15.10.12 அன்று தினத்தந்தி நாளேட்டில் ‘இந்து மஹாளய அமாவாசை’ என்ற தலைப்பில் கால் பக்க அளவில் கட்டுரை வடிவில் செய்தி ஒன்று வெளியிடப் பட்டிருந்தது. அதில், “ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாளிலிருந்து 15 நாட்கள் வரையிலான காலக்கட்டத்தை மஹாளபட்சம் என்று அழைக்கிறோம். இந்த 15 நாட்களில் நமது முன்னோர் களான தாத்தா, பாட்டி ஆகியோர் மேல் உலகத்தில் இருந்து அனுமதி பெற்று நமது வீடுகளுக்கு வருகை தருகிறார்கள். இந்த நாட்களில் தினமும் அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானம் செய்ய முடியாதவர் கள் தினமும் அருகில் இருக்கும் பசுவுக்கு அகத்திக் கீரை, வாழைப்பழங்கள் கொடுக்கலாம்” என்று கூறப் பட்டுள்ளது. பார்ப்பனக் கூட்டத்தாரின் ஆதிக்கத்தையும், மதமூடநம்பிக்கைகளையும் வளர்ப்பதில் பச்சைப் பார்ப்பன ஏடான ‘தினமணிக்கு’ச் சமமாகத் தானும் செயல்பட வேண்டும் என்று ‘பச்சைத் தமிழர்’ ஆதித் தனார் நிறுவிய ‘தினத்தந்தி’யும் போட்டியிடுகிறது.

பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளின் தாக்கத்தால், பார்ப்பானை வீட்டிற்கு அழைத்து தம் முன்னோர்களுக்குத் ‘திதி’ கொடுக்கும் வழக்கம் பெரிதும் குறைந்துவிட்டது. மேலும் பார்ப்பனர்கள் சூத்திரர்கள் வீட்டில் திதியின் போது பெறும் தானத்தை விடப் பல மடங்கு சம்பளம் தரும் வேலைகளுக்குப் போய் விட்டார்கள். ஆயினும் பார்ப்பனர்கள் தங்கள் உயர் சாதித் தன்மையும் ஆதிக்கமும் குலையாமல் இருப் பதற்காக மஹாளய அமாவாசை அன்று ஆற்றங்கரை களில், குளக்கரைகளில் பார்ப்பனரல்லாதவர்கள் மூலம் பார்ப்பனர்கள் திதி கொடுக்கும் வழக்கத்தை இந்தியா முழுவதும் நீடிக்கச் செய்து வருகின்றனர்.

திருப்பத்தூரில் 29.12.1956 அன்று புரோகிதத் தை மறுத்து நிகழ்ந்த நீத்தார் நினைவு நாள் (கருமாதி) நிகழ்ச்சியில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து ஒரு பகுதியைப் படியுங்கள் :

“நீங்கள் சிந்திக்க வேண்டும். (திதி) கொடுக்கும் போது பார்ப்பானுக்குக் கொடுப்பதாகவே கருதுவதில்லை. அவனிடம் கொடுத்தால் அங்குப் போய்ச் (மேலுலகம்) சேரும் என்று கருதிக் கொடுக்கிறார்கள். தபால் ஆபிஸ் மாதிரி பார்ப்பான்! இவனிடம் கொடுத்தால் அங்குப் போய்ச் சேர்ந்துவிடும்! ‘ஏனப்பா, இதற்கெல்லாம் ஏதா வது ருஜு உண்டா? பெற்றுக் கொண்டதாக இரசீது வந்ததா? அட! கனவிலாவது வந்து பெற்றுக் கொண் டேன் என்பதாகச் சொன்னதுண்டா?’ என்றால், ‘நீ என்னப்பா, புராணத்தில் சொல்லியிருக்கிறது; அப்புறம் என்ன?’ என்பார். புராணம் யார் சொன்னது? - ‘பார்ப் பான் சொன்னான், ரிஷிகள் சொன்னார்கள்’ என்பார். யார் அந்த ரிஷிகள்? நீ என்னப்பா, தெரியாதது போல் கேட்கிறாய்? அவர்கள் தெய்வீக சக்தியுடையவர்கள்; அதெல்லாம் என்ன இலேசு என்று நினைத்தாயா! பெரியபுராணத்தில் இருக்கிறது; காசி புராணத்தில் இருக்கிறது; காசி புராணத்தில் ஒரு சொட்டுத் தண்ணீர் மேலே பட்டுவிட்டால் எப்படிப்பட்ட பாவமும் நிவர்த் தியாகி மோட்சத்திற்கும் போகலாமென்றிருக்கிறதே?’ என்பான். ‘என்னப்பா இதெல்லாம் நிஜமாக இருக் குமா?’ என்றால், ‘நீ என்ன இப்படிக் கேட்கிறாய்? காசி புராணம் நாரதர் சொல்லி நந்தி எழுதியது - தெரியுமா?’ என்பான். ‘நீ பார்த்தாயா?’ என்றால், ‘நம் முதுகை நாம் பார்க்க முடிகிறதா? அதனால் முதுகு இல்லை யென்றா அர்த்தம்!’ என்பான்.

‘இவற்றையெல்லாம் அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?’ என்றால், ‘காசிபுராணத்தில், இதை அறிவைக் கொண்டு ஆராய்ந்தால் காராம் - பசுவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாக வேண்டும் என்று போட்டிருக்கிறதே’ என்பான். இப்படிப் பகுத் தறிவைக் கொண்டு ஆராயப் பயப்படுகிறவன் எல்லாம் ஆத்திகன். ஆராய்வது பாவம் என்று சொல்லிவிட்ட தால், பெரும்பாலான மக்கள் நம்பி, அந்த நம்பிக் கையில் வாழ்வதே வாழ்வாகிவிட்டது. அவைகள் ‘ஆர்க்யூமெண்டிற்கு’ - விவாதத்திற்கு - அறிவு ஆராய்ச் சிக்கு ஒத்துக்கொள்ள முடியாதவை; வெறும் நம்பிக் கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டவை; அதுதான் ஆத்திகம்.

(பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் முதல் வரிசை, தொகுதி 5, பக்கம் 2324, 2325)

Pin It