும் ஆரவாரமுடன் அறிவிக்கப்படுகின்றன. ஆனால் இவற்றால் விளையும் பயன் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இப்பயன்களில் பெரும்பகுதியை வசதிபடைத்த மேல்தட்டினரே துய்க்கின்றனர்.

அதேசமயம் இந்திய முதலாளிகளும், பன்னாட்டு நிறு வனங்களும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் புள்ளிவி வரங்களைத் தங்கள் தொழில்களையும், வணிகத்தையும் பெருக்கிக் கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை யை நடைமுறைப்படுத்தி 20 ஆண்டுகளாகிவிட்டன. ஆண்டு பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காட்டை எட்டிவிட்டோம் என்று கூறப்படுகிறது.

இந்தப் பொருளாதார வளர்ச்சியால் வேளாண்மையில் நீர்ப்பாசன வசதியோ, வீடுகளுக்கு மின்சார வசதியோ, வேலை வாய்ப்போ பெருகவில்லை. மாறாக, மோட்டார் சைக்கிள், மகிழுந்து, தொலைக்காட்சி பெட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள், ஏழைகள் எட்டியும் பார்க்க முடியாத பேரங்காடி வணிக வளாகங்கள், நட்சத்திர உணவு விடுதிகள், வீட்டு அலங்காரப் பொருள்கள், கணினிகள், கைப்பேசிகள் முத லான நுகர்வியப் பொருள்கள் உற்பத்தியாகியுள்ளன. இவற் றையெல்லாம் நலுங்காமல், குலுங்காமல் எடுத்துச் செல் வதற்காக, தங்க நாற்கரச் சாலைகள் அமைக்கப்படு கின்றன. இவையே பொருளாதார வளர்ச்சியாகக் காட்டப்படுகின்றன. இத்தகைய சேவைப் பிரிவுகள் நாட்டின் பொருளாதாரத்தில் 60% பங்கு வகிக்கின்றன. ஆனால் 60% மக்கள் சார்ந்துள்ள வேளாண்மையே 14% மட்டுமே இடம் பெற்றுள்ளது. நாட்டில் 20% ஆக உள்ள மேல்தட்டினர் நாட்டின் வளர்ச்சியில் மொத்த வருவாயில் 85% அனுபவிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் மேல்சாதியினராவர். பிற்படுத்தப்பட்டவர் களில் குறிப்பிடத்தக்க அளவினரும், தாழ்த்தப்பட்டவர்களில் சிறுபிரிவினரும் மேல்தட்டில் இடம்பெற்றுள்ளனர் என்பதை மறுக்க முடியாது.

உழைக்கும் சாதியினராக உள்ள 80 விழுக்காடு மக்கள் நாட்டின் உற்பத்தியில் - வருவாயில் வெறும் 15% மட்டுமே பெறுகின்றனர்.

உழைக்கும் மக்களுக்குப் பார்ப்பன-பனியா ஆளும் வர்க்கம் தொடர்ந்து இழைத்துவரும் அநீதியைக் கண்டறி வதற்கும், எதிர்த்துப் போராடுவதற்கும் 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையை ஆயுதமாக ஏந்த வேண்டும். உழைக்கும் மக்களை ஒன்றிணைத்து, உழைப்பில் நமக்குரிய பங்கையும், உரிமைகளையும் வென் றெடுக்கப் போராட வேண்டும்.

Pin It